ஆட்டுக்குட்டிகள் சிங்கங்களாக மாறும் வரை எழுந்திரு மீண்டுமீண்டும் எழுந்திரு

-ராபின் ஹூட்

நாமக்கல் கவிஞர் என்றழைக்கப்படுகிற இராமலிங்கம் எழுதிய நாவல்தான் மலைக்கள்ளன். எழுதிய கதை சினிமாவாகும் வரை சாதாரணமாகத்தான் இருந்தது. நம் நாட்டில் எடுக்கப்பட்ட ராபின் ஹூட் அல்லது மார்க் ஆஃப் ஜோரோ டைப் படம் என்று இதனைச் சொல்லலாம். மலைக்கள்ளன் சிவாஜி கணேசனின் வாழ்வில் மறக்க முடியாத படம். சிவாஜி படமில்லையே என முகம் சுருக்குவோருக்கு அதனால்தான் மறக்க முடியாத படமென்றானது என்பது விசேஷ தகவல் எம்.ஜி.ஆரை இதில் நடிக்க வைக்கும் எண்ணம் துளியும் இல்லாமல் சிவாஜிதான் இதன் நாயகனாக நடிக்க வேண்டுமென்று ஒற்றைக்கால் தவம்கூட இருந்து பார்த்தார் பட்சிராஜா ஸ்டூடியோ அதிபரும் இதன் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருமான ஸ்ரீராமுலு. ஆனால் அவர் கால் வலித்தது தான் மிச்சம். சிவாஜி இந்தப் படத்தினுள் வரவியலாமற் போனது வரலாறு. இன்னொரு மாபெரும் வரலாறு அதுவரைக்கும் ஏழெட்டு வருடங்களாக ஒரு மாபெரும் ஹிட் படத்துக்காகக் காத்திருந்த எம்ஜி.ராமச்சந்திரனுக்கு மலைக்கள்ளன் கொடுத்த மணிமழை சொல்வழி விரியப் புரிந்துவிடாத மாபெரும் ஒன்று. படிகளில் ஏறிக்கொண்டிருந்த நடிகரைப் பறவை போலாக்கி உச்சிக்கு அழைத்துச் சென்று அங்கே நிறுத்தி வைத்தது இந்தப் படம்.

ஏட்டு 411 ஆக நடித்த டி.எஸ்.துரைராஜ் ந்டன இணை சாயி சுப்புலட்சுமி வில்லனாக நடித்தவர் ஸ்ரீராம் காத்தவராயனாக நடித்த ஈ.ஆர் சகாதேவன் சுரபி பாலசரஸ்வதி சந்தியா ஆகியோரும் நடித்திருந்தனர்.சப் இன்ஸ்பெக்டராக நடித்தவர் எம்ஜி.சக்கரபாணி

எஸ்.எம்.சுப்பையா இசையில் பானுமதி தன் சொந்தக் குரலில் சில பாடல்களைப் பாடியது வசீகரித்தது. சவுந்தரராஜன் பாடிய எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே எனும் பாடல் இன்றளவும் விரும்பி ஒலிக்கப் படுகிற காற்றாளும் கானமாக விளங்குவது. இசையமைப்பாளராக மட்டுமன்றி இந்தப் படத்தில் ஒரு டாக்டர் வேஷத்தில் தோன்றவும் செய்தார் சுப்பையா.

விஜயபுரியின் குற்ற இருளுக்கு யார் காரணம்? காத்தவராயன் அறியப்பட்ட கேடி. அவன் பின்னால் இருப்பது குட்டிப்பட்டி ஜமீன் தார் மற்றும் இளம் செல்வந்தன் வீரராஜன் ஆகியோர் இவர்களுக்கே சவாலாக விளங்கும் இன்னொருவன் தான் மலைக்கள்ளன். அவனது சாகசங்கள் தனித்து ஒளிர்பவை. அவன் எப்படி இருப்பான் என்று யாருமே பார்த்ததில்லை.

நேர்மையான செல்வந்தர் சொக்கேசர். அவருடைய தங்கை காமாட்சி சிறுவயதிலேயே கணவனை இழந்தவள் அவளுடைய ஒரே மகன் குமரவீரன் சின்னப் பையனாக இருக்கும் போது தொலைந்து போகிறான். சொக்கேசருடைய மனைவியும் சீக்கிரமே விண்ணகம் சென்றுவிடவே அண்ணன் சொக்கேசனுடைய ஒரே மகளான பூங்கோதையை பரிவுடன் வளர்த்தபடி அவர்களோடு இருக்கிறாள் காமாட்சி சொக்கேசனுடைய உறவுக்காரனான வீரராஜனுக்கு பூங்கோதை மீது லயிப்பு அவளுக்கோ அவன் தீயவன் என்பதால் வெறுப்பு.

அந்த ஊரைச் சேர்ந்த இன்னொரு பணக்கார வணிகன் அப்துல் ரஹீம். அவனும் அடிக்கடி காணாமல் போகிறான். கேட்பவர்களுக்கு அவன் தன் வாணிப சங்கதிகளுக்காக பயணத்திலிருப்பதாகக் கூறுவான். காவல் துறை என்ன செய்கிறது என எல்லோருடைய கூச்சலுக்கு அப்பால் அந்த ஊருக்கு மாற்றலாகி வருகிறார் சப் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம்.அவருடைய உதவிக்கு அமர்த்தப்படுகிற கான்ஸ்டபிள் கருப்பையாவோ பயந்தாங்கொள்ளி மற்றும் கை நீட்டுபவரும் கூட. எதை விசாரிக்கப் பார்த்தாலும் தன் அனுமான தீர்மானங்களைக் கொண்டு தடையாகவே கருப்பையா உடன் வருகிறார். இப்படியான கதைப் போக்கில் ஒரு தினம் செல்வந்தர் சொக்கேசன் ஊரில் இல்லாத சமயம் அவரது ஒரே மகள் பூங்கோதை மர்ம நபர்களால் கடத்தப்படுகிறாள். துப்புகளைப் பின்னொற்றிச் செல்கையில் பூங்கோதை மலைக்கள்ளனின் பாதுகாவலில் இருப்பதாகத் தெரியவருகிறது

மலைக்கள்ளனின் வசம் இருக்கும் பூங்கோதைக்கு அவளைக் கடத்தத் திட்டமிட்டு அதைக் காத்தவராயன் மூலம் செயல்படுத்தவும் செய்தது வீர ராஜன் தான் என்பது தெரிகிறது.அவர்களது திட்டத்தை முறியடித்துத் தான் மலைக்கள்ளன் அவளைத் தன் வசமாக்கியது புரிகிறது. மெல்ல மெல்ல மலைக்கள்ளனின் நல்ல குணமும் மக்கள் மீது அவன் கொண்டிருக்கும் அப்பழுக்கற்ற அபிமானமும் எல்லாம் புரியவரும் பூங்கோதை மெல்ல மெல்ல ஸ்டாக் ஹோம் சிண்ட் ரோமுக்கும் திரைக்காதலுக்கும் உள்ள பிணைப்பின் பிரகாரம் கெட்டவன் என்று தள்ளிய அதே மலைக்கள்ளனை நல்லவன் எனப் போற்றத் தொடங்குகிறாள்

கதாகாலத்தின் கடைசிச் சதுக்கத்தில் மலைக்கள்ளன்தான் அப்துல் ரஹீம் என்ற பெயரில் வாழ்கிற தன் அத்தை மகன் குமரவீரன் என்பது பூங்கோதைக்குத் தெரியவந்து இருவரும் வாழ்வில் இணைகிறார்கள்.
சுபம்