01

கல்லூரியின் இறுதி நாட்களில் படித்துக்கொண்டிருந்த மாணிக்கத்துக்கு அடுத்த உடனடியாக வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற சிந்தனை தான் அதிகம் ஓடிக்கொண்டிருந்தது. ஒவ்வொரு ஆண்டும் கல்லூரியிலேயே நேர்முகத் தேர்வு நடத்துவதற்காக சில தனியார் நிறுவனங்கள் வருவார்கள். ஒரு சில மாணவர்களை தவிர்த்து வேறு எவருக்கும் நேர்முகத்தேர்வில் தேர்வாகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. கல்லூரியின் கடைசி நாட்களில் பிரியாவிடை கொடுத்து பம்பாய்க்கு கிளம்பிவிட்டான்.

02

ஆரே காலனியில் இருக்கும் ஐந்தாம் நம்பர் மார்கெட்டில் இருந்து முத்தையா வசிக்கும்  இடத்திற்கு ஐந்து நிமிடத்தில் சென்றுவிடலாம்.

முத்தையாவுக்கு அன்று காலையில் சீக்கிரமே வேலைக்குப் போக வேண்டியதிருந்தது, வீட்டில் இருந்து கிளம்பியவுடன் போகும் வழியில் ஏழாம் நம்பரில் வசிக்கும் ரங்கசாமி கிடைத்தார்.

ரங்கசாமி வேலை செய்வது ஆரே சென்ட்ரல் டெய்ரியில். பல ஆண்டுகளுக்கு முன்னரே பம்பாயில் குடியேறியவர், தொடர்ந்து ஆரே காலனி பகுதியிலே அவரது குடும்பம் வசித்து வருகிறார்கள்.

“என்ன ரங்கசாமி, இன்னைக்கு சீக்கிரம் போகிறீங்க போல?” என்றார் முத்தையா.

“ஆமாங்க அண்ணாச்சி இன்னைக்கு எனக்கு பர்ஸ்ட் சிப்ட் காலையில ஏழு மணிக்கு போனா மதியம் மூனு மணிக்கு வந்துவிடலாம்…” என்று வேகமாக நடையெடுத்தார் ரங்கசாமி.

இருவரும் பேசிக்கொண்டே ஆரே காலனி ஐந்தாம் நம்பர் மார்க்கெட் வரை நடந்தார்கள்.

“முத்தையா அண்ணாச்சி நீங்களும் காலையில் சீக்கிரமே போறீங்க போல?” என்றார் ரங்கசாமி.

“ஆமா, எனக்கு 478 (Ltd) காட்கோப்பர் பஸ்ஸை பிடிக்கனும், நம்ம ஐந்தாம் நம்பர் மார்கெட் ஏரியாவுக்கு சரியான நேரத்துல வந்திருவான் பெஸ்ட் பஸ்-காரன்…” முத்தையா.

“ஏன் அண்ணாச்சி, நீங்க உங்க ஓனர் வண்டியை வீட்டுக்கு கொண்டு வர வேண்டிய தானே? நம்ம இடத்துல டிரைவர் வேலை செய்யும் எல்லாப் பசங்களும் வண்டியை வீட்டுக்கு கொண்டு வரானுங்க….” என்றார் ரங்கசாமி.

“இல்ல ரங்கசாமி, அவங்க ஒரு தமிழ் குடும்பம் தான் ஆனா, நம்மளை மாதிரி கிடையாது. என் கிட்ட அவங்க வண்டிய வீட்டுக்கு கொண்டுபோக விடமாட்டாரு எங்க சார்…….நான் வண்டி ஓட்டது ஒரு பேங்க் மேனேஜருக்கு, அவரு நரிமன் பாய்ன்ட்ல இருககும் எஸ்.பி.ஐ மியூச்சுவல் பண்ட்ஸ்ல வேலை பாக்குறாரு. கப் பரேட் பில்டிங் -ல  தான் அவங்க ஆபிஸ் இருக்குது…”

“அண்ணாச்சி பெரிய இடம் தான் போங்க….” என்று கையில் கொண்டு வந்த வெத்தலையை வாயில் போட்டு ஒதுக்கி கொண்டார் ரங்கசாமி.

“அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல ரங்கசாமி. ஆனா, சம்பளம் கரெக்டா நேரத்துக்கு தந்துருவாங்க. இங்க எங்களுக்கு எந்த டிரைவர் வேலையும் நிரந்தரம் கிடையாது, அவங்களுக்கு எப்போம் நம்மளை பிடிக்கலையோ, அப்பவே நம்ம வேற ஓனர் தேடனும்…”  என்று ஒருமுறை நேரத்தைப் பார்த்துக்கொண்டார் முத்தையா.

“சரி, இப்போம் 478 (Ltd) பஸ் வந்துரும் பிறகு சந்திபாபோம…” என்று ரங்கசாமிக்கு விடைகொடுத்தார் முத்தையா.

பஸ் ஸ்டாப்பில் இருந்த பேப்பர் வாலாவிடம் ஒரு ‘மராத்திய முரசு’ பேப்பரையும் வாங்கிக்கொண்டார்.

முத்தையா பம்பாயில் குடியேறியது 1980 காலகட்டத்தில். சொந்த ஊரில் ஏற்பட்ட வரலாறு காணாத வறட்சி, வேலையின்மை மற்றும் ஊரில் நிலவிய சூழல் அவரை பம்பைக்கு குடியேற செய்தது. அவர் பம்பாய் வந்த காலகட்டத்தில் ‘மஹாராஷ்டிரா மராத்தியர்களுக்கே…’ என்ற அரசியல் முகத்தோடு வந்த நபர்களால் தாக்கப்பட்டு வீடு மற்றும் உடைமைகளை இழந்துள்ளார்.

இதுவரை பம்பாய்க்கு உள்ளேயே நான்கு பகுதிகளில் வீடு மாறி, கடைசியில் ஆரே காலனியில் உள்ள தமிழர்கள் குடியிருப்பில் குடியேறியுள்ளார். ‘மதராஸிகள் நமது வேலைவாய்ப்பை பறித்துக்கொண்டு இங்கே வசிக்கிறார்கள்’ என்ற குற்றச்சாட்டுக்கு முததையாவும் ஆளாகியவர்தான்.

சிறிது நேரத்தில் பஸ் வந்தும் வேகமாக உள்ளே ஏறினார். பஸ்ஸில் இடம் இருக்கிறதா என்று எல்லா இருக்கைகளையும் ஒரு நிமிடம் பார்த்தார். மாஸ்டர் அருகில் வந்ததும் “ஏக் அய்.அய்.டி பொவாய்” என்று தனது டிக்கெட் ஐ வாங்கிக்கொண்டார் முத்தையா.

பஸ் மார்கெட் பகுதியை கடந்ததும் அடுத்து, ஆரே சென்ட்ரல் டெய்ரி, பிக்னிக் பாய்ன்ட், பொவாய் எல்.அன்ட்.டி வந்தது. நான்கு ஸ்டாப்களில் பஸ்  நின்று சென்றதிலும், பஸ் முழுவதும் கூட்டமும் குறைந்தபாடில்லை. முத்தையாவுக்கு உட்காரவும் இடம் கிடக்கவில்லை.

ஆரே காலனியின் வழியே பயணிப்பது ஏதோ ஒரு ஐரோப்பிய பகுதியில் பயணிப்பது போல இதமாக இருக்கும். பம்பாய் நகரில் மத்திய பகுதியில் மலை, ஏரி, காடுகளை, கொண்ட பகுதி. சஞ்சய் காந்தி நேஷனல் பார்க், சோட்டா காஷ்மீர் என்று அழைக்கப்படும் ஒரு பூங்கா காதலர்கள் கவிபாடும் இடமும் இதுதான். பாலிவுட் கனவு தொழிற்சாலையான ‘பிலிம் சிட்டி’ இங்கே தான் இருக்கிறது. சிறுத்தைகள் அதிகமாக காணப்படும் இடமும் கூட. ஆரே காடுகளில் உற்பத்தியாகி நகரில் நடுவே ஓடும் ‘மிட்டி நதி’ (நன்னீர் நதி) பாந்ராவில் உளள ‘மேங்ரோஸ் காடுகள்’ வழியே கடந்து அரபிக் கடலில் இணைகிறது. நகரத்தின் வளர்ச்சியில் காலப்போக்கில் இந்த நதி சாக்கடையாக மாறிவிட்டது தான் வேதனை (சென்னை கூவம் நதியை போல) ஒன்னரை நூற்றாண்டுக்கு முன்னர்தான் வெளி மக்கள் இந்தப் பகுதியில் குடியேறியுள்ளார்கள்.

பூர்வகுடி மக்கள் காலம் தொட்டு தொடர்ந்து அங்கேயே வசிக்கிறார்கள். பம்பாய் மேற்கு பகுதியில் இருந்து பாண்டூப், காட்கோபர், தானே போன்ற இடங்களுக்கு ஆரே காலனி வழியே விரைவில் சென்றுவிடலாம். இது ஒரு மலைப் பாதை குறுக்குவழி கூட.

மலையடிவாரத்தில் அமைந்துள்ளது விஹார் ஏரி. பொவாய் அய்.அய்.டி இந்த ஏரியின் பின்புறத்தில் தான் இருக்கிறது. புதிதாக அவ்வழியே பயணம் செய்யும் நபர்களால் உரையாடல் தொடர்ந்து கொண்டிருந்தது. முத்தையாவும் இதைக் கேட்டுக் கொண்டே பயணம் செய்தார்.

அய்.அய்.டி பஸ் ஸ்டாப் வந்ததும் “சலா புடே  அய்.அய்.டி ஸ்டாப்…”  என்றார் மாஸ்டர்.

உள்ளே தினசரி வேலைக்கு போகும் ஆட்களோடு முத்தையாவும் இறங்கிக்கொண்டார்.

அய்.அய்.டி ஸ்டாப்பில் இருந்து ஹிராநந்தினி ரெசிடென்சியல் காம்ப்ளக்ஸ் நடந்து போகும் தொலைவுதான். நேரம் ஆகிவிட்டதா என ஒரு முறை கைக்கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டு வேகமாக நடையெடுத்தார்.

முத்தையாவின் முதலாளி அவரது குடும்பத்தினர் இருப்பது பதினெட்டாம் மாடியில். கீழே செக்யூரிட்டியிடம் தகவல் கொடுத்தால் உடனே அவர்கள் வீட்டுக்கு அழைப்பு விடுப்பார்.

“சாகிப் டிரைவர் முததையா ஆகையா…” என்று கிருஷ்ணமூர்த்தி சாருக்கு இன்டர்கால் மூலம் தெரிவித்தார் அந்த பில்டிங் செக்யூரிட்டி நபர்.

“டீகே… நிச்சே அம்லோக் ஆஹ்ரே” என்றார் கிருஷ்ணமூர்த்தி.

“இந்தாங்கோ… முத்தையா வண்டி சாவி, வண்டியை எடுத்துண்டு வாங்க” என்று சாவியை முத்தையாவிடம் லிப்டில் இருந்து வெளியே வந்ததும் கொடுத்தார் கிருஷ்ணமூர்த்தி.

சாவியை பெற்றுக்கொண்டு வண்டியில் ‘கர்னாடிக் மியூசிக்’ கேசட்டை பிளே செய்து தயாராக கொண்டுவந்தார் முத்தையா. இது கிருஷ்ணமூர்த்தி சாரின் விருப்பம் வண்டியில் பயணம் செய்யும் போது கர்னாடிக் மியூசிக் கேட்பது, நரிமண் பாய்ன்ட்  அருகில் இருக்கும் அலுவலகம் நோக்கி வண்டியும் பயணிக்கத் தொடங்கியது.

03

மாணிக்கத்துக்கு அன்று காலை அந்தேரியில் தான் படித்த துறையில் ஒரு வேலைக்கான இன்டர்வியூ இருந்தது. அதற்காக இரண்டு நாட்களாக கல்லூரியில் படித்த பாடப் புத்தகங்களை மீண்டும் ஒரு முறை வாசித்து நினைவில் வைத்துக்கொண்டான். பம்பாய்க்கு வந்து இன்றோடு இரண்டு மாதங்கள் ஆகிறது. ஆனால், வேலைதான் இன்னும் கிடைத்தப்பாடில்லை.

“மாணிக்கம் எந்திரி மணி எட்டு ஆயிட்டு இன்னக்கி ஏதோ இன்டர்வியூ இருக்குன்னு சொன்னயே” என்றாள் அம்மா.

“ஆமா, இந்த இன்டர்வியூ மட்டும் கிடைச்சிருமா என்ன, எங்க போனாலும் சரி நாங்க லெட்டர் அனுப்புறோம் -ன்னு சொல்லுதானுங்க, ஆனா வரமாட்டேன்ங்குது…” என பதில் சொல்லிக் கொண்டே படுக்கையில் இருந்து எழுந்தான்.

படுக்கையிலிருந்து எழுந்ததும் “அப்பா கிளம்பிடாங்களா?” என்றான்.

“அவரு ஆறு மணிக்கே போயிட்டாரு, இப்போம் அவங்க சார கூப்பிட்டு நரிமன் பாயின்ட்க்கே போயிருப்பாரு”  என்றாள் அம்மா.

“சரி, பத்துமணிக்கு தான் எனக்கு இன்டர்வியூ நான் இப்போம் கிளம்புறேன்…” என்று கையில் ஒரு வாளியை எடுத்து வெளியில் யாராவது இருக்கிறார்களா என எட்டிப் பார்த்தான்.

பம்பாய்க்கு புதிதாக வந்திருந்தாலும் ஊரில் இருக்கும்போது இருந்த பழக்கம் இன்னும் போகவில்லை.

வீட்டு பக்கத்தில் ஒரு பொதுக் கழிப்பறை இருந்தது ஆனால் அங்கே அவன் செல்வது கிடையாது. வயிற்றை குமட்டும் வாடை எப்போதும் வரும். கல்லூரியின் விடுதியில் இருக்கும் கழிவறை அதற்கு எவ்வளவோ பரவாயில்லை என்று பலமுறை தோன்றியது. ஊரில் இருக்கும் போது எவ்வாறு நடந்து கொண்டானோ அதேபோல் இங்கேயும் வாழ்ந்து வந்தான்.

ஆரே காலனி மிகப்பெரிய வனப்பகுதி அதனால் அங்கே போய்விடுவான்.

சிறுத்தைகள் உலா வரும் பகுதி சுத்தி சுத்தி பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும், இல்லையென்றால் சிறுத்தைக்கு அவன் கடனாகிவிடுவான். சிறு புற்கள் அசைந்தாலும் பயம் உள்மனம் வரை அல்லாடும்.

குறிப்பாக ஆரே காலனியில் வசிப்பது என்பது, பம்பாய் மாநகரில் வசிப்பது போல தெரியாது. நமது ஊரில் வசிப்பது போலவே இருக்கும். புதிதாக வந்த சமயத்தில் யூனிட் நம்பர் 13 தமிழர்கள் குடியிருப்பில் மாரி அம்மன் கூழ் ஊற்றும் திருவிழாவில். அன்றைய இரவு இளைய தளபதி புதிய தோற்றத்தில் நடித்து வெளிவந்த ‘திருமலை’ படம் திரையிடப்பட்டது.

“தாம் தக்க தீம் தக்க தைய்ய தக்க கூத்து,

நீயில்ல நானில்ல நாமுன்னு மாத்து…”

“சகா காலை எழுந்து மாலை உறங்கும் வாழ்க்கையை மறப்போம் வா…”

“சகா நேற்று நாளை கவலை மறந்து

இன்றை மட்டும் ரசிப்போம் வா…”

கவிஞர் கபிலனின் வரிகளில்,

திரையில் இளைய தளபதி ஆடிக்கொண்டிருந்தார், திரைக்குப் பின்னால் இளைஞர்களும் ஆடினார்கள்.

கபிலனின் கவிதை வரிகள் அவன் சிந்தனையை ஆக்கிரமிப்பு செய்தது.

மாணிக்கத்துக்கு அந்த பாடல் வரிகள் தமிழகத்தில் உள்ள அரசு பேருந்துகள், அரசு கட்டிடங்களை நினைவுப் படுத்தியது.

ஆம், கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது அவர்களின் முயற்சியால் அரசுப் பேருந்துகளில், அரசு அலுவலகங்களில் இப்படி வாசகங்கள் அதிகம் இருந்தது.

“நான், நீ, என்றால் உதடுகள் ஒட்டாது,

நாம் என்று சொன்னால் தான் உதடுகள் கூட ஒட்டும்” – கலைஞர்.

தமிழர்கள் அதிகமாக குடியிருக்கும் பகுதி என்பதால் யூனிட் நம்பர் 16-ல் அரசாங்கம் நடத்தும் ‘தமிழ் நடுநிலைப்பள்ளி’ இருந்தது. தமிழ் வழியில் படிக்கும் மாணவர்கள் இங்குதான் படித்தார்கள். நடுநிலைப்பள்ளி முடித்த மாணவர்கள் உயர்நிலைப் படிப்புக்காக பாண்டூப் “பிரைட் தமிழ் பள்ளிக்கு” செல்வார்கள், பத்தாவது வரை தமிழக அரசின் பாடத்திட்டத்தில் நடத்தப்படும் பொதுத் தேர்வும் நடைபெறும்.

ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் திட்டமிடப்பட்ட ‘ஆரே டெய்ரி’ பால் பண்ணையில் வேலைகள் செய்யவும். மாடுகளுக்கு புற்கள் வெட்டுவதற்காகவும், பிற தோட்ட வேலைகள் செய்வதற்காகவும் இந்தப் பகுதிக்கு ஆட்கள் குடிபெயர்ந்துள்ளனர். அப்படி வந்த அவர்கள் ஒரு தலைமுறை தாண்டி இதே பகுதியில் வசிக்கின்றார்கள். பல பேருக்கு இங்குள்ள ஆரே சென்ரல் டெய்ரியில் பூங்கா பராமரிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஆரே காலனி செக்யூரிட்டி போன்ற அரசாங்க வேலையில் இருப்பவர்கள்.

மொத்தம் 32 யூனிட்களாக சிறு சிறு பகுதிகளில் மாட்டு பண்ணைகள் உள்ளன. பெரும்பாலும் அதில் எருமை மாடுகள் தான்.

“எம்மோ, ஒரு ஐம்பது ரூவா இருந்தா தாங்க நான் வேலை கிடைச்சவுடனே தந்துருவேன்…”

உனக்கு எவ்வளவு பைசா வேணும்னாலும் கேட்டுகாப்போ, முதல்ல உனக்கு வேலை கிடைக்கட்டும் அதுக்கு அப்புறம் நீ திருப்பி தா,

இந்தா இதுல நூரூ ரூவா இருக்கு மீதி நீ வச்சிக்கா உங்க அப்பாகிட்ட கிட்ட சொல்லாத…” என்றாள்.

மகனுக்கு பணம் கொடுத்துவிட்டு தானும் வேலைக்கு கிளம்பினாள்.

பம்பையில் அம்மாவும் வேலைக்கு செல்கிறார், அவர் வேலை செய்வது ஒரு வீட்டு வேலை. பாத்திரம் விளக்குவது துணி, துவைப்பது, வீடு துடைப்பது போன்ற வேலை. ஆரே காலனியை தான்டிய கோரேகாவ் பகுதியில் இருக்கும் வசதியான குடும்பங்களுக்கு.

“சரி நான் வாரேன்…” என்று அவனும் கிளம்பினான்.

இன்று இன்டர்வியூ இருப்பது அந்தேரி எம்.அய்.டி.சி யில் இருக்கும் ஒரு பிளாஸ்டிக் மோல்டிங் கம்பெனியில்.

வீட்டில் இருந்து மார்க்கெட்க்கு நடந்து போகும் வழியில் அவனது அம்மா வயதுடைய பெண்மணி ரோட்டின் ஓரத்தில் உள்ள காட்டுப்பகுதியில் புற்களை வெட்டிக்கொண்டிருந்தார்.

“தம்பி நீங்க முத்தையா பையன் தானே, ஊர்ல இருந்து எப்போம் வந்தீங்க வேலை கிடைச்சிருச்சா?” என்றார் அந்த அம்மா.

“ஆமாம்…. நான் முத்தையா பையன் தான், நீங்க எப்படி இருக்கீங்க? வேலை எனக்கு சீக்கிரம் கிடைக்கும்” என்று அவருக்கு பதில் கூறினான்.

“தம்பி இந்த புல்லுக்கட்டை தூக்கி என் தலையில் தூக்கி விட்டு போங்க, இதை ரோட்டுல வச்சிட்டா டெம்போ காரன் வந்து எடுத்துவிட்டு போய்விடுவான்…” என்றார் அந்த அம்மா. ‘சரி’ என்று மாணிக்கம் அந்த புல்லுக்கட்டை அவர் தலையில் தூக்கிவிட்டு கிளம்பினான்.

சிறிது நேரத்தில் மார்க்கெட் பகுதிக்கு வந்ததும் சிதம்பரம் அண்ணாச்சி அவனுக்கு தென்பட்டார். சிதம்பரம் ஒரு சமூக செயற்பாட்டாளர்.

‘பாபா சாஹிப் சேவா சொசைட்டியின்’ தலைவர். அந்த பகுதி மக்களுக்கு அரசாங்கத்தில் இருந்து வரும் நலத் திட்டங்களை சரியாக கொண்டு செல்பவர். இதற்காகவே மராத்தி மொழியையும் கற்று இருந்தார்.

“என்ன சார் தூரமா?” என்றான் மாணிக்கம்.

“இல்லப்பா இந்தா கோரேகான் வரை போகனும்” என்றார் சிதம்பரம் அண்ணாச்சி.

“ஆமா, வேலை என்னாச்சு மாணிக்கம்?”

“அதுவா சார், தினம் தினம் போறேன் ஆனா இன்னும் கிடைச்சது மாதிரி இல்ல…” என்றான்.

“தம்பி, நீங்க எல்லாம் நல்ல படிச்சு இருக்கீங்க, அரசாங்க வேலைக்கு விண்ணப்பம் போடுங்க. நிறைய இடம் நிரப்ப படாமலே இருக்கு…” என்றார்.

“சரிங்க சார், உங்க சமூக சேவை தொடரட்டும், ஏதாவது உதவி வேண்டும்னா சொல்லுங்க நானும் வாரேன்” என்றான்.

“நல்லது தம்பி…” என்று சிதம்பரம் கிளம்பினார்.

மாணிக்கத்துக்கு மார்க்கெடில் இருந்து அந்தேரி செல்ல 398 (Ltd) முலூண்ட் பஸ் சரியான நேரத்தில் வந்தது, இது அந்தேரி எம்.அய்.டி.சி வழியாகத் தான் செல்லும்.

பஸ்ஸில் அதிகம் ஆட்கள் இல்லை. அதனால், உட்கார இடம் உடனே அவனுக்கு கிடைத்தது.

எம்.அய்.டி.சி ஸ்டாப்பில் இறங்கி பத்து நிமிட தூரம் இருக்கும் அந்த கம்பெனிக்கு நடந்தே சென்றான்.

கேட் செக்யூரிட்டியை பார்த்து ‘இன்டர்வியூ’ என்ற ஒற்றை சொல் மட்டும் கூறினான்.

“அச்சா…. கித்னே பஜே துமார இன்டர்வியூ ஹே?” என்றார் செக்யூரிட்டி.

செக்யூரிட்டி வேலை செய்யும் நபர் ‘உத்திரபிரதேசம்’ ஆள் என்பதை அவரது ஹிந்தி உச்சரிப்பை பார்த்து யூகித்து கொண்டான்.

“10 Am” என்றான்.

மாணிக்கத்துக்கு இன்னும் இந்தி சரியாக வராது ஆனால், புரிந்துக் கொள்வான்.

“டீகே…. சலோ அந்தர் பைட்டோ, மை சாப்கோ பத்தாதாஹூம்…” என்றார் அந்த செக்யூரிட்டி ஆபீசர்.

சிறிது நேரத்தில் மேனேஜர் வந்து ஒர் அறையில் சில கேள்விகள் கேட்டார்.

“மேரே சாத் ஆவோவ்…” என்று மாணிக்கத்தை அழைத்தார் அந்த மேனேஜர்.

இருவரும் ப்ரொடெக்சன் பிளான்ட் சென்றார்கள்.

“கட…..கட…..கட….” என மெசின் இரைச்சல்.

“திஸ் இஸ் அவர் பிளான்ட், ரா பிளாஸ்டிக்ஸ் கோஸ் திஸ் வே, அன்ட் மோல்டிங் பீஸ் வில் கம்ஸ் அதர் சைட்…” என்றார்.

அது ஒரு எலக்ட்ரிக்கல் சுவிட்ச் மோல்டிங் செய்யும் மெசின். மெசின் செய்யும் வேலையை வைத்து என்ன நடக்கிறது என்று யூகித்து கொண்டான் மாணிக்கம்.

“டூ யு ஸ்பீக் ஹிந்தி மாணிக்…” என்றார் மேனேஜர்.

“எஸ், ஐ ஸ்பீக் லிட்டில்…”

“ஓ, தட்ஸ் ஓகே….”

“வீ நீட் ஒன்லி டெக்னிக்கல் லேங்கேவேஜ் ட்டு ஸ்பீக் வித் மெசின்…”

மேனேஜர்க்கு தெரிந்து விட்டது இது இவன் செய்யும் வேலை இலலையென. அதானால் தான் அவனுக்கு பொருட்கள் உற்பத்தியாகும் இடத்துக்கு அழைத்துச் சென்றார்.

“ஓகே லெட்ஸ் கோ…” என வெளியே வந்தார்கள்.

“ஒகே, வீ வில் லெட் யு நோ லேட்டர்…” என்றார் அந்த மேனேஜர்.

இது மாணிக்கத்துக்கு தெரிந்த பதில் தான் ஆனாலும், அந்த மேனேஜரின் மொழிப் புரிதலை கண்டுப் பெருமை அடைந்துக் கொண்டான்

“ஓகே சார்…” என்று அவனும் கிளம்பினான்.

வெளியில் வந்தவன் ‘சரி நம்ம இன்னைக்கு வரும் மிட்-டே பேப்பர் வாங்கி பார்ப்போம், ஏதாவது வேலை வாய்ப்பு இருக்கா’ என்று அந்தேரி ரெயில்வே ஸ்டேஷனுக்கு கிளம்ப ஆயத்தம் ஆனான் பேப்பர் வாங்குவதற்காக.

புதன் கிழமைகளில் வெளிவரும் ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ பேப்பரில் தான் அதிகப்படியான வேலைவாய்ப்பு சம்பந்தப்பட்ட விளம்பரங்கள் வரும்.

அருகில் உள்ள ‘பெஸ்ட் பஸ்’ நிலையத்தில் உள்ள பஸ்களின் எண்களை கவணித்தான், ஒன்றும் விளங்கவில்லை. உடனே அருகில் இருக்கும் அவன் வயதில் உள்ள ஒரு நபரிடம் கேட்டான்.

“கோன்சா பஸ் அந்தேரி ஸ்டேஷன் ஜாய்கா…”

“320 – குர்லா சே ஆனேவாலா பஸ் ஜாய்ஹா…” என்றார் அந்த நபர். அவரும் அதே பேருந்துக்காக காத்திருந்தார்.

“தேங்க்ஸ்.”

‘320 குர்லா-அந்தேரி இரட்டைமாடி பஸ்.

மாணிக்கம் இப்போது தான் புதிதாக இந்த இரட்டை மாடி பஸ்ஸில் பயணம் செய்கிறான்.

உளளே ஏறியவன் நேராக மேல்மாடிக்கு சென்றுவிட்டான் ஒரு புதிய அனுபவம் ஏதோ, அவனே பஸ் ஓட்டுவது போல ஒரு மனநிலை.

“ஏக் அந்தேரி….” என டிக்கெட் வாங்கிக்கொண்டான். சுமார் இருபது நிமிடங்கள் அந்தேரி குர்லா ரோட்டின் வழியே பயணித்தது அந்த பேருந்து. அந்த காலகட்டத்தில் ‘வெஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் ஹைவே’ மேம்பாலம் கட்டப்படாமல் இருந்தது.  நகரத்தின் வாகன நெரிசலில் பேருந்து நேராக அந்தேரி ஸ்டேஷன் வந்து நின்றது, அவனும் இறங்கினான்.

04

முத்தையாவுக்கு, கிருஷ்ணமூர்த்தி சாரை நரிமன் பாய்ண்ட் அவரது அலுவலகத்தில் இறக்கிவிட்டு,

சாயங்காலம் வரை அங்கேயே காத்திருந்து மாலையில் அவரை வீட்டுக்கு அழைத்து வரவேண்டும். இதுதான் ஒரு நாளின் வேலை.

இடைப்பட்ட வேலையில் மராத்திய முரசு பேப்பரை ஐந்து முறை படித்துவிடுவார். இன்று மும்பையில் உள்ள உள்ளூர் பயணிகள் ரயில் மற்றும் விபத்துகள் பற்றிய நீண்ட கட்டுரை இருந்தது.

கிருஷ்ணமூர்த்தி சார் வேலை முடிந்ததும் பில்டிங்ல் இருந்து வெளியே வந்தவர், “முத்தையா வாங்கோ கிளம்புவோம்…” என்று அவர்களது வண்டி பொவாய்க்கு வீடு திரும்பியது.

வண்டியில் பயணிக்கும் போது பெரும்பாலும் கிருஷ்ணமூர்த்தி பேசுவது கிடையாது அன்று ஏனோ முத்தையாவிடம் பேச்சு கொடுத்தார்.

“முத்தையா உங்க பையன் வேலைக்கு கிடைச்சுட்டா…?”

“இல்ல சார்… இன்னும் வேலை தேடிக்கிட்டு தான் இருக்கான்…” என்றார் முத்தையா.

“என்ன படிச்சிருக்கான் உங்க பையன்?”

“ஏதோ, ரேடியோ… டவி ரிப்பேர் செய்யும் இஞ்சினியரிங் படிச்சிருக்கானாம்…” சார் என்றார் பதிலுக்கு.

“அப்படியா, நாளைக்கு அவன் ரெசியூம் கொண்டு வாங்கோ! அப்பாக்கிட்ட கேட்டுச் சொல்லுறேன்…” என்றார்.

“வேண்டாம் சார் அவனுக்கு வேலைய அவனே தேடிக்கிடுவானாம்” முத்தையா.

“ஓ அப்படியா சரி எப்போம் வேலை கிடைக்கிது ன்னு பாப்போம்” என்றார் கிருஷ்ணமூர்த்தி.

இருவரும் பேசிக்கொண்டே சாலையின் வாகன நெரிசலில் தொடர்ந்தது பயணம்.

05

மாணிக்கம் அந்தேரி ரெயில்வே ஸ்டேஷனுக்கு வந்ததும், கோரேகாவ் (வீட்டுக்கு) செல்வதற்கு ட்ரெயின் டிக்கெட் எடுத்துக்கொண்டான். எங்கும் கூட்டம் எதிலும் கூட்டம். இரண்டு மூன்று ரயில்கள் வந்ததும் அந்தக் கூட்டத்தை கவனித்தவன் ‘இதில் செல்ல வேண்டாம்’ என முடிவெடுத்து ஸ்டேஷனுக்கு வெளியே வந்துவிட்டான். வெளியில் வந்து ஒரு டீ குடிக்கலாம் என்று சாய்வாலா விடம் சென்றவன்

‘ஏக் சாயா’ சாயா குடிக்கும் போதே ‘குபு….குபு…குபு…’என ஒரு சின்ன கோல்ட் ஃபிளாக்கையும் இழுத்துக்கொண்டான்.

பின்னர் ஸ்டேஷனுக்கு உள்ளே சென்றவன், அன்றைய ‘மிட் டே’ பேப்பரை வாங்கி வேலை வாய்ப்பு பக்கங்களை புரட்டினான்.

வேலை சம்பந்தப்பட்ட விளம்பரம் ‘டேட்டா என்ட்ரி’ அதைத் தவிர வேறு எதுவும் விசேசமாக அதில் இல்லை. அன்றைய காலகட்டத்தில் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ பேப்பரில் தான் வேலை வாய்ப்பு செய்திகள் அதிகம் வரும். அடுத்த வாரம் வரும் வரை ‘டேட்டா என்ட்ரி’வேலைக்கு முயற்சி செய்வோம் என சிந்தித்து இருக்கும் போதே,

“கிருபயா லஹ்ஷ தியா… டிரிங்… டிரிங்… டிரிங்” என்றது ஸ்டேஷனில் இருந்த ஒலிப் பெருக்கி.

“சர்ச்கேட் சே போரிவலி தக் ஜானே வாலி தினி லோக்கல் பிளட்பாரம் நம்பர் ஏக் பர் ஏனார்கே…”

“ஈ காடி, அந்தேரி சே, ஜோஹேஸ்வரி- கோரேகாவ்-மலாட்-காந்திவலி பர் தாம்னார் ஹே…”

“காடிசே ஒர்த்தி யாத்ரா கர்னா கதர்நாக்ஹே…” என்றது.

மராத்தி-ஹிந்தி-ஆங்கிலம் என மூன்று மொழிகளில் ஒலித்தது.

(“பயணிகளின் கனிவான கவனத்திற்கு சர்ச்கேடில் இருந்து போரிவலி வரை மெதுவாக செல்லும் உள்ளூர் ரயில் நடைமேடை ஒன்றில் வருகிறது…”

“இந்த வண்டி, அந்தேரி-ஜோஹேஸ்வரி-கோரேகாவ்-காந்திவலி நிலையங்களுக்கு இடையில் நின்று செல்லும்…”

“ரயிலின் மேல் கூரையில் பயணம் செய்வது அபாயகரமானது…” என்றது.)

ரயில் வந்ததும் அடித்துப் பிடித்து ஏறினான், கடைசியில் அது ஒரு லக்கேஜ் கம்பார்ட்மென்ட். ரயில் வந்ததும் தெரியாது கிளம்பியதும் தெரியாது மக்கள் அப்படி ஏறினார்கள். இரயில் வரும்போது எந்த ஒரு சப்தமும் இருக்காது நாம் தான் பிளாட்பாரத்தில் ஒதுங்கி நிற்க வேண்டும். கரணம் தப்பினால் மரணம் நிச்சயம்.

ரயில் கிளம்பிய சிறிது நேரத்தில் “அரே…செயின் புல் கரோ….செயின் புல் கரோ….” என கூச்சலிட்டார்கள் சக பயணிகள்.

‘டடக்…டடக்…’ என சப்தம் வந்தது. அந்த கூட்ட நெரிசலில் யாரோ ஒருவர் தவறி கீழே விழுந்துவிட்டார்.

கீழே விழுந்தவர் அங்கேயே மரணித்து விட்டார். அந்த சம்பவம் அவனை மிகவும் பாதித்தது. தினம் தினம் எத்தனை மனிதர்கள் பயணிக்கிறார்கள் அவர்களுக்கு என்று ஒரு பாதுகாப்பு வழிமுறைகளின் செய்யவில்லை இந்த ரயில்வே துறையில். அனைத்துப் பெட்டிகளிலும் கதவுகள் இருந்தது ஆனால் அது மூடப் படாத அளவுக்கு கூட்டம் இருக்கும்.

அன்று வீட்டிற்குப் போய் சேருவதற்குள் மாலை ஆறு மணி ஆகிவிட்டது.

“எம்மோ, அப்பா வந்துட்டாங்களா?” என்றான்.

“இன்னைக்கு ட்ரெயின் -ல வரும்போது ஒரு பையன் கீழ விழுந்து இறந்துட்டான்…” என்றான் அம்மாவிடம்.

“பாத்து பத்திரமா போகனும்ப்போ ட்ரெயின் -ல, பாவம் அந்த பையன்…” என்றாள் அம்மா.

“யப்பா…… இங்க நீஙக எப்படித்தான் இருக்கீங்களோ….! வேலை தேடி வரதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆகுது…” என்றான்.

“அப்படின்னா உங்க சித்தப்பாவை நினைச்சு பாரு, நாங்க எவ்வளவு கஷ்டப்பட்டு உங்களை வளத்திருப்போம்…” என்றாள் அம்மா.

“ஆமா… இப்போம் தான் தெரியுது…”

முத்தையா வீட்டிற்குள் வந்ததும் ” என்னடே, என்னாச்சு இன்னைக்கு வேலை தேடி போனது…?” என்றார்.

“அதா, கூப்பிடுவாங்கன்னு சொன்னாங்க ஆனா தெரியல…?” என்றான்.

“எங்க சார் கிட்ட உன்னப் பத்தி சொன்னேன் டே…”

“என்ன சொன்னீங்க?”

“நீ ரேடியோ டிவி ரிப்பேர் பண்ணும் படிப்பு படிச்சிருக்கன்னு, சரி தான…” என்றார்.

“அப்பா நான் அது படிக்கல, நான் படிச்சது வேற, நீங்க அவங்க கிட்ட எனக்கு வேலையை பத்தி கேட்க வேண்டாம், என் வேலையை நானே தேடிக்கிடுவேன்” என்றான்.

“இந்த கோரேகாவ்ல நிர்லான், நெஸ்கோ, டிசிஎஸ் பார்க் இப்படி நிறைய பில்டிங் இருக்கு, அங்க எவ்வளவு பேர் வேலைக்கு போறாங்க. அதுல ஒரு வேலை கிடைக்காதா உனக்கு?” என மீண்டும் கேட்டாள் அம்மா.

“அம்மா, அங்க எல்லாம் வெளிநாட்டு பேங்க், சாப்ட்வேர், இன்சூரன்ஸ், கால் சென்டர்கள் இப்படி கம்பெனி தான் இருக்கு. அங்க வேலை செய்கிறவங்க எல்லாரும் சாப்ட்வேர் புரோகிராம், இல்லன்னா டேட்டா என்ட்ரி பண்ணுவாங்க…” என்றவன் தொடர்ந்து,

“எனக்கு அந்த வேலை பிடிக்கல நான் படிச்சதுல தான் வேலை செய்வேன். என்ன பத்தி கவலைப்படாதீங்க சீக்கிரம் வேலை கிடைக்கும்…” என்றான்.

“வீட்டில மாணிக்கம் இருக்கானா…” என்று பக்கத்து வீட்டு அண்ணன் மாணிக்கத்தை தேடி வீட்டுக்கு வந்திருந்தார்.

“சொல்லுங்க அண்ணேனன், எப்படி இருக்கீங்க…

உங்க வேலை எல்லாம் எப்படி போகுது?” என்றான்.

“மாணிக்கம் ஒரு கொரியர் கம்பெனில நைட் வேலை இருக்கு செய்வாயா?” என்றவர்,

“லெட்டர் பார்சல், சார்ட்டிங் பண்ணனும், நைட் பத்து மணிக்கு போயிட்டு காலையில் நாலு மணிக்கு வந்துவிடலாம். என்னப்பா உனக்கு செலவுக்கு பணமும் கிடைக்கும்.

பகல் நேரத்ததுல உன் வேலைய தேடி இன்டர்வியூ போ, நைட்ல இங்க வேலை பாரு…” என்றார்.

“சரிங்க அண்ணேன்…” அவர் வருத்தப்படக்கூடாது என்று சம்மதித்தான்.

சிபாரிசு செய்த வேலைகளுக்கு நான் போகமாட்டேன் என்று பிடிவாதமாக அப்பாவிடம் கூறியவன், இப்போது வர்கீஸ் அண்ணன் நமக்காக சிபாரிசு செய்திருக்கும் ஒரு வேலைக்கு செல்கிறோமே என்ற சிந்தனை அவன் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

‘பசித்தவனுக்கு மீனை கொடுப்பதற்கு பதிலாக மீனை பிடிக்க கற்றுக் கொடு’ என்ற ஜப்பானிய பழமொழி அவனை துரத்தி கொண்டு இருந்தது. ஏனோ அவனது உள்மனது இந்த வேலை வேண்டாம் எனக் கூறியது. ஆனால், வீட்டில் நிலவிய சூழல் அவனை அந்த வேலைக்கு உந்தியது.