நிறைய அதிர்ச்சி மற்றும் சப்தத்துடன் தொடங்கி நம்ப முடியாத வழமையாக பூர்த்தியடைகிற ஹாலிவுட் திரைப்படங்களுக்கு மாற்றாக கணிக்க முடியாத பல அடுக்குகளைக் கொண்ட விரிவடையும் கதைகளை நான் விரும்புகிறேன்.

-பீட்டர் பால்க்

ப்ரதாப் போத்தன் நடிகர் மற்றும் இயக்குனர். மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டவரான பிரதாப்பின் அண்ணன் ஹரிபோத்தன் மலையாளத்தில் முக்கியமான இயக்குனர். தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் நூறு படங்களுக்கு மேல் நடித்தவரான பிரதாப் போத்தன் ஒரு யாத்ரா மொழி, ஜீவா, வெற்றிவிழா, மகுடம், ஆத்மா, சீவலப்பேரி பாண்டி உட்படப் 12 படங்களை இயக்கினார். அவர் இயக்கிய முதல் படமான மீண்டும் ஒரு காதல் கதை அவருக்கு தேசிய விருதைப் பெற்றுத்தந்தது. ராதிகா தயாரித்த இந்தப் படத்தில் சாருஹாசன், ஒய்.ஜி.மகேந்திரா, ரோனி படேல் இவர்களுடன் ப்ரதாப், ராதிகா இணைந்து நடித்தனர். பி.லெனின் எடிடிங்கில் இப்படத்திற்கு பிசி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்தார். இளையராஜா இதற்கு இசைத்தார். ‘அதிகாலை நேரமே புதிதான ராகமே’ என்ற பாடல் இன்றும் வென்றொலிக்கும் சூப்பர்ஹிட் பாடல்.

பணக்காரர் பத்ரிநாத்தின் மகள் சரசு, மனவளர்ச்சி சமன் இல்லாத குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளியில் பெற்றோர்களால் சேர்க்கப்படுகிறாள் அங்கே ஜூஜூ தாத்தா என்கிற காப்பாளரும் ரோனி படேல் பாதிரியாரும் சாருஹாசன் அந்தப் பள்ளியை நிர்வகிக்கிறார்கள். உறவு என்று சொல்லிக்கொள்ள யாரும் இல்லாத இன்னொரு மனநிலை சமமற்ற கணபதி என்கிற கப்பி சரசுவுக்கு உற்ற தோழனாக மாறுகிறான்

தங்கள் வீட்டு திருமணத்துக்கு விடுப்பில் சரசுவை அழைத்துச்செல்ல தந்தை பத்ரிநாத் சரசுவின் தாயாரோடு பள்ளிக்கு வருகிறார்கள். கப்பி தன்னோடு வந்தால்தான் தானும் வருவேன் என்று பிடிவாதம் பிடிக்கிறாள் சரசு. வேறு வழியில்லாமல் பாதிரியாரிடம் வேண்டிக்கொண்டு காபியும் அழைத்துச் செல்கிறார்கள். தனக்கும் கப்பிக்கும் கல்யாணம் செய்து வைக்குமாறு சரசு அப்பாவிடம் கேட்கிறாள். எதிர்பாராத திருப்பமாக கப்பியும் சரசுவும் திருமணம் முடிந்து தங்களோடு பாதுகாப்புக்கு ஜூஜு தாத்தாவுடன் மலை கிராமமான கோர குண்டாவிற்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.  அது ஒரு விசித்திரமான கிராமம் கப்பயும் சரசுவும் உடலால் இணைய சரசு கர்ப்பமாகிறாள்.

ஒரு தினம் கிராமத் தலைவன் போதையில் சரசுவை துன்புறுத்த முயல கப்பி கல்லால் அடித்து அவனைக் கொன்று விடுகிறான். தண்டனை விதிக்கப்பட்டு ஆயுள் சிறைவாசத்தை தொடங்குகிறான் கப்பி. சரசுவுக்கு வலி எடுத்து பிரசவ வேதனையில் மருத்துவமனையில் துடிக்கிறாள். சிறப்பு அனுமதி அனுமதியுடன் வெளிவந்து சரசுவை மருத்துவமனையில் சந்திக்கிறான். அழகான குழந்தையை பெற்றெடுக்கிறாள் சரசு.
பிரசவத்தில் சரசு மரணமடைகிறாள். மரணம் என்பதை என்னவெனப் புரிந்துகொள்ள முடியாத கப்பி, சரசு தன்னிடம் நடிப்பதாக எண்ணுகிறான். மீண்டும் சிறையில் அடைக்கப்படும் கப்பி, அதற்குப் பிறகு யாருடனும் பேசாமல் எதற்காகவும் சிரிக்காமல் சில காலம் கழித்து சிறையிலேயே இறந்து போகிறான்.

இந்தப் படத்தின் பாதிப்பை பின்னர் வந்த ஆவாரம்பூ தொடங்கி, சேது வரைக்கும் பல படங்களில் உணரலாம். கத்தி மீது நடப்பது போன்ற கதையை சோமசுந்தரேஷ்வருடன் சேர்ந்து ப்ரதாப் திரைக்கதை அமைத்தார். ப்ரதாப் இயக்கத்தில் வித்யாசமான படமாக மீண்டும் ஒரு காதல் கதை சொல்லத்தக்கது. உலகமும் உருண்டை லட்டுவும் உருண்டை உலகத்தை கடவுள் படைத்தார் லட்டுவை அம்மா படைத்தார் என்றெல்லாம் சாருஹாசன் பசங்களுக்குப் பாடமெடுக்கும் காட்சி நகைப்பைத் தந்தது. ராதிகா இந்தப் படத்தில் மிகச்சிறப்பான நடிப்பை வழங்கினார். குறைவான கதாபாத்திரங்களை மட்டுமே கொண்ட அதே சமயத்தில் காத்திரமான கதையையும் பார்ப்பவர்களின் ஆழ்மனதில் அனுபவச்செறிவைக் கொண்டு சேர்க்கிற திரைமொழியையும் கொண்டிருந்த வகையில் சிறப்பான படமாக மிளிர்கிறது.

மீண்டும் ஒரு காதல் கதை அபூர்வமான பாடல்

முந்தைய தொடர்: http://bit.ly/310qUv9