சேணோன் மாட்டிய நறும்புகை ஞெகிழி
வான மீனின் வயின்வயின் இமைக்கும்
ஓங்குமலை நாடன் சாந்துபுல ரகலம்
உள்ளின் உண்ணோய் மல்கும்
புல்லின் மாய்வ தெவன்கொல் அன்னாய் 5
எங்கள் ஊரில் ஒரு மலை இருக்கிறது. அந்த மலையை சுற்றி உள்ள காடுகளில் தினை விதைத்திருக்கிறார்கள். தினைப் பயிர்கள் பச்சைப் பசேல் என்று பசுமையாக இருக்கிறது.
மலை உச்சியில் ஒரு பரண் இருக்கிறது.அந்தப் பரனுக்குப் பக்கத்தில் சந்த விறகுகள் எரிந்து கொண்டிருக்கிறது. வானத்தில் உள்ள நட்சத்திரங்கள் அணைந்து அணைந்து எரிவதைப் போல் அந்தச் சந்தன விறகுகள் அணைந்து அணைந்து எரிந்துகொண்டிருக்கிறது. அந்தப் புகையில் இருந்து வருகிற சந்தன மணம் அந்த மலையெங்கும் மணந்து கொண்டிருக்கிறது.
அந்த மலை உச்சியில் இருக்கிற காவல் பரணில் ஒரு காவல்காரன் இருக்கிறான்.அகலமான அவன் மார்பில் அவன் சந்தனம் பூசியிருக்கிறான். அவனை நான் காதலிக்கிறேன். நான் என் வீட்டில் இருந்து கொண்டு நான் என் காதலனை நினைத்துக் கொண்டிருக்கிறேன். என் காதலனை நான் நினைக்க நினைக்க என் காமம் பெருக்கெடுத்துக் கொண்டிருக்கிறது.
இதோ… என் காதலன் எனக்குப் பக்கத்தில் இருக்கிறான்.சந்தனம் பூசிய அகலமான அவன் மார்பில் நான் படுத்திருக்கிறேன். என்ன ஆச்சரியம்.. இப்போது என்னிடம் காமம் இல்லை.
-மாடலூர் கிழார்
குறுந்தொகை 150