கருங்கண் தாக்கலை பெரும்பிறி துற்றெனக்
கைம்மை உய்யாக் காமர் மந்தி
கல்லா வன்பறழ் கிளைமுதற் சேர்த்தி
ஓங்குவரை அடுக்கத்துப் பாய்ந்துயிர் செகுக்கும்
சாரல் நாட நடுநாள்            5
வாரல் வாழியோ வருந்துதும் யாமே.

உயரமான ஒரு மலை.

அந்த மலையில் உயரமான ஒரு பெரிய மரம்.

ஒரு ஆண் குரங்கு அந்த மரத்தில் தன் குடும்பத்தோடு வசித்து வந்தது. அந்த ஆண் குரங்கு மரத்தில் ஏறுவதிலும் கிளைக்குக்கிளை தாவுவதிலும் அபாரமான திறமை பெற்றிருந்தது. அந்த ஆண் குரங்கின் கண்கள் நல்ல கறுப்பாகவும் நல்ல அழகாகவும் இருந்தது. அந்த ஆண்குரங்கு தன் மனைவி மீதும் தன் பிள்ளை மீதும் அளவற்ற பாசம் வைத்திருந்தது.

ஒருநாள் அந்த ஆண்குரங்கு அந்தப் பெரிய மரத்தில் ஒரு கிளையில் இருந்து இன்னொரு கிளைக்குத் தாவும் போது கீழே விழுந்து இறந்துவிட்டது

அந்தப் பெண் குரங்கு கணவன் இறந்த பிறகு உயிர்வாழ விரும்பவில்லை.

அந்தப் பெண் குரங்கு அது பெற்றெடுத்த ஒத்தைக்கு ஒரு செல்ல மகனை அதன் பெற்றோரிடம் ஒப்படைத்தது.

அன்றைய பகல்பொழுது கழிந்தது.

இரவு வந்தது.

நடுச் சாமமும் வந்தது.

சரியான இருட்டு.

அந்தப் பெண் குரங்கு உயரமான அந்த மலையில் இருந்து குதித்து அதன் உயிரைப் போக்கிக் கொண்டது.

-கடுந்தோட் கரவீரனார் 
குறுந்தொகை 69