இந்த சம்பவம் நடந்தபோது திரு என்று எங்களால் அழைக்கப்படும் திருநாவுக்கரசு அன்னப்பன்பேட்டையில் ஒரு பெண்ணுக்கு ரூட் விட்டுக்கொண்டு இருந்தான்.
‘என்ன மச்சி… அப்ப நம்ம செட்டுலயே பாபு மட்டும் தான் இன்னும் ஆள் இல்லாம இருக்கான் போல…’
சொல்லி முடித்த என்னை ஒரு குறுசிரிப்போடு பார்த்தான் திரு.
‘நீ காலேஜ் முடிச்சு வேலைக்கு போனபிறகு இங்கே நடக்கறது எதுவுமே தெரியறது இல்ல…’
திருவின் பீடிகை புரிந்தது.
‘ஏன் அவனுக்கும் ஏதும் சிக்கிக்கிச்சா…? எப்ப…’ ஆர்வத்தோடு கேட்டேன்.
’அது நாலு வருஷமா போய்க்கிட்டு இருக்கு…’
4 ஆண்டுகளாகவா… பாபு எல்லா விஷயமும் நம்மிடம் பகிர்ந்துகொள்பவன். இதை ஏன் சொல்லவில்லை?
பாபுவை முதலில் பார்த்தது நான்காம் வகுப்பில். நண்பர்களாக இருந்த நாங்கள் ஒரே ஊர்க்காரர்களாக மாறிய பின்னர் தான் நட்பு இன்னும் வலுத்தது. பஸ் பாஸ் கொடுக்கும் வரை பள்ளிக்கு 3 கிலோமீட்டர் தூரம் நடந்துதான் போகவேண்டும். அப்போது உடன் நடந்து வரும் பையன்கள் எல்லோரும் வேகமாக நடந்து போய்விடுவார்கள். நானும் பாபுவும் தான் கொஞ்சம் மெதுவாக நடப்போம். அதனாலேயே ஒன்றாக செல்ல வேண்டியானது. அப்படியே நட்பு இறுகியது. வழியில் நாவல்பழம் பொறுக்குவோம். ஆனால் முன்னே செல்லும் பையன்கள் பொறுக்கியதுபோக எங்களுக்கு கம்மியாகவே கிடைக்கும்.
எனக்கும் பாலுவுக்கும் நிறைய விஷயங்களில் ஒற்றுமை இருந்தது. இருவருக்குமே கிரிக்கெட்டில் ஆர்வம் அதிகம். ஆனால் ஆவ்ரேஜ் பிளேயர்கள் தான். ஸ்பின் தான் போடுவோம். ஓப்பனிங் இறங்க எல்லோரும் சண்டை போடும்போது நாங்கள் இருவருமே விட்டு கொடுப்பவர்கள். அனேகமாக 6 ஓவர் மேட்சில் 5 வது ஓவரில் தான் பேட்டிங் கிடைக்கும். எங்களுக்கு முன்பு விளையாடுபவர்கள் அவுட் ஆனால் தான் அதுவும். ஒரு பையன் நன்றாக ஆடினால் அணிக்காக தியாகம் செய்யும் வகையில் அவனை தொடர்ந்து ஆடவைக்க எங்களை களம் இறக்க மாட்டார்கள். பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டோம்.
அதைவிட பெரிய ஒற்றுமை ஒன்று நாங்கள் மிகவும் நெருங்கிய நண்பர்கள் ஆனபிறகு தான் தெரிந்தது.அவன் என்னுடைய நெருங்கிய சொந்தம். 4, 5 வகுப்புகளில் பிரச்சினை இல்லை. 6 வது படிக்க ஹைஸ்கூல் வந்தால் அங்கே செக்ஷன் பிரிக்கும் வழக்கம் இருந்தது. 6 வதில் மொத்தம் 3 செக்ஷன்கள். பாபு மட்டும் எப்படியாவது என் செக்ஷன் வந்துவிடவேண்டும் என்று வலங்கைமான் மாரியம்மனுக்கு வேண்டிக்கொண்டேன். என் செக்ஷனுக்கே வந்தான். ஆனால் வகுப்பறையில் எங்கள் நட்பு ஒரு ஆண்டு தான் நீடித்தது. 6 வதில் சுமார் 200 பேர் சேர்வார்கள். காரணம் ஐந்தாம் வகுப்பு வரை ஆல் பாஸ் போட்டுவிடுவதால் கிட்டத்தட்ட எல்லோருமே சேர்ந்துவிடுவார்கள். அரசாங்க பள்ளியில் அட்மிஷன் இல்லை என்று சொல்ல முடியாதே… எனவே எல்லாரையும் சேர்த்து அந்த ஆண்டே கழித்துக்கட்டுவார்கள். ஆறில் இருந்து ஏழுக்கு செல்பவர்கள் எண்ணிக்கை பாதியாகி விடும். ஃபெயிலான பாதி பேரில் ட்ராப் அவுட் ஆனவர்கள் போக மீதம் தான் ஆறாவதில் திரும்ப படிப்பார்கள்.
பார்த்தால் அந்த ஆண்டு பாபு ஃபெயில். அடுத்து அடுத்த 2 ஆண்டுகளும் ஃபெயில் தான். நான் எட்டாவது படித்தபோதும் அவன் ஆறாவது தான் படித்தான். பாபுவை பார்த்து நான் சில விஷயங்களில் பொறாமைப்பட்டு இருக்கிறேன். எனக்கு யாருமே சிறுவயதில் கதைகள் சொன்னது இல்லை. ஆனால் பாபுவின் அப்பா( எனக்கு மாமா முறை தான்) பாபுவுக்கு ராமாயணம், மகாபாரதம் போன்றவற்றில் இருந்து சின்ன சின்ன கதைகளாக சொல்லி தூங்க வைப்பார். அவன் வந்து சொல்லும்போது செம இண்ட்ரெஸ்டிங்காக இருக்கும். ஒருமுறை மாமா கதை சொல்வதை கேட்டபோது தான் அவர் சொல்வதில் 10 சதவீதம் பாபு வந்து எங்களிடம் சொல்லவில்லை என்பது புரிந்தது.
பாபு நெருங்கிய நண்பனாக இருந்தாலும் சில விஷயங்களில் என்னை காப்பியடிக்க பார்த்து சிக்கிக்கொள்வான். அப்போது சிறுவர்மலரில் வரும் போட்டிகளில் கலந்துகொள்வது, கடிதங்கள் எழுதுவது என ஆர்வக்கோளாறில் எதையாவது செய்துகொண்டு இருப்பேன். அதனால் எனக்கு 3, 4 பேனா நண்பர்கள் இருந்தார்கள். அவர்களிடம் இருந்து மாதத்துக்கு ஒரு முறையாவது கடிதம் வரும். நானும் பதிலுக்கு கடிதம் போடுவேன். பெரிதாக ஒன்றுமே இருக்காது. வெறும் நலம் விசாரிப்புகள் தான். ஆனால் பொங்கல் வந்தால் கண்டிப்பாக பொங்கல் வாழ்த்து வந்துவிடும். ’இமயமலையே இடிந்தாலும் கடலில் அலை ஓய்ந்தாலும் நம் நட்பு என்றுமே மாறாது…’ ரேஞ்சில் எழுதி இனிய நண்பனுக்கு பொங்கல் வாழ்த்துகள் என்று முடித்திருப்பார்கள். எங்கள் ஊருக்கு போஸ்ட்மேன் வருவது வாரத்துக்கு ஒருமுறை, அதுவும் தபால் இருந்தால் மட்டும்தான் என்பதால் அவர் வரும்போது தெருவில் திண்ணைகளில் அமர்ந்து வெட்டிக்கதை பேசும் மனிதர்கள் அவரை சூழ்ந்துகொண்டு யாருக்கு கடிதம் வந்திருக்கிறது? என்று நோட்டம் விடுவார்கள். அப்படி இந்த எனக்கு வந்த பொங்கல் வாழ்த்துகள் விஷயம் தெருவுக்கே பரவி விட்டது.
எனக்கு பாசிட்டிவான வைப்ரேஷன் தான். ஆனால் இதை பார்த்த பாபுவுக்கு ஒரு விபரீத யோசனை வந்தது. ‘நமக்கு ஒரு பயலும் பொங்கல் வாழ்த்து அனுப்ப மாட்றான்…’ என்று நினைத்தவன் ஒரு பொங்கல் வாழ்த்தை வாங்கி தன் பெயருக்கே எழுதிக்கொண்டான். அதை நோட்டுக்குள் வைத்து மட்டும் இருந்தால் விஷயம் விபரீதம் ஆகி இருக்காது. ஆனால் அது தன் பெயருக்கு தபாலில் தான் வரவேண்டும் என்று பாபு அதை கொண்டு போய் போஸ்ட்பாக்சில் போட்டது தான் பிரச்சினையாகி விட்டது. அடுத்த நாள் பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பினால் பாபுவின் அம்மா, அதாவது எனக்கு அத்தை விளக்குமாற்றை கையில் வைத்துக்கொண்டு போருக்கு செல்லும் ஆவேசத்துடன் நின்றுகொண்டு இருந்தது. ‘எவனோ உனக்கு பொங்கல் வாழ்த்து அனுப்பி இருக்கான்… பாவிபய… ஸ்டாம்ப் ஒட்டாம அனுப்பிருக்கான்… தபால்காரன் என்கிட்ட 10 ரூவா புடுங்கிட்டான்… எவண்டா அந்த ஃப்ரெண்டு…’ என்று கேட்டு இல்லாத ஃப்ரெண்டை திட்ட தொடங்கினார். அந்த நேரம் பார்த்து அங்கே வந்த எதிர்வீட்டு சேகர் பெரியப்பா அந்த பொங்கல் வாழ்த்து அட்டையை வாங்கி பார்த்துவிட்டு ‘ஒம் மவனுக்கு யாரோல்லாம் அனுப்பலை. அவனே தான் அவனுக்கு அனுப்பிருக்கான்..’ என்று உண்மையை போட்டு உடைத்து பாபுவுக்கு மேலும் அடியை வாங்கி கொடுத்தார். இங்கு நான் சொல்ல வந்தது பாபுவின் ஜகதாலபிரதாபங்களை அல்ல…. அதை பற்றி சொல்வது என்றால் நிறைய சொல்லலாம். ஆனால் பாபு ஒரு பெண்ணை காதலித்தான். தொடக்கத்தில் நான் சொன்ன சம்பவம் நடந்த மறுநாளே பாபுவிடம் ஆர்வமாக கேட்டேன். கேட்டேன் என்பதைவிட ஏன் சொல்லவில்லை? என்றே கோபித்துக்கொண்டேன். ‘இல்ல மாப்ள… மத்த பசங்களா இருந்தா பரவால்ல. மச்சானா போய்ட்டே… அப்பா வேற உன் தங்கச்சியை தான் கட்டணும்னு சொல்லிகிட்டு இருக்காரு… இப்படி ஒரு சிச்சுவேஷன்ல உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கேன்னு தெரியலை. ஏதும் தப்பா நினைச்சுப்பியேன்னு தான்…’ என்று இழுத்தேன். ‘முதல்ல நீ எனக்கு ஃபிரெண்டு. அப்புறம் தான் சொந்தம்லாம்..’ என்று சொல்லி யார் அது? என்று கேட்டேன். பேரு சத்யபிரியா, ஏர்வாடி என்றான்.
ஏர்வாடி எங்கள் ஊரில் இருந்து மெலட்டூருக்கு செல்லும் குறுக்கு பாதையில் இருந்த சின்ன கிராமம். மெயின் ரோட்டில் சென்றால் 3 கிலோ மீட்டர். அதே இந்த குறுக்கு வழியில் சென்றால் ஒன்றரை கிலோ மீட்டர் தான். அப்போதெல்லாம் பள்ளிக்கூடத்தில் பஸ் பாஸ் கொடுக்க 3 மாதங்கள் ஆகும். அதுவரை நடந்து தான் பள்ளிக்கு சென்றுவரவேண்டும். ஏர்வாடி வழியாக தான் சென்று வருவோம். சிலர் இன்னும் குறுக்கு வழி என்று தரிசு வயல்களில் இறங்கி நடந்து வருவார்கள். நானும் பாபுவும் இந்த விஷயத்தில் ஒற்றுமையாக இருப்போம். மற்றவர்கள் போல முரட்டுத்தனமான பணிகள் நமக்கு வராது. தரிசு வயல்களில் இறங்க மாட்டோம். திருநாவுக்கரசு எல்லாம் சிறுவயதிலேயே அவன் அப்பாவுடன் வயலுக்கு சென்று வயல் வேலைகளை பார்த்து கற்றுக்கொண்டான். எங்களுக்கு அப்போது வயலும் இல்லை. வயல் வேலைகளில் ஆர்வமும் இல்லை. நானும் பாபுவும் தான் ஒன்றாக பள்ளி செல்வோம். வருவோம். ஆறாவதுக்கு பின்னர் வகுப்பு மாறினாலும் சினேகம் தொடர்ந்தது. என்ன முன்பை போல நெருக்கமாக இல்லை. அவன் காதல் கதை எனக்கு தெரிய வந்தபோது அவன் பாலிடெக்னிக்கில் முதல் ஆண்டு சேர்ந்து இருந்தான். நான் கல்லூரி முடித்து இருந்தேன். இருவருமே ஆண்கள் கல்லூரியில் தான் படித்தோம். இப்போது பாபு அவன் காதல் கதையை சொல்ல தொடங்கினான். அவனது காதல் கதை இத்தனை பில்டப்புகள் கொடுக்கும் அளவுக்கு பெரிய கதை அல்ல என்பது புரிந்தது. ஆனால் அதுவரை தான்…
’ஒம்போதாவதுல தான் அந்த புள்ளைய பார்த்தேன் மாப்ளே… குண்டு முழி, நல்ல செகப்பு. பார்த்ததும் பிடிச்சு போச்சு. ஒரு தடவை பிசிக்ஸ் கிளாஸ்ல இருந்து கெமிஸ்ட்ரி லேபுக்கு போகும்போது அதுவும் பார்த்துச்சு. அப்புறம் பார்த்துக்கிட்டே இருந்தோம். நம்ம மகேஷ் இருக்கான்ல…’
‘எந்த மகேசு?’
’சந்துரு மகன்..’
சந்துரு சித்தப்பா மகன் இப்போது 8வது படிக்கிறான். அப்படி என்றால் இவன் ஒன்பதாவது படிக்கும்போது அவன் ஆறாவது சேர்ந்து இருப்பான். ஊரில் இருந்து ஹைஸ்கூல் சேர்ந்தால் சீனியர்களான அண்ணன்கள் சொல்வதை கேட்க வேண்டுமே… அப்போது தானே நடந்து போகும்போது அழைத்து செல்வார்கள். புரிந்தது. அவன் தான் தூது போயிருக்கான்.
‘ஒரு நாள் சயின்ஸ் கிளாஸ்ல நல்லா தூங்கிட்டேன் மாப்ள…. அதை ரவி சார் கண்டுபிடிச்சிட்டார். என்னை எழுப்பிவிட்டு… பயங்கர அவமானமா போச்சு. திரும்ப திரும்ப இப்ப என்ன பாடம் நடத்துனேன்னு சொல்லு போதும்னாரு. என்னால சொல்ல முடியலை. கிளாசே சிரிச்சுச்சு. எனக்கு செம கோபம். ரவி சார் அதோட விடலை. எந்த சந்தேகமா இருந்தாலும் கேளுடா… நீ ஏதாவது சந்தேகம் கேளு… இப்ப சொல்றேன்னு சொல்லி டார்ச்சர் கொடுத்தாரு. எனக்கு கோபம் வெறியா மாறி சயின்ஸ் புக்கை எடுத்து ஏதோ ஒரு பக்கத்தை எடுத்துட்டு போயி இதோ இதுல சந்தேகம்னேன்… கிளாசே அமைதியாயிடுச்சு…’
’அப்புறம்…’ திடீரென்று கேட்ட அவனது ஹீரோயிசத்த்தால் என் முகம் பிரகாசமானது.
‘அட நீ வேற மாப்ள… நான் எடுத்து காமிச்ச பக்கத்தை இன்னும் நடத்தவே இல்லையாம்… இன்னும் நடத்தாத பாடத்துல கேள்வி கேக்கிறேன்னு சொன்ன பிறகு தன தெரிஞ்சது. என் டியூசன்ல நடத்திட்டாங்கன்னு சொன்னேன்… கடுப்பாகிட்டார். நல்ல வேளை… பீரியட் பெல் அடிச்சது. நான் தப்பிச்சேன்…’
‘அது சரி… இதுக்கும் சத்யபிரியாவுக்கும் என்ன சம்பந்தம்?’
‘இரு சொல்றேன்… மகேசை கூப்பிட்டு என்னை பத்தி சத்யா விசாரிச்சுருக்கு. அப்போ அவன்கிட்ட அவர் எந்த டியூஷன்னு கேட்ருக்கு… அப்ப அது என்னை பத்தி நல்லா தெரிஞ்சுகிட்டு தான் பார்க்குதுனு புரிஞ்சு போச்சு…’
அடடா.. டுவிஸ்ட் நல்லாருக்கே…
‘டியூஷன்லலாம் படிக்கலையே…ன்னு அவன் சொல்லிருக்கான். அப்ப டியூசன் சேர சொல்லுன்னு சொல்லிச்சு… வீட்டுல கேட்டா என் அம்மாவை பத்தி தான் தெரியுமே… டியூஷன்லாம் வேண்டாம்னுட்டாங்க…’
அடச்சே… கலா அத்தை ஒரு கஞ்சம். மகனுக்கு கிடைக்கும் நல்ல வாய்ப்பை மிஸ்சாக்கி விட்டதே…
‘அப்புறம் மகேஷ் மூலமாவே பேசிக்கிட்டோம் … நான் சாக்லேட் வாங்கி தர்றதை அவன் கொண்டு போய் கொடுப்பான். வாங்கிக்கும். அது எடுத்து வர்ற டிபன் பாக்சை எனக்கு கொடுத்து அனுப்பும்…’
கதை சுவாரசியம் எடுத்தது. பாபு அவனது கிளாஸ் சரக்கை முடிக்கும் வரை அமைதி காத்தேன்.
‘எல்லாம் அந்த ஆமைக்குட்டியால வர்றது… அவளால தான் சத்யாவும் நானும் பிரிஞ்சோம்…’
ஆமைக்குட்டி என்பது கள்ளர்நத்தத்தில் இருந்து வரும் இந்துமதிக்கு பாபு வைத்த பெயர். அதன் முகம் பார்க்க கொஞ்சம் உம்மென்று போல இருக்கும். ஒல்லி உருவம் வேறு. எப்போதுமே அது முகத்தில் சிரிப்பை பார்க்க முடியாது. அதை ராசியில்லாத பெண் என்று பாபு சொல்வான். அதனால் தான் அதற்கு ஆமைக்குட்டி என்ற பெயர். அதாவது அதை அன்றைக்கு பார்த்தால் அன்றைய காரியம் எதுவும் விளங்காது.
‘ஒருநாள் அது ஆமைக்குட்டி கூட பேசிட்டு இருந்துச்சு. அப்ப மகேஷை கூப்பிட்டு சாக்லேட் கொடுத்துவிட்டேன். அது மகேஷிடம் இன்னிக்கு சாயங்காலம் சியாமளா கோவிலுக்கு வர சொல்லுன்னு சொல்லி அனுப்பிச்சு…’
வாவ்… முதல் சந்திப்பு. நல்லா தானே போகுது….
‘அவன் வந்து சொன்னப்ப என் நாக்குல சனி இருந்துருக்கு போல மாப்ள…’
பாபு அழுகைக்கோ கோபத்துக்கோ தயாராவது தெரிந்தது.
‘எதுக்குன்னு கேட்டு விட்டேன். அவனும் அதை போய் கேட்ருக்கேன். இப்படிலாம் என்கிட்ட பேசவேண்டாம்னு சொல்லு. உங்க அண்ணன் என்னை பத்தி என்ன நினைச்சுட்டு இருக்கார்னு கேட்டு சாக்லேட்டை திரும்ப கொடுத்துவிட்ருச்சு… அப்புறம் பேச மாட்டுது. பாக்க மாட்டுது. நான் எதுக்குன்னு கேட்டது தப்பா மாப்ள…’
நான் விழித்தேன். பெண்களின் உளவியலை புரிந்துகொள்ளுதல் என்பது அவ்வளவு எளிதல்ல. அவர்களுக்கு ராஜாவாக இருந்தாலும் பிடிக்கும். அடிமையாக இருந்தாலும் பிடிக்கும். ஆனால் எப்போது எதுவாக இருக்கவேண்டும் என்பது அவர்களுக்கு மட்டும் தான் தெரியும். மன்னிக்கவும்… அது அவர்களுக்கே தெரியாது. அவர்களின் மன ஓட்டத்தை நாம் கண்டுபிடித்து அதற்கு தகுந்தாற்போல் நடக்கவேண்டும். அவள் ராஜாவாக நம்மை எதிர்பார்க்கும் நேரத்தில் அடிமையாகவோ அடிமையாக எதிர்பார்க்கும் நேரத்தில் ராஜாவாகவோ நடந்தால் அது பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். அடுத்து பெண்களின் கோபம்… எதற்காக எவ்வளவு கோபப்படுவார்கள் என்பது தெரியாது. பெரிய தப்பு செய்துவிட்டோம். நிச்சயம் இன்று அவ்வளவுதான் என்று நினைக்கும்போது அவர்களின் ரியாக்ஷன் ப்பூ… இவ்வளவுதானா… என்று இருக்கும். ஒன்றுமே இல்லாத விஷயத்துக்கு பெரிய களேபரம் நடக்கும். ஆக தவறின் சைஸ் அவர்களுக்கு முக்கியம் அல்ல. அப்போதைய மனநிலை தான் முக்கியம். அடுத்து அந்த தவறை வெளிப்படுத்தும் விதம்.
பெண்கள் பற்றி இவ்வளவு தெரிந்தும் பாபு விஷயத்தில் சத்யா ஏன் கோபப்பட்டாள் என்பது புரியவில்லை. அதே நேரத்தில் பாபு மீது கோபம் கோபமாக வந்தது. கோவிலுக்கு அழைத்தால் கம்மென்று போய்விட்டு வரவேண்டியது தானே… அதைவிட்டு எவனாவது எதுக்கு என்று கேட்பானா? இவன் கேட்டிருக்கிறான்.
‘சரி விடு பார்த்துக்கலாம். இப்ப சத்யா என்ன பண்ணுது?’
‘கரந்தைல ஃபர்ஸ்ட் இயர் படிக்குது. பிஏ இங்கிலீஷ்’
பாபுவை எப்படியாவது சத்யாவுடன் பேச வைத்துவிடவேண்டும் என்ற திட்டம் உருவானது. கரந்தை பஸ் ஸ்டாப்பில் இருந்து காலேஜ் வரை சில மீட்டர் தூரம் நடக்கவேண்டும். அதுதான் கிடைத்துள்ள சந்தர்ப்பம்.
‘மச்சி… ஒரு புள்ளை கூப்டும்போது எதுக்குனு கேட்டது உன் தப்பு. அதனால முதல்ல சாரி கேளு… அப்புறமா இன்னும் உன்னை நினைச்சுட்டு இருக்கான்னு கேளு…’
’இதெல்லாம் சரிப்பட்டு வருமா மாப்ள…’ அவனுக்கு தைரியம் கொடுத்து ஒருநாள் காலையில் அழைத்து சென்றென்.
சத்யா பஸ்சில் இருந்து இறங்கி நடக்க தொடங்கியது. நாங்கள் அதற்கு நேர் எதிர் பக்கத்து சாலையோரமாக நின்றோம். அவனை போய் பேச சொன்னேன். பாபு ரொம்பவே தயங்கினான்.
’இல்ல மச்சி… பப்ளிக் ஏதாவது அசிங்கமா போச்சுன்னா… பயமா இருக்கு’
‘அப்படிலாம் ஒண்ணும் ஆகாது. போய் பேசு…’
பாபு வருவதை அறிந்தும் குனிந்த தலை நிமிராமல் நடந்து வந்துகொண்டிருந்தது சத்யா. இந்த பெண்கள் தன்னை ஒரு ஆண் தேடி வருவது தெரிந்தால் எப்படி தேர்ந்த நடிகையாகி விடுகிறார்கள்.
’ஒரு நிமிஷம் நில்லு…’ என்று சொல்லிக்கொண்டே சத்யா பின்னால் சென்றான்.
சத்யாவோ நிற்கவில்லை.
பாபு சொன்ன சாரிகளை சத்யா காதில் வாங்கிக்கொண்டாளா இல்லையா என்றே தெரியவில்லை. அது மெயின் ரோடும் கடைத்தெருவும் சேர்ந்த இடம் என்பதால் சிலர் பாபுவை ஒருமாதிரியாக பார்த்தார்கள். எனக்கே ஒரு மாதிரியாக தான் இருந்தது. இந்த யோசனைக்காக நொந்துகொண்டேன்.
வந்தவன் கோபப்படுவான் என்று எதிர்பார்த்தேன். இல்லை.
‘இதுக்கு தான் மாப்ள சொன்னேன். வேண்டாம்னு…’. பாபு முகத்தில் பார்த்த ஏமாற்றம் ஏதோ செய்தது.
அடுத்த சில நாட்களில் ஊரில் தியாகராஜன் தாத்தா இறந்துவிட அந்த துக்கத்தை பக்கத்து ஊர்களுக்கு சென்று சொல்லும் பணி எங்களுக்கு வந்தது. எப்போதும் போல தான்.
பாபுவை தேடினேன். திருக்கருகாவூர் போயிருப்பதாக அத்தை சொன்னது. அவனுக்காக காலம் கடத்தி அவன் வந்ததும் கட்டாயப்படுத்தி வண்டியில் ஏற்றிக்கொண்டேன்.
திரு எல்லா ஊர்களையும் முடித்துவிட்டு ஏர்வாடி வழியாக வந்துவிடலாம் என்று பயண திட்டம் போட்டான். பாபுவிடம் சத்யா இப்ப வீட்டுல இருக்குமா? என்று கேட்டேன்.
’லீவ் தான் ஆனா வீட்டுல இருக்குமான்னு கன்ஃபார்மா தெரியலையே…’ என்றான்.
‘பார்த்துடலாம் வா…’ என்றேன்.
முதலில் ஏர்வாடி அதன் பின் மற்ற ஊர்கள் என்று பயண திட்டத்தை மாற்றினேன்.
ஏர்வாடி வந்தது. திருவிடம் இருந்து மைக்கை வாங்கினேன்.
’சத்யா வீடு வந்ததும் சொல்லு மச்சி…’ என்றேன்.
அறிவிக்க தொடங்கினேன். ‘இன்று அதிகாலை 6 மணியளவில் ஒன்பத்துவேலி கிராமத்தை சேர்ந்த கலியபெருமாள் அவர்கள் மகனும் பாலகிருஷ்ணன் அவர்களின் தம்பியுமாகிய…’
அறிவிப்பு போய்க்கொண்டே இருந்தது. பாபு காது அருகில் வந்து இது சத்யா இருக்கற தெரு என்றான். வீடு வந்ததும் சொல்லு என்றேன்.
வீடு அருகில் வந்ததும் பாபு அந்த தண்ணி பாட்டிலை எடு என்றேன். மைக் ஆனில் இருப்பது தெரிந்தே… தண்ணீர் பாட்டிலை எடுத்து கொடுத்த பின்னரும் மீண்டும் அதே வார்த்தைகளை சொல்லிவிட்டு ஆட்டோவை நிறுத்த சொன்னேன். அடுத்த சில நொடிகளில் சத்யா வீட்டில் இருந்து வெளிப்பட்டாள்.
பாபு முகத்தில் 1000 வாட்ஸ் பல்பு பிரகாசம். ஆனால் சத்யா முகத்தில் ஏதோ ஒரு சோகம் நிலவியது. இவன் சிரித்துக்கொண்டே காதல் பார்வை பார்க்க அவள் எதையோ இழந்தது போல் பார்த்தாள். என்ன தோன்றியதோ திடீர் என்று உள்ளே நுழைந்துவிட்டாள்.
துக்கம் முடிந்து ஆற்றங்கரையிலேயே ஆரம்பித்தோம். அன்று இரவு பாபு சந்தோஷமாக குடித்தான். ’ஸ்கூல்ல பார்த்த கொஞ்ச நாள்லயே விசாரிச்சுட்டேன் மாப்ள. நம்ம காஸ்ட் தான். ஏதோ தூரத்து உறவா தான் இருக்கணும். அது மத்த பொண்ணுக மாதிரி லவ் பண்ண விரும்பல போல… காலேஜ் முடிச்ச பிறகு பேசிக்கலாம்… இப்ப அப்படியே விட்ருவோம்…’ அவன் வார்த்தைகளில் அத்தனை நம்பிக்கை. ஒரு பெண்ணின் பார்வை ஒரு ஆணுக்கு எத்தனை பெரிய நம்பிக்கையை தருகிறது. காதலில் மட்டும் அல்ல. ஒரு ஆணின் ஆகப்பெரிய நம்பிக்கையே ஒரு பெண்ணின் அன்பாக தான் இருக்க முடியும். அம்மா, காதலி, மனைவி, மகள் என ஏதோ ஒரு பெண்ணின் அன்புதான் நம்மை எத்தனை பெரிய சவால்களையும் சந்திக்கும் நம்பிக்கையை தருகிறது. வாழ்க்கையில் பிடிப்பை ஏற்படுத்துவதே ஒரு பெண்ணின் அன்புதான். அதிலும் காதலிக்கும் பெண்ணிடம் இருந்து கிடைக்கும் ஒரு பார்வை, ஒரு சொல், ஒரு தொடுதலுக்கு கிடைக்கும் சக்தி அளப்பரியது. ஆயிரம் தன்னம்பிக்கை புத்தகங்கள் படிப்பதற்கு சமம் அது. அடுத்த சில நாட்கள் கழித்து ஒரு சனிக்கிழமை… பாபு என்னை உடனே பார்க்கவேண்டும் என்றான். தஞ்சாவூருக்கு வந்துகொண்டிருப்பதாக சொன்னான். பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தேன். பஸ்சில் இருந்து இறங்கியவன் கடும் சோர்வாக இருந்தான். ரூம் போய் பேசிக்கலாம் மாப்ள என்று வண்டியில் ஏறிக்கொண்டான்.
ரூம் வந்தோம். சித்த பிரமை பிடித்தவன் போல இருந்தான். என்ன ஆச்சு? என்று மெதுவாக கேட்டேன். குலுங்கி குலுங்கி அழ தொடங்கினான். போனை எடுத்து காட்டினான். ஏதோ கண்ணீர் அஞ்சலி போஸ்டரை போட்டோ எடுத்து வந்திருக்கிறான். போஸ்டரில் சத்யபிரியா.
‘ஸ்டொமக் கேன்சராம் மாப்ள… போஸ்டரை பார்த்துட்டு தான் அவங்க ஊர் பையனுக்கு போன் பண்ணி கேட்டேன். சொன்னான்…’ அழுகையின் ஊடே சொன்னான்.
‘வா மச்சி… போய் பார்க்கலாம்…’ என்றேன்.
வர மறுத்துவிட்டான். ஏன் என்று கேட்கவில்லை. இப்போது பாபுவுக்கு திருமணம் முடிந்து அவனை போலவே கறுப்பாக கொழுக்கட்டை போல ஒரு பையன் இருக்கிறான். தீபாவளிக்கு ஊருக்கு போனபோது நிறைய பேசினோம். அந்த கண்ணீர் அஞ்சலி போஸ்டர் போட்டோவை இன்னும் வைத்து இருக்கிறாயா என்று மட்டும் கேட்கவில்லை.