மிகவும் சலிப்புடன் அவள் பாத்திரங்களைக் கழுவிக்கொண்டிருக்கும் போது, எதிரில் இருந்த ஜன்னல் வழியாக உள்நுழைந்த காலை கதிரவனின் ஒளியும் அவ்வொளியில் நடனமாடிக்கொண்டிருந்த தூசித்துகளும் அவள் கவனத்தைக் ஈர்த்தன.
அது கம்பிகளற்ற பக்கவாட்டில் திறக்கக்கூடிய ஜன்னல். பக்கத்தில் ஒரு காலி மணை இருந்தது. அதில் புதிதாக வீடுகட்டும் பணிகள் ஆரம்பக்கட்டத்தில் இருந்தன. இன்னும் சில மாதங்களில் அங்கு ஒரு புதிய வீடு வந்துவிடும். அதன் பிறகு இவ்வொளி இவ்வழியில் பாயாது என நினைக்கும் போது அவள் கைகள் சில நொடி நடுங்கியது. செய்துகொண்டிருந்த வேலையை அப்படியே சில நொடிகள் நிறுத்தினாள்.
அத்தூசித்துகள்களையே சில நொடிகள் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் சிந்தனையில் இத்தனை நேரம் இருந்த பிம்பங்கள் அனைத்தும் மெல்ல மங்கி மறையத்துவங்கியது. எதிலிருந்தோ விடுதலையடைந்தது போல் உணர்ந்தாள். கையிலிருந்த பாத்திரத்தை அப்படியே ஸிங்கில் வைத்துவிட்டு கைகளைக் கழுவிக்கொண்டு, ஈரக்கையை தன் உடையிலேயே துடைத்துக்கொண்டாள்.
நேராக சமையலறை அடுக்குகளிலிருந்த அஞ்சறைப் பெட்டியை நோக்கி நகர்ந்தாள். அஞ்சறைப் பெட்டி அவள் சுலபமாக எடுக்கும் வண்ணம் இருந்தது. அதை எடுத்துத் திருப்பி கேஸ் அடுப்பின் அருகில் வைத்து அழுத்தி திறந்தாள். அதைத் திறந்ததும் உள்ளே மற்றொரு மூடி தலைகீழாக இருந்தது. அதன் மேல் சில காய்ந்த சிகப்பு மிளகாய்கள் இருந்தன. அந்த தட்டையும் எடுத்து மேஜையின் மீது வைத்தாள். உள்ளே சுற்றி வட்டமாக ஆறு கிண்ணங்களும் நடுவே ஒரு கிண்ணமும் இருந்தது. சுற்றி இருந்த கிண்ணங்களில் வரிசையாக மிளகு, சீரகம், சோம்பு, வெந்தயம், கடுகு, உளுந்து என இருக்க அவள் அவை எதையும் பார்க்காமல் நடுவே இருந்த கிண்ணத்தில் நீள வாக்கில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு சிகரெட்டை எடுத்து வாயில் வைத்து எதிரில் இருந்த தீப்பெட்டியை கொண்டு லாவகமாகப் பற்றவைத்து ஆழ இழுத்து கண்களை மூடிக்கொண்டு புகையை வெளியேவிட்டாள். அது சூரிய ஒளியில் நடனமாடிக்கொண்டிருந்த துகள்களை எதுவும் செய்யாமல் சில நொடிகள் சுழன்று விட்டு பிறகு காற்றில் கரைந்தது.
உள்ளே சென்ற புகை அவள் சிந்தனை நாலங்களை தூண்டிவிட அது தறிகெட்டோடும் குதிரையைப் போல எங்கெங்கோ ஓடி ஒரு இடத்தில் அடங்கியது. அந்த இடத்தில் அவள் மட்டுமே தனியாக நின்றுக்கொண்டிருந்தாள். கடந்த சில காலமாக அவள் கனவிலும் நினைவிலும் அவள் தனியாக இருப்பது போன்ற காட்சிகளையே காண்கிறாள் அல்லது நினைக்கிறாள். தான் சார்ந்த அனைத்தும் ஒற்றைப் பரிமானத்துக்குள் அடக்கப்பட்டுவிட்டது போல் அவளுக்கு தோன்றியது.
அவளை சுற்றி கூட அவ்வாறே இருப்பது போல் அவளுக்கு தோன்றியது. ஜன்னல் வழியாக எப்போது பார்த்தாலும் ஒரு மனிதன் மட்டுமே வேலை செய்துக்கொண்டிருக்கிறான். சுவற்றில் ஒரே ஒரு பல்லி மட்டுமே இதுவரை கண்ணில் தெரிந்திருக்கிறது. அவள் முகத்தின் அருகில் ஒரே ஒரு ஈ மட்டுமே சுற்றிக்கொண்டிருக்கும். வீட்டில் கூட ஒரே நேரத்தில் இருவரை கடைசியாக எப்போது பார்த்தோம் என்றே தெரியவில்லை. அனைத்துமே ஒன்று என்றானதாக அவளுக்கு தோன்றியது. திடிரென்று தன் கண்கள் இரண்டா அல்லது அதுவும் ஒன்றாக ஆகிவிட்டதா என்ற சந்தேகம் எழ அவள் சமையலறையில் வைத்திருந்த சிறிய முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்து முகத்தைப் பார்த்துக்கொண்டாள். தலை முடி கலைந்திருந்தது. முகத்தில் வியர்வை வழிந்துகொண்டிருந்தது. இருந்தாலும் தான் அழகாக இருப்பதாகவே அவளுக்குப்பட்டது. இன்னும் தன் தோல் சுருங்காமலும் தலை முடி நரைக்காமலும் இருப்பது அவளுக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது.
கண்ணாடியை வைத்துவிட்டு சிகரெட்டை வாயில் வைத்தபடியே மொத்த பாத்திரத்தையும் கழுவி முடித்தாள்.
சமையலறையை ஒருமுறை சுற்றிப்பார்த்தாள். முழுக்க சுத்தமாகவும் நேர்த்தியாகவும் இருந்தது. சுவற்றில் அந்த ஒற்றை பல்லிக்கு துணை இருக்கிறதா இல்லையா என்று குழம்பினாள். மீண்டும் ஒருமுறை சுற்றிப்பார்த்தாள். திருப்தியுடன் சென்று தன் முகத்தைக் கழுவிக்கொண்டாள்.
பிறகு வீட்டில் இருப்பவர்களுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்ற பட்டியலை மனதிற்குள்ளேயே தயாரிக்கத் தொடங்கினாள்.
- மகனை உடனே ஒரு பூஸ்டுடன் எழுப்ப வேண்டும், பிறகு காலை உணவு.
- கணவனுக்கு சக்கரை இல்லாமல் ஒரு காபி, பிறகு காலை உணவாக இரண்டு ஆம்லேட்.
- மாமியாருக்கு சக்கரை அதிகமாக ஒரு காபி மட்டும்.
- தனது அம்மாவுக்கு அளவான சக்கரையுடன் ஒரு காபியும் காலை உணவும் பிறகு மாத்திரைகளும்.
இந்த பட்டியல் இறுதியானதும் வேலைகளைத் தொடங்கினாள். அறைக்குள் தூங்கிக்கொண்டிருந்த மகனை எழுப்பி அவனுக்கு பூஸ்டைக் கொடுத்துவிட்டு ‘குடித்துவிட்டுப் போய் குளி’ என்று கட்டளையிட்டுவிட்டு, பின் தன் கணவன், மாமியார், அம்மா என மூவருக்குக் காபிக் கொடுத்துவிட்டு சமையலறைக்குச் சென்று தானும் ஒரு காபி குடித்துவிட்டு தன்னை சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டாள்.
காலை நேர இரைச்சல் அவளுக்கு எப்போது அசெளகரித்தையே கொடுத்தது. அவள் எப்போதும் அதை விரும்புவதில்லை. தனக்கு எப்போது தனிமை கிடைக்கும் என்று அவள் மனம் ஏங்கிக்கொண்டிருந்தது. ஆனால் அவளுக்குத் தெரியும் குடும்பப் பெண்கள் எப்போதும் தனிமையில் இருப்பதேயில்லை. தனியாக இருந்தாலும் அவர்கள் மனம் முழுக்க குடும்பமே ஆக்கிரமித்திருக்கும். அவர்கள் இல்லாமல் இருந்தாலும் எதையாவது கேட்டுக்கொண்டே இருப்பார்கள்.
தான் யாரிடம் இதையெல்லாம் எப்போது கேட்டுப் பெற்றுக்கொண்டு தன் தனிமையும் தன் வாழ்க்கையும் அனுபவிக்க போகிறோமோ என்று அவள் அவ்வப்போது என்னுவதுண்டு. அவளுக்குத் தெரிந்து அந்த வீட்டில் அவளுக்கு யாருமே காபி போட்டுக்கொடுத்ததில்லை.
ஒருவேளையிலிருந்து மறுவேளைக்கு பெண்கள் இப்படி எதையாவது நினைத்துக்கொண்டு தான் காலத்தைக் கடத்துகிறார்கள்.
நினைவுகளுக்கு பின் அவள் அவர்களுக்குக் காலை உணவு கொடுக்கும் முன் தானும் சென்று குளித்துவிட்டு வந்துவிடலாம் என்று முடிவெடுத்து ஆடைகளை எடுத்துக்கொண்டு குளியலறைக்குச் சென்று ஷரைத் திறந்து தூறலுக்கு அடியில் நின்றாள். நீர்துளிகள் அவள் தலைவழியாக இறங்கி அவள் உடல் முழுவதும் நனைத்தது. வெப்பத்தால் உருவாகியிருந்த வியர்வைத்துளிகள் கரைந்து மெல்ல மெல்ல அவள் உடல் குளிரத்த துவங்கியது. திடிரென்று உடலில் ரத்தம் ஓட்டம் அதிகரித்து உடல் குளிரில் நடுங்குவது போல் தோன்ற அவள் தன் உடலை தன் கைகளால் இருக்கிக் கட்டிக்கொண்டால். நீர்த்துளிகள் சீரான வேகத்தில் வழிந்துக்கொண்டிருக்க அவள் மெல்ல தன் கைகளை தன் உறுப்புக்கு அருகே கொண்டு சென்றாள்.
அவளுக்கு குளிக்கும் போது மட்டுமே தன் உடலில் இருக்கும் பாரம் கரைந்து போவது போல் இருக்கும். ஏதோ அந்த வீட்டில் அவளை தவிர யாரும் இல்லாதது போல உணருவாள். ஆனால் குளியலறையை விட்டு வெளியே வந்ததும் அந்த உணர்வு முழுவதும் விலகி மீண்டும் மொத்த சுமையும் அவளை அழுத்தத் தொடங்கிவிடும்.
சற்று நேரம் எடுத்துக்கொண்டு தலையை நன்றாக முடிந்துகொண்டாள்.
அவள் காலை உணவு கொடுக்கப்பட வேண்டியவர்களுக்குக் கொடுத்துவிட்டு சமையலறைக்கு வந்து மீண்டும் ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்தாள். முதல் இழுப்பை நன்றாக இழுத்து அந்த புகையை தன் வயிறுவரை அனுப்பி ஒருமுறை சுழலவைத்துவிட்டு, பிறகுத் தன் வாய்யைக் குவித்து நான்கு முறை சிறு சிறு பகுதியாக வெளியேற்றினாள். அது சிறு புகைக் குமிழ்களாக உருவாகி அவளைச் சுற்றி வரத் தொடங்கியது. பிறகு அவள் சிகரெட்டை முழுவதும் முடித்து அடுத்த வேலையைத் தொடங்கிய பிறகும் அந்த குமிழ்கள் காற்றில் கரையாமல் அவளைச் சுற்றிச் சுற்றி வந்தன.
அவள் அந்த குமிழ்களையே பார்த்துக்கொண்டிருந்தாள். அதன் ஒவ்வொன்றும் அசையாமல் அல்லது மிக மெல்லிய நகர்வைக் கொண்டு மிதந்துகொண்டிருந்தது. அவளுக்கு அது வினோதமாக இருந்தது. இவ்வாறு எப்போதும் நிகழ்ந்ததில்லை.
சிறிது நேரம் அதைப் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு அவள் மீண்டும் அடுத்த பட்டியலை தன் மனதிற்குள் தயாரிக்கத் தொடங்கினாள்.
மகனுக்கு 11 மணிக்கு எதாவது சாப்பிடக்கொடுக்க வேண்டும். இருக்கும் சிற்றுண்டியில் எதாவதை கொடுத்துவிடலாம் என்று முடிவு செய்தாள்.
கணவனுக்கு மீண்டும் ஒரு காபி தர வேண்டும். அதனுடன் எதாவது கொஞ்சம் கொறிக்கவும் கொடுக்க வேண்டும்.
மாமியாருக்கு மீண்டும் ஒரு காபி.
அம்மாவுக்கு ஒன்றும் கொடுக்க தேவையில்லை. அவர்களுக்கு இத்துடன் மதிய உணவு தான்.
மதிய உணவு என்ன செய்யலாம் என்று அவள் தன் தலையைப் பிய்த்துக்கொண்டாள். என்னென்னவோ யோசித்து பிறகு சாம்பாரையே முடிவு செய்தாள்.
இப்படி அடுத்த வேலை உணவு என்ன என்று யோசித்தே அவள் பலமுறை சித்ரவதைக்கு உள்ளாகியிருக்கிறாள். ஒவ்வொரு நாளும் அது தரும் மன அழுத்தமே அவளை மேலும் சில சிகரெட் துண்டுகளுக்கு இறையாக்குகிறது. என்னென்னவோ யோசித்து கடைசியில் அவள் தன்னிடம் இருக்கும் எளிய உணவு ஒன்றையே தயாரிக்கத் தேர்ந்தெடுப்பாள்.
இந்த யோசனைகளை முடித்துவிட்டு அவள் கடிகாரத்தைப் பார்க்கும் போது பெரிய முள் பத்திலும், சின்ன முள் பதினொன்றின் மிக நெருக்கத்தில் நின்றுகொண்டு ஆமையைப் பார்த்த முயல் போல் சிரித்தது.
அவள் மிகச் சலிப்புடன் முதல் வேலையாய் தன் கணவனுக்குக் காபி போடத் தொடங்கினாள். பாலை பாத்திரத்தில் ஊற்றி பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்து அது காய்வதற்காகக் காத்திருந்தாள். பின்னாலிருந்து “அம்மா…” என்று குரல் கேட்க அவள் திடுக்கிட்டுத் திரும்பினாள்.
அந்த குரல் கேட்கும் போதெல்லாம் அவளுக்கு ஏதோ கடிகார அலாரத்தின் சத்தம் கேட்பது போல் இருக்கும். அவன் மீண்டும் “அம்மா…” என்றான்.
அவள் அவன் பின்னால் இருந்த கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டே “என்ன…” என்றாள்.
“என்ன செய்றீங்க…”
“காபி போடறன்…”
“யாருக்கு…”
“உங்கப்பாவுக்கு…
“ஓ… ஆனா எனக்குத் தான் அப்பாவே இல்லையே…”
அவள் அவனை உற்றுப்பார்த்தாள். பிறகு அவன் தலையைக் கோதியைப் படி “நெஜமாவா…” என்றாள்.
அவன் ஆமாம் என்பது போல் தலையை ஆட்டினான். பிறகு “நீங்க இப்படி டைம் வேஸ்ட் பண்ணாம, எனக்கு ஸ்நேக்ஸ் கொண்டுவாங்க… நான் ரூமுக்கு போறேன்…” என்று சொல்லிவிட்டுத் திரும்பி நடந்தான்.
அவள் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். பிறகு திரும்பி அடுப்பை அணைத்தாள். ‘இல்லாத அப்பாவுக்கு எதுக்கு காபி’ என்று தனக்குள் முனகிக்கொண்டாள்.
மீண்டும் அறைக்குள்ளிருந்து “அம்மா… அம்மா… அம்மா…” என்று குரல் கேட்டுக்கொண்டே இருந்தது. உடனே அவள் வேகமாக ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் சில பிஸ்கட்களை நிரப்பினாள். பின் அதைப் பார்த்தபடியே ஏதோ யோசிக்கத் தொடங்கினாள்.
திடீரென்று தன் கணவன் காபி கேட்டால் என்று செய்வது என்று தோன்றியது. வேகமாக தன் கணவன் அறைக்குச் சென்றாள். அது காலியாக இருந்தது. சுற்றி ஒருமுறை பார்த்தால். பல நாட்கள் சுத்தம் செய்யாமல் அழுக்கடைந்திருந்தது. திருப்தியடைந்தவளாய் மீண்டும் சமையலறைக்கு வந்து பிஸ்கட் நிரம்பிய கிண்ணத்தைக் கையில் எடுத்துத் திரும்பினாள்.
சமையலறை வாசலில் அவள் அம்மா நின்றிருந்தாள். இவள் கையில் இருக்கும் கிண்ணத்தைச் சந்தேகத்துடன் பார்த்துக்கொண்டே, “யாருக்கு இது…” என்றாள்.
அவள் சிரித்துக்கொண்டே ‘தன் மகனுக்கு’ என்றாள்.
இதைக் கேட்டதும் அவள் அம்மா “என்ன சொல்ற… உனக்கு ஏது மகன்… பைத்தியமே… எனக்குக் கொஞ்சம் தண்ணி கொண்டுவா…” என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள்.
இவள் நடந்து போகும் தன் அம்மாவையே பார்த்துக்கொண்டிருந்தாள். இனி தான் யாருக்கும் எதையும் கொடுக்கப் போவதில்லை என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டாள். ‘எனக்கு மகன் இல்லை என்கிறாள் இந்த கிழவி… அவன் மீண்டும் வரட்டும், இவனிடமே சென்று வாங்கிக்கொள்ளச் சொல்கிறேன்… அப்போது தெரியும் எனக்கு மகன் இருக்கிறான் என்று… இந்த கிழவிக்கு தண்ணி வேண்டுமாம் தண்ணி…. எதுவும் கிடையாது என்று தனக்குள்ளேயே கோவமாகப் பேசிக்கொண்டு தன் மாமியாருக்குக் காபி போடவேண்டும் என்று நினைத்து அணைத்த அடுப்பிற்கு மீண்டும் தீ மூட்டினாள்.
அவள் உடல் இப்போது நிதானத்தில் இல்லை. சுற்றி ஒருமுறை பார்த்தாள். சமையலறை காலையிலிருந்தது போல் இல்லை. பாதி இடம் இப்போது அழுக்கடைந்து போயி இருந்தது. திடீரென ஏதோ மயான அமைதி ஏற்பட்டது போல் தோன்றியது. வேகமாகச் சென்று மீண்டும் ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்து இழுத்தாள். உடல் சற்று நிதானமடைந்தது போல் இருந்தது. புகையை வெளியேற்றியபடியே மேலே பார்த்தாள். இரண்டு குமிழ்கள் காற்றில் கரைந்து இப்போது இரண்டு குமிழ்கள் மட்டுமே மிச்சமிருந்தன. அவள் தன் கையிலிருந்த சிகரெட்டைக்கொண்டு மீண்டும் ஒரு குமிழை உருவாக்கினாள்.
காபியை ஆற்றிக்கொண்டிருந்தாள். அப்போது அவள் கணவன் வந்து “என்ன செய்ற…” என்றான்.
“உங்க அம்மாவுக்குக் காபி போடறேன்…” என்றாள்.
“எங்கம்மாவுக்கா…”
“ஆமாம்…”
“எனக்கேது அம்மா…”
“இல்லையா…”
“இல்லை…
“நிச்சயமா தெரியுமா…”
“தெரியும்…”
“அப்போ இந்த காபியை நீங்க குடிங்க…”
“ஆனா எனக்கு சக்கரை இல்லாமதான் வேணும்…”
“ஓ…”
அவன் எதுவும் சொல்லாமல் மறைந்தான்.
அவள் அப்படியே நின்றிருந்தாள்.
அவளுக்கு நிச்சயம் தெரியும். இப்போது தன் தலைக்கு மேலே எந்த குமிழ்களும் இருக்காது என்று. அதை மீண்டும் தன்னால் உருக்க முடியுமா என்று யோசித்தாள். ஆனால் இதை எத்தனை முறை மீண்டும் மீண்டும் உருவாக்குவது. எத்தனை முறை அது மறைவதைக் கண்டு அழுவது.
சமையலறை இப்போது முழுவதும் அழுக்கேறி இருந்தது. அவள் அம்மா தண்ணீர் கேட்டது அவளுக்கு நினைவு வர அவள் ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்துக்கொண்டு வாசலுக்கு வெளியே வந்தாள். அப்போது அழைப்பு மணி சத்தம் கேட்கத் தண்ணீர் டம்லரை அப்படியே மேஜை மீது வைத்துவிட்டு வெளியே சென்று கதவைத் திறந்தாள்.
வெளியே இருவர் நின்றிருந்தனர். அவர்களைப் பார்க்கக் கணவன் மனைவி போல் இருந்தனர். ஆனால் அவர்கள் யாரென்று அவளுக்கு நினைவுக்கு வரவில்லை. அவர்கள் இவளைப் பார்த்து நலம் விசாரித்தனர். அவள் எதுவும் சொல்லாமல் அவர்களுக்கு வழிவிட்டாள். அவர்கள் உள்ளே சென்று வரவேற்பறையில் இருந்த சோஃபாவில் அமர்ந்தனர். அவளும் அவர்கள் எதிரில் அமர்ந்தாள்.
அவர்கள் வீட்டைச் சுற்றிப்பார்த்தனர். வீடு பல நாட்கள் சுத்தப்படுத்தப் படாமல் இருந்தது. வீடு முழுக்க துர்வாடை வீசியது. அவர்களால் அதைப் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. சமையலறையை எட்டிப்பார்த்தார்கள். அது அலங்கோலமாய் இருந்தது. அவளைப் பார்த்தார்கள். அவளும் அழுக்கடைந்து பல நாட்கள் குளிக்காதவள் போலவே இருந்தாள். அவளைப் பார்க்கவே அவர்களுக்கு அருவருப்பாக இருந்தது. இருந்தாலும் வந்த வேலையை முடித்துவிட்டு விரைவாகப் புறப்படும் எண்ணத்தில் இருந்தார்கள். மெல்லப் பேச்சை ஆரம்பித்தார்கள்.
“உங்க அம்மா இறந்தப்போ நாங்க ஊர்ல இல்லை… அதான் வரமுடியல… உனக்கு எதாவது உதவி வேணும்னா சொல்லு நாங்க செய்யறோம்… ஏன் தனியாவே இருக்க…”
அப்போது கடிகாரத்தில் மணி பன்னிரண்டு அடித்தற்குச் சாட்சியாகக் கடிகாரம் பணிரெண்டு முறை கத்தியது. அவள் தன் காதுகளை பொத்திக்கொண்டாள். அச்சத்தம் ஓய்ந்ததும் உள்ளே பார்த்தபடி “ஏன்டா அம்மா அம்மான்னு கத்தற… பேசிட்டு தான இருக்கேன்… வரேன் இரு…” என்று கத்தினாள்.
அவர்கள் வளை சந்தேகத்துடன் பார்க்கத் தொடங்கினார்கள். அவள் அவர்களை அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தாள். இப்போது எதிரில் இருப்பவர்களையும் அவர்கள் பேசுவதையும் அவள் நம்பவேயில்லை. எப்படியும் இன்னும் கொஞ்சம் நேரம் கழித்து யாராவது வந்து ‘யாரிடம் பேசிக்கொண்டிருக்கிறாய்… அப்படி யாருமே இல்லையே…’ என்று நிச்சயம் கேட்பார்கள் என்று அவளுக்குத் தெரியும்.
அவள் மெல்ல ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தாள். புகையை நன்றாக உள்ளிழுத்து தனக்கு வேண்டிய அளவுக்குக் புகைக் குமிழ்களை உருவாக்கினாள்.