அழுது அழுது கண்கள் வீங்கிப் போய் இருந்தன அய்யனாருக்கு. வீடே சோகத்தில் ஆழ்ந்திருந்தது. அய்யனாரின் மகள் யாழினி. 12 ம் வகுப்பு முடித்துவிட்டு மருத்துவக் கனவோடு வலம் வந்துகொண்டிருந்தாள். அவளும் காலை முதலே பட்டினி. அய்யனாரின் மனைவி தமிழ்ச்செல்வி அவளும் இடிந்து போயிருந்தாள்.
கடும் உழைப்பாளி அய்யனார். விவசாயக் குடும்பத்தைச் சார்ந்தவன். விவாசயம் விவசாயிக்கு என்று சோறு போட்டுள்ளது. திருமணம்,வறுமை அனைத்தும் நகர வாழ்க்கைக்கு அவனை உந்தித் தள்ளியது. சென்னை வந்து இருபது வருடங்கள் ஓடிவிட்டன. எப்படியாவது முன்னேறி விட வேண்டும் என்ற வேட்கையில் வேகமாக ஓடியது அய்யனார் மட்டுமல்ல நாட்களும்தான்.
மகள் பிறந்தாள். யாழினி என்று பெயர் சூட்டியவன் அவளை மருத்துவராக்கி அழகு பார்க்க துடியாய் துடித்தான். யாழினியும் படிப்பில் படு சுட்டி. மிக நன்றாகவே படித்தாள். அரசுப் பள்ளியில் தமிழ் வழிக்கல்வியில் படித்தவள் 1129 மதிப்பெண்கள் பெற்றாள். மிகச்சரியாக அந்த ஆண்டு முதல் இடியாய் வந்திறங்கியது நீ்ட். நீட் தேர்வு எழுதினால்தான் மருத்துவராக முடியும் என்ற நிலையில், சில பல லட்சம் கொடுத்து நீட் பயிற்சி வகுப்பில் சேர்க்கச் சொல்லி தந்தையிடம் எப்படிக் கேட்பது என்று மனதிற்குள்ளேயே கருகியது அந்த மலர்.
பல இடங்களில் வேலை பார்த்த அய்யனார் சில ஆண்டுகளுக்கு முன்தான் சொந்தமாக டாக்சி ஓட்டலாம் என்று முடிவு செய்து மிகுந்த போராட்டத்திற்குப்பின் தனியார் வங்கி ஒன்றில் வட்டி அதிகமெனினும் வேறு வழியின்றி கடன் வாங்கி ஒரு கார் வாங்கி ஓட்டத் தொடங்கியிருந்தான்.
தொடர்ந்து ஏறி வந்த டீசல் விலை, டோல்கேட் கட்டணம், வரிகள் என்று நொடிந்து போயிருந்த நிலையில் டாக்சி தொழிலில் வந்து குதித்தன பெரு நிறுவனங்கள். சொந்தமாக வாடகை டாக்சி ஓட்டிக்கொண்டிருந்தவர்கள் அந்த பெரு நிறுவனங்களில் தங்களை இணைத்துக் கொண்டு தங்கள் சொந்தக் காரை ஓட்டி அதில் வரும் லாபத்தை அந்த பெரு நிறுவனங்களோடு பங்கு போட்டுக்கொள்ளும் நிலைமைக்கு தள்ளப்பட்டனர். அய்யனார் சுயமாரியாதைக்காரன். தனித்தே ஓட்டிக்கொண்டிருந்தவனால் ஒரு அளவுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியவில்லை. சோர்ந்து போகும்போதெல்லாம் அய்யனார் நினைப்பது அவன் மகளை மட்டுமே. இன்னும் சில ஆண்டுகள் தான் என் மகள் டாக்டர் ஆகிவிடுவாள் என்று கனவைத் தின்று கஷ்டங்களைச் செரிமாணம் செய்து கொள்வான்.
அந்த தருணத்தில் வந்த பேரிடிதான் நீட். மகளின் மருத்துக் கனவு தகர்ந்து விடக்கூடாது என்பதற்காக, கடன்பட்டாவது மகளை மருத்துவராக்க வேண்டும் என்ற வெறியில் பயிற்சி மையத்திற்கு அனுப்பினான்.
மாநில வழிக் கல்வியில் பயின்ற யாழினி சிபிஎஸ்சி பாடத்திட்டத்திற்கு ஏற்றவாறான பயிற்சிக்கு மாற போராடிக்கொண்டிருக்கும்போதே, அய்யனார் மேலும் பெருகிய கடனை அடைக்க வழியின்றி போராடிக்கொண்டிருந்தான்.
ஆயினும், வண்டி ஓடியதால் தினசரி பட்டினியின்றி பொழுது கழிந்தது.
அன்று அதிகாலை வழக்கம் போல் எழுந்து வாசலுக்கு வந்த அய்யனாருக்கு பேரதிர்ச்சி. வாசலில் நின்ற வண்டியைக் காணவில்லை. பதறிப்போனவன் அருகில் எல்லாம் தேடி விட்டு காவல்நிலையம் ஓடினான். வண்டிக்கு லோன் கட்டியிருக்க மாட்ட அதான் பேங்காரன் வண்டிய தூக்கியிருப்பான் என்று சொல்லும்போதுதான் அய்யனாருக்கு புரிந்தது. 3 மாதமாக தவணை கட்டாமல் போனது. மிகச்சரியாக தவணை கட்டி வந்த அய்யனாருக்கு தொடர் தொழில் முடக்கத்தால் கடந்த மூன்று மாதங்களாக தவணை கட்ட முடியவில்லை. என்ன செய்வது என்று மனம் நொந்து போன நிலையில் வீட்டிற்குள் வந்தான். வண்டி கிடைச்சுச்சா என்று கண்ணீரோடு கேட்ட மகளுக்கும், மனைவிக்கும் பதில் சொல்ல முடியாதவனாய் சுவரோடு சுவராய் சாய்ந்து உட்கார்ந்தவன் எழவே இல்லை. அடுத்தடுத்த நாட்களுக்கு சாப்பாட்டிற்கு முதலில் என்ன செய்வது நீண்ட நேரம் யோசித்தவன் , தினசரி கூலிக்கு கார் ஓட்ட முடிவு செய்து ஒவ்வொருவருக்காய் போன் செய்யத் தொடங்கினான். ஒரு வழியாய் அந்த வேலை கிடைத்தது. திங்கட் கிழமையில் இருந்து வேலைக்கு வந்து விடு என்ற வார்த்தையை கேட்ட பிறகுதான் சின்ன மன நிம்மதி ஏற்பட்டது அய்யனாருக்கு. ஆனால் அதுவும் நீண்ட நேரம் தங்கவில்லை. அடுத்த நாளே பிரதமர் அறிவித்தார் நாடு முழுதும் முழு ஊரடங்கு. கொரோனா பரவலைத் தடுக்க இதைத்தவிர வேறு வழியில்லை. எனவே யாரும் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என்று அறிவிக்க, மொத்த குடும்பமும் எண்ணெய் சட்டிக்குள் விழுந்த விட்டில் பூச்சிகளாய் தகித்துப் போனது. ஓரிரு நாட்கள் ஓடின. நாட்கள் வாரங்களாகின. வாரங்கள் மாதங்களாகின. ஊரடங்கு தளர்ந்த பாடில்லை. எத்தனை பேரிடம்தான் உதவி கேட்பது. மூன்று வேளை உணவு இரண்டு வேளையாகி , இரண்டு வேளை உணவு ஒரு வேளையாகிப் போனது. அன்று பக்கத்து வீட்டிற்குச் சென்ற யாழினி மகிழ்ச்சியாய் ஓடி வந்தாள். அப்பா பேப்பர் பார்த்தீங்களா என்று கேட்டு விட்டு கையோடு எடுத்து வந்த அன்றைய தினசரி நாளிதழை நீட்டினாள். சோர்ந்து போன கண்களோடு அதை வாங்கியவாறே அய்யனார் கேட்டான் பேப்பர்ல என்னம்மா விசேஷம் என்று. யாழினி, வெடுக்கென்று பேப்பரை பிடுங்கி அவளே வாசிக்கத் தொடங்கினாள்.
பெரும் தொழிலதிபர்கள் அரசு வங்கிகளில் பெற்ற 69 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது என்று.
’’இதுல நமக்கு என்னடா இருக்கு.?’’ என்றான் அய்யனார்.
அப்பா, பணக்காரங்க வாங்கிய 69 ஆயிரம் கோடி ரூபாய் கடனையே தள்ளுபடி செய்துட்டாங்கன்னா நம்மைப் போன்ற ஏழைகள் கடனையும் தள்ளுபடி செய்வாங்க தானேப்பா என்றாள் வெள்ளந்தியாய்…
அய்யனாருக்கும் சின்னதாய் ஒரு ஆசை துளிர் விட்டது. யாரிடம் இதைப் பற்றி கேட்பது என்று சிந்தித்தவனுக்கு சட்டென்று நினைவுக்கு வந்தது கேசவன்
கேசவன். அய்யனாரின் தெருவிற்கு சில தெருக்கள் தள்ளி வசிக்கும் வழக்கறிஞர் . அய்யனாரின் காரை வாடகைக்கு எடுத்ததன் மூலம் இருவருக்கும் அறிமுகம் உண்டு.
அய்யனார் அந்த பேப்பரை எடுத்துக் கொண்டு வேக வேகமாக கேசவன் வீட்டிற்குச் சென்றான்.
வாசலிலேயே நிறுத்தி வாய் நிறைய வரவேற்ற கேசவன், என்ன செய்தி என்று கேட்க கொண்டு வந்திருந்த பேப்பரை நீட்டி செய்தியைச் சொன்னான் அய்யனார்.
கேசவன், சற்றே அதிர்ச்சியாகி பின் உடனடியாக சுதாரித்துக் கொண்டு, அய்யனாரு, பேப்பர்ல வரும் எல்லாத்தையும் நம்பாதே. கடனை தள்ளுபடி எல்லாம் பண்ணல. ரைட் ஆப் தான் பண்ணயிருக்காங்க சரியா என்று கூற , அய்யனார் புரியாதவனாய், ரைட் ஆப்பா அப்படினா என்ன சார் அர்த்தம் என்று கேட்டான்.
அடுக்கடுக்காய் கேசவன் பல்வேறு விளக்கங்களைச் சொன்னபின்னும் அய்யனாருக்கு புரியவில்லை. கடைசியாக அய்யனார் கேட்டான் ’’சார் ஒரு வரில சொல்லுங்க, இந்த கடனை அவங்க திருப்பி கட்டனுமா இல்லையா..கட்ட மாட்டாங்க அப்படினா என் காரை எடுத்துட்டு போன மாதிரி அவங்க சொத்தையெல்லாம் ஏலம் விட்டு அந்த காசை அரசாங்கம் எடுத்துக்குமா .?இல்லை அவங்க இப்ப மாதிரியே வெளிநாட்டுல ஜாலியா இருப்பாங்களா ?’’ என்று கேட்க, கோபமுற்ற கேசவன் ;;அய்யனாரு, இப்படியெல்லாம் பேசக்கூடாது. மத்தவங்களைப் பார்க்காதே. நாம ஒழுங்கா இருக்கனும். அதுதான் முக்கியம் நாம ஒவ்வொருவரும் ஒழுங்கா இருந்தா நாடு நல்லா இருக்கும். நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்பதை விடு அய்யனாரு. நாட்டிற்கு நீ என்ன செய்தாய்னு யோசி’’ என்று புத்திமதி சொல்லத் தொடங்க பசியோடும், விடைதெரியா கேள்விகளோடும் வீடு திரும்பியவன் மீண்டும் அழத்தொடங்கினான். மெல்ல இருட்டத் தொடங்கியது.