எதற்கும் கொஞ்சம் அடக்கிக் கொள்ளுங்கள்
உங்களின் அழுகையை.
எல்லாமும் விளக்கமாய் சொன்னவர்கள்
இதையும் சொல்லாமல் விட்டிருக்கிறார்கள்.
நான் உங்களுக்காக கிராம பஞ்சாயத்தில் பேசிவிட்டேன்.
அவர்கள் யூனியனில் பேசி நகராட்சியில் என்ன
பதிலைக் கொடுப்பார்களோ அதன் பிரகாரம்
நடந்து கொள்ளச் சொல்லியிருக்கிறார்கள்.
அவர்கள் அனுமதி கொடுத்த
பிறகு நீங்கள் பொது இடத்தில் நின்று
கூட்டமாக ஒப்பாரியை துவங்கலாம்.
அது வரை அடக்கிக் கொள்ளுங்கள்
உங்கள் அழுகையை.
ஞாயிற்றுக்கிழமையைக் காணவில்லை என்று
பெரிதாக புகாரைத் தூக்கிக் கொண்டு வந்து விட்டான்.
திங்கட்கிழமையும் காணாமல்தான்
போனால் என்ன வீட்டினுள் கிடப்பவனுக்கு?
கடந்த கோடைக் காலத்தில்
அக்னிவெய்யிலுக்காய் பயந்து
தண்ணீர் தொட்டியினுள்ளும்
மரநிழலிலும் பதுங்கியிருந்தேன்.
அக்னி வெய்யில் இந்த வருடமும்
வந்திருக்கிறது சொல்லிக் கொண்டே.
நானோ மரமாகியிருக்கிறேன்
நிழலில்லாமல்.
இந்த வல்லூறுகளைப் பாருங்கள்
தன் குஞ்சுகளையே இறக்குக்குள்ளே
தள்ளி நசுக்கி நசுக்கி கொன்று விட்டு
ஒன்றுமறியாதது போல பனை உச்சிகளில்
அமர்ந்திருக்கிறதை!
அவநம்பிக்கைகள் சூழ்ந்து கொண்ட
வாழ்வினுடைய நாட்களை ப்ரேக்கிங் நியூஸ்
பார்த்தபடியே உச்சுக் கொட்டிக்கொண்டு
வயீற்றுப்பசிக்கு சுடுகஞ்சி குடிக்கிறோம்.
உப்பு அதிகமாய்..
இல்லையில்லை.. உப்பே இல்லை..
ஒன்றும் தெரிவதில்லை இந்த நாக்கிற்கு!
மீளவே முடியாத நாட்களின்
இறுக்கமான பிடியில் சிக்கியிருக்கும் நான்
எனது ஒவ்வொரு நாளின் கனவுகளையும்
இரவில் இடுகாடு வரை சென்று
குழிதோண்டிப் புதைத்து விட்டு திரும்புகையில்
யாருமற்ற சாலையில் சம்மணமிட்டமர்ந்து
மம்பட்டியை சுத்தம் செய்கிறேன்..
இந்தக் கவிதை இப்போதைக்கு
பெருநகர சந்திப்பில் ஊர் ஊருக்கு
நின்று போகும் பேசஞ்சர் ரயிலாய்
மாறியிருக்கிறது. – இது காதலர்களுக்கான
பிரத்யேக பேசஞ்சர் ரயில். ஊரடங்கு நாட்களில்
சில தளர்வுகள் வருகையில் இந்த ரயிலை
இயக்கும்படி காதலர்கள் கேட்டிருந்தார்கள்.
ஒவ்வொரு ஊரிலும் ஏறும் காதலர்களிடம்
கட்டணங்கள் ஏதும் வசூலிப்பதில்லை
என நிர்வாகம் அறிவித்திருக்கிறது.
காதலர்கள் நிரம்பியபின் இயல்பு வாழ்க்கைக்கு
உலகம் வரும் வரை இந்த ரயிலானது
எங்குமே நிற்காடமல் தண்டவாளங்களில்
ஓடிக்கொண்டேயிருக்கும் என்ற ஒரே ஒரு
நிபந்தனையுடன் இன்றிரவு 9.30-க்கு
பெருநகர சந்திப்பிலிருந்து இந்த ரயில் புறப்படுகிறது!
சந்து சந்தாய்
வீதி வீதியாய்
சுற்றிச் சுற்றி சுற்றிச் சுற்றி..
சுற்றிச் சுற்றி..
திருடி வந்தது போல
வீடு சேர்ந்து பையைக் கொடுக்கையில்
கேள்வி எழுகிறது
இப்படியெல்லாம்
பயந்து பயந்து சோறு திங்கத்தான் வேணுமா?
பசியை நாக்கில் தொங்க விட்டபடி நாற்கரச் சாலையை
நக்கிச் சென்று கொண்டிருக்கும் அந்த நாய் எங்கள் வீட்டில்
வளர்க்கப்பட்ட நாயல்ல!
ரயில்வே தண்டவாளத்தில் கற்களைக் கொத்தி
உண்டபடியே சென்று கொண்டிருக்கும் அந்தக் கோழி
எங்கள் வீட்டில் வளர்க்கப்பட்ட கோழியல்ல!
சல்லிக்கற்கள் தனக்கான உணவல்ல
என்பதையறிந்த வெளிமாநில கோழி அது!
அது போலத்தான் அந்த நாய்க்கும் தெரியும்
தார்ச்சாலையை நக்கியபடி சென்றால் பசியாறாதென!
இரண்டும் தங்கள் மாநிலத்துக்கு வேறு வேறு
பாதையில் பயணப்பட்டு சென்றுவிட முயற்சிக்கின்றன.
இங்கு எதுவும் எங்களைக் கேளாமல் எப்படி நிகழலாம்?
தன்னிச்சையாக எந்த விலங்கினமும் இங்கே செயல்படக்கூடாதென
படித்துப் படித்து சொல்லிக் கொண்டிருக்கிறோம் அதைக் காதிலேயே
வாங்கிக் கொள்ளாமல் என்ன நடக்கிறது இங்கே?
அமைதி கொள் கோழியே! என் அருமை நாயே!
செல்லவிரும்புமிடத்திற்கு கூடிய சீக்கிரம்
ரதத்தில் பயணிக்கச் செய்கிறோம்!
தலைவரையும் தலைவரின் எல்லா
திரைப்படங்களையும் அவனுக்கு பிடிக்கும்.
வீட்டிலேயே இருங்கள் என்று அரசு
அறிவித்த பிறகு மனைவிக்கு உதவியாய்
சமையல்கட்டில் நின்றிருந்தவன் நாட்கள்
நகர நகர தனித்தே சமையல் கட்டில்
நின்றுவிட்டான்.
மனைவியும் அம்மாவும் தாயக்கரம்
ஆடிக் கொண்டிருக்க சமையல் முடித்த
கையோடு டிவி பார்க்கத்துவங்கினானவன்.
தலைவரின் புதிய படம் போட்டிருக்கிறார்கள்.
இதைத்தான் தியேட்டரில் இரண்டாம் நாளே
சென்று பார்த்திருந்தான்.
தலைவர் படம் வெளியாகிற பழைய நாட்களில்
கூட்டமாய் தியேட்டரில் ரசிகர்களோடு அமர்ந்து
லாட்டரி டிக்கெட்டுகளை சுக்குநூறாய்க் கிழித்து
திரை நோக்கி வீசி மகிழ்வான்.
தலைவர் டொக்காகி விட்டாரோ?
அன்று தியேட்டரில் எண்ணி பதினொரு பேர் தான்
தலைவரை பார்க்க அமர்ந்திருந்தார்கள்.
தலைவர் திரையில் முதலாக தோன்றும் காட்சியில்
இவனாக விசில் போட்டான்.
’நான் சீக்கிரம் வருவேன்’ என்று தலைவர் சொன்னபோது
இவனுக்கு மீசை நரைக்காமல் இருந்தது.
இப்போது தலைவரைப் போன்றே மீசைக்கும்
டையடிக்கத் துவங்கி விட்டிருந்தான்.
டிவியில் செய்தி சேனல் பக்கமும் சென்றான்.
தலைவர் மத்திய அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும்
எத்தனை கோடிகள் கொடுத்தாரென இவனுக்கு
தெரிந்து கொள்ள ஆர்வமாயிருந்தது.
தலைவர் விளக்குப் பிடித்து விட்டு வீட்டினுள்
கையசைத்தபடி சென்றார். – இவனும்
கையசைத்தான் தலைவருக்கு.
திரைப்படத்திற்கே திரும்ப வந்தான்.
‘வந்துட்டேன்னு சொல்லு’ என்றார் தலைவர்.
டிவியை நிறுத்தி விட்டு சோகமாய்ப் போய் கட்டிலில் சாய்ந்தான்.
அலைபேசியை எடுத்து நண்பர்களுக்கு
சொல்லிக் கொண்டேயிருந்தானவன்.
‘தலைவரு உண்டுனா ஒரு தொகையை
குடுத்துட்டு வெளிய காட்டிக்க விரும்பலன்னு
சொல்லிட்டாராம்!’
வேறு வழியேதுமில்லை.
அவர்களுக்கு இப்போது தான்
பயம் தொற்றிக்கொண்டிருக்கிறது.
சட்டியில் இருந்தால் தானே ஆப்பையில் வரும்
என்றும் தெரிந்து விட்டது.
இங்கு சம்பாதித்துத்தான் ஊருக்கு
அனுப்பிக் கொண்டிருந்தார்கள் அவர்கள்.
இத்தனை வருடங்கள் மாடாய் உழைத்தும்
முதலாளிகள் கை விரித்து விட்டார்கள்.
தங்கியிருந்த அறைகளில் எத்தனை நாட்கள்
தான் ஈரத்துணியை வயிற்றுக்கு கட்டிக் கொண்டு
படுத்துறங்குவது?
நாளுக்கு நாள் தொற்றெண்ணிக்கை கூடிக்
கொண்டேயிருக்கிறது.
ஊருக்குச் செல்ல பேருந்தையோ,
ரயில் வண்டியையோ கேட்பதற்கும்
வைரஸ் பயத்துடன் சாலையில் அமர்ந்து
போராட வேண்டியிருக்கிறது.
அதிகாரிகள் அப்போதைக்கு சமாதானப்படுத்தி
அறைக்குள்ளேயே போய் படுத்துறங்குங்கள்
என்று சொல்கிறார்கள்.
நாளையும் அவர்கள் சாலைக்கு வந்து
நின்று ‘அனுப்பி வையுங்கள் எங்களை’
என்று கேட்பார்கள். – ஒட்டு மொத்த
குரல்களும் நாளை மீண்டும் சாலை நடுவே
உங்களுக்கு கேட்கையில்
‘யாரைக் கேட்டு வந்தீர்கள்?’ என்று மட்டும்
கேட்டு விடாதீர்கள்!