நிலந்தொட்டுப் புகாஅர் வானம் ஏறார்
விலங்கிரு முந்நீர் காலிற் செல்லார்
நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்
குடிமுறை குடிமுறை தேரிற்
கெடுநரும் உளரோநம் காதலோரே. 5

எங்கள் ஊரில் அரண்மனை மாதிரி ஒரு பெரிய வீடு இருக்கிறது. அந்தப் பெரிய வீட்டில் அழகான ஒரு பெண் இருக்கிறாள். அவள் பெயர் வெள்ளிவீதி. வெள்ளிவீதிக்குத் திருமணம் ஆகிவிட்டது.

வெள்ளிவீதியின் கணவனைக் கொஞ்ச நாளாகக் காணோம். அவள் வீட்டார் வெள்ளிவீதியின் கணவனைத்தேடி ஊரெல்லாம் தேடித்தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களால் வெள்ளிவீதியின் கணவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

தன் கணவனைக் கண்டுபிடிக்க முடியாமல் அலைந்து அலைந்து களைத்துப் போன அவள் வீட்டாரிடம் வெள்ளிவீதி சொல்லுகிறாள்…

“என் கணவர் அவர் கால்களால் கடல்மேல் நடந்து கடலைக் கடந்து போயிருக்க மாட்டார். என் கணவர் மறந்து பறந்து வான மண்டலத்தின் உச்சிக்கும் போயிருக்க மாட்டார். என் கணவர் இந்தப் பெரிய நிலத்தைத் தோண்டி நிலத்துக்கு உள்ளேயும் போயிருக்க மாட்டார்.”

“இதுமாதிரி வித்தைகள் எதையும் என் கணவர் படிக்கவில்லை”

“நீங்கள் எந்த ஒரு நாட்டையும் தவறவிடாமல் எல்லா நாடுகளுக்கும் போக வேண்டும். நீங்கள் சின்னச் சின்ன ஊர்களுக்கெல்லாம் போக வேண்டும். நீங்கள் ஒருஒரு வீடாகப் போய் தீர விசாரித்துத் தேடிப் பார்க்க வேண்டும்.”

“நீங்கள் இன்னும் தீவிரமாகத் தேடினால் என் கணவரை உங்களால் நிச்சயம் கண்டுபிடிக்க முடியும்.”

-வெள்ளிவீதியார்
குறுந்தொகை 130