மனிதனின் ஆகச் சிறந்த கண்டுபிடிப்பு எது என்று கேள்வி எழுப்பப்பட்டபோது, சற்றும் யோசிக்காமல் புத்தகம் என்று பதிலளித்தார் அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். இந்த உலகிற்குப் பல அறிவியல் கண்டுபிடிப்புகளை கொடுத்த ஐன்ஸ்டினே, மனிதனின் ஆகச் சிறந்த கண்டுபிடிப்பு புத்தகம் என்று கூறியுள்ளார் என்றால்? புத்தகங்கள் எந்த அளவிற்கு முக்கியம் என்று நாம் அனைவரும் தெரிந்துகொள்ளலாம். ஆனால், இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த புத்தகங்களுக்கு அழிவு உண்டா? இல்லையா?

புத்தகங்கள் சுமையா? சுகமா?

வளர்ந்து வரும் நவீன உலகில், செல்போன், லேப்டாப்களில் புத்தகங்களைப் பதிவிறக்கம் செய்து படிக்கும் பழக்கம் அதிகரித்து வருவதாகவும், இதனால் பிரிண்ட் செய்யப்பட்ட புத்தகங்களை வாசிப்பதற்கும், வாங்குவதற்கும் பெருவாரியான மக்கள் தயக்கம் காட்டுவதாகவும் பல தகவல்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன. இதனால் எதிர்காலத்தில் புத்தகங்கள் அழிந்துவிடும் என்று கூறப்பட்டுவருகிறது.
இதற்கு சில காரணங்களையும் அவர்கள் தெரிவிக்கிறார்கள். 20 புத்தகங்களை ஒருவரால் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்து செலவது கடினம். ஆனால் லேப்டாபிலோ, செல்போனிலோ 20 புத்தகங்களையும் பிடிஃப் வடிவில் பதிவிறக்கம் செய்தால், எளிதாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லலாம் என்று தெரிவிக்கிறார்கள். மேலும் நவீன காலத்திற்கு ஏற்ப நாமும் மாற வேண்டும் என்கிறார்கள்.

வாசிப்பு அவசியம்

புத்தகம் படிப்பதற்கும், அதை செல்பொனிலோ, லேப்டாபிலோ படிப்பதற்கு நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. தொடர்ந்து 2 மணி நேரம் கூட புத்தகத்தைப் படிக்க முடியும். ஆனால், இணையதளத்தில் அவ்வாறு படிக்க முடியாது. 2 மணி நேரம் தொடர்ந்து, ஒருவர் செல்போனையோ, லேப்டாபையோ பார்க்க முடியாது. அவ்வாறு பார்த்திருந்தால், பார்வைத் திறன், தலைவலி போன்ற உடல் ரீதியான பிரச்சனைகள் நிறைய ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால், நாம் புத்தகங்களை வாசிக்கும்போது, நம்மை அறியாமல் ஒரு ஒருவிதமான உணர்வினை ஏற்படுத்தும், புது உலகத்திற்கு இட்டுச் செல்லும். புத்தகத்தின் கதாப்பாத்திரமாகவே தன்னை உருவகப்படுத்தப்படுத்திக் கொள்ளுமாறு தோன்றும். ஒருவிதமான அமைதி மனதில் நிலவும். நல்ல எண்ணங்களை மனதில் உண்டாக்கும். நேர்மையான வழியில் நடக்க உதவும். இந்த உணர்வுகள் இணையத்தில் படித்தால் கிடைப்பது கடினம்.

 

மக்களிடம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 23ஆம் தேதி உலக புத்தக தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்தத் தினம் புகழ்பெற்ற நாடக ஆசிரியரும் இலக்கியவாதியுமான ஷேக்ஸ்பியர் பிறந்த நாள் ஆகும். இந்தத் தினத்தில் வாசிப்பு தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரங்களுக்கு ஏற்பாடு செய்கின்றனர். நாம் உயிர் வாழ்வதற்கு முக்கியம் சுவாசம். அதுபோல நாம் மகிழ்ச்சையாக வாழ்வதற்கு முக்கியம் வாசிப்பு.

புத்தகங்களுடன் வாழ்க்கை

தனிமைத்தீவில் ஒரு செல்போனுடனும், லேப்டாப் உடனும் உங்களை அனுப்பிவைத்தால், சார்ஜ் இருக்கும் வரை ஒரு இரண்டு மணி நேரம் உபயோகிக்க முடியும். அதன்பின்னர்,……கேள்விக்குறிதான். ஆனால் 100 புத்தகங்களுடன் உங்களை அனுப்பினால், உங்களுடைய வாழ்வு மகிழ்ச்சையாக இருக்கும். தனிமைத்தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது, ”புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துவருவேன்” என்று கூறினாறாராம் நம் நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு.
உங்களுக்கு ஒரு கோடி கிடைத்தால் என்ன செய்வீர்கள்? என்று கேட்டபோது, “ஒரு நூலகம் கட்டுவேன்” என்று பதிலளித்தார் மகாத்மா காந்தி. “கோவில் இல்லா கிராமத்தில் கூட வாழலாம், ஆனால், நூலகம் இல்லா கிராமத்தில் வாழக்கூடாது” என்ற பழமொழியை பல எழுத்தாளர்கள் கூறியிருக்கின்றனர். இவற்றை பார்க்கும்போது, புத்தகங்களுக்கு அழிவு என்பதே இல்லை என்று தெரிகிறது.