ஒரு நாட்டின் கலாச்சாரம் என்பது அதன் மக்களின் இதயங்களிலும் ஆன்மாக்களிலும் வாழ்கிறது

-மகாத்மா காந்தி

அவரவருக்கு அவரவர் நியாயங்கள் அவற்றில் எது நீதியின் கண்களுக்குச் சரி என்பதை வழக்காடி அறியத்தான் நீதி மன்றங்கள். நிகழ்ந்த குற்றங்களை நீதிமன்றம் விசாரிக்கும்போது அங்கே விடுதலை மற்றும் தண்டனை ஒருபுறமாகவும் இழப்பீடு மற்றும் நியாயம் அடுத்தபுறமாகவும் எதிர்நோக்கப்படும். கடுமையான சட்ட நடைமுறைகள் நடப்பில் இருக்கிற இந்தியா போன்ற நாட்டில் புரையோடி இருக்கக்கூடிய தீமைகளில் சாதி மீதான மனித வெறிக்குத்தான் தலையாய இடம். சாதியைக் கெட்டியாகப் பற்றிக்கொண்டு மனிதன் சக மனிதன்மீது நிகழ்த்துகிற வன்முறைகளுக்கு எதிரான தொடர்ந்த போராட்டத்தை எல்லாக் காலத்திலும் கலை முன்னெடுத்திருக்கிறது. கலை ஒருபோதும் எந்த நிறுவனத்தையும் ஆதரிப்பதே இல்லை. சாதி எனும் ஈரமும் இரக்கமுமற்ற பழைய பிடிவாதம் ஒன்றை வழிவழியாக மேலெழுதிக் கொண்டு வருவதற்கு எதிராக எல்லாக் கலைவடிவங்களையும் உயர்த்திப் பிடிப்பது அதி அவசியமாகிறது. திரைப்படம் ஒரு கருத்தை முன்வைக்கும்போது அதன் வீரியம் அபரிமிதமாகிறது.

மாரி செல்வராஜ் எழுதி இயக்கிய பரியேறும் பெருமாள் வெறுமனே கதை சொல்லி நகர்ந்து செல்கிற திரைப்படங்களின் வரிசையிலிருந்து விலகி தீர்விலிருந்து தொடங்குகிறது. இது பொய்போல நிசத்தைப் பேசிச் செல்லுகிற சினிமா அல்ல. சினிமாத் தனம் என்று சினிமாவைக் கொண்டே கட்டமைக்கப்பட்ட அத்தனை அதீதங்களையும் அறுத்தெறிந்துவிட்டுத் தன் உயிரிலிருந்து குருதி தொட்டுத்தான் சொல்ல வந்த கதையை எழுதி இயக்கி பரியேறும் பெருமாள் படத்தை உருவாக்கி இருக்கிறார் மாரி செல்வராஜ்.

சக மனிதன்மீது காட்ட வேண்டியது அன்பு மட்டுமே அன்றி வன்மம் அல்ல என்பதை அழுத்தம் திருத்தமாகப் பேசுகிறது பரியேறும் பெருமாள். இந்தப் படமெங்கும் ததும்பிக் கிடக்கிற குறியீடுகள் பார்வையாளனை யோசிக்க வைக்கின்றன. அதீதமான பிம்பசார்தல் ஏதுமின்றி இயல்பு வாழ்வில் எது சாத்தியமோ அதுவே இங்கே பேசுபொருள். உரையாட முற்படுவதே ஒரு கலைப் படைப்பின் ஆதார வெற்றியாக முடியும். அந்த அளவில்தான் வெளியான காலத்தோடு உறைந்து தனித்துவிடாமல் தொடர் உரையாடல் ஒன்றை சாத்தியப்படுத்துகிற வகையில் மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள் தமிழின் முக்கியமான படங்களில் ஒன்றாக எக்காலத்திலும் நீடிக்கும்.

தன் நெடிய தலைமுறையின் வஞ்சிக்கப்பட்ட இருளிலிருந்து கல்வி எனும் விளக்கை ஏந்தியவாறு சட்டம் படிக்க கல்லூரிக்கு வருகிற பரியன் எனும் பாத்திரத்துக்குக் கச்சிதமான தேர்வு கதிர். வலியை நடிப்பில் கொணர்வதன் கடினம் நடிப்பென்பதைத் தன் வேலையாக அல்லாமல் தியானம்போலத் தன்னை அகழ்ந்தெடுத்திருக்கிறார் கதிர். எதிர்வரும் காலங்களில் தமிழின் ஆக முக்கியமான நடிகர்களில் ஒருவராக கதிரை யூகிக்க முடிகிறது. வெறும் யூகமல்ல நிச்சயம் பலிக்கும்.

ஆனந்தி கதாபாத்திரம் கதைக்கேற்ப வடிவமைக்கப்பட்டாற் போலிருந்தாலும் துல்லியம் தவறாமல் இயல்பின் விளிம்பு தவறாமல் பயணமாகிறது. இப்படத்தின் முக்கியக்கூறு ஆனந்தியின் தந்தையாக வருகிற மாரிமுத்துவின் மன ஊசலாட்டங்கள். மஞ்சள் கோட்டில் நின்றுகொண்டு சாலை கடக்க முடியாமல் அல்லாடுகிறாற்போல நடுக்கமும் இறுக்கமுமாக அவரது நடிப்பு அத்தனை அசலாக இருக்கிறது. உலகின் எல்லா வெறுப்பையும் சேர்த்து வழங்கப்படவேண்டியவராக கராத்தே வெங்கடேசன். நண்பனாக வருகிற யோகிபாபு என யாரையும் சொல்லாமல் இருக்கவே முடியாது. இப்படத்தைப் பொறுத்தவரைக்கும் நடிகர்களல்ல கதாபாத்திரங்களே மனதில் நிற்கிறார்கள். பரியனின் தந்தை தோன்றுகிற கதைப்பகுதி மனதை மண்கொத்தி கொண்டு கொத்தி எடுக்கிறது. இது வாதம் பேசுகிற படமல்ல. இங்கே தேவை புரிதல். காலகாலத்துக்குமான புரிதல் மனமாற்றமே பண்பாடு என்பதன் வகுத்தெடுக்கப்பட்ட அர்த்தமாக அமையும். புதியன புரிதலும் பழையன விடுதலும் மட்டுமே நாளை எனும் நாளை ஒளியேற்றி விளக்கி வைக்கும்.

ஸ்ரீதரின் ஒளிப்பதிவு மிளிர்கிறது என்றால் சந்தோஷ் நாராயணனின் இசை வெகு உன்னதத் தரத்தில் உடனோடும் நதியாகிறது. இந்தப் படத்தைத் தயாரித்திருப்பவர் இயக்குனர் பா.ரஞ்சித். திரைப்பட ஊடகத்தின் நிசமான வலிமை என்ன என்பதை கச்சிதமாக அவதானித்துத் தன் படம் என்ன பேசவேண்டும் என்பதை மிக ஆணித்தரமாக உறுதி வழுவாமல் பேசிய வகையில் போற்றுதலுக்கு உரிய படமாக தன் முதற்படத்தை எடுத்திருக்கக்கூடிய மாரி செல்வராஜ் இன்னும் தமிழ்த் திரையுலகின் கரைகளை விவரித்துத்தரக்கூடிய படைப்புக்களை உருவாக்குவார் என்பது நிச்சயம்.

பரியேறும் பெருமாள்: உன்னதமான திரைப்படம்