சீஷோஃப்ரீனியா என்ற பெயரிலான மனநிலைக் குறைபாட்டைப் பற்றி இந்திய அளவில் எடுக்கப்பட்ட முதற்சில திரைப்படங்களில் ஒன்று குடைக்குள் மழை. கதையாய்க் காகிதத்தில் எழுதுவதற்கு எனச் சில சிக்கல்கள் இருக்கின்றாற்போலவே எழுதிய எல்லாவற்றையும் திரைப்படுத்துவதில் முட்டுக்கட்டைகள் இருந்தே தீருமல்லவா..? ஆயிரம் கோடிக் குதிரைகள் என்று எழுதுவதற்கு மூன்றே வார்த்தைகள் போதுமானதாயிருக்கின்றன. அதனைக் காட்சியில் காண்பிக்க க்ராஃபிக்ஸ் என்றால்கூட எத்தனை செலவும் பிரயத்தனமும் ஆகும்..? தமிழ் சினிமாவின் முந்தைய உயரங்களை மாற்ற முயற்சித்த பரீட்சார்த்த சினிமாக்களின் வரிசையில் குடைக்குள் மழை என்ற பெயரை எழுதத் தகும்.
ஆர்.பார்த்திபன் தான், இயக்குகிற படங்களுக்கென்று ஒரு முகமற்ற முகத்தைத் தொடர்ந்து பராமரித்து வந்தார். ஒரு மனிதனை அவனது உள்ளகம் வெளித்தோற்றம் என எளியமுறையில் பகுக்கலாம். அவனறிந்த அகம் அவனறியாத அகம் என்று உப பகுப்பைக்கொண்டு வரைய முனைந்த சித்திரம்தான் இந்தப் படம். தீராக் காதல் கொண்ட ஒருவனின் கதை குடைக்குள் மழை ஆயிற்று.
ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி. ஹிடன் காமிரா எனப்படுகிற கண்ணுக்குத் தெரியாமல் காமிராவை வைத்துக் கொண்டு நிஜம் போலவே ஒரு நிகழ்ச்சியைத் திட்டமிட்டு கடைசியில் எல்லாம் சும்மா தான் எனப்படுகிற ப்ராங்க் ஷோக்கள் இன்றைய காலகட்டத்தில் இயல்பான ஒன்றாக நம் வாழ்வுகளுக்குள் மெல்ல நுழைந்து கொண்டிருக்கிறது. இன்றிலிருந்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே அத்தகைய டிவி நிகழ்ச்சி ஒன்றில் தான் கோமாளியாக்கப்பட்டதைத் தாளவொண்ணாமல் மனம் பிறழ்கிற வெங்கட கிருஷ்ணன் எனும் மனிதனாக நம் கண்களின் முன் தோன்றினார் பார்த்திபன்.இந்தக் கணம் கூட இயல்பென்று ஏற்க முடியாத ப்ராங்க் தன்மையை அன்றைய காலகட்டத்தில் தான் காதலிக்கப் படுவதாக நம்பி அந்த ஓரிழைப் பொய்யின் கருணையற்ற கரத்தைப் பற்றிக் கொண்டு பின் செல்கிறான் வெங்கடகிருஷ்ணன்.எல்லாம் பொய் எனத் தெரியவரும் போது மனம் நொறுங்குகிறான்.தான் விரும்பியதைக் காணத் தொடங்கும் மனவிரிசலினால் என்ன்வாகிறான் என்பது குடைக்குள் மழை படத்தின் மிகுதிக் கதை.
கிருஷ்ணன் எனும் சிங்கப்பூர் கோமானாக வந்து இறங்கும் இன்னொரு பார்த்திபன் அவருடைய வணிகமுகத்தின் பிரதி பிம்பம்.ஆல்டர் ஈகோ என்ற சொல்லாடலை ஆர்.பார்த்திபன் அளவுக்கு இன்னொரு நடிகர் சாத்தியப்படுத்தவில்லை எனத் தோன்றுமளவுக்கு நிஜத்தில் ஆர்.பார்த்திபன் எனும் படைப்பாளி மற்றும் அவருக்கு புறவுலகம் தந்த நடிக பிம்பம் ஆகிய இரண்டையும் இந்தப் படத்தில் வெவ்வேறு விதங்களில் நம்மால் உணரமுடிகிறது.அதே வேளையில் நிஜம் என்பதையே நிகழ்ந்தது மற்றும் நிகழவிரும்பியது என்ற இரண்டாய்ப் பகுக்கலாம் என்ற அளவில் நம் கண்களின் முன் விரிந்த படத்தின் முதல் பாதிக்கும் அடுத்த பார்த்திபன் வந்த பிறகு நாம் காணும் இரண்டாம் பாதிக்கும் கடைசியில் நமக்குப் படத்தின் பூர்த்தியில் கிடைக்கிற முற்றிலும் எதிர்பார்க்கவே முடியாத மனவிளையாட்டு அபாரமான காட்சி அனுபவமாக மனதில் உறைகிறது.
மிக எளிய காட்சியாக இந்தப் படத்தின் கதையின் அடி நாதம் உறையும்.அதன் அதிர்ச்சியிலிருந்து எப்போதுமே பார்வையாளனால் மீள முடியாது.அத்தனை தந்திகளினுள் தன் அன்னையின் மரணமும் ஒளிந்திருந்ததைக் கண்ணுற்று அதிர்கிற காட்சியில் ஆர்.பார்த்திபனின் முகமும் உடலும் உள்மனமும் என சகலமும் பரிமளிக்கும்.தமிழின் மிகச்சிறந்த காதல் வசனப் படங்களின் பட்டியல் ஒன்றினைத் தயாரிக்கும் போதும் மறக்காமல் குடைக்குள் மழை படத்தின் பெயரை அதன் வரிசையில் எழுதியே ஆகவேண்டும்.அத்தனை ரசம் சொட்டும் வசனங்கள் அழகோ அழகு.மதுமிதா போதுமான இயல்பான நடிப்பை வழங்கினார்.
பார்த்திபனின் ரசனை உலகறிந்த ஒன்று.இந்தப் படத்தின் பின்புலத்தில் இடம்பெறுகிற உயிரற்ற பொருட்களுக்கும் இந்தப் படத்தினுள் உயிர் இருந்தது.உதாரணமாகச் சொல்வதானால் ஒரு மாடர்ன் ஆர்ட் சித்திரம் மற்றும் கடிகாரம் டெலிஃபோன் ஆகியவற்றைச் சொல்லலாம்.கலை இயக்கம் தொடங்கிப் படக்கலவை வரை எல்லாமும் குறிப்பிடத் தக்க உன்னதத் தரத்தில் விளங்கின.நா.முத்துக்குமாரின் பாடல்கள் இசைப்பேழையை வளமாக்கின.
தான் கையிலெடுக்கிற எல்லா முடிச்சுக்களையும் கொண்டு கடைசி பத்து நிமிடங்களில் பார்வையாள மனங்களின் அத்தனை ஒவ்வாமை சந்தேகங்கள் அனைத்திற்குமான கேளாவினாக்களுக்கெல்லாமும் விடைகள் தந்துவிடுவது அற்புதமான அறிவுஜீவித்தனமான உத்தி.அந்த வகையில் முதல் முறையை விட இரண்டாம் முறை காணும் போது இந்தப் படம் இன்னொரு உன்னதமாக அனுபவரீதியினால இன்பமாகவே ரசிகனுக்கு நிகழ்கிறது.புதிர்த் தன்மை மிகுந்த ஊகிக்க முடியாத விளையாட்டின் இறுதிப்போட்டி தருகிற ரத்த அழுத்தத்தினை எதிர்பாராமையை மனப்பிசைவை எல்லாம் இந்தப் படம் உருவாக்கியது.ரசிக மேதமைக்குள் இயங்க முயன்ற வெகு சில படங்களில் ஒன்றானது. இந்தப் படத்தை வழக்கசாத்தியமற்ற அபூர்வம் என்றே சொல்லலாம்.
ஒளிப்பதிவும் இசையும் படத்தொகுப்பும் இந்தப் படத்தின் உபதளபதிகள் என்றே சொல்லலாம்.இளையராஜா தன் குரலில் பாடிய அடியே கிளியே எப்போதைக்குமான சுந்தரகானம்.இசை கார்த்திக்ராஜா.மனம் ஆறாமல் பலகாலம் தவிக்கும் சோகக் கவிதையாகவே குடைக்குள் மழை படத்தினைச் சுட்ட முடிகிறது.மிக முக்கியமான திரைப்படம்.
இன்னொரு மழை வேறொரு குடை அசாத்தியம்.காதலற்ற காதலின் கவிதை குடைக்குள் மழை.