பலவீனர்களை பலமாக்குவதற்கும் பிரிந்தவர்களை ஒன்றுசேர்ப்பதற்கும் கைவிடப்பட்டவர்களை எழச்செய்வதற்கும்
அறியாதவர்களை ஆதர்சிப்பதற்கும் திரைப்படத்திற்குச் சக்தி உண்டு.
-அபிஜித் நஸ்கார் (The Film Testament)
தர்மதுரை என்ற பெயரில் ரஜினிகாந்த் நடித்து பெரிதும் அறியப்பட்ட வெற்றிப் படம் ஒன்று உண்டு. அதனை இயக்கியவர் ராஜசேகர். தான் படிக்காதவனாகத் தன் தம்பிகளின் நல்வாழ்வுக்காகத் தன்னலம் பேணாத அண்ணனாக அந்த தர்மதுரையின் சரித்திரம் அமைந்திருந்தது. அதே பெயரை மட்டும் வைத்துக்கொண்டு வேறொரு கதையை படைக்க விழைந்த சீனுராமசாமியின் இந்த நூற்றாண்டின் புதிய தர்மதுரையாக நடித்தவர் விஜய்சேதுபதி. தென்மேற்கு பருவக்காற்று படத்தில் விஜய் சேதுபதியை அறிமுகம் செய்த இயக்குனரின் அடுத்த திரைவார்ப்பாக தர்மதுரையில் நல்லதொரு இயல்பான பரிமாணத்தை வழங்கினார் சேது. சீனுராமசாமியின் திரைமாந்தர்கள் எப்போதுமே இயல்பின் அளவீடுகளுக்குள் கச்சிதமாய்ப் பொருந்துகிறவர்கள் அது தர்மதுரையிலும் தொடர்ந்தது.
கதைப்படி தர்மதுரை குடிகாரன். அவனோடு பிறந்தவர்களும் அக்கா கணவரும் ஏலச்சீட்டு தொழிலை நடத்துகின்றனர் தர்மதுரையைக் கண்ணிமைபோல் காப்பது அவனது தாய் பாண்டியம்மாள். தொல்லை பொறுக்க முடியாமல் குடிகாரனை தீர்த்துக் கட்டிடலாமா என உடன்பிறந்தவர்கள் பேசுவது கேட்டு கலங்கிப் போகும் பாண்டியம்மா எங்காவது போய் பிழைத்துக் கொள்ளுமாறு தர்மதுரையை எச்சரிக்கிறார். தான் எதை எடுத்துககொண்டு செல்கிறோம் என தெரியாமல் சீட்டு பணம் மொத்தத்தையும் தன்னோடு எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுகிறான் தர்மதுரை.
மதுரை மருத்துவக் கல்லூரியில் பயின்று தேறிய பொது மருத்துவன் தர்மதுரை என்பது தெரியவருகிறது. படிக்கும்போது உடன் படித்த ஸ்டெல்லா தர்மதுரையை மனப்பூர்வமாகக் காதலித்தவள். அவளைத் தேடிச் செல்கிறான். அவள் இறந்துவிட்டது தெரியவருகிறது. திருமணமாகி தெலுங்குதேசத்தில் வாழச் சென்ற சுபாஷினியைத் தேடிச் செல்கிறான். அவள் பொருந்தாத வாழ்க்கையை முறித்துக்கொண்டு விவாகரத்துக்காகக் காத்திருக்கிறவள் என்பதை அறிகிறான். படிக்கும்போது ஸ்டெல்லா போலவே அவளும் தர்மனை மனதுக்குள் காதலித்தவள்தான். அவளிடம் தனக்கு நிகழ்ந்ததை விவரிக்கிறான். டாக்டர் காமராஜ் எனும் அவர்களது பேராசிரியரின் அறவுறையை மதித்து படித்து முடித்தபிறகு கிராம மக்களுக்கு சேவை செய்ய விழையும் தர்மதுரை விவசாயத் தொழிலாளியான அன்புச்செல்வியை கண்டதும் காதலாகிறான். திருமணம் பேசி நிச்சயமாகிறது. தர்மனுக்குத் தெரியாமல் அவனது குடும்பத்தார் வரதட்சணை கேட்க அதனை ஒட்டி நிகழும் குழப்பங்களின் இறுதியில் தற்கொலை செய்து கொள்கிறாள் அன்புச்செல்வி.
மனமுடைந்து குடிக்கு அடிமையாகும் தர்மதுரை தன் காதலும் வாழ்க்கையும் நாசமானதற்குக் காரணமான சகோதரர்களை கொல்லத் துரத்துபவன் அம்மாவின் முகத்திற்காக அவர்களை விட்டுவிடுகிறான். சுபாஷினிக்கும் அவள் கணவனுக்கும் சட்டப்படி விவாகரத்தாகிறது சுபாஷினியும் தர்மதுரையும் வாழ்வில் இணைகிறார்கள். காலம் கழிகிறது வந்த ஊரில் சிறந்த மருத்துவராகப் பெயர் பெறும் தர்மதுரை யதார்த்தமாகத் தன் பேராசிரியரை சந்திக்க வாய்ப்புக் கிடைக்கிறது. கண்பார்வையை இழந்த டாக்டர் காமராஜ் தர்மதுரையின் சேவை மனப்பான்மையை உச்சிமுகர்ந்து பாராட்டுகிறார். சீட்டுப்பணத்தை சொன்ன தேதியில் தரமுடியாமல் வீட்டையும் நிலத்தையும் விற்றுப் பணத்தை திருப்பும் தர்மதுரையின் குடும்பத்தார் ஊரெல்லையில் குடிசையில் வசிக்கிறார்கள். தர்மனின் செய்கையால் அவன் மீது கொலைவெறி கொண்டு திரியும் சகோதரர்களில் ஒருவன் அவனைக் கண்டதும் ஸ்பானரால் தலையில் அடிக்கிறான். மருத்துவமனையில் தர்மன் சேர்க்கப்பட்டு சிகிச்சைக்குப் பிறகு கண்விழிக்கிறான். தானும் தன் சூலில் குழந்தையுமாக தர்மதுரைக்காக காத்திருப்பதைச் சொல்லி சீக்கிரமாகத் திரும்பி வருமாறு ஃபோனில் சொல்கிறாள் நடந்ததெதையும் அறியாத சுபாஷினி. மருத்துவன் ஒருவனின் வாழ்வின் விள்ளல் இங்கே நிறைவடைகிறது.
சீனுராமசாமியின் திரை மாந்தர்கள் யதார்த்தத்திலிருந்து கிளைத்தவர்கள். இயல்பின் எந்த ஒரு ஆட்சேபக் கோட்டையும் தாண்டாமலேயே விளையாட்டின் யாதொரு விதியையும் மீறாமல் ஆட்டத்தை ஆடுபவர்கள். எளிதில் யூகித்து விடக்கூடிய வாழ்வின் இயல்பான சம்பவங்களை அடுக்கி கதையாக்குவதன் மூலமாக புனைவின் மெய்நிகர் புள்ளிக்கு மிக அருகே தன் கதையை தொடங்குவதும் தொடர்வதும் சீனுராமசாமியின் திரைமொழி. அவரது நாயகன்கள் தாய்மையில் கட்டுண்டவர்கள். பெற்றவளின் சொல்லேந்திகளாகக் கதையின் வீதிகளெங்கும் தேர் வலம் வருபவர்கள் வாழ்வின் பகுதிகளை மெய்மையில் தோய்த்தெடுத்து அன்பை பாசத்தை மனிதநேயத்தை ஏழ்மையில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ளப் போராடும் மனிதக் கூட்டத்தின் எத்தனத்தை தோல்வியுறுதலை இயலாமையை பொங்கு வெள்ளமென புதிய காதலை நம்பிக்கை துரோகத்தை வெள்ளந்தி மனிதர்களின் பார்வைகளின் ஊடாக காணச் செய்வது சீனுராமசாமியின் திரை முறை.
சினிமாவிலிருந்து சினிமா தனத்தை முற்றிலுமாக நீக்குவதற்கு தங்கள் படைப்புகளின் வழியாக முனைந்து பார்க்கும் படைப்பாளிகளில் அவரது பெயருக்கு முக்கிய இடமுண்டு. காசி விஸ்வநாதனின் தொகுப்பும் சுகுமாரின் ஒளிப்பொறுப்பும் கச்சிதம். யுவன் சங்கர் ராஜாவின் இனிய இசையும் வைரமுத்துவின் வார்த்தைகளும் காண்பவர் தங்கள் நெஞ்சடியில் உன்னதமான ஓரிடம் தந்து நினைவுள் போற்றும் இன்னுமொரு நற்படமாக தர்மதுரையை மாற்றின. வைரமுத்து இந்தப் படத்திற்காகத் தன் ஏழாவது தேசியவிருதைப் பெற்றார்.
புனைவும் நிஜமும் சினிமா எனும் இரயிலானது நில்லாமல் பயணிக்கிற இருப்புப் பாதைகளாகின்றன. தர்மதுரை எப்போதாவது காணவாய்க்கிற மலைப்ரதேச மந்திர மலர். வாழ்க சினிமா!