இனிமையான புன்னகைகள் இருண்ட ரகசியங்களை வைத்திருக்கின்றன
-சாரா ஷெப்பர்ட் ( Flawless )
தலையைச்சுற்றி மூக்கைத் தொட்ட பறவை என்றால் பொருத்தமாக இருக்கும். ஆங்கிலத்தில் 1958 ஆமாண்டு வெளியான பிரிட்டிஷ் படமான
Chase a Crooked Shadow (a.k.a. Sleep No More இனி உறக்கமில்லை எனப் பொருள் வரக் கூடிய படத்திலிருந்து தழுவி எடுக்கப் பட்ட மராத்திப் படமான சாஷ் ஆன்கா (1963)என்ற பேரிலான பெங்காலி படத்தின் மீவுரு தான் தமிழில் புதிய பறவை ஆனது.இதனை இயக்கியவர் தாதா மிராஸி. சிவாஜி புரொடக்ஷன்ஸ் சார்பாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தயாரித்து நடித்த படம்.
காதலா அதெல்லாம் எங்களுக்குத் தெரியலையே யாராச்சும் காதலிப்பாங்க நாங்கள்லாம் பார்த்துக்குறோம் என்று அரிதினும் அரிய பண்டமாக காதல் எனும் ஒன்று இருந்திருக்குமேயானால் புதிய பறவை போன்ற படத்தைப் பார்த்த மாத்திரத்தில் பலரும் காதல் வயப்படுவார்கள் எனலாம். அப்படிக் காதலை காவியத் தன்மையோடு அணுகிய தமிழ்ப்படங்களில் புதியபறவையும் ஒன்று.
த்ரில்லர் வகைப் படங்களுக்கான வரவேற்பு எக்காலத்திற்குமானது.(சிவாஜி – சரோஜாதேவி) கோபால், லதா இருவரும் யதார்த்தமாக ஒரு கப்பல் பயணத்தில் சந்தித்து ஒருவரை ஒருவர் விரும்பவும் தொடங்குகின்றனர். தன் ஊட்டி பங்களாவில் வந்து தங்குவதற்கு கோபால் அழைப்பு விடுக்கிறான். அதை லதாவும் அவள் தந்தையும் ஏற்கின்றனர்.விரைந்தோடும் ரயிலைக் காண்கையிலெல்லாம் தன்னை அறியாமல் அதிர்ச்சிக்கு ஆளாகிறான் கோபால். அதற்கான காரணத்தை அறிய நேர்கையில் அவனது முன் கதை விரிகிறது.
சிங்கப்பூரில் தான் காதலித்து பெரும் ப்ரியத்தோடு மணந்து கொண்ட சித்ரா தனக்கும் தன் குடும்பத்துக்கும் ஏற்றாற்போல் இல்லை என்பதை அறிந்து மனம் வாடிய கோபால் அவளைத் தன்வசம் திருப்ப எத்தனையோ முயன்றும் தோற்கிறான். எதற்கும் ஒத்துவராத சித்ராவின் அசட்டை குணம் கண்டு ஒருகட்டத்தில் கோபாலின் தந்தை மரணிக்கிறார். பொறுத்துப் பொறுத்துப் பார்த்து கட்டுப்பாட்டை இழக்கும் கோபால் சித்ராவை ஓங்கி அறைகிறான்; அன்றைய இரவே அவள் ரயில் முன் பாய்ந்து இறந்து விட்டாள் எனும் செய்தி கிடைக்கிறது.
கோபால் மீது இன்னும் பேரன்பாகிறாள் லதா. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து அதற்கான வரவேற்பு நிகழ்வு நடக்கும் போது கோபாலின் மாளிகைக்கு சித்ரா தன் மாமன் ரங்கனோடு திரும்பி வருகிறாள். சித்ரா இறந்து விட்டதாக சர்ட்டிஃபிகேட்டை நீட்டியும் கோபாலால் எதையும் நிரூபிக்க முடியவில்லை. அவன் சொல்வதனைத்தும் பொய் என்று வாதிடும் ரங்கன் சித்ரா இறக்கவில்லை என்று சத்தியம் செய்கிறான்.
திருமணம் நடப்பது சிக்கலாகிக் கொண்டே செல்கிறது வேறு வழியே இல்லாமல் சிங்கப்பூரில் நிகழ்ந்ததை எல்லோரிடமும் சொல்கிறான் கோபால். தான் அறைந்த போதே இதய நோயாளியான சித்ரா கீழே விழுந்து இறந்ததாகவும் குடும்ப மானத்தைக் காப்பாற்றுவதற்காகவே தான் அதை தற்கொலை எனப் புனைந்ததாகவும் ஒப்புக் கொள்கிறான்.
சித்ராவாக வந்திருப்பவள் போலி என்று குமுறும் கோபாலுக்கு கடைசியில் தான் உண்மைகள் தெரியவருகின்றன. சித்ராவின் மரணத்தை விசாரிக்க வந்த போலீஸ் துறையினர்தான் லதா, ராமதுரை, ரங்கன் மற்றும் போலி சித்ராவான சரசா ஆகியோர் என்பது தெரியவருகிறது. செய்த குற்றத்திற்கான தண்டனைக் காலம் முடிந்து விடுதலை அடையும் வரை கோபாலுக்காகத் தான் காத்திருப்பதாகச் சொல்கிறாள் லதா. புதிய பறவை சிறகை விரித்துப் பறக்கிறது.
அதிபுனைவு தமிழ் சினிமாக்களின் வரிசையில் சிவாஜிகணேசனின் மிகை நடிப்பு ஒரு வைரம்போல மிளிர்ந்த படங்களில் முக்கியமான ஒன்று புதிய பறவை.