நியோ: அது உண்மையானதல்ல என்று நினைத்தேன்
மார்பியஸ் உங்கள் மனம் அதை உண்மையானதாக்குகிறது
நியோ: நீங்கள் மேட்ரிக்ஸில் கொல்லப்பட்டால், நீங்கள் இங்கே இறக்கிறீர்களா?
மார்பியஸ் மனம் இல்லாமல் உடல் வாழ முடியாது – The Matrix 1999 திரைப்படத்திலிருந்து
நியாயத் தகப்பன் அநீதி புதல்வன் என்பதொரு வகை சீரீஸ் பழிவாங்கும் தகப்பன் துரத்தித் தோற்கும் புதல்வன் என்பதாக மாற்றி யோசித்துத் தன் முதிய பிம்பத்திடம் இளைய வெர்ஷன் தோல்வியடையும் இரண்டு படங்கள் கமல்ஹாசன் நடித்து ட்ரெண்ட் செட்டர்களாக மாறின.ஒன்று ஒரு கைதியின் டைரி.இன்னொன்று பின் நாட்களில் வந்த இந்தியன்.
கைதியின் டைரி படம் அதன் திரைக்கதை அமைப்பிற்காக கவனம் பெறுகிறது. மேலோட்டமாகப் பார்த்தால் எளிய திருப்பங்களற்ற பழிவாங்கும் கதை. ஆனால் திரையில் பின்னிய விதம் அபாரமானது.
டேவிட் ஒரு எளிய மனிதன். அழகான அவன் மனைவி ரோஸி மற்றும் ஒரே மகனோடு வாழ்ந்து வருபவன். வஞ்சகர்கள் மூவரால் அவனது மனைவி பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுகிறாள். டேவிட்டுக்கு கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்கிறாள். அதிகாரபலமும் பணபலமும் கைகோர்த்ததில் டேவிட் தன் மனைவியைக் கொன்றதாக புனையப்பட்ட வழக்கில் சிறை செல்கிறான். 22 வருடங்கள் கழித்து ரிலீஸ் ஆகிறான். 14 வருட தண்டனையை அடிக்கடி சிறையில் இருந்து தப்ப முயன்றதினால் அதிகரித்துக் கொண்டவன் என்பது கூடுதல் தண்டனைக்கான காரணமாகிறது.
தன் உற்ற நண்பன் வேலப்பனிடம் ஒரே மகன் ஜேம்ஸை ஒப்படைத்து அவனை மூர்க்கமான ரவுடியாக வளர்க்கச் சொல்லிச் செல்கிற டேவிட் 22 வருடங்களுக்குப் பின்னால் வெளியே வந்து பார்க்கும் போது ஷங்கர் என்ற பேரில் ஒரு நியாயமான இன்ஸ்பெக்டராகத் தன் மகனை வளர்த்தெடுத்த வேலப்பனை சந்தித்து உண்மை அறிந்து என் மனைவி சாவுக்கு நானே பழிவாங்கிக்கொள்கிறேன் எனப் புறப்படுகிறான். அவனை ஆறுதல் படுத்த வேலப்பனிடம் வார்த்தைகளில்லை.
ஐஜீ மகளும் ஷங்கரும் காதலர்கள். பழைய எதிரிகளை இன்னும் பலம் பொருந்திய மனிதர்களாக சந்திக்க நேர்ந்ததை உணரும் டேவிட் எப்படித் தன் பழியைத் தீர்த்துக் கொள்கிறான் என்பதும் அவனை யாரென்றே அறியாமல் எப்படியாவது டேவிடின் கொலைகளை தடுத்துவிடப் பெரும் பிரயத்தனம் எடுத்துத் தோற்கிற ஷங்கர் கடைசியில் வேலப்பனிடமிருந்து தனக்குக் கிடைக்கிற ஜேம்ஸின் டைரியைப் படித்துத் தன் தகப்பனின் கதையை முழு உண்மையை அறிகிறான்.
யாருமே எதிர்பாராத நூதனமான முறையில் மூன்றாவது கொலை அரங்கேறுகிறது தந்தை என்றும் பாராமல் டேவிடைத் தன் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்துகிறான் ஷங்கர் அலையஸ் ஜேம்ஸ்.
தமிழை விட இந்தியில் அதிரி புதிரி ஹிட் அடித்தது இந்தப் படம். இதன் கதை வசனத்தை எழுதியவர் கே.பாக்யராஜ். பல இடங்களில் வசனம் மிளிர்ந்தது என்றால் பொருந்தும். ஜனகராஜூம் ஷங்கர் கமலும் பேசுகிற இடமும் ரேவதிக்கும் ஜேம்ஸ் கமலுக்கும் இடையில் நடைபெறுகிற உணர்வு பொங்கும் உரையாடல்களும் படத்தை நகர்த்தியதில் பெரும்பங்கு வகித்தன.
இதனை இயக்கியவர் ஆர்.பாரதிராஜா. இசை இளையராஜா. பாடல்கள் வைரமுத்து பொன் மானே கோபம் ஏனோ என்ற பாடல் உன்னிமேனன் மற்றும் உமா ரமணன் குரல்களில் மனம் வருடியது. ஏபிசி நீ வாசி எனும் அழியாப் புகழ் கொண்ட பாடல் இன்றளவும் ஓங்கி ஒலிப்பது.
காட்சிமொழியால் எந்த ஒரு வழக்கமான வணிக சினிமா நிர்ப்பந்திக்கிற சாதாரண காட்சியையும் தனக்கே உண்டான தனித்த ரசனையால் வித்யாசப்படுத்துவது பாரதிராஜா பாணி என்றே சொல்ல முடியும். இந்தப் படத்தில் பல இடங்களில் கதை சொல்லப்பட்ட விதத்துக்காக ரசிக்க முடியும் . முக்கியமாக தன் தாயை அழித்து தந்தையை ஜெயிலுக்கு அனுப்பியவனைத் தன் கையால் கொல்லப் போவதாக அத்தனை காலம் நளினமும் உறுதியும் கொண்டு வாழ்ந்து வருகிற ஷங்கர் உணர்ச்சிவசப்பட்டு ஐஜியிடம் குமுறுகிற காட்சியில் ஐஜி அவருக்கு பதில் சொல்லி அந்தக் காட்சிக்கு அப்பால் மீண்டும் தன் கடமை உணர்ந்து பணிக்குத் திரும்புவார் இன்ஸ்பெக்டர் ஷங்கர். இதை பாரதிராஜா வழங்கிய விதத்தால் இன்றல்ல இன்னும் நெடுங்காலத்துக்கு முக்கியத்துவம் குன்றாமல் ஒளிர்ந்து மிளிர்வது கண்கூடு.
இளம் வயதில் ஒன்று இரண்டல்ல பல படங்களில் வயதான முதிய மனிதன் வேடத்தை ஏற்று அவற்றில் வித்யாசங்களை காண்பிக்கத் தவறாமல் அதே சமயத்தில் நேர்த்தியும் குன்றாமல் மிகைநடிப்பும் நல்காமல் பண்பட்ட தனது நடிப்பை வெளிப்படுத்திய சொற்பமான தென் திசை நடிகர்களில் கமல்ஹாசனுக்கு முக்கிய இடமுண்டு. அதனை நல்ல முறையில் உறுதி செய்த படம் இது.
ஒரு கைதியின் டைரி பழி தீர்க்கும் படம்.
முந்தைய தொடர்:http://bit.ly/2nAHUKm