“இன்னும் கொஞ்ச நேரம் இருக்கலாம்மா…” என்ற கொஞ்சலாகச் சொன்ன ஜீவாவை உஞ்சலில் ஆட அனுமதித்து, அந்தப் பெரிய வேப்பமரத்தடியில் இருந்த இருக்கையில் அமர்ந்தாள் சிந்தாதிரி. சரியாக முதுகிற்குச் சாய்மானம் கொடுத்திருந்த அந்த இருக்கையில் உடலை வளைத்துக் கொஞ்சம் சோம்பல் முறித்தாள். உடலெங்கும் கடக்முடக் சப்தங்கள். அந்த நேரத்திற்கு அது புத்துணர்ச்சியாக இருந்தது. இப்போது சிந்தாதிரியின் சந்தோசங்கள் இப்படிச் சின்னச் சின்ன விஷயங்களுக்குள் சுருங்கிவிட்டது. தையல் ஆபீஸ் இடைவேளையில் சுடாக ஒரு டீ குடிப்பது. ஞாயிற்றுக் கிழமை எப்போது எழுந்து கொள்ளத் தோன்றுகிறதோ அப்போது எழுந்து கொள்வது. நேரம் கிடைக்கும் சமயம் நன்றாகச் சுடுதண்ணீரில் குளிப்பது. பிரியாணிக்குத் தரப்படும் தயிர் வெங்காயத்தை நறுக் நறுக்கெனத் தின்பது. இவ்வளவுதான் சிந்தாதிரியின் சந்தோசங்கள். மாதம் ஒருமுறை ஜீவாவை பார்க்க கோயம்புத்தூர் வந்துவிடுவாள். அந்த நாளுக்காகவே காத்திருந்த ஜீவா இவளை பார்த்ததும் “அம்மா…” என உச்சஸ்தாயில் கத்திக்கொண்டு வந்து பிடித்துக்கொள்வான். குட்டையான உருவம் கீச் குரல் நறுங்கிபோய் முடி உதிர்ந்து ஏறு நெற்றியுடன் கண்ணிற்கு மையிட்டுக் கறுப்பு சுடிதாருடன் (எப்போது ஜீவாவை பார்க்க வந்தாளும் இந்தக் கறுப்புச் சுடிதார்தான்) என் வயது முப்பத்தைந்து இல்லை இப்போதுதான் இருபத்து எட்டு எனப் பொய் சொல்லும் உடல் அசைவுகளுடன் இருக்கும் சிந்தாதிரியை ஜீவாவின் அம்மா என்று சொன்னால் யாரும் ஒரு நிமிடம் நின்று நிதானித்து இருவரையும் பார்த்துவிட்டுப் போவார்கள்.
சிந்தாதிரிக்கு இருந்த எவ்வளவோ துயரங்களில் ஒன்று அவளது பெயர். தங்கள் குலதெய்வமான சிந்தாதிரி அம்மனின் அருளாள் பிறந்ததாள் சிந்தாதிரி எனப் பெயரிட்டார்கள். சிந்தாத யாத்திரைகளின் அம்மன் என்பதுதான் மெய்யான பெயர். வழிப்பயணங்களைக் காக்கும் தெய்வம். அது எப்படியோ திரிந்து திரிந்து சிந்தாதிரி அம்மா ஆனது. நல்ல பெயர்தான் ஆனால் சிந்தாதிரிக்கு எரிச்சலாக வந்தது. அதைச் சிந்தா என்று சுருக்கிக்கொண்டாள்.
சிந்தா அப்போதுதான் நடக்கத் துவங்கியிருந்தாள். சரியாகப் பேச தெரியாது. திண்ணையில் கிடந்த ஏதோ ஒன்றைச் சுவை பார்த்துக்கொண்டிருந்த சமயம் சமையலறை ஜன்னல் வழியாக அவளது அம்மா சிந்தாவை அழைத்தாள். திண்ணையில் ஏறி சமையலறை ஜன்னலை அடைந்துவிடமுடியும். “என் சின்னப் புள்ள அம்மாக்கு ஒரு ஒத்தாசை செய்றீங்களா?” என்று கேட்டுக்கொண்டே “செட்டியாரே!” என்று குரல் கொடுத்தாள் அடுத்த வாசல் செட்டியார் ஒருவர் குடியிருந்தார். அந்தக் கிராமத்திற்குத் தேவையான சகலமும் அவர் கடையில் கிடைக்கும். வீட்டோடு கடை சேர்ந்திருந்தது அதனால் சிந்தா வீட்டில் எது தேவையென்றாலும் செட்டியாரை விளித்துச் சிந்தாவிடம் கொடுக்கச் சொல்வார்கள். தனது தத்தக்காபித்தக்கா நடையில் அவளும் வாங்கி வருவாள். இரண்டாவது குரலுக்குச் செட்டியாரின் பதில் வந்தது. “பாப்பாட்ட ஒரு தீப்பெட்டி கொடுத்து அனுப்புங்க” என்றாள் சிந்தாவின் அம்மா. சிந்தா தீப்பெட்டியை வாங்கிக் கொண்டு அம்மாவிடம் கொடுக்கத் திண்ணையில் ஏறி ஜன்னல் வழியாக நீட்டினாள். அன்று அம்மா நனைந்திருந்தாள் என்று மட்டும் சிந்தாவிற்கு ஞாபகம். செட்டியார் கொடுத்த கொசுறு வெல்லக்கட்டியை சவிந்துகொண்டு தெருவிற்கு இறங்கி ஓடினாள். கொஞ்ச நேரத்தில் சிந்தாவின் அம்மா தனக்குத் தானே கொளுத்திக்கொண்டு இறந்து போனாள். சிந்தாவிற்கு அந்த வயதில் எதுவுமே தெரியவில்லை. நாட்கள் செல்ல செல்ல மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு தன் அம்மா மீது கட்டுக்கடங்காத கோவம் வந்தது. அம்மா பற்றிய ஞாபங்கள் வரும்போது அவள் கடைசியாகப் பார்த்த அழகிய நனைந்த உருவம் நினைவில் எழும் ஆனால் அந்த உருவத்தில் சிந்தாவுக்குக் காறி துப்பலாம் என்று தோன்றும்.
அம்மாவின் மறைவுக்குபின் புத்தி பேதலித்த அப்பா காசிக்குப் போய்விட்டதாகச் சொன்னார்கள். அம்மாவின் நினைவு தங்கிய அளவுகூட அப்பாவின் நினைவுகள் அவளிடம் இல்லை. பிறகொரு நாள் இதுதான் உன் அப்பா என்று பாட்டி சுட்டிய ஒரு கிழவரை அவள் கண்டுகொண்டதாககூடத் தெரியவில்லை. சிந்தா வளர்ந்தது எல்லாம் தாய் வழி உறவுக்காரர் ஒருவர் வீட்டில்தான். அந்த மனிதர் சிந்தாவை வளர்பதை தன் வாழ்நாளின் மிகப்பெரிய தியாகம் போல அனைவரிடமும் சொல்லிக்காட்டிக் கொண்டிருந்தார். அந்த மனிதருக்கு நான்கு ஆண் பிள்ளைகள். எல்லோரும் சிந்தாவை தங்கச்சி தங்கச்சி என்று உருகினார்கள். சின்ன வயதிலிருந்தே பள்ளிக்கு போகும் நேரம் தவிரச் சிந்தாவுக்கு வீட்டு வேலைகள் யாவையும் பழக்கப்படுத்தப்பட்டன. அண்ணன்களின் சிநேகம் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. எல்லாம் சிந்தா வயசுக்கு வரும் வரைதான். அதன்பின் நான்கு அண்ணங்களின் ஒருவன் சிந்தாமீது துணிந்து ‘கை’ வைத்தான். அதைத் தடுத்து இன்னொரு அண்ணனிடம் முறையிட்ட போது பரிதாபமாகப் பேசி அவனும் கை வைக்கப்பார்த்தான். இப்படியாக எல்லா அண்ணன்களும் தங்கச்சி உறவை வேறொன்றாகக் கருத தொடங்கினார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக அன்று இரவு தன் மேலாடையில் உணர்ந்த கை கனமானதாக இருந்தது. பதறி எழுந்தபோது அது அவளை வளர்த்து வரும் அந்த வீட்டின் தலைவர். ஏதும் சொல்லாமல் போய்ப் படுத்துக்கொண்டார். இப்படியாக ஏழு வருடங்கள் சரியான தூக்கமில்லை. தனக்காக எதுவும் செய்துகொள்ள முடியாத நிலை. பைத்தியம் பிடித்துவிடும்போல் இருந்தது சிந்தாவுக்கு.
அப்படி இப்படியாகப் பள்ளி படிப்பை முடித்த சிந்தாவுக்கு எதிர்காலத் திட்டமென்று பெரிதாக ஒன்றுமில்லை. எப்படியாவது அந்த வீட்டை அந்தக் கிராமத்தைவிட்டு வெளியில் எங்காவது சென்றுவிட வேண்டும். திருப்பூர் அப்போதும் இப்போதும் இந்த மாதிரியான கனவுகளை ஆதரிக்கும் ஊர். இப்படி வீட்டை விட்டு வெளியேற நினைக்கும் பசங்களின் தாயகம் மும்பை, பெண்களுக்குத் திருப்பூர். சிந்தா அன்று ஒரு சின்னத் தாளில் தான் திருப்பூர் சென்று பிழைப்பு நடத்திக்கொள்ளப் போவதாகக் குறிப்பிட்டுவிட்டு வீட்டில் இருந்த கொஞ்சம் பணத்தை எடுத்துக்கொண்டு போய்விட்டதாகவும் எழுதிவைத்துவிட்டு போயிருந்தாள். அந்த மனிதரும் அவரது நான்கு பசங்களும் போலீஸ் கேஸ் கொடுக்க நினைத்தார்கள் ஆனால் பாதகம் தங்களுக்குதான் என்று உணர்ந்து சிந்தாதிரியை அசிங்கமாகப் பேசிவிட்டு அத்தோடு முடித்துக்கொண்டார்கள்.
திருப்பூர் வாழ்க்கை கொஞ்ச நாளில் சிந்தாவுக்குப் பழகி போனது. ஒரு பெண்கள் விடுதியில் இருந்து கொண்டு கம்பெனிக்கு போய் வந்துகொண்டிருந்தாள். கம்பெனியில் இருந்த தீபன் சிந்தாவை நோட்டமிட்டுக்கொண்டிருந்தான். முதலில் நன்றாகப் பேச ஆரம்பித்துப் போன் வாங்கிகொடுத்தான். போன் வாங்கிகொடுத்த உரிமையில் எப்போதாவது சிந்தா தனியாக இருக்கும்போது மேலே கை வைத்தான். சிந்தாவுக்கு அது பெரிய விஷயமாகத் தெரியவில்லை. தீபன் பார்ப்பதற்கு வட இந்தியனை போல மீசை இல்லாமல் உயரமாக வெளுத்த நிறத்தில் இருந்ததால் சிந்தாவுக்குத் தீபனை மிகவும் பிடித்துபோனது. வேலை இல்லாத நாட்களில் இருவரும் எங்காவது சென்றுவிட்டு அடுத்தநாள்தான் ஊருக்கு வருவார்கள். தீபனின் அரவணைப்பு அந்தச் சமயத்தில் அவளுக்குத் தேவைப்பட்டது. தீபன் அந்த நேரத்திற்குச் சிந்தாவை உண்மையாகக் காதலித்தான். இருவருக்கும் திருமணமானது. ஜீவா வயிற்றில் இருந்தான். ஆறாவது மாதம். கம்பெனியில் இருந்த இன்னொரு பெண்ணுக்கும் தீபனுக்கும் ஒரு ‘இது’ என்று சிந்தாவின் காதுகளுக்குச் செய்தி வந்தது. அதைச் சிந்தா பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் தினமும் வீட்டுக்கு வந்துவிடும் தீபன் கொஞ்சநாளாக நைட் டூயூட்டி போகிறேன் என்று வீடு தங்காததையும் சிந்தா கவனிக்காமல் இல்லை.
ஒருநாள் அந்தப் பெண் வீட்டிற்குச் சிந்தா ஆட்டோ எடுத்துக்கொண்டு செல்ல வீட்டின் உள்ளிருந்து தீபன் வர பேரதிர்ச்சியாக இருந்தது சிந்தாவுக்கு. எதுவும் பேசாமல் மீண்டும் வீட்டிற்கு வந்து கதவை தாளிட்டுக்கொண்டாள். அழுகையும் ஆத்திரமுமாக வந்தது சிந்தாவுக்கு. ஜீவா வயிற்றில் இல்லாமல் இருந்திருந்தாள் அன்றே தற்கொலை செய்திருப்பாள். இரவு முழுவதும் அழுதுகொண்டே தூங்கியும் போனாள். தீபன் வெளியில் நின்றுகொண்டு கதவை தட்டிக்கொண்டே நின்றான். விடியலில் கதவை திறந்தபோது ஒரு வெறிநாயை போலத் தீபன் சிந்தா மீது பாய்ந்தான். “உனக்கு அவ்வளவு எகத்தாளமா? கதவத் திறக்காம திமுற இருக்க!” என்று வெளுத்து கட்டிவிட்டான். முகமெல்லாம் புடைத்துபோகும் அளவிற்கு அடி. முகத்தில் குத்தி ஆங்காங்கே ரத்தம் கட்டி இருந்தது. கீழே விழுந்த சிந்தாவை கர்பினி என்றும் பாராமல் உதைத்துத் தள்ளினான். எரிச்சலில் வெளியே போன தீபன் திரும்பி வந்தபோது அங்குச் சிந்தா இல்லை. அவள் தனது பொருட்களை எடுத்துக்கொண்டு மீண்டும் விடுதிக்கு சென்றிருந்தாள். தீபன் சென்று கூப்பிட்டபோது அவனைக் கடுமையாக முறைத்தாள். வேறு ஏதுவும் பேசவில்லை. தனி மனுஷியாக ஜீவாவையும் பெற்று வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து வாழ ஆரம்பித்தாள்.
சிந்தாவின் நடை உடை பாவனைகள் பார்த்தால் பிள்ளை பெற்றவள் போல் தெரியாது அதனால் இளசுகள் அவளைச் சுற்றி சுற்றி வருவார்கள். சிந்தாவுக்கு அது பிடித்திருந்தது ஆனால் மீண்டும் ஒரு உறவு சிக்கலில் மாட்டிவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தாள். போனுக்கு ஒருவன் ரீச்சார்ஜ் செய்துவிடுவான். ஜீவாவுக்குத் தேவையான பால் மற்றும் மற்ற உணவு பொருள்களுக்கு வேறொருவன். இப்படி ஐந்து அல்லது ஆறு ஆண் நண்பர்கள் அவளுக்கு இருந்தார்கள். அத்தனை பேரின் எண்ணமும் சிந்தாவுடன் ஒருநாள் இருந்துவிட்டால் போதும் என்பதுதான் ஆனால் சிந்தா சர்வசிரத்தையுடன் அவர்களுடனான எல்லைக்கோட்டை வரைந்தாள்.
ஜீவாவுக்கு விவரம் தெரிய ஆரம்பித்தபோது தன் நண்பர்களுடன் பழகுவதைக் குறைத்துக்கொண்டாள். தன் அழகின்மீது இருந்த ஈடுபாட்டால் ரகசியமாக ரெட் ஒயின் அருந்துவதை மட்டும் இன்னமும் தொடர்ந்தாள் அதை வாங்கிவர இருந்த ஒரு இளைஞனை மட்டும் சந்தித்து வந்தாள். ஒருமுறை ஜீவா அந்த இளைஞனை பற்றித் துருவி துருவி ஏதோ கேட்க அதன்பிறகு அவனையும் ரெட் ஒயின் பழக்கத்தையும் விட்டுவிட்டாள் சிந்தா. சம்பள உயர்வுக்காகக் கம்பெனி மேனேஜர் இப்போதும் கூடச் சிந்தாவை தனியாகக் கூப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறார். இப்படிச் சிந்தாவிற்கு எத்தனையோ அழைப்புகள் வந்தாலும் அதை உள்ளூர ரசித்து யாருக்கும் பிடிகொடுக்காமல் இவ்வளவு தூரம் வந்துவிட்டாள். இதையெல்லாம் யோசித்துப் பார்த்தால் சிந்தாவுக்கே அலுப்பாக இருக்கும். சமயங்களில் காமம் தலைக்கு ஏறும். அப்போதெல்லாம் யாரோ ஒருவனை நினைத்துக்கொண்டு தலையனையை இறுக்கி அணைத்துக்கொள்வாள். எப்போதாவது ஜீவாவையும் இறுக அணைத்துக்கொள்வாள் அந்தச் சமயங்களில் ஜீவா, “ஏன்மா உன் மூச்சு இப்படிக் கொதிக்குது?” என்று கேட்பான். ஜீவாவின் சூழல் கொஞ்சம் நன்றாக இருக்கவேண்டும் என்றால் எதாவது விடுதி பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று நினைத்து கோவையில் இருந்த ஒரு பள்ளியில் விட்டாள். அவன் விடுதி சென்ற இரண்டு நாள் சிந்தா பிரம்மை பிடித்தவள் போல் இருந்தாள். இனிமேல் மூன்று வேளை சாப்பாடு பற்றிக் கவலை வேண்டாம் என்று தன்னைதான் தேற்றிக்கொண்டு சகஜ வாழ்விற்குத் திரும்பினாள்.
மாதம் ஒருமுறை ஜீவாவை விடுதியில் சென்று சந்தித்து வர வேண்டும். அன்று முழுவதும் ஜீவா சிந்தாவிடம் நிறையப் பேசுவான். ஜீவாவை வெளியில் அழைத்து வரும்போதும் உள்ளே விடச்செல்லும்போதும் விடுதியின் வார்டன் பல் இளித்துச் சிந்தாவை வரவேற்பான். அதற்கு என்ன அர்த்தம் என்று சிந்தாவுக்கும் தெரியும் ஆனால் ஜீவாவுக்காக ஒன்றும் தெரியாதவள் போல் திரும்பி இளித்துவிட்டு வருவாள். விளையாடிக்கொண்டிருந்த ஜீவாவை “போகலாம் நேரமாச்சு” என்று மீண்டும் நினைவூட்டினாள் அரைமனதுடன் ஜீவா சிந்தாவின் கையை இறுக பிடித்துக்கொண்டு விடுதியை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். வழக்கமான அறிவுரைகள் அதைத் தொடர்ந்து அழகான கொஞ்சல் அதற்குப் பிறகான அழுகையுடன் ஜீவாவை விடுதியில் விட்டு திரும்பினாள்.
சிந்தாவின் மனதிற்குள் ஜீவா பெரியவனாகி பெரிய உத்யோகம் சென்று பெரிய ஒரு வீட்டில் தன்னைக் கவனித்துக்கொள்வான் என்ற மாபெரும் கனவு உதிக்கத் துவங்கியது. எதற்காக இப்படி நினைக்கிறோம் என்று ஒரு நிமிடம் அந்தக் கனவிற்கு வெளியே வந்து நினைத்து பார்த்தாள். காரணமின்றி அவளுக்குச் சிரிக்கத் தோன்றியது. சிரித்துக்கொண்டே நடந்தாள். திருப்பூர் பேருந்தில் ஏறி அமர்ந்த அவள் அவ்வப்போது சின்னதாகச் சிரித்தாள். நடத்துனர் அவளை ஒருமாதிரி பார்த்துவிட்டு போனதை கவனித்த அவள் இன்னொரு மூலையில் இருந்த இளைஞன் ஓரக்கண்ணால் பார்ப்பதையும் கவனித்தாள். சிந்தாதிரி செல்ல வேண்டிய தூரம் நிறைய இருந்தது அவளது பயணத்திற்கு அவள்தான் பொறுப்பு. என்ன செயவது, அலூப்பூட்டும் பயணங்களைச் சில கனவுகளாலும் அபத்த ஆசைகளாலும் இப்படியாகதான் நிரப்ப வேண்டியிருக்கிறது.