வெண்மணற் பொதுளிய பைங்காற் கருக்கின்
கொம்மைப் போந்தைக் குடுமி வெண்தோட்
டத்த வேம்பி னமலை வான்பூச்
சுரியா ருளைத்தலை பொலியச் சூடிக்
குன்றுதலை மணந்த கானம்
சென்றனர் கொல்லோ சேயிழை நமரே.
ஒரு பெரிய பாலைவனம்.
அந்தப் பெரிய பாலைவனத்தில் உயரமான ஒரு மரம் இருக்கிறது. அந்த மரத்துக்குப் பெயர் ஓமை மரம்.
இது கோடைக்காலம்.
இந்தக் கோடையில் இலைகளையெல்லாம் உதிர்த்திவிட்டு அந்த ஓமைமரம் மொட்டையாக நின்று கொண்டிருக்கிறது. அந்த மரத்தின் அடித்தூரில் உள்ள பட்டைகளை யானைகள் தின்றுவிட்டன. காற்றுக்கு, அந்த ஓமைமரத்தின் காய்ந்தக் கோப்புகள் அசைந்து கொண்டிருக்கிறது.
ஒரு பெண்புறா அந்த ஓமைமரத்தின் ஒரு கொப்பில் உட்கார்ந்திருக்கிறது. இரைதேடப் போன அந்தப் பெண்புறாவின் கணவன் இன்னும் திரும்பி வராததால் அது தனிமையில் உட்கார்ந்திருக்கிறது. அது வருத்தத்தோடு உட்கார்ந்திருக்கிறது. அழுது அழுது அது கணவனைக் கூப்பிடுகிற சோகமான குரல் அந்தப் பாலைவனத்தில் கேட்டுக் கொண்டிருக்கிறது.
-குடவாயில் கீரத்தனார்
குறுந்தொகை 79