ஒரு பெண்
ஒரு கரடி பொம்மையை
அணைத்துக்கொண்டு தூங்குவதுபோல
ஒரு ஆண் தூங்கும் காட்சியை
நான் எங்குமே கண்டதில்லை
கரடிகளுக்கும் பெண்களுக்கும் இடையே
பூர்வீகத்தில் என்ன பகை இருந்ததோ
இப்போது அவர்கள் கரடிகளோடு
ஒரு சமாதானத்தை விழைகிறார்கள்
அல்லது
கரடிகளோடு சேர்ந்து வாழ்வதற்கான
ஒரு எளிய பயிற்சி எனவும்
ஒருவர் அதை விளக்கக்கூடும்
கடவுள் கரடிகளை எப்போதும்
பெண்களின் வாழ்க்கைக்குள் அனுப்புவதற்காகவே
தயாரிக்கிறாரோ என்று
குழப்பமாக இருக்கிறது

கரடி பொம்மைகளால்
தனியாகவே இருக்கவே முடியாதா?
பெண்களோ குழந்தைகளோ
அவற்றை எப்போதும்
தழுவிக்கொண்டிருக்கிறார்கள்
கரடிகளும் அவர்களை
தாய்மையின் அல்லது காதலின்
பதிலியாக ஆதரவாக தழுவிக்கொள்கின்றன
இந்த உலகில் கடவுள் மற்றும் கவிதைகளைவிடவும்
நம்பத் தகுந்த பதிலியாக
கரடிபொம்மைகளே இருக்கின்றன

கரடி பொம்மைகள்
யாருடன் இருக்கிறோம் என்பதைப்பற்றி
ஒருபோதும் கவலைப்படுவதில்லை
அவை தனிமையானவர்களோடு இருக்கின்றன
மனிதர்களோடு ஒவ்வாமைகொண்டவர்களால்
நேசிக்கப்படுகின்றன
கரடி பொம்மைகள் உடல்வாசனையற்றவை
இன்னொருவரின் உடல் வாசனையால்
துன்புறவேண்டிய அவசியமில்லாதவை

கரடி பொம்மைகள்
நீங்கள் விழித்திருக்கும்போது
அவையும் விழித்திருக்கின்றன
நீங்கள் தூங்கும்போது
அவையும் தூங்கிவிடுகின்றன
நீங்கள் கரடி பொம்மைகளை
மறந்துவிடும்போது
அவை அது குறித்து புகார் செய்வதில்லை
நீங்கள் அவற்றை நிராகரிக்கும்போது
மறுபடியும் ஏற்றுக்கொள்ளும்படி மன்றாடுவதில்லை

கரடி பொம்மைகள்
யாரோலோ உங்களுக்குப் பரிசாகத் தரப்பட்டவை என்பதால்
அவை உங்களுக்குக்காட்டும்
அன்பிற்கு பதிலாக
நீங்கள் அவற்றிற்கு என்று
பரிசுகள் எதுவும் தரவேண்டியதில்லை

ஒரு கரடி பொம்மையை முத்தமிடும்போது
அவை சலனமற்று மெளனமாக இருக்கின்றன
அந்த முத்தத்தைப் பற்றி
ஒரு கரடி பொம்மைக்கு எந்த அபிப்ராயமும்
இருக்காது என்பது
உங்களை ஆசுவாசப்படுத்துகிறது

நன்கு வளர்ந்த ஒரு கரடி பொம்மை
இருளில் உட்கார்ந்திருக்கும்போது
அந்த அறையில் வேறு யாரோ இருக்கிறார்கள் என
தூக்கம் கலைந்து திடுக்கிடுகிறீர்கள்
ஒரே ஒரு கணம் அப்போது
ஒரு கரடி பொம்மை
மனிதத்தன்மையை அடைகிறது

ஒரு கரடி பொம்மைக்கு
மனம் என்ற ஒன்று இல்லை
ஆசாபாசங்கள் என்ற ஒன்று இல்லை
அது உங்களிடம் எதிர்பார்ப்புகளற்ற
ஒரு அன்பைப் பொழிகிறது
ஒரு கரடி பொம்மையை உங்களுக்கு
அவ்வளவு பிடித்திருக்கிறது

நான் ஒருவர் கையிலிருக்கும்
கரடி பொம்மையைவிட
கடையில் இருக்கும் கரடி பொம்மைகளை.
மிகவும் நேசிக்கிறேன்
அவை சுதந்திரமாக இருக்கின்றன
அன்பின் சுமைகளற்று
வருவோர் போவோரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றன

10.2.2020
இரவு 10.02
மனுஷ்ய புத்திரன்