கனவுக்கும் நிஜத்திற்கும் இப்போதெல்லாம் எனக்கு வித்தியாசமே தெரிவதில்லை. கிட்டக் கிட்ட எல்லாமுமே நம்பகத்தன்மையோடே இருக்கின்றன. இதை ரத்தினக்குட்டியாக உங்களிடம் விளக்கிட வேண்டும் தான். இந்தக் கொரோனா வைரஸ் நம் நாட்டையும், உலக நாடுகளையுமே பதம் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் எல்லோருடைய மனதிலும் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறதென்ற கேள்வி இருந்து கொண்டே தான் இருக்கிறது. நாற்பது நாட்கள் தாண்டி ஊரடங்கு மேலும் தொடருமோ என்ற ஐயத்திலேயே தான் கழிந்து கொண்டிருக்கிறது.

நான் பகலில் தூங்குபவனே அல்ல எப்போதும். ஆனாலும் திடீரென இந்த ஊரடங்கு காலத்தில் உட்கார்ந்த வாக்கிலேயே கூட சில சமயம் தூங்கி விடுகிறேன். தூக்கம் என்றால் கால் மணி, அரை மணி நேரத்தூக்கம் தான். அதனுள் பல கனவுகள் ஞாபகத்தில் இருக்கும்படியாய் வருகின்றன. அதாவது சற்று முன்பாகத்தான் டிவியில் செய்திச் சேனல் பக்கமாய் கண்களை வைத்திருந்தேன். சாலையில் இரு சக்கர வாகனங்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி வாகன ஓட்டிகளை வரிசையாக இடைவெளி விட்டு நிற்க வைத்தார்கள். பின்பாக அவர்களை அவர்களே கன்னத்தில் அடித்துக் கொள்ளச் சொல்லி விட்டார்கள். வாகன ஓட்டிகளும் தங்கள் கன்னத்தில் மாற்றி மாற்றி அறைந்து கொண்டார்கள். ‘வீட்டை விட்டு வெளியில் வரமாட்டேன்!’ என்று அவர்களாகவே சொல்லிக் கொண்டே அடித்துக் கொள்ள வேண்டும்.

இதையெல்லாம் எதற்காக டிவியில்  மெனக்கெட்டு காட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்று தான் என் குற்றறிவுக்கு எட்டவே மாட்டேன் என்கிறது. நான் எந்த சமயத்தில் உட்கார்ந்திருந்தபடியே தூங்கினேன் என்று தெரியவில்லை. நானும் கனவில் என் இருசக்கர வாகனத்தில் செல்கிறேன். நல்லவேளை நான் சென்ற பாதை வெளியூரல்ல. உள்ளூர் தான். இந்த இந்தப் பாதையில் சென்றால் குறுநகரை அடையலாம் என்பது எனக்குத் தெரியும். நான் சென்ற எல்லாப் பாதைகளிலும் டிவைடர் வைத்து அதிகாரிகள் வாகனங்களை நிறுத்தி திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தார்கள். கருமத்தே! ரெண்டு நாளைக்கும் முன்பாகத்தானே  இந்த வழியில் சென்று வந்தேன்! அப்போது யாருமில்லையே இந்த இடத்தில். இப்போது திடீரென முளைத்து விட்டார்களே! ம்.

நான் கனவிலிருந்து விழித்துக் கொண்டேன். வாரத்தில் ஒரு நாள் மட்டும் காய்கறிகளும் மாத்திரை வில்லைகளும் வாங்கச் செல்லும் எனக்கே இப்படி கனவுகள் வந்து தொல்லை தருகிறதே.. தினமும் செல்பவர்கள் எப்படி நிம்மதியான தூக்கம் தூங்குவார்கள்? இந்த அரசாங்கம் ஒரு வீதியில் நிவாரணம் என கொடுத்துக் கொண்டே செல்ல பின்னாலேயே  அதே வீதிகளில் திரும்பி, ‘குடு! நாங் குடுத்ததெல்லாத்தியும் குடு’ என பிடுங்கிப் போவது போலத்தான் தெரிகிறது எனக்கு. பெட்ரோல் விலையைப் பற்றித்தான் இன்று செய்திகளில் முக்கியமாய் இருக்கிறது. 

சரி இந்த வைரஸ் வந்ததால் அரசாங்கம் பற்றி மக்களும், மக்களைப் பற்றி அரசாங்கமும் புரிந்து கொள்ளும் நல்ல சந்தர்ப்பமாக வைத்துக் கொள்ளலாம். நான் உங்களுக்கு சொல்ல வருவது அரசியலுமல்ல கதையுமல்ல. ஒரு சம்பவம் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். 

என் பெயர் சின்னச்சாமி. பழனிச்சாமி என்று இத்தனை காலம் வைத்திருந்த என் பெயரை சமீபத்தில் இந்த வைரஸ் ஒறம்பரைக்கு வந்த காரணத்தினால் மாற்றி சின்னச்சாமி என்று வைத்துக் கொண்டேன். பலர் அலைபேசி வழியாக என்னை நலம் விசாரிக்கையில், ‘எப்படி பழனிச்சாமி இருக்கீங்க?’ என்கிறார்கள். அவர்களுக்கு நான் பெயர் மாற்றிக் கொண்ட விசயத்தை சொன்ன பிறகு அவர்களும் அதை ஏற்றுக் கொண்டார்கள். என் அம்மாவிற்கு சின்னச்சாமி என்கிற பெயர் பிடிக்கவில்லையாம். ஆதார் அட்டையிலிருந்து கண்ட கருமம் வரை இனி பெயர் மாற்றம் செய்ய வேண்டுமேடா.. அதுக்கெல்லாம் பணத்துக்கு எங்கே போவே? என்றது. ‘உசுரோட பொழைச்சிருந்தா அதெல்லாம் பாத்துக்கலாம்.’ என்றேன்.

‘பேதி வந்து தூக்கீட்டுப் போவ உன்னெ!’ என்று எங்கள் கிராமத்தில் அடுத்தவனுக்கு சண்டை என்றால் சாபம் இடுவார்கள். ‘கொரோனா வந்து தூக்கீட்டுப் போவ’ என்று தான் இப்போது புதிதாய் சாபமிட்டுக் கொள்கிறார்கள்.சண்டையிடுவதற்கு நல்லநேரம் கெட்டநேரம் என்றெல்லாம் யார் பார்க்கிறார்கள்?

குப்புச்சாமி தான் என்னைத் தேடி வந்திருந்தான் அன்று. பெரியசாமி என்கிற பெயரை அவனும் இந்த இருபது நாட்களாக குப்புசாமி என்று என்னைப் பார்த்து ஃபாலோ செய்து மாற்றியிருந்தான். ‘எத்தனை செலவானாலும் ஒன்னும் பிரச்சனையில்லீங்க கலெக்டரே! பெயர் மாற்றுவதற்கான புரஸ்சீஜர், யார் யார் கிட்ட கையெழுத்து வாங்கணும், எவ்ளோ குடுக்கணும், எல்லா லிஸ்ட்டையும் எனக்கு போஸ்ட்டல்ல டீட்டெய்ல எழுதி அனுப்பிடுங்க!’ என்று கடிதமும் எழுதி அனுப்பி விட்டானாம் ஆபீசுக்கு.எந்த ஆபீசுக்கு? என்று நான் கேட்கவில்லை.

’பல்லோணம்பாளையம் வரைக்கிம் போயிட்டு வரலாம் சின்னச்சாமி. போன சுடிக்கு திரும்பிடலாம். கையில எவ்ளோ வச்சிருக்கே?’ என்றான். விசயம் என்னவென்று சொல்லாமல் எவ்ளோ வச்சிருக்கே? என்கிறானே! போக, வண்டியை விட்டு இறங்கி நாலு வார்த்தை பேசினால் இவனுது தேய்ந்து விடுமா? ஒரு மயிரும் இல்ல! என்று தான் உடனே சொல்லவேண்டும் என நினைத்தேன். போக மூன்று கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் இவனது ஊரிலிருந்து டீ குடிப்பதற்கு கூட நடந்தே வரும் குப்புசாமி இன்று டிவிஎஸ் எக்செலில் வந்து நின்று, பெட்ரோல் விற்கும் விலையில் அதை ஆப் கூட செய்யாமல் நின்று பேசுகிறான் என்றால் பாக்கெட்டில் சலவைத்தட்டைகள் நிறைய வைத்திருக்கிறான் என்றே அர்த்தம்.

ஒருவழியாக அவனை வண்டியிலிருந்து இறங்க வைத்து வீட்டின் எதிர்ப்புறமிருந்த வேப்பை மர நிழலுக்கு கூட்டிச் சென்றேன். ஆனால் சூத்துப்புறத்தில் வறண்ட ஓலையைக் கட்டி அல்லது திணித்து யாரோ ரூபி தீப்பெட்டியிலிருந்து குச்சியெடுத்து அதைப் பற்ற வைத்து அனுப்பி விட்டது போல பறந்தான். ‘ஏண்டா சாலாக்கு பண்ணிட்டு இருக்கே? அங்க போயி மூஞ்சு போச்சுன்னு கையை விரிச்சுட்டான்னா மயரா பண்றது?’ என்றான். என்ன மூஞ்சு போயிடும் என்ற குறிப்பையும் சொல்ல மாட்டேன் என்கிறானே இந்த எழவெடுத்தவன்!

”பல்லோணம்பாளையத்துல சரக்கு இருக்குதாமா!” என்றான் குப்புசாமி. இதற்குத்தான் இத்தனை அலப்பறையா?

“சாராயமா? அது எனக்கு ஒத்துக்காது. உள்ளங்காலு ஒரு டம்ளர் குடிச்சாவே ஒம்போது நாளைக்கி வலிக்கும். நீயே போய் வாங்கிட்டு வந்து குடி” என்றேன்.

“இல்லடா, சாராயம்னா நானே போக மாட்டேன். காச்சத் தெரியாமக் காச்சி அதை வாங்கிட்டு வந்து குடிச்சி கண்ணுப் போயி, கொடலுப் போயெல்லாம் வைத்தியம் பார்த்துட்டு இருக்குறக்கு நானென்ன மடியிலயா முடிஞ்சி வச்சிருக்கேன்? கோட்டரே கெடைக்குதாமா. ஆனா ஒரு கோட்டரு ஆயிரத்தி நூறு ரூவா”

“அத்தனையக் குடுத்து வாங்கி அந்த மல்லைக் குடிக்காட்டித்தான் இப்ப என்ன? சும்மா கிடக்குற சங்கை எடுத்து ஊதிக் கெடுக்கறதுக்கு கிளம்பி வந்துட்டே இப்போ?”

“சரக்கு வாயில பட்டு மாசக்கணக்கு ஆயிடுச்சுடா! பைத்தியம் புடிச்ச மாதிரி ஆயிடுச்சு. காத்தால சும்மாநாச்சிக்குமே எம் பொண்டாட்டியப் போட்டு மிதிச்சுப் போட்டேன்”

“அதேன்டா அப்படி?”

“ஏன்னா? என்னாரம் தான் டிவியப் பார்த்துட்டே பழைய சோத்தை கரைச்சி குடிச்சுட்டே கெடக்குறது? டிவில கிரிக்கெட் ஸ்கோர் சொல்றாப்ல நோயாளிக எண்ணிக்கையை சொல்லிட்டே இருக்கான். அமெரிக்காவுல ஒரே நாள்ல ரெண்டாயிரம் பேரு சாவுறதா சொல்றான். ரயில்ரோட்டுல போயி உழுந்துடலாம்னா ரயிலும் போவ மாட்டீங்குது”

‘சரி சரி ஆயிரத்தி நூறு ரூவாயை எப்படி சமபாதிச்சே? வண்டி யாருது?”

“வண்டி மாடசாமிது. பல்லோணம்பாளையத்துல பெட்ரோல் ரெண்டு லிட்டரு ஊத்தீட்டு வாங்கன்னு காசும் குடுத்து உட்டுருக்கான்”

“அது பெட்ரோலுக்காச்சு, கோட்டருக்கு?”

“பக்கத்தூட்டு மாமன் முன்னூறு குடுத்திருக்குது. ஒரு கோட்டரு வேணுமாம். வர்ற காசை வேண்டாம்னு சொல்லக்கூடாதுன்னு வாங்கி ஜோப்ல வெச்சுக்கிட்டேன். அப்புறம் கெளம்புறன்னு தெரிஞ்சதும் ஆளாளுக்கு ஓடியாந்து காசு குடுத்தாங்க. இவங்க அத்தன பேருக்கும் வாங்கிட்டு வர்றதுன்னா சாக்குப்பையத்தான் எடுத்துட்டு போகணும். அதுல பாரு சின்னச்சாமி, எங்கூரு பொன்னாயா இருக்குதுல்லொ. அது வந்து எங்கிட்ட நூத்திஅம்பது ரூவாய சுருக்குப் பையில இருந்து எடுத்துக் குடுத்து, ‘பொக்குனு டிவியப் பார்த்துட்டே உக்கோந்துட்டு இருக்காண்டா. போனீன்னா ஒன்னு வாங்கிட்டு வந்து குடுத்துரு’ங்குது. என்னையை தண்ணி லாரின்னே நெனச்சிட்டாங்க! யாருக்கும் கெடையாது சரக்கு. கரைக்ட்டா ஆயிரத்தி ஐநூறு ரூவா இருக்குது. நீயும் எடுத்துட்டு வா போலாம்”

“லுங்கீலயே போறதா?”

“ஆமாண்டா, போலீஸ் நிறுத்துனாக்கூட லுங்கில இருந்தாத்தான் லோக்கல் ஆளுன்னு நினைச்சி விடுவாங்க. பேண்ட் போட்டுட்டு போனா பக்கத்து மாநிலத்துக்காரன்னு நினைச்சி டாக்டரை வரவச்சி செக்கப்பண்டிக் கொண்டி ஊட்டுக்குள்ள பாஞ்சி நாளைக்கி உக்காத்தி வச்சிருவாங்க” என்றான்.

வெண்ணீரில் எதையோ கொண்டி விட்டது போல பறக்கும் குப்புசாமியிடம் பதிலெதுவும் கூறாமல் நானும் மேல் சட்டையை அணிந்து கொண்டு வந்து எக்ஸெல்லின் பின்புறமாக அமர்ந்து கொண்டேன். பல்லோணம்பாளையம் இங்கிருந்து பதினைந்து கிலோ மீட்டர் வரும். பதினொரு மணிக்கே வெய்யில் ஏறியிருந்தது. வைட்டமின் டி வேண்டுமென கடற்கரைகளில் ஜட்டி அணிந்த பெண்கள் குப்புற விழுந்து மணலில் கிடப்பதாய் டிவியில் நேற்று சொல்லியிருந்தார்கள். வைட்டமின் டி கொரோனாவிற்கு எதிராய் வேலை செய்கிறதாம். மக்கள் எதைத் தின்றால் பித்தம் தெரியும் என்பது போலத்தான் இருக்கிறார்கள். 

கிராமப்பகுதிகளில் தொற்று பரவாமல் இருக்க மருந்தடிக்க கூட ஆள் இல்லை. நகர்ப்புறங்களில் லாரி வைத்து வீதி வீதியாய் பீய்ச்சி அடிகிறார்கள். உள்ளூர் ஆளை வைத்து ஒரு நாள் கிராமத்தில் மருந்து அடித்தார்கள். அவன் முதுகில் பருத்திக் காட்டுக்கு அந்தக்காலத்தில் மருந்தடிக்க உபயோகப்பட்ட மெஷின் மாதிரி நீல வர்ணத்தில் மாட்டிக் கொண்டு வீடுகளின் கதவுகளுக்கு மட்டும் துளி காட்டி விட்டுச் சென்றான். அவன் அடித்து விட்டுப் போய் ஒரு மாதமாகி விட்டது. நேராக ராக்கெட்டில் செவ்வாய் கிரகத்துக்கே மருந்தடிக்கப் போய் விட்டானோ? என்ற சந்தேகமிருக்கிறது.

முனீஸ்வரன் கோவிலருகே மூன்று போலீசார் மரநிழலில் அமர்ந்திருந்தார்கள். வண்டியை நிறுத்தச் சொல்ல குப்புசாமி ஓரம் கட்டினான். ‘ரெண்டு பேரு போவக்கூடாதுன்னு தெரியாதா? எங்க போறீங்க ரெண்டு பேரும்?’ என்ற கேள்விக்கு குப்புசாமி பதிலளித்தான். ’மருந்துக்கடைக்கு ஒருத்தரு, பெட்ரோல் ஊத்திட்டு நாலு மளிகைச் சாமான் வாங்கிட்டு வர்றதுக்கு ஒருத்தரு. போன சுடிக்கு திரும்பிருவோம் சார்’ என்றான். அலைபேசி எண்ணையும், வண்டி எண்ணையும் நோட்டில் குறித்துக் கொண்டு அனுப்பி வைத்தார்கள்.

”டென்சன் ஆயிட்டேன் நானு” என்றான் குப்புசாமி.

“இதுக்கென்ன டென்சனு உனக்கு? அவங்க விசாரிக்கத்தான நைட்டும் பகலும் உக்கார்ந்திருக்காங்க. அவங்க வேலைய அவங்க செய்யுறாங்க. வெளியூர்ல எல்லாம் தோப்புக்கரணம் போட்டுட்டும், அடி வாங்கிட்டும் போயிட்டு இருக்காங்க. சரி உன்னோட மாஸ்க் எங்கே? அதைக்கேக்காம விட்டாங்க பாரு”

“ஆமாண்டா வண்டிக் கவர்லயே கெடக்குது அது” என்ற குப்புசாமி வண்டியை நிறுத்தி கவரிலிருந்து மாஸ்க்கை எடுத்து அணிந்து கொண்டான். மூக்கு அருகில் கீழே இழுத்து விட்டுக் கொண்டான்.

“மூக்கை பாதுகாக்கத்தான்டா மாஸ்க்கு. அதை இழுத்து உட்டுட்டு போறே?”

“மூச்சு முட்டுதுடா! பாரு அங்கீம் நிக்கறாங்க வண்டியச் செக்பண்ணீட்டு. ஒரு ஊரு போறதுக்கு ஒன்பது இடத்துல பதிலு சொல்லீட்டு போவணுமாட்ட இருக்குது. இதுக்குத்தான் வெளிய கெளம்புறதே இல்ல நானு.. சார் கவர்மெண்ட் ஆஸ்பத்திரில அம்மாக்கு ப்ரஸ்சர் மாத்திரை வாங்கிட்டு வரணும் சார்’ என்று சொல்லிக் கொண்டே கடந்தான். பத்து நிமிடத்தில் பெட்ரோல் பங்க் சென்று பெட்ரோல் போட்டுக் கொண்டு பல்லோணம்பாளையம் ஊரின் முகப்பில் வந்து நின்றோம். 

குப்புசாமி தன் அலைபேசியை உயிர்ப்பித்து பார்ட்டிக்கு அழைத்தான். ‘ஆமாங்க, முன்னால கவிதா டீக்கடை கிட்டத்தான் நிக்கிறேன். அப்படியே வடக்கே வர்றதா? போலீஸ் செக்போஸ்ட் கீது இருக்குதுங்ளா அங்கே? இல்லியா? அப்ப சரி” போனை அணைத்து விட்டு வண்டியை முறுக்கினான். ஊருக்குள் நடமாட்டமே இல்லை. நாங்கள் இருவரும் மட்டுமே அந்த ஊருக்கே பாதுகாவலர்கள் போல எக்ஸெலில் சென்றோம். வடக்கிலிருந்த கடைசி பைப்படியருகே செம்மிக்கலரில் ஒரு நாய் நின்றிருந்தது. அது துரத்துமோ? என்று அஞ்சினேன். 

அப்படியெதுவும் அது செய்யாமல் சாதுவாய் நின்ற கெடையிலேயே நின்றிருந்தது. தாண்டி வேப்பை மர நிழலில் வண்டியை நிப்பாட்டினான் குப்புசாமி. பாக்கெட்டிலிருந்து பணத்தை எண்ணி ஆயிரம் வைத்துக் கொண்டு என்னிடமும் பணம் கேட்டான். அவனிடம் இரண்டு ஐநூறு ரூபாய் தாள்களைக் கொடுத்தேன்.

“ரெண்டாயிரம் ரூவாயக் குடுப்போம். குடுத்தான்னா இரநூறு ரூவா லாவம் தான? பீடி ஒரு கட்டு நாப்பது ரூவா சொல்றாங்கடா! அதுங்கூட கெடைப்பனாங்குது. நாஞ் சொல்றேன் இப்போ, இந்த உலகம் சீக்கிரமா நாசமாப் போயிரும் பாரு! ” என்றான். அப்போது லுங்கியை மடித்துக் கட்டிக் கொண்டு ஒரு பெரியவர் பைப்படி தாண்டி வந்தார். ‘நீங்களா இப்பக் கூப்பிட்டது? சாலப்பாளையத்துக்காரரு தான நீங்க?’ என்று விசாரித்தார், 

குப்புசாமி ’ஆமாம்’ என்றதும் ஜட்டி பாக்கெட்டிலிருந்து எடுத்து இரண்டு கோட்டரை குப்புசாமி கையில் கொடுத்தார். குப்புசாமி பாட்டிலின் மூடியை திருகிப் பார்த்து பின்பாக தன் ஜட்டி பாக்கெட்டில் திணித்துக் கொண்டான். ஆயிரம் ரூவாயை அவர் கையில் கொடுத்தான். எண்ணிப் பார்த்தவர், ‘இல்லீங்க வராதுங்க.. இன்னும் இரநூறு வேணுமுங்க.. சரக்கே இல்லீங்க, ரெண்டாயிரம் குடுத்துக் கூட வாங்கிட்டு போக ஆளுங்க இருக்குது’ என்றார். குப்புசாமி நூறு ரூவாய் நோட்டு ஒன்றைக் கொடுத்து ‘அவ்ளோதான் இருக்குது,, போயி ஒரு கட்டு பீடி, டம்ளரு, தண்ணி, கொறிக்கிறதுக்கு மிச்சரு வாங்கத்தான் இருக்குது’ என்று வண்டியை ஸ்டார்ட் செய்யவும் நான் பின்னால் ஏறிக் கொண்டேன். பெரியவர் முனகிக் கொண்டே வடக்கே நடந்தார். ‘வந்தர்றானுங்க பிச்செக்காரனுங்க!’ என்பது போலவும் கேட்டது.

“எனக்கிருக்குற வெறிக்கி ரெண்டு செக் போஸ்ட் மட்டும் இல்லீன்னு வெய்யி.. இவத்திக்கே ஒரு கோட்டரை மெட்டைக் கழட்டி குடுச்சுப் போடுவேன் பாத்துக்க! நூத்தியஞ்சு ரூவாய்க்கி வாங்கின எக்ஸ்பிரஸ் சரக்கை இத்தனை பணம் குடுத்து வாங்க வேண்டியதாப் போச்சு பாரு! நமக்கெல்லாம் குடியொரு கேடு!” குப்புசாமிக்கு சரக்கு பாட்டில் கைக்கு கிடைத்ததும் போதை ஏறி விட்டதோ என்று நினைத்தேன். சும்மாவே ஆடுவான். இப்போ சலங்கையுமில்ல கிடைச்சிடுச்சு!

“எத்தனபேரு கூட குடுச்சிருப்போம் நாம? எத்தன பேரு நம்மூர்ல குடிக்கிறானுக! எவனாச்சிம் சொன்னானா? அட இங்க இப்படி இரநூத்தி அம்பது ரூவாய்க்கி ஒருத்தன் குடுத்துட்டு இருக்கான்னு? பத்து நாளு வாங்கி குடிச்சிருக்கானுங்க. இப்பச் சொல்றானுங்க.. மொத பத்து நாளு கவலையில்லாம குடிச்சானுங்களாமா! இவுனுக வவுறு நம்புனாப் போதும்னு இருந்திருக்கானுங்க பாரு! நம்ம கிட்ட சரக்கு மட்டும் இருக்குதுனு தெரிஞ்சிட்டானுங்கன்னு வெய்யி.. தலையில கல்லைப் போட்டு கொன்னு போட்டு கோட்டரை எடுத்து குடிச்சிட்டு போயிடுவானுங்க. மனுசனுங்களா இவனுங்கெல்லாம்?” குப்புசாமி பேசிக் கொண்டே வர ‘ம்’ கொட்டிக் கொண்டே வரவேண்டியதாகி விட்டது. இரண்டாவது செக் போஸ்ட் தாண்டியதும், எங்காவது ஒரு மரத்தடியில் அமர்ந்து விடுவோமா? என்றேன்.

“இல்லீடா, இத்தனை நாள் கழிச்சி குடிக்கோம்.. நிம்மதியா குட்டிக்காட்டுக்கு உள்ளார போயி ஆலமரத்தடியில உக்கோந்து ஒரு கோட்டரை நாலு வாட்டி தண்ணி கலந்து நிம்மதியா குடிப்போம். திங்கறதுக்கு நிலக்கடையும், காரமா எதாச்சிம் வாங்கிக்கலாம்.” என்றான். அதன்படியே வண்டியைக் கொண்டு சென்று நிறுத்தி விட்டு குட்டி காட்டு ஆலமரத்தடியில் வந்தமர்ந்தோம் இருவரும்.

”குஞ்சானூர்ல என்னாச்சு தெரியுமா? கதையக் கேளு நீயி!” என்றவன் சொன்னது மாதிரியே டம்ளரில் அளவாய் ஊற்றி தண்ணீர் கலந்து எடுத்துக் குடித்தான். நானும் அவன் ஊற்றிய அளவே டம்ளரில் ஊற்றி தண்ணீர் கலந்து குடித்தேன். வயிறு காலியாய் இருந்ததால் நிமிடத்தில் ‘கிர்’ரென இருந்தது. இன்னொரு கட்டிங் போட்டால் அதுவே போதும் என்கிற மாதிரி தான்.

“குஞ்சானூர்ல சரக்கு கிடைக்குதுன்னு நம்ம ராமசாமி பைக்கை எடுத்துட்டு காத்தாலலே போன வாரம் போயிருக்காண்டா. குஞ்சானூரு போயி வீதி வீடியா நின்னு நின்னு பார்த்துட்டு இருந்திருக்கான். அப்ப ஒருத்தன் வந்து ‘என்ன வேணும்னு ராமசாமிகிட்ட கேட்டிருக்கான். இவனும், நானூறு ரூவாய்க்கி சரக்கு இருக்கிறதா சொன்னாங்க இங்க.. அதான் அசம்பலு தெரியுதான்னு பாக்கேன்னு சொல்லியிருக்கான். அவனோ இதோ வந்துடறேன்னு அவன் டிவிஎஸ்ல சர்ருன்னு போயிருக்கான். நம்மாளு வந்துடுவான் வந்துடுவான்னு பார்த்துட்டே கால்மணி நேரம் நின்னு பார்த்துட்டு, சரி போச்சாதுன்னு கிளம்புறப்ப சர்ருன்னு டிவிஎஸ்ல அவன் வந்துட்டானாம். 

நானூறு ரூவாய படக்குனு ராமசாமிகிட்ட வாங்கி ஜோப்புல போட்டுட்டு ஒரு கோட்டரை கொடுத்திருக்கான். குடுத்தவன் சும்மா குடுக்காம..’போலீஸ் ரெய்டு இருக்குதுங்க இங்கெல்லாம். ரோட்டுல எங்காச்சிம் நின்னு குடிச்சுட்டு போனீங்கன்னா மாட்டிக்குவீங்க, உங்க ஊருக்கே போயி ஊட்டுல உக்கோந்து குடியுங்க!’ அப்பிடின்னு சொல்லிட்டு போயிட்டானாம்.” எனக்கு போரடித்தது. இத்தனை நாள் கழித்து இந்த வீணாய்ப் போன குப்புசாமி பேச்சையெல்லாம் கேட்டுக் கொண்டா சிறப்பாய் மகிழ்ச்சியாய் குடிப்பது? காதில் மரம் அறுக்கும் மின்சார கத்தி ஓசை கேட்பது போலவே இருந்தது எனக்கு. ‘எந்திரிச்சு மூடீட்டுப் போடா’ என்றே சொல்லலாமென கோபமும் வந்தது. இன்னும் கொஞ்சம் டம்ளரில் ஊற்றிக் கொண்டேன். கடலையையோ, மிச்சரையோ தொடவேயில்லை.

”நம்மாளு ஊருக்கு வந்து பாட்டிலை திருகுனா சும்மாவே திருகுச்சாம். என்னடான்னு மோந்து பார்த்தா சுக்கு டீ வாசம் அடிச்சுதாம். அட ஒரு சுக்கு டீக்குப் போயி நானூறு ரூவாய அழுதுட்டு வந்திருக்கோமேன்னு கடுப்பாயிடுச்சாம். எப்டி?” என்றவனிடம் ‘மயிரு மாதிரி இருக்குது கதை’ என்றேன்.

“சரக்கடிக்கப்ப எதாச்சிம் பேசிட்டு ஜாலியா குடிக்கலாம்னு பார்த்தா எருமெ மேல மழெ பேஞ்சாப்ல இருக்காம்பாரு! இவங்கிட்ட ஒரு நாயம் பேசுறதுக்கு குட்டிச் செவுத்துக் கிட்ட நின்னு பேசிக்கலாம்” என்றான்.

“எந்திரிச்சு போடா” என்றேன் காட்டமாகவே. எனக்கே அது பயங்கரமாய்க் கேட்டது. என்ன கருமத்துக்காக இப்படி சத்தமிடுகிறேன் என்றே தெரியவில்லை. நாற்பது நாள் வயித்தெரிச்சலை எங்காவது யார் மீதாவது காட்ட வேண்டும். அதும் உடனடியாக!

“அந்த பல்லோணம்பாளைய கெல்ட்டு நாயி போன் நெம்பரை குடுடா. அவன்ட்ட பேசணும் நானு இப்ப”

“இப்ப அவன்ட்ட என்ன பேச்சு? பணம் இருந்திருந்தா இன்னும் ரெண்டு சேர்த்தி அப்பவே வாங்கீட்டு வந்து தொலைச்சிருக்கலாம்ல! இனி எவன் அவ்ளோ தூரம் போறது?”

“அங்க என்ன மயிருக்கு போகணும் நாம? நம்ம கிட்டயே ஆயிரத்தி அம்பது ரூவாய்க்கி ஒரு இத்துப் போன கோட்டர் பாட்டிலை வித்திருக்கான்னா அவன் பெரிய மனுசனா நாம பெரிய மனுசனா? அவன் என்னமோ மொனகீட்டு போனாண்டா கடேசியா! என்னமோ அவன் சொத்தையே சும்மா நம்ம கிட்ட குடுத்துட்டு போற மாதிரி” டம்ளரில் இருந்த சரக்கை எடுத்து கவிழ்த்துக் கொண்டேன் வாயினுள்.

“அவன் நெம்பரைக் குடு”

“அவனையெல்லாம் கூப்பிட்டு சத்தம் போட்டுட்டு இருக்காதயாமா போன்ல வெட்டியா!”

“அவனை கூப்புடறதுக்கு நானென்ன கிறுக்கனா? இப்ப ஸ்டேசனுக்கு கூப்பிடறேன். அவன் நெம்பரை குடுக்குறேன். போயி அவனை நாலு வெதுப்பு அவங்க போயி வெதுப்புவாங்க! கெழ்ட்டு நாயி ஒரு கோட்டரை யானை வெலைக்கி வித்து சோறு திங்கானா? காசென்ன மரத்துலயா காய்க்கிது?” என்றேன். 

“ஆமா, அவனெ உடப்புடாது. நீயி ஸ்டேசனுக்கு கூப்பிடு மொதொ!” என்றான் குப்புசாமியும்.

000