கொரோனா காலம் – 1
இழுத்துச் சாத்தப்பட்டிருந்த பள்ளியின் வகுப்பறைகளில்
மாணவ மாணவிகளின் மர இருக்கைகளிலிருந்து
கேவல் ஒலிகள் ராக்காலங்களில் கேட்கத்துவங்கியிருந்ததை
யாரும் கேட்டறிந்திருக்கவில்லை!
நகரின் ஒதுக்குப்புறத்திலிருந்த பள்ளியினுள்
உயர்ந்து வளர்ந்து நின்றிருந்த மரங்களிலிருந்து
தூரதேசத்திலிருந்து வந்திருந்த பறவைகளின்
கீச்சொலிகளை பகலில் கேட்டோர் யாருமில்லை.
அத்யாவசிய தேவைகளான காய்கறிகளை வாங்கச் செல்வோர்
பைப்படிபட்டிருந்த வீங்கிப்போன பிருஷ்டங்களைத் தடவியபடி
தங்கள் இருசக்கர வாகனங்களில் பூட்டிடப்பட்டிருந்த பள்ளியின்
இரும்புக் கதவினை பார்த்தும் பாராமல் கடந்து செல்கின்றனர்.
தனி மனித இடைவெளியின் அவசியம் பற்றி
அறிவுறுத்தியபடி செல்லும் மூன்றுசக்கர வாகனத்தின்
கொடை ரேடியோவின் ஒலியை புதிதாய்க் கேட்டபடியும்,
நகரின் ஆலைகளிலிருந்து புகைபோக்கி குழாய் வழியே
வரும் நச்சுப்புகையை சுவாசிக்காமலும்
அந்தப் பள்ளி அங்கேயே தான் வெறுமையோடு நின்றிருக்கிறது
தன் பழைய கால சந்தோசங்களை அசை போட்டபடி!
மூடப்பட்டிருந்த பள்ளியின் வெறுமையை..
மூடப்பட்டிருக்கும் வகுப்பறைகளின் வெறுமையை..
இந்த விரலகளைக் கொண்டு
எழுதித் தீர்த்து நிரப்பவும் முடியவில்லை.
2.
வாட்சப் வதந்திகளை நம்பாதீர் என்றனர்.
செய்திச் சேனல் வதந்திகளையும் சேர்த்து
எனச் சொல்ல மறந்தனரோ?
3.
யாரும் பத்திரமாய் வீடு
திரும்பவேண்டிய அவசியமில்லை.
எல்லோரும் வீட்டினுள் தான்
இருக்கிறோம்.
கொரோனா காலம் 2
கைக்குட்டை வைத்துக் கொள்ளும் பழக்கத்தை
எப்போது நான் கைவிட்டேனென
ஞாபகத்தில் இல்லை.
நேரம் காட்டியை கையில் அணிவதை
விட்டொழிந்த காலத்திற்கும் முன்பாக
அது நடந்திருக்கலாம் அல்லது
மிதிவண்டியை விற்று அவளின் கருக்கலைப்புக்கு
பணம் கொடுத்த காலத்திலாகவும் இருக்கலாம்.
சும்மாவுக்கேனும் கிளம்புகையிலெல்லாம் மறக்காமல்
அம்மா முகக்கவசத்துணியை எடுத்து நீட்ட
இப்போது அதுவே பழக்கமுமாகிவிட்டது!
கொரோனா காலம் -3
மகிழ்ச்சியான செய்திகளை மாதம் முழுக்கவே
கேட்டறியவில்லை எல்லோருடைய காதுகளும்.
மகிழ்ச்சியான செய்திகளை மாதம் முழுக்கவே
பார்த்தறியவில்லை எல்லோருடைய கண்களும்.
இந்த நாக்குகள் எந்த உணவை வைத்தாலும்
கசப்பான சுவையையே தருகின்றதாய்
எல்லோரும் சொல்கிறார்கள்.
இந்த மூக்குகளும் கூட சும்மாவுக்காக முகத்தில்
ஒட்டிக் கொண்டிருப்பதாய் அவர்களே சொல்கிறார்கள்.
ஊருக்கு ஊர், வீதிக்கு வீதி யாரும் செல்ல முடியாமல்
தடுப்புச் சுவர்கள் எழும்பி விட்டன.
உதவி செய்ய வருபவர்களின் வாகனங்கள்
மாவட்ட எல்லையிலேயே திருப்பி அனுப்பப்படுகின்றன.
காய்கறி வாங்கி வருபவர்களின் பைகள் சோதனை
செய்யப்படுகின்றன! அவர்களின் இஞ்சி இடுப்புகள்
தடவப்படுகின்றன!
எல்லோரும் திருட்டுக்குச் செல்வது போன்ற
முகபாவனையுடன் வீட்டிலிருந்து சாலைக்கு வருகிறார்கள்.
மணல் கொள்ளையை இத்தனை காலம் கண்டறிந்து வந்த
ட்ரோன்கள் காதலர்களையும், சிறார்களையும் விரட்டுகின்றன.
கிழமைகளை மறக்கும் நாட்கள் தினமும் தொடர்கின்றன.
வீடுகளுக்குள் தாயக்கட்டைகள் உருளும் ஓசை
சாலையில் செல்வோர் காதினுள் ‘ஐயோ ஐயோ’
என்றே விழுகிறது. காவலர்களின் கையிலிருக்கும்
வாக்கி டாக்கிகளும் அதே ‘ஐயோ’ வையே ஒப்பிக்கிறது.
ஊருக்குச் செல்பவர்கள் பயணதூரத்தை
வெற்றுக் கால்களுடனும்,
வெற்று வயிற்றுடனும் நடந்து கழிக்கிறார்கள்.
தங்கள் குழந்தைகளிடம் கடவுளைப் பார்த்து கைகூப்பி
குப்பிடப்பழக்கி திருநீரு இட்ட தாய்மார்கள்
உணவுப் பொட்டணம் தருபவர்களைப் பார்த்ததும்
கும்பிடும் தங்கள் குழந்தைகளைப் பார்த்து
நெஞ்சு வெடித்து அழுகிறார்கள்.
இத்தனை காலம் தூரதேச பயணத்துக்கு உதவிய
ரயில் பெட்டிகளும், கப்பல்களும்
மருத்துவமனை படுக்கைகளாய் மாறுகின்றன.
பிள்ளைகளின் வகுப்பறைகளில்
ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் நிறுத்தப்படுகின்றன.
விவசாயிகள் வழக்கம் போல தங்களின்
தோட்ட அழிவு நிலவரங்களைக் காட்டி அரசாங்கத்திடம்
நிவாரண நிதி கேட்கிறார்கள்.
செவிலியர்களும், அதிகாரிகளும்
மருத்துவமனையிலிருந்து நலம் பெற்றுச்
செல்பவர்கள் கையில் காய்கறிகள் நிரம்பிய
பை கொடுத்து கைதட்டி அனுப்புகிறார்கள்.
மாவட்ட மருத்துவமனையில்
ஐம்பத்தியெட்டுப் பேர் சிகிச்சைக்கு
சேர்க்கப்பட்டிருந்த நிலையில்
அறுபத்தியெட்டுப் பேர் சிகிச்சை முடிந்து
சென்றதாய் செய்தி வாசிக்கிறார் ஒரு அம்மணி.
காய்கறிகள் இல்லையெனினும் அரிசிக்கஞ்சியை
மூன்றுவேளையும் உணவாக சாப்பிடும் குடும்பங்கள் இருக்க
ஹான்ஸ், பான்பராக், மதுபாட்டிகளை
அதிக விலைக்கு விற்று பெரிதாக சம்பாதித்துக்கொண்டிருக்கிறது
அவைகளை பதுக்கி வைத்திருந்த கூட்டம்.
அரசாங்கம் செய்வதறியாது திகைக்கிறதென மக்களும்,
சொல்வதை காதில் போட்டுக்கொள்ள மறுக்கிறார்கள் மக்கள்
என அரசாங்கமும் மாற்றி மாற்றிப் பேசி கழிகிறது நாட்கள்!
மசூதிகளிலும், தேவாலயங்களிலும், கோவில்களிலும்
தூணிலும் துரும்பிலும் இருந்தவரெல்லாம் பக்தர்களின்
முகதரிசனமின்றி எழுந்தருளாமல் அமைதியாயிருக்க
மக்களும் அவ்வாறே வீடடங்கி அமைதியாயினர்.
கேட்க விரும்புவதெல்லாம் ஒரே ஒரு நற்செய்தியைத்தான்
அதை எப்போது கேட்போம் என
எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கும் தெரியாது..
சொல்லப் போகிறவர்களுக்கும் தெரியாது.
மண்ணுக்குள் புதையுண்டிருக்கும் சமீபத்திய
உடல்களின் வேண்டுதல்களும் அந்த நற்செய்தி
பற்றியான இறைஞ்சல்களாகவே இருக்கக்கூடும்.
000
வாசல் கொடிக்கம்பியில் துவைத்துக்காயப்
போட்டிருந்த துணிகள் காய்ந்திருக்கும்..
அதை எடுத்துவர கிளம்பும் நான்
முகக்கவசம் அணிகிறேன்.
000
கொரோனா காலம் -4
மழை பெய்து முடிந்திருந்த அந்த இருளில்
தனியே அது நுகர்ந்து நுகர்ந்து
அங்குமிங்கும் பார்த்தபடி
ஓடி வந்துகொண்டிருந்தது.
இருளில் அவன் கண்களுக்கு
முதலையொன்று வருவது போன்றே
தெரிந்தது.- சற்று உற்றுப் பார்க்கையில்
அதுவொரு எறும்புத்தின்னி என்றுணர்ந்தான்.
இப்பொதெல்லாம் காட்டு விலங்குகள்
ஊருக்குள் வந்து வந்து போகின்றன.
எறும்புத் தின்னியின் உருவத்தைப் பார்த்தால்
அது எறும்பை மட்டுமே உண்டு வாழும்
ஜீவனல்ல என்றே அவனுக்குத் தோன்றியது.
அது சலசலத்தபடி சிற்றோடை போன்று
ஊர் வீதிகளில் ஓடிக் கொண்டிருக்கும் நீரில்
நிதானமாக நடக்கத் துவங்கிற்று.
திறந்திருந்த வீடுகளின் கதவின் வழியே
எதையோ தேடுவது போன்று உள் நுழைந்து
உள் நுழைந்து வெளியேறி ஊர் வீதியில் சென்றது.
ஊரடங்கு காலத்தில் இந்த இரவிலும்
எதற்காக கதவுகளை திறந்து வைத்து உறங்குகிறார்கள்?
பளீரென வானில் மின்னல் ஒன்று வெட்டியது.
அவனுக்கு கண்களே இருண்டது போலாயிற்று.
நிமிடம் கழிந்து கண்களைத் தேய்த்துக்
கொண்டு பார்க்கையில் இவன் வீட்டின்
கதவருகே வால் நுழைவது தெரிந்தது.
பதை பதைப்போடு தண்ணீரில் கால்களை
உயர்த்தி உயர்த்திச் சென்றான்.
வானில் காதைச் செவிடாக்கும்படி
இடி ஒன்று குடீரென இடித்த சமயம்
மின்சாரம் போய் இருளுக்குள்
ஊர் மூழ்கியது.
அலைபேசியின் விளக்கை உயிர்ப்பித்து
கைதட்டியபடி தன் அறைக்குள் நுழைந்தான் அவன்.
இவனது படுக்கையின் மீது களைப்புடன்
அந்த எறும்புத்தின்னி படுத்திருந்தது.
அடுத்த நாள் அவனை தொற்று
இருப்பதாக மருத்துவமனை ஊர்தி வந்து
கூட்டிப் போயிற்று!
கொரோனா காலம்-5
பிச்சைக்காரர்களின் பாத்திரமும், வயிறும்
காலியாயிருக்கும் காலத்தில்
எப்போதும் போல் எதுவும் நடப்பதில்லை.
000
சென்று விசாரித்து மகிழ்வுற்று வர
ஏராள சொந்தங்களிருக்கின்றன தூர தூரத்தில்.
எங்கும் செல்ல முடியாத படிக்கு
நம்மை அடைத்துக் கொண்டோம் சுவர்களுக்குள்.
000
எப்படிப் போகிறது கொரோனா காலம்?
கேட்ட நண்பருக்குச் சொல்கிறேன்
எனை தூங்க வைக்க முடியாத இரவுகளில்
இருக்கிறேனென.
000
எனக்கும் மட்டும் ரெண்டு பொட்டணம்
சேர்த்திக் குடுங்க தலைவரே
அடுத்த எலக்சனப்போ ரெண்டூரு ஓட்டே
முழுசா வாங்கித் தாறேன்.
000
எட்டு மணிக்கு நாட்டு மக்களிடன்
உரையாற்றப் போகிறாராம் தலைவர்.
இன்றேனும் குருதி மணக்க மணக்க
அவர் பேசாதிருக்கணும்!
000
சனீஸ்வர பகவானின் வாகனத்திற்கு
ஒரு துளி சோற்றுப்பருக்கை கூட வீசாத
மனிதர்களை கோபித்துக் கொண்டு
வனம் சென்று விட்டன 50% காகங்கள்.
அவைகளெல்லாம் தொற்றால் அடைக்கப்பட்ட
வீதிகளை சார்ந்த காகங்களென அரசாங்கம் அறிவித்தது.
000
ஒரு மூட்டை அரிசியை இரு சக்கர
வாகனத்தில் வைத்துக் கொண்டு
ஊர் சுற்றிக் கொண்டேயிருக்கிறார் சின்னச்சாமி
சோதனைச் சாவடிகளில் விசாரித்தால்
கட்சியின் நிவாரண அரிசியை கொண்டு போவதாய்
ஆகாசம் அளவு புளுகுகிறார் சின்னச்சாமி.
ஒரு மூட்டை அரிசி ஒரு மாதமாக
அவர் வண்டியிலிருந்து இறங்கவேயில்லை.
சின்னச்சாமி மத்திய அரசு அனுப்பி வைத்த
கொரோனா புலனாய்வு அதிகாரியாகவும்
இருக்கலாமென ஊர் பேசுகிறது.
000
முப்பத்தியேழு தலைகள் கொண்ட
மனிதர் ஒருவர் சொந்த மாநிலத்துக்கு
ரயில்வே பாதை வழியாக எட்டுக்கால்
பாய்ச்சலாய் ஓடுவதை பார்த்த
அரசாங்கம் துணுக்குற்றது!
000
காற்றின் எதிராக சிறகை பலமாய்
விரித்தசைத்து வேப்பைமரக் கிளையில்
வந்தமர்ந்த இரண்டு காகங்களும் அறிந்திருக்கலாம்
ஊரங்கின் போது சாலையில் வாகனங்கள்
செல்லாதென!
000
கொரோனா தடுப்புப் பணிகளை எவ்விதம்
முன்னெடுப்பது? என்பது பற்றி அதிகாரிகள்
ஆலோசித்துக் கொண்டிருக்கையில்
அரசனா மலைக்கும் பின்புறமாக
மறைந்து கொண்டிருந்த மாலைச்சூரியன்
தன்னைப் பார்த்து கண்ணடித்துவிட்டுச் சென்றதாய்
யுவதியொருத்தி தன் அம்மாவிடம்
புலம்பிக் கொண்டிருந்தாள்.
000
ஊரடங்கை அறிவித்து விட்டு ஊமையாகிப் போன
அரசாங்கத்திற்கு மக்களின் கண்களிலிருந்து
ரத்தம் சிந்துவதை கவனிக்க வழியின்றி
குருடாகிப் போனது இப்போது தான்.
இரண்டு நாட்களுக்கும் முன் காதுகளும்
அடைத்துப் போனதால் மக்களின் அழுகையொலியும்
அதற்கு கேட்கவில்லை.
000
உணவகத்தின் வெளிவாசலில் வெறும்
இட்லியை கையில் பிடித்திருந்த சிறுமி
வேகமாய் வாயில் திணித்து விழுங்கி விக்குகையில்
அச்சிறுமியின் விக்கலிலிருந்து
புலம் பெயர்ந்து கொண்டிருந்தது
உலகத்தின் அத்தனை நம்பிக்கைகளும்
000
கருணையுள்ள பிணங்களை எங்கள்
இடுகாட்டில் புதைக்க வராதீர்கள்.
இது கருணையற்றவர்களுக்காகவே
கருணையற்றவர்களால் பாதுகாக்கப்படும்
இடுகாடு!
000
எதுவும் செய்யவியலா துக்கத்துடனிருந்த
மாநகரம் வெறிச்சிட்டுக் கிடந்த வீதிகளை
ட்ரோன் காமிரா வழி பார்த்து
பெருமூச்சு விட்டது!
000
ஓசோன் துவாரத்தை சரி செய்யவும்,
கங்கை நீரை போகிற போக்கில்
அள்ளிக் குடிக்கவும்,
காற்று மாசுக்களை உடனடியாக
அப்புறப்படுத்தி காணாமலாக்கவும்,
மாட்டுவண்டி பயன்பாட்டை சீக்கிரமாக
கிராமத்தினுள்ளும், குதிரை வண்டி பயன்பாட்டை
சீக்கிரமாக நகரத்திற்குள்ளும் வந்து விடுவதற்கும்
நீங்களாக கொடிபிடித்தோ, கையுயர்த்தியோ
போராட வேண்டிய அவசியமேதுமில்லை.
வைரஸ் ஒன்று போதும்.
000