வீதிக்கு வாங்க ரஜினி
முதல் ஆளாக இல்லாவிட்டாலும்
கடைசி ஆளாகவாவது.
நீங்கள் காணாமல் போய்விட்டீர்கள் என்றும்
கடத்தப்பட்டு விட்டீர்கள் என்றும்
தலைமறைவாகிவிட்டீர்கள் என்றும்
ஊடகங்கள் விவாதிக்கத் தொடங்கிவிட்டன
இன்னும் நீங்கள்
அமைதியாக இருப்பது நல்லதல்ல

வீதிக்கு வாங்க ரஜினி
வெய்யில் குறைந்து
அந்தி சாய்ந்துவிட்டது
மாலை நடை மூப்புக்கு நல்லது
கடல் காற்று சுவாசத்திற்கு நல்லது
சாலையோர தேநீர் கடையில்
இஞ்சி டீ தலை சுற்றலுக்கு நல்லது

வீதிக்கு வாங்க ரஜினி
கதவைத்திற காற்றுவரட்டும்
என்றார் நித்தி
நீங்கள் ‘கேட்’டைத் திறங்கள்
‘மைக்’குகள் ‘கேட்’டிற்கு வெளியே
உங்களுக்காகத் தவமிருக்கின்றன
இஸ்லாமியர்களுக்கு
நீங்கள் சொன்னபடி ஒன்றல்ல
நூறு அடிகள் விழுந்துவிட்டன
இன்னும் ஏன் தயங்குகிறீர்கள்?

வீதிக்கு வாங்க ரஜினி
போராட்டக்காரர்களிடையே
சமூகவிரோதிகள் புகுந்துவிட்டார்கள்
என்பதுதானே உங்கள் அடுத்த டயலாக்?
அதை எவ்வளவு நேரம் மனப்பாடம் செய்வீர்கள்?
ஆனால் அதை இந்தமுறை
எப்படிச் சொல்வதெனக் குழம்புகிறீர்கள்
ஏனெனில் எந்தத் தீவிரவாதியும் புகமுடியாதபடி
போராடுகிறவர்கள் எல்லோருமே தீவிரவாதிகள்
குல்லாபோட்ட தீவிரவாதிகள்
முக்காடிட்ட தீவிரவாதிகள்

வீதிக்கு வாங்க ரஜினி
நீங்கள் துடிப்பாக நடந்துவருவதைக் காண
எங்களுக்கும் மிகவும் பிடிக்கும்
உங்கள் துருப்பிடித்த மூளையைப்போலவே
உங்கள் துடிப்பும்
இந்த வயதிலும் மாறாமல்
அப்படியேதான் இருக்கிறது
எதையாவது பேசுங்கள்
அரசரின் ரத்தக்கறை படிந்த பூட்ஸ்களை
இன்னொருமுறை கழுவுங்கள்
நீங்கள் உங்கள் ரசிகனின் மாமிசத்தை
விற்பவர் என்பதையும்
உங்களையே எந்தக் கூச்சமும் இல்லாமல்
விற்றுக்கொள்பவர் என்பதையும
இன்னொருமுறை உலகிற்குக் காட்டுங்கள்

வீதிக்கு வாங்க ரஜினி
வீதியில்தான் மக்கள் இருக்கிறார்கள்
வீதியில்தான் நீதி இருக்கிறது
வீதியில்தான் அன்பு இருக்கிறது
வீதியில்தான் சத்தியம் இருக்கிறது

15.2.2020
மாலை 4.34
மனுஷ்ய புத்திரன்