மேற்குப்பக்கமாக வீசிய காற்று அந்தப் பாடலை அவளிடம் கொண்டுவந்து சேர்த்தது.

“ஆமென் அல்லேலூயா… ஆமென் அல்லேலூயா” காற்றின் வேகத்திற்கு ஏற்ப, பாடலும் ஏறி இறங்கிக் கொண்டிருந்தது. கண் விழித்த ரேச்சல் படுக்கையில் இருந்த படியே வெளிச்சத்தைப் பார்த்தாள். தாழ்வாரத்தின் வழியே விழுந்த சின்னஞ்சிறிய சூரிய ஒளி  தூசு படிந்த பிளாஸ்டிக் பூக்களின்  மீது விழுந்திருந்தது. மேஜை மீது இருந்த மொபைல் போனை எடுத்துப் பார்த்தாள். அழைப்பேதும் வரவில்லை.

நேரத்தைப் பார்த்தாள் காலை ஒன்பதரையைக் காட்டியது அன்று  ஞாயிற்றுக்கிழமை. பழைய ரேச்சல் தொலைந்து போனாள். அதிகாலையே எழுந்து குளித்து தேவாலயம் சென்று வழிபாட்டிற்கு முந்தைய தயாரிப்புகளை முடித்து வைக்கும் ரேச்சல். இப்போதெல்லாம் தேவாலயத்திற்குச் செல்வதில்லை. இந்த ஞாயிற்றுக்கிழமைகளில் கூட பள்ளிக்கூடம் வைத்துவிட்டால் நல்லது என நினைக்கிறாள். ஒரு வாரவிடுமுறை நாளைக் கழிப்பதில் அவளுக்கு சிரமங்கள் அதிகம். தனக்காக  உருவாக்கிக் கொண்ட சின்ன உலகில் இருந்து அவள் இந்த உலகை வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

ஏப்ரல் வந்தால் நாற்பது வயதைத் தொடுகிறாள் ரேச்சல் டீச்சர். மொபைலில் அவள் அழைத்துப் பேசவும், அவளை அழைப்பு விடுத்துப் பேசவும் எவரும் இல்லை. அவள் இந்த உலகில் இருந்து தன்னை துண்டித்துக் கொண்டிருந்தாள். மொபைல் போனை பயன்படுத்துவதற்கான நியாங்கள் எதுவும் இல்லை. சில வாட்சப் குழுக்களில் இருக்கிறாள். பள்ளி ஆசிரியைகள் தங்கள் பணியின் நிமித்தம் உருவாக்கிக் கொண்ட குழு.  அதில்  பெற்றோர் ஆசிரியர் கூட்டங்கள், ஆசிரியர் கூட்டம், மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாள்கள், மற்றபடி ஜெபங்கள், இது போக அன்பிய வாட்சப் குழு, வின்சென்ட் தே பவுல்  வாட்சப் குழு, தேவாலய கோரஸ் வாட்சப் குழு இவைகளைத் தாண்டி அந்த மொபைலில் வேறு எதுவும் இல்லை. என்றாலும்  இருண்டு கிடக்கும் மொபைலை எடுத்து அடிக்கடி பார்த்துக் கொள்கிறாள். அவள் பார்க்கும் போது ஒளிரும் மொபைல் பின்னர்  இருளோடு மூடிக் கொள்கிறது.

யாரேனும் தன்னை அழைத்திருக்கலாம், அல்லது அழைக்க மாட்டார்களா? என்ற எதிர்பார்ப்பாகக் கூட இருக்கலாம்.  ஆனால், இந்த உலகின் தொடர்பெல்லைக்கு வெளியில் அவள் உலகம் தன்னந்தனியே காலை,பகல், மாலை என வெறும்பொழுதாய்  மெள்ள உருண்டு கரைந்து  கொண்டிருக்கிறது.

அப்படியே படுத்துக்கிடந்தவளுக்கு, தேவாலயத்தில் ஏன் இன்னும் பாடல் ஒலிக்கிறது. இந்நேரம் வழிபாடு துவங்கியிருக்க வேண்டுமே?  என நினைத்தவள், இயல் புக்கு மாறான சத்தங்கள் வெளியே கேட்டதால் கதவைத் திறந்துகொண்டு வெளியில் வந்தாள்.

மனிதர்கள் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். ஜனங்கள் திரளாக ஊரைக் காலி செய்து கொண்டிருந்தார்கள். பெருங்கூட்டம் வெளியேறிய பின்னர் எஞ்சியவர்கள்  ஏதோ சில வாகனங்களைப் பிடித்து வெளியேறிக் கொண்டிருந்தார்கள். கடந்து சென்ற வாகனங்களை இவளும் பார்த்தாள். வாகனங்களில் வெளியேறியவர்கள்  ரேச்சலையும் பார்த்தார்கள். யாரும் அவளிடம் எதுவும் பேசவில்லை. இவளும் எதுவும் கேட்கவில்லை. பல ஆண்டுகளாக ஒரு வேடிக்கைப்  பொருளாகிப் போன அந்த  வீடு எப்போதுமே அப்படி இருக்கிறது  இப்போதும்.

அவர்களை சிறிது நேரம் பார்த்தவள் வீட்டிற்குள் வந்து கதவைத் தாழிட்டுக்கொண்டாள். மரத்தால் செதுக்கப்பட்ட பழைய படிகளில் ஏறி மாடியின் திறந்தவெளிக்கு வந்தவள், வழக்கமாக தான் ரசிக்கும் கடலைப் பார்த்தாள். அது நீண்ட தூரம் உள்வாங்கியிருந்தது. அடிவானம்வரை பரவியிருக்கும் நீலநிறம் காணாமல், கருமை போர்த்தியிருந்தது. அசாதாரணமான அந்தக் கடலைப் பார்த்தாள். ஓலம் நிறைந்த கலங்கல் திரளாக நின்றது கடல்.

தேவாலயப் பாடல் மாறியிருந்தது. “சத்தாய் நிஷ்களமாய் ஒரு சாமியமும் இலதாய்” இறுக்கிக் கோர்த்து தூக்கிக் கட்டியிருந்த தலைமுடியை அழித்து தலையை சிலிர்த்து விட்டாள். முகத்தை காற்றில் வாங்கினாள். கலைந்த தலைமுடி காற்றில் பறந்தாடியது. ஹென்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளை நூற்றாண்டுக்கு முன்பு எழுதிய  பாடல். இந்தப் பாடலில்தான் ரேச்சலுக்கு எத்தனையெத்தனை அனுபவம்.  அதையும் அவன் பாடும் போது “அம்மானுன்னையல்லா  லெனக்கார் துணை யாருறவே? “.. என அவன்  கசியும்போது ரேச்சலுக்கு அவன் தன்னை நினைத்து பாடுவதாகவே தோன்றும். அவளுக்கு கடவுளும் கர்த்தரும் காதலும் ஒன்றாகவே இருந்தது. ஆனால் கர்த்தரின் சபையில் ரேச்சலின் காதல் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

அரபிக் கடலோர கிராமம் ஒன்றில் கணக்குப்பிள்ளை குடும்பத்தின் எட்டாம் தலைமுறை கத்தோலிக்கக் குடும்பம் ரேச்சலுடையது.  அந்தக் குடும்பத்தில் பெஸ்கி, பிலோமினாள் தம்பதிகளுக்கு இரண்டாவது மகளாகப் பிறந்தவள் ரேச்சல். கடற்கரைதான் பூர்வீகம் என்றபோதும் கடலுக்கும் அவர்களுக்கும் தொடர்பில்லை. கொஞ்சம் விவசாய நிலம் இருந்தது. ஊர் கணக்கு வழக்குகளைப் பார்ப்பது, தேவாலயத்தின்  அன்றாடப் பணிகளை கவனித்துக் கொள்வது, தேவாலயத்தின் பாடல் குழுவினரை ஒழுங்குபடுத்தி தேவாலயப் பணிகளில் ஈடுபாட்டோடு இருப்பது ஆகியவைதான் அவர்களுக்கு வழிவழியாக பாத்தியப்பட்ட வேலைகள்.அந்தப் பிணைப்புதான் அவர்களை வழி நடத்தி வந்தது.

ரேச்சலின் தாத்தா விருத்தப்பாக்களை எழுதி இசைத்து பாடுபவர். அவரது விருத்தங்களுக்கு இணையில்லை. ”உங்க தாத்தா, மாதா தேர் வரும்போது தெண்டனிட்டு பாடும் போது ஊரே சேர்ந்து நின்று அவரோட கசிந்துருகும்” என்று அப்பா சொல்லும்போது ரேச்சலும், தம்பியும், தங்கையும் சுவராஸ்யம் இல்லாமல் அதை கேட்டுக்கொண்டிருப்பார்கள்.

அவளது தந்தை பெஸ்கி, தாத்தாவின் விருத்தப்பாக்களில் இருந்து விலகி, பியானோ கற்றுக் கொண்டார். பியானோ அக்கார்டினும் இசைப்பார், அவ்வப்போது மவுத் ஆர்கன் இசைப்பார்.  அவர் இசைப்பது தேவாலயப்பாட்டிற்கு மட்டும்தான்.  அம்மா பிலோமினாள் ஆசிரியை. அவரது வருவாயில்தான் வீட்டுப்பாடுகள் கழிந்தன. தேவையும் குறைவு என்பதால் அந்த வருமானம் போதுமானதாக இருந்தது. தேவாலய கொயர் குழுவின் தலைமை பெஸ்கிதான். அவர்தான் அந்தக் குழுவை வழிநடத்தி வந்தார். அப்பா நடத்திய குழுவில் ரேச்சலும் ஒரு பாடகியாக இருந்தபோதும் அவளுக்கு தன் தாத்தா, அப்பாவிடம் இருந்து விலகி இசையில் எல்லை கடக்க வேண்டும் என்பது ஆசை. பெஸ்கி ரேச்சலை டவுனில் இருக்கும் மேற்கத்திய இசைப்பள்ளியில் சேர்த்து விட்டார்.

ரேச்சலுக்கு ஒரு தங்கை சிறுவயதில் இருந்தே சின்னவளை சிஸ்டராகவும், மூத்தவள் ரேச்சலை திருமணம் செய்து கொடுக்கவும் ஆசைப்பட்டனர்.

“நான் சிஸ்டருக்கு போவேன்”

“மரியா கொரற்றி போல கர்த்தருக்கு அருகில் போவேன். என் வாழ்வை அவருக்காக ஒப்புக் கொடுப்பேன்” என்று அடிக்கடி சிறியவள் சொல்வாள்.

புனித ஆக்னஸ் என்றழைக்கப்படும் புனித மரியா கொரற்றி போல ஆகவேண்டும் என்ற ஆசை. அதனால் பிளஸ்டூ முடித்ததும் கப்புச்சி சபையில் துறவியாக முடிவுசெய்து மேற்படிப்புக்காக, புனே சென்று சிஸ்டரும் ஆனாள். அவளை கத்தோலிக்க திருச்சபைக்கு ஒப்புக்கொடுக்கும் விழா ரேச்சலின் கடலோர கிராமத்தில் ஆடம்பரத் திருப்பலியாக நடந்தது. இப்போது சிறியவள் நோயுற்ற சுகாதாரமற்ற சட்டீஸ்கர் பழங்குடிகளிடையே பணி செய்கிறாள். தங்கை, தன்னை விட்டுப்போனது ரேச்சலுக்கு முதல் இழப்பு. அவள் கத்தோலிக்க பெண் துறவியான அடுத்த சில மாதங்களில் தாய் பிலோமினாவும் மாரடைப்பால் இறந்து போனார். அப்பாதான் எல்லாம். அம்மாவின்  மரணத்திற்குப் பிந்தைய ஓய்வூதியப் பணம் அப்பாவுக்குக் கிடைத்தது. அப்பா சமைத்தார் ரேச்சலும் சமைத்தார். நிலங்கள் பயனற்று அப்படியே கிடந்தன. அவ்வப்போது வயலையும், தென்னந்தோப்பையும் பார்த்து வந்த அப்பா வீட்டிற்குள் முடங்கினார். தானியங்கள் எதுவும் வீடுவந்து சேரவில்லை.

அப்போதெல்லாம் அவளுக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருப்பது இர்வின் விக்டோரியாதான். அவன் மேற்கத்திய இசைப்பள்ளியிலே அறிமுகம் ஆனவன். ஒரு லைட் வெயிட் ஜீன்ஸ், காட்டன் சட்டை, எப்போதுமே கலைந்து மேலோட்டமாக முகத்தில் புரளும் முடி எனஎளிமையான  அழகோடு இருப்பான். அவனோடு இணைந்து இசைத்த போது, அவனை பிடித்துப் போனது. அவன், இசையை உள்வாங்கிய விதமும் பாடிய விதங்களும் ரேச்சலை ஈர்த்தன. இசை இரண்டாம் பட்சமாகி ரேச்சல் நல்ல ரசிகையானாள்.

“உன்னோட பேரு என்ன?”

“ரேச்சல்”

“உன் பேரு என்ன?”

“ இர்வின் விக்டோரியா வேதசகாயம்”

“இந்த பழைய பேரை உனக்கு யாரு வைச்சா?”

“வேதசகாயங்கிறது என்னோட தாத்தா. அவரோட சாங்க்ஸ் எல்லாம்தான் இப்போ சர்ச்ல போடுறாங்க, அவங்களோட பாடல்களை ஜிக்கி,எல்.ஆர்.ஈஸ்வரி, சுசீலா எல்லாம் பாடியிருக்காங்க”

“ம்ஹூம்…. நீயும் பாடு நல்லா பாடற, முடிஞ்சா என்னையும் சேர்த்துக்கோயேன்” என்று அவன் அருகில் அமர்ந்தாள்.

அவன் ரேச்சலின் முகத்தைப் பார்த்தான்.மீதமிருந்த வார்த்தைகள் அவர்களுக்குள் காதலை விதைத்தது.இர்வின் விக்டோரியாவுக்கு நாகர்கோவில் பக்கம் பூதப்பாண்டிதான் சொந்த ஊர். பெரிய விவசாயக் குடும்பம். அவர்களும் கத்தோலிக்க குடும்பம்தான்.

200 ஆண்டுகளுக்கு முன்னர் கத்தோலிக்கம் தழுவியவர்கள்.முழுமையாக கத்தோலிக்க வாழ்வை வாழ்கிறவர்கள்.

அவனுக்கு மட்டும் அவள் ரசிகை ஆனால், முதலில் அவனை விலகியிருந்து ரசித்தவள் அவனோடு கூடவே தேவாலய நிகழ்ச்சிகளுக்கு பாடவும் சென்றாள். இருவரும் இணைந்து. பயணித்தார்கள். இப்போதெல்லாம் அவனை அவள்  “மாமா” என்றே அழைத்தாள். அப்படி அழைக்கும்போது அவள், அவன் கைகளை தனக்குள் வைத்துக்கொண்டது போல உணர்கிறாள்.

“ஏய் முசுடு மாமா கையை தட்டி விடாதே”

“எனக்கு கையைப் பிடிச்சிட்டு நடக்கிறது பிடிக்காது”

“நீ பிடிக்க வேண்டாம். நான் பிடிச்சிடிக்கிறேன்” என்று அவனது கையை எடுத்து தன் கையோடு கோர்த்துக் கொள்வாள். அவன் தட்டி விடுவான்

“சும்மா சேட்ட பண்ணாம வா அம்மு”

“பண்ணுவேன் நீ என்னை விட ஹைட்டா இருக்குறதால ஆடாத மாமா, நமக்கு கல்யாணம் ஆனதும் நான் வளர்ந்திடுவேன்”  என செல்லம் கொஞ்சினாள்.

அவளை சரிந்து பார்த்தவன் அவளது நெற்றியை வருடிவிட்டுச் சொன்னான் “ரொம்ப சென்சிட்டிவா இருக்க, நான் உன்னை மாதிரி இல்ல?”

“எனக்கு தெரியும் ஆனா நான் இல்லாம நீ இருக்க மாட்ட.. ஆமாதானே?”

”ம்ம்ம்ம்.. ஆமா”

எப்போதும் இந்த ஒருவரியில் சொல்லப்படும் ஆமா..இல்லை என்ற பதில்களில் அந்த நேரத்து நியாங்களைத் தாண்டி வேறு எதுவும் இருப்பதில்லை.

இருவரும் கச்சேரியை முடித்துவிட்டு பேருந்தில் வீடு திரும்பினார்கள். மங்கலான விளக்கொளியில் அவன் தோள்மீது சாய்ந்திருந்தாள். தன் இடது கைகளால் அவன் அவளை அணைத்திருந்தான்.

“என் கையைப் பார்த்தியா? ”

“காட்டு”

உள்ளங்கையைக் காட்டினாள் அதில், “துன்ப வேளையில் கைவிடாதேயும்” என்று பேனாவால் எழுதியிருந்தாள்.

அந்தக் கையை தன் உள்ளங்கையோடு போர்த்திக்கொண்டவன், தனது கைகளில் எழுதினான் இப்படி “நான் உன்னை விட்டு விலகுவதில்லை உன்னை கைவிடுவதுமில்லை” என்று…

நெடுஞ்சாலையில் ஊர்ந்த பேருந்தின் கண்ணாடி வழியே வானத்தைக் காட்டினாள். கரு நிழல் போர்த்திய மேகத்திரளினூடே  வானம்  நகர்ந்து கொண்டிருந்தது.

“மாமா அதோ அந்த நட்சத்திரம் பாரு” அவனை இழுத்துச் சொன்னாள்.

“இங்க பாருடா… தெரியுதா?”

“ஆமா நட்சத்திரம் தெரியுது”

”அதான் என் அம்மா” எப்பவுமே கூட வர்றாங்க

பெருமூச்செறிந்து அவனோடு ஒட்டிக்கொண்டவள், அவனிடம்..

“உனக்கு தூக்கம் வருதா.. நான் ஒண்ணு சொல்லவா?”

”சொல்லு”

“உனக்கும் எனக்கும் மெமரீஸ் வேணும், நினைவுகள் வேணும். நான் நினைச்சு நினைச்சுப் பார்க்கிறேன் மாமா…  நமக்குள்ள நினைவுகள் இல்லை”

“என்ன சொல்ற நாம நிறைய மியூசிக் வொர்க் பண்றோம். கொயர்ல வேலை செய்றோம்”

“டேய் வேதசகாயம் பேரனே நினைவுகள்னு நான் சொல்றது ஒரு முத்தம், பயணம், உன்னோட கால்ல நான் நடக்கிறது.  என்னோட தோளில் உன்னை சுமக்கிறதுனு இப்படி நிறைய… அது கர்த்தரோட சபைல வெறும் மியூசிக் போட்றது இல்ல”

“ம்ம்ம்ம்…”

”நான் என்ன பேசினாலும் உனக்கு ம்ம்ம்..ம்ஹூம்…. இதை எல்லாம்  தாண்டி நமக்குள்ள வேற எதுவும் இல்ல.. இல்லியாடா?.. நீ ஃபீரியா இருக்கணும்னு நினைக்கிறியா மாமா”

“இல்லை” என்று சொல்லி நகர்ந்து செல்லும் மேகத்தைப் பார்த்தான். பகலோ, இரவோ பயணத்தின்போது ரேச்சல் தூங்க மாட்டாள். எதாவது பேசிக்கொண்டே இருப்பாள். அவனுக்கு அவளை ரொம்பப் பிடிக்கும். ஆனாலும் அமைதியாகவே இருப்பான். அது அவனது குடும்பப் பழக்கம் என்று ஒரு முறை சொன்னான்.

“அப்பா எப்படி இருக்காங்க?”

“அப்பாவுக்கு பைபாஸ் சர்ஜரி பண்ணிக்க சொல்றாங்க”

”ஓ பாவம்ல ரொம்ப சிரமப்படறார். நீ அவருக்கு சமைச்சுக் கொடுக்கிறாயா?”

“ஆமா… நாகர்கோவிலில்ல பைபாஸ் சர்ஜரி  புரஜ்யூசர்ஸ் எதுவும் இல்லைனு சொல்றாங்க.  மதுரைல இருக்காம். நான் அவரை அங்க அழைச்சிட்டு போகலாம்னு இருக்கேன்”

அப்பாவின் வாழ்க்கை அப்படியேதான் முடங்கிப்போனது. தோட்டத்தையும் , வயலையும் ஊருக்கே எழுதிக் கொடுத்து விட்டார்கள். அந்த பணத்தில் அப்பாவுக்கு ஆப்ரேஷனும் சிகிச்சையும் பார்த்தாள் ரேச்சல். அதன் பின்னர் ஒரு வருடம் கழித்து அப்பாவும் ஒரு நல்ல மாலை வேளையில் ரேச்சலை தனியாக விட்டுவிட்டு கண்ணை மூடினார். அப்பாவின் இறுதிக் சடங்கிற்கு, சட்டீஸ்கரில் உள்ள தங்கைக்கு தகவல் கிடைக்காததால், அவள் கலந்துகொள்ளவில்லை. அங்குள்ள பெண் துறவரச்சபையாரிடம் சொன்ன போது கப்புச்சீன் சபையோடு தொடர்பு இல்லை என்றும் முயல்கிறோம் என்றும் சொன்னார்கள். அவள் வராமலேயே அப்பாவின் இறுதிச் சடங்குகள் நடந்து கொண்டிருந்தன.

அவள் அழவில்லை… ஆனால் வருத்தம் இருந்தது.

“அப்பா இன்னும் கொஞ்ச நாள் இருந்திருக்கலாம்”

“நாம ஒழுங்கா சமைச்சுக் கொடுக்கலையோ அவரை கவனிச்சிக்கலையோ” என்றெல்லாம் யோசித்தபோது கண்ணீர் பூத்துப் பூத்து உருண்டோடிக் கொண்டிருந்தது தலைவழியே மூடியிருந்த புடவைத் தலைப்பால் அதை துடைத்துக் கொண்டிருந்தாள். சிஸ்டர் ஜாஸ்மின்தான் அவள் அருகில் நின்று  அவ்வப்போது அவளது கண்களை துடைத்துக் கொண்டிருந்தார்.தோளில் கை வைத்திருந்தார்.

இறந்து போன அந்த மனிதர் கிடத்தப்பட்டிருக்கிறார்.  அவர் உடலைச் சுற்றி நின்றவர்கள் அவரை நினைக்கவும் இல்லை அவரைப் பார்க்கவும் இல்லை. அனைவரும்   ரேச்சலையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். நல்ல லட்சணமாக வளர்ந்து நிற்கிறாள் இவள்.

“இனி என்ன செய்யப்போகிறாள்” என்பதுதான் அத்தனை கண்களின் கேள்வியும்.

அவள் அக்கூட்டத்தில் அவனை மட்டும் தேடினான். அது மட்டும் போதும் அவளுக்கு., அவன் மட்டும் போதும் அவளுக்கு. தேவாலயத்தின் நடுவில் ஒரு மரப்பேழையில் கிடத்தப்பட்டிருந்த அப்பாவை கல்லறைத்தோட்டத்திற்கு எடுத்து  வந்தபோதும் பார்த்தாள். குழிக்குள் பெட்டியை இறக்குவதற்கு கயிறுகளைத் தயாராக வைத்திருந்தார்கள். அருட்தந்தை சில ஜெபங்களைச் சொன்னார்.  பின்னர் மந்திரித்து குழிக்குள் பெட்டி வைப்பதற்கு முன்னாள் ரேச்சலை அழைத்து அப்பாவின் முகத்தைப் பார்க்கச் சொன்னார்கள். அவள் அப்பாவைப் பார்த்தாள். கதறியழவில்லை. தன் தந்தையின் கைகளில் கிடந்த கடிகாரத்தைக் கழற்றினாள். அவளால் அது முடியாமல் போக சிலர் கையை எடுத்து வாட்ச்சை கழட்டி அவளிடம் கொடுத்தார்கள். தந்தையின் நெற்றில் முத்தமிட்டாள். மூடப்பட்ட, பெட்டி சவக்குழிக்குள் இறக்கப்பட்டது. இறுதி நிகழ்வுக்கு வந்திருந்த அனைவரும் பெட்டிக்குள் மூன்று பிடி மண்ணைப் போட்டுவிட்டு அமைதியாகக் கலைந்து சென்றார்கள்.

ரேச்சல் அங்கு வந்திருந்த அனைவரையுமே பார்த்தாள். கண்கள் சிவந்திருந்தன அவன் இல்லை. ஏன் அவன் வரவில்லை? இதை ஒரு இழப்பாக அவன் கருதவில்லையா? பெருஞ்சோகம் கொண்ட அந்த கணத்தில் அது சுமையாக இருந்தது இன்னொரு கண்ணீருக்கான காரணமாக அது இருக்கவில்லை.

ரேச்சலை சிஸ்டர்  ஜாஸ்மின் தன்னுடன் அழைத்துச் சென்று கான்வென்டில் தங்க வைப்பதாகக் கூறினார். ரேச்சல் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்று சொல்ல அவளை அழைத்துக்கொண்டு  ஜாஸ்மின் சிஸ்டர் வீட்டிற்குச் சென்றார். அவள் தனது உடைகள் சிலவற்றை எடுத்து ஒரு சிறிய பையில் வைத்துக் கொண்டு சிஸ்டருடன் கான்வென்ட்க்குச் சென்றாள். ரேச்சலுக்கு அந்த துறவியர் இல்ல வாழ்க்கை புதியது என்றாலும் சுதந்திரத்தைப் பேண முடியாது. மியூசியத்தில் வாழ்வதுபோல இவர்கள் வாழ்கிறார்கள் என்பதுதான் அவளது அபிப்பிராயம்.

இரவு சுத்தமான ஒரு படுக்கையை ரேச்சலுக்கு ஒதுக்கியிருந்தார்கள். மேலும் அந்த அறையில் மூன்று  கொசுவலை கட்டிய படுக்கைகள் போடப்பட்டிருந்தன. தனது பையை எடுத்து தலைமாட்டிற்குப் பக்கத்தில்  வைத்துக்கொண்டு படுத்துவிட்டாள். அப்பாவை நினைத்து நினைத்துப் பார்த்தாள். அப்பாவோடு கடைசியாக எங்கே போனேன்? மதுரைக்கு சிகிச்சைக்குப் போனபோது மருத்துவமனையில் அவர் பேசிய விஷயங்கள் என அனைத்தும் நினைத்துப் பார்த்தாள். ஜன்னல் வழியே நட்சத்திரங்களைப் பார்த்தாள் வானம் மேகங்களால் மூடப்பட்டிருந்தது.

மெல்ல கைப்பையை எடுத்து அதிலிருந்த அவனது புகைப்படத்தை எடுத்துப் பார்த்தாள். இருட்டில் அவன் முகம் தெரியவில்லை. ”உனக்கு என்னோட கையைப் புடிச்சிக்க விருப்பமில்லையா உன்ன நான் எப்போ பார்ப்பேன்?” என்று நினைத்துவிட்டு படத்தை பத்திரமாக உள்ளே வைத்தாள். அவளால் தூங்க முடியவில்லை. அப்பாவும், அவனும்தான் அலைமோதிக் கொண்டிருந்தார்கள். எப்போடா இங்க இருந்து வீட்டிற்கு போவோம் என நினைத்தாள்.

சிஸ்டர்  ஜாஸ்மினிடம்  போய் இவள் ஆரம்பிப்பதற்குள் “நான் ஃபாதர் கிட்ட பேசியிருக்கேன். ஸ்கூல்ல  உனக்கு போஸ்டிங் போடச் சொன்னார். நீ சும்மா இருக்க வேண்டாம். மற்றதை எல்லாம் பாத்துக்கலாம். இங்கேயே இருந்துவிடு. தனியாக வீட்டில் இருக்க வேண்டாம்”

“இல்லை சிஸ்டர் நான் வீட்டுக்குப் போறேன். எனக்கு வீட்ல இருந்து பிரேயர் பண்ணனும், மியூசிக் பிளே பண்ணனும். ப்ளீஸ்” என்றாள்.

வீட்டுக்கே வந்துவிட்டாள் ரேச்சல். நினைவுகள்தான் கொடுமையானதில்லை. நினைவுகள்தான் தன் வாழ்வை உந்தித்தள்ளுவதாக அவள் நினைத்தாள். அந்த பெரிய பழைய வீட்டை அதற்காகத்தான் விட்டுச் சென்றிருக்கிறார்கள் என நினைத்துக் கொண்டாள். பச்சைத் தண்ணீரில் குளித்தாள். அம்மா,அப்பாவின் படத்தை எடுத்து வைத்து மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தாள். கண்ணீர் சிந்தினாள். பின்னர்  அவசர அவசரமாக பேருந்தில் ஏறி இசைப்பள்ளிக்குச் சென்றாள். இப்போது அவள் வகுப்பில் இல்லை.  என்றாலும் இர்வினும், ரேச்சலும் சந்தித்துக்கொள்ளும் பொது இடமாக அது இருந்தது. அங்கே அவன் இல்லை.

மெர்சியிடம் தயங்கித் தயங்கி கேட்டாள் “இர்வின் விக்டோரியா வந்தானா?”

“இல்லையே அவருக்கு மேரேஜ் பிக்ஸ் ஆகியிருக்கு அவர் வருவதில்லை, ஏதேனும் இசை நிகழ்ச்சி என்றால் வீட்டில்  இருந்தே போகிறார் என நினைக்கிறேன்” என்றாள்.

”ஓ அவனுக்கா… கன்பார்மா தெரியுமா?”

அவளால் நம்பமுடியவில்லை. வியர்த்துவிட்டது கைகள் செயலிழந்ததைப்போலாயின. சின்ன தடுமாற்றம், தவிப்பு, ஏக்கமுமாய் வெளியில் வந்தபோது. வாயிலில் வல்தாரிஸ் ஃபாதர் நின்றிருந்தார்.

“ரேச்சல்” என்றழைத்தார். அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. அவளுக்கு அழவேண்டும் போலிருந்தது.

இவர் ஏன் இங்கே நிற்கிறார்.

“வா கொஞ்சம் வெளியில் போக வேண்டும்” என்றார்.

“எங்கே ஃபாதர் நான் இங்கேயே கொஞ்ச நேரம் இருக்கவா ப்ளீஸ்?”

“இல்லை வேண்டாம் ஃபாதரும் சிஸ்டரும் உனக்காக காத்திட்டிருக்காங்க அதை முடிச்சிட்டு வந்து நீ ஃப்ரீயாக இருக்கலாம்” என்றார்.

“நாம எங்க போறோம்… ஏன் ஃபாதர்” அவள் தவித்து… துடித்துக் கேட்ட எந்தக் கேள்விக்கும் ஃபாதர் பதில் சொல்லவில்லை. அவரும் இறுக்கமாகவே இருந்தார். பெருமூச்சு விட்டார்.

அவள் ஜீப்பின் முன்பக்கம் ஏறிக்கொள்ள ஃபாதர் வல்தாரிஸ் வாகனத்தை ஓட்டினார். மேரி மாதா, இறந்த இயேசுவின் உடலை தன் மடியில் கிடத்தியிருக்கும் ஆகப்பெரிய கருணை நிரம்பிய சிலையை பரந்து விரிந்த கான்வென்ட் மதிற்சுவரில் பதித்திருந்தார்கள். வாகனம் உள்ளே சென்றது. அங்குள்ள மதர் சுப்பீரியரின் அலுவலகத்திற்குள் சென்று அங்குள்ள  வரவேற்பறையில் அமர வைக்கப்பட்டாள் ரேச்சல்.

சிறுது நேரம் கழித்து ஃபாதர் வந்து ரேச்சலை உள்ளே அழைத்தார். உள்ளே சென்றாள். அங்கே மதர் சுப்பீரியர் அந்த கன்னியர் இல்லத்தின் தலைமைத் துறவியும் நிர்வாகியுமான டாக்டர் ரோஸ்லின் ஜூடியத்தும், மூத்த பாதிரியார் பிரான்சிஸ்  பெர்னாண்டோவும்  இருந்தார்கள். ரேச்சலை அறைக்குள் அனுப்பிய வல்தாரிஸ் ஃபாதர் வெளியில் போய் விட்டார்.

“வெல்கம் மை சைல்ட்” என்று அன்போடு அழைத்தார் சிஸ்டர்.

அவளை  அமர வைத்தார்கள். அவளுக்கு ஒரு தேநீரும், சின்ன கேக் துண்டும் வைக்கப்பட்டது. ரேச்சல் அந்த மன நிலையில் இல்லை.

“சொல்லுங்க சிஸ்டர் என்ன விஷயம்” என்று கேட்டாள்

சிஸ்டர் ஃபாதரைப் பார்க்க, அந்த மூத்த பாதிரியார்

“ரேச்சல் ஒரு விஷயம் பற்றி உன் கிட்ட பேசணும். நாம கத்தோலிக்க சமூகங்கிறதால இதை நீ புரிந்து கொள்ள முடியும்”

“ம்ம்ம்”

“பூத்தப்பாண்டி இர்வின் விக்டோரியாவோட உனக்கு அபெக்‌ஷன் இருந்தது இல்லையா?” என்று கேட்டார்.

“அது அபெக்‌ஷன் இல்ல ஃபாதர் காதல் நானும் அவனுமே காதலிச்சோம்”

“ஓ இட்ஸ் ஓகே பட் அவங்க வீட்ல இதை சௌகரியமா  எடுத்துக்கல?”

“அவங்களோட சௌகரியம்னா என்ன ஃபாதர் எனக்கு புரியல்ல?”

”உங்க அப்பாவை எனக்குத் தெரியும் சர்ச் மட்டும்தான் வாழ்க்கைனு இருந்தவர். ஆனா, இந்த விஷயத்தில் அவங்க வேற விஷயங்கள் இருக்கு.  நீயும் இர்வினும் காதலிக்கிறது அவங்களோட குடும்பத்தில் பெரிய பிரச்சனையாகி இருக்கு. அதனால அவங்க உன்னை விலகச்  சொல்றாங்க?”

“நாம எல்லாம்   எல்லாம் கேத்தலிக்ஸ் இல்லியா?” என்று அப்பாவியாகக் கேட்டாள் ரேச்சல்

“நாம் எப்பவுமே கேத்தலிக்ஸ்தான் ஆனா நம்மோட இருக்கிற பலர் அப்படித்தான் இன்னும் அதே பழைய பழக்கவழக்கங்கள், கௌரவங்களை வைச்சிட்டு இருக்காங்க”

“நான் என்ன பண்ணனும்”- ரேச்சல்

“இயேசு எப்பவுமே விலக்கப்பட்டவங்களோட கடவுள். அவர் மேக்தலின் மேலதான் அன்பா இருந்தார். அவள் இந்த உலகிற்கு அன்பும், இரக்கமும் கொடுத்தாள். ஆனால், அவள்  விலக்கப்பட்டவளாக இருந்தாள்.  கர்த்தரோட சபைல உனக்கான இடம் எப்பவும் இருக்கு”என்றார்.

“நான் இர்வினைப் பார்க்கணும்… அவன் கிட்ட பேசணும்”

“இல்லை அதெல்லாம் வேணாம். உனக்கான காரியங்கள்  எல்லாம் நடக்கும்”

ரேச்சல் அமைதியாக இருந்தாள்… மனம் பொங்கி நுரைத்தது.

“சரி நான் போகவா?”

ரேச்சல் எழுந்தாள். டாக்டர் ரோஸ்லின் ஜூடியத் எழுந்து ரேச்சல் அருகில் வந்தார். அவரது தோள்பற்றிய ரோஸ்லின் சிஸ்டர் “இங்கே வா” என்று வாஞ்சையோடு உள்ளே அழைத்துச் சென்றார்.

“உன்னோட மனசு புரியுது. ஆனா, அவங்க பெரிய குடும்பம் அப்படித்தான் இருக்காங்க மதத்தை விட சாதிதான் பெருசா இருக்கு. நாமதான் விட்டுக் கொடுத்துப் போகணும்” என்றார்.

அவள் எதுவும் பேசவில்லை. இது என்னமாதிரியான  பிரிதல் என்று நினைத்தாள்.

“ரேச்சல் மனம் தளராதே… ஒரு பாவசங்கீர்த்தனம் பண்ணிக்கோ”

“பாவசங்கீர்த்தனமா… எதுக்கு? நான் என்ன பாவம் பண்ணினேன்?”

அதிகமாக பேச விரும்பினாள். இயலாமை, தோல்வி, போக்கிடமின்மை என இப்போது அவளிடம் இருக்கும் அனைத்துமே வெறும் வார்த்தைகள். அதனால் பயனேதும் இல்லை என்று நினைத்தாள்.

”சாரி சிஸ்டர்” தன் தோளில் இருந்த சிஸ்டரின் கையை உதறவில்லை மெதுவாக ஆனால், திடமாக எடுத்து விட்டு சிஸ்டரைப்  பார்த்தாள் அது அப்படி ஒன்றும் தீர்க்கமான பார்வை இல்லை. மென்மையான முட்வோடு கூடிய பார்வை. அங்கிருந்து விலகி வந்தாள். எப்பக்கம் போவது எனத் தெரியவில்லை.

நீண்ட அந்த வராந்தாவைக் கடந்து வெளியில் வந்து நின்றாள். அந்த உயர்ந்த கட்டிடத்தின் உச்சியில் இயேசு இரண்டு கைகளையும் விரித்து நின்ற இயேசுவின் நிழல் ரேச்சல் மீது விழுந்தது.  அல்லது அந்த நிழலில் அவள் நின்றிருந்தாள். மேலே அந்த சிலையைப் பார்த்தாள் இரண்டு கைகளும் அவளை நோக்கி நீண்டிருந்தது. முகத்தில் வழிந்தோடிய கண்ணீர் பூமியில் விழுந்து காய்ந்தது.

இப்படித்தான் அவளது காதலும் முடிவுக்கு வந்தது. நட்சத்திரங்கள் முன்போல் இல்லை.  தாயும் தந்தையுமாக இரண்டு நட்சத்திரங்களை அவள் பார்க்க விரும்பினாள்.

இந்தத் தோல்வி, ஓடிச் சென்ற காலங்கள், விட்டுப்பிரிந்த உறவுகள், நம்பிக்கைகள்  அது நம்மோடு ஆடுகிற விளையாட்டுகள் என அனைத்தையுமே  கடல் அவளுக்கு நினைவூட்டியது. மொட்டை மாடியில் நின்றவளுக்கு நினைவுவர, மீண்டும் கடலைப் பார்த்தாள். ஆழிக்கடல் கொதித்து நுரைத்து ததும்பி விளையாடிக் கொண்டிருந்தது.

ஊரே காலியாகி விட்டதை உணர்ந்தாள். தேவாலயப் பாடலும் நின்று போயிருந்தது. கீழே இறங்கி வந்தவள் மீண்டும் கதவைத் திறந்து வெளியில் பார்த்தாள்.

ஓலமிட்டபடி ஒரு தெருநாய் எங்கு செல்வதென தெரியாமல் பூட்டப்பட்ட எஜமானனின் வீட்டைப் பார்த்து குரைத்துக் கொண்டிருந்தது.

மீண்டும் கதவை மெதுவாக மூடித் தாழிட்டாள். அப்பா நோயாளி ஆன பின்னர்  தூசுபடிந்து போன பியானோவை அவளும்  தொடவிலலி. அதைத் துடைத்து  பியானோவின்   பலகையைத் திறந்தாள். ஒரு மென்மையான ஈரத்துணியால் அதைத் துடைத்தாள்.

“பின்னர்  பியானோவில் அமர்ந்து கீதம் இசைக்கத் தொடங்கினாள்”

பேரிச்சலோடு கடல் கொண்ட பூமியாக அழிந்தோடும் நிலத்தில் அவளது இசை, காற்றை நிறைத்தது.