“அது அவன்தானா? இல்லை அவனைப் போன்ற வேறு யாருமா? ”
திடீரெனத் தூறத் தொடங்கிய மேகத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டே குடையை விரித்த நொடியில் எதிர்பட்டான். அவனும் என்னை நன்றாகப் பார்த்தான்.
“அவனாக இருந்தால் பேசியிருப்பானே…”
அன்று முழுவதும் அந்த எண்ணம் அரித்துக் கொண்டே இருந்தது. மறந்து போய்விட்டதாக நினைத்துக் கொண்டிருந்த நிறைய நிறைய பழையை ஞாபகங்கள் கடைசி மூச்சில் உயிர் பிழைத்ததைப் போல மகிழ்ச்சியாக நினைவடுக்குகளின் மேல் தட்டில் வலம் வரத் தொடங்கின. அன்று மட்டும் ஓராயிரம் முறை உச்சுக் கொட்டியிருப்பேன்.
“எப்படி இங்கு வந்தான்? இவ்வளவு பெரிய சென்னையில் வேறு இடமா கிடைக்கவில்லை? நேருக்குநேராக சந்தித்தும் பேசாமல் போய்விட்டானே… ஒருவேளை அவனில்லையா..”
இல்லை. இந்த ஆறு வருடங்களில் நான்தான் நிறைய மாறிப் போயிருந்தேன். அப்போதெல்லாம் நான் மூன்றாய் மடித்த துப்பட்டா போடாமல் வெளியே வாசல் கூட்டக் கூட வராதவளாக, எண்ணைய் தேய்த்து ரிப்பன் வைத்து மடித்துக் கட்டிய இரட்டை சடை மார்புக்கு கீழ் வரை தொங்கியிருப்பதை அடையாளமாகக் கொண்டவளாக, தேவையிருந்தும் கண்ணாடி அணிய விருப்பமில்லாமல் தவிர்த்து வந்தவளாக, மிக முக்கியமாக கொட்டும் மழைக்கும் குடை பிடிக்காதவளாக இருந்தேன். என்னை, நல்லபடியாக அதே கிராமத்திலேயே திருமணம் செய்து குழந்தை பெற்று திகட்டத்திகட்ட காதல் சூழ வாழப் போகும் வாழ்வையே குறிக்கோளாகக் கொண்ட யசோதாவை, இங்கு சென்னையில் ஜீன்ஸும், காது வரை கத்தரிக்கப்பட்ட தலைமுடியும், முக்கால்வாசி முகத்தை மறைத்த கண்ணாடியுமாக குடை பிடித்துக் கொண்டு யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
“அப்போ அடையாளம் தெரியாமத் தான் போய்ட்டானா?”
வேலையில் மனமொன்றாமல் வழக்கத்தை விட சீக்கிரமாகவே கிளம்பி வீட்டிற்கு செல்லத் தொடங்கினேன். வானம் அடுத்த சுற்றுக்குத் தயாராகியிருந்தது.
பள்ளியில் நான், நித்யா, மதுமிதா மூவரும்தான் எப்போதும் ஒன்றாகத் திரிவோம். பத்தாம் வகுப்பு முடித்து பதினொன்றாவது வந்ததும் ஏதோ ஆண்களிடம் பழகுவதற்கான, சைட் அடிப்பதற்கான, காதலிப்பதற்கான எல்லாத் தகுதிகளும் எனக்கு வந்து விட்டாதாக நானே நம்பிக் கொண்டிருந்த பட்டாம்பூச்சிப் பருவம் அது. அப்போது நான் சாயலில் அங்காடித் தெரு அஞ்சலி போல இருப்பேன். நிறைய பேர் இதை என்னிடமே சொன்னதுண்டு. பொதுவாக புதிதாக ஒரு பள்ளிக்கு பதினொன்றாவதில் வந்து சேரும் மாணவிகள் பின்னால் ஒரு கூட்டமே சுற்றும். அல்லது குறைந்தபட்சம் எங்கள் பள்ளியில் அப்படி.
அப்படி என் பின்னால் சுற்றிக் கொண்டிருந்த நான்கைந்து பேரில் ஒருவன் தான் செழியன். கணக்குப்பதிவியல் துறை. நான் உயிரியல் துறை. பத்தாம் வகுப்பில் அட்டம்ப்ட் அடித்து, மறுதேர்வு எழுதி பிறகு அவன் பள்ளிக்கு வரத் தொடங்கிய போது நாங்கள் முதல் இடை பருவத் தேர்வை முடித்திருந்தோம். இதே போன்றதொரு மழை மாலையில் தான், ஹாக்கி மைதானத்தின் ஒற்றை அரசமரத்தடியில் நின்று கொண்டு என்னை அழைத்தான்.
“ஏ முத்தழகு கூப்ட்டுட்டே இருக்கே திரும்ப மாட்டயா?”
” யாரையோ கூப்ட்டா நான் ஏன் திரும்பனும். என் பேரு ஒன்னும் முத்தழகு கெடையாது.”
” பருத்தி வீரன் பிரியா மணி மாதிரியே இருக்கயேனு கூப்ட்டேன். சரி உன் பேரென்ன?”
” உன் கிட்ட சொல்லனும்னு அவசியமில்ல.” என்று நடக்கத் தொடங்கினேன்.
” ஏ நில்றி…. மழ நின்னதும் போக வேண்டிதான?”
“வாடி போடின்ன அடிச்சு வாய ஒடச்சுருவேன். மரியாதையா இருந்துக்க.” என்று சொல்லி விட்டுத் திரும்பிப் பார்க்காமல் போய் விட்டேன்.
அடுத்த நாள் நித்யா என்னை அழைத்து அவனிடம் அறிமுகப்படுத்தி வைத்தாள். பத்தாவது வரை அவள் வகுப்புத் தோழனாம். ஆளும் கொஞ்சம் அழகாகத்தான் இருந்தான். சிரித்து வைத்தேன்.
எங்கள் பள்ளியின் அமைப்பே அத்தனை வசீகரமானது. மெயின் கேட்டில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தள்ளித்தான் பள்ளி தொடங்கும். வரும் வழியில் இரண்டு புறமும் ஹாக்கி மற்றும் கிரிக்கெட் மைதானங்களை செங்கொன்றை மரங்கள் இருபுறமும் காத்து நிற்கும். கிரிக்கெட் மைதானத்தின் ஓரத்திலேயே உள்விளையாட்டு அரங்கம் ஒன்றும் இருந்தது. அதைத்தாண்டினால் சின்னதாக பார்க் போன்ற ஒன்று மையத்தில் இருக்க, இருபுறமும் சாலை பிரிந்து இடதுபுறச் சாலை ஹாக்கி மைதான வாயிலுக்கும் வலதுபுறச் சாலை பின் வாசலுக்கும் அழைத்துச் செல்லும். அந்த பின்வாயில் சைக்கிள் மற்றும் வாகனங்களில் வரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான நுழைவு வாயில். செல்லும் வழி முழுக்க வெயில் தெரியாமல் புங்கை மரங்களும் செங்கொன்றை மரங்களும் மாமரங்களும் சூழ்ந்திருக்கும். அந்தத் தொலைவு ஒரு ஒரு கிலோ மீட்டர் வரும். பள்ளியின் மையத்தில் கூடைப்பந்து மைதானம். அங்கு ஒரு பெரிய செங்கொன்றை மரம். எங்கள் பள்ளியை சும்மா பார்த்துக் கொண்டிருப்பதே ஒரு அலாதி எனக்கு.
என் வீடு பக்கத்தில்தான். தினமும் நடந்துதான் பள்ளிக்கு செல்வது வழக்கம். ஆனால், நித்யாவும் மதுமிதாவும் சைக்கிளில் வருபவள்கள். ஒருநாள் என்னை வலுக்கட்டாயமாக சுற்றிக்கொண்டு அழைத்துச் சென்றனர். அப்போதிருந்து அவர்கள் இல்லாத போதும் எனக்கு அந்த வழிதான். சினிமா பாடல் காட்சிகளில் காட்டப்படும் மரங்கள் நிறைந்த அத்தனை சாலைகளை விடவும் அழகானது அந்த சாலை.
சமயங்களில் செழியனும் எங்களுடன் சேர்ந்து சைக்கிளைத் தள்ளிக் கொண்டே நடந்து வருவான். பின் தினமும் அதை வழக்கப்படுத்திக் கொண்டான். ஈர்ப்புடன் கலந்த நட்போ அல்லது ஏதோவொன்றோ எங்களுக்குள் கிளை விடத்தொடங்கியிருந்தது. அவ்வப்போது அதே பள்ளியில் எட்டாவது படிக்கும் அவன் தம்பியும் சேர்ந்து கொள்வான். செழியன் விரட்டினாலும் போக மாட்டான். என் மீது கொள்ளைப் பிரியம் அவனுக்கு.
ஒரு நாள், ” முகிலா… நீ வரதுனா கூட வா… ஆனா அவளை அக்கானு மட்டும் கூப்டாத ப்ளீஸ். ” என்றான் செழியன்.
” அவன் என்ன சொல்றது… நீ கூப்டுடா” என நான் முகிலனை அணைத்துக் கொண்டாலும் ஏதோவொன்று உறுத்தியது. அடுத்த நாளிலிருந்து பெயர் சொல்லியே அழைக்கத் தொடங்கினான் முகிலன்.
நேரமாகிவிட்டது. அவசர அவசரமாக ரேபிடோ புக் செய்து கொண்டிருந்து காத்திருந்த போது யாரோ பார்ப்பது போல இருந்தது. சுற்றும்முற்றும் பார்த்தேன். யாருமில்லை. CIT காலனி கொஞ்சம் எலைட்டான பகுதியானதால் ஆறு மணிக்கே ஊர் அடங்கி விடும். ஆளரவமற்ற அந்த சாலைகளில் நடப்பதற்கே தனி தைரியம் வேண்டும். இப்போது வேறு மணி எட்டிற்கு மேல் ஆகியிருந்தது. உள்ளுக்குள் எச்சரிக்கை அலாரம் அடிக்கத் தொடங்கியிருந்தது. எப்போதும் இப்படி ஏதோவோர் இடத்தில் பாதுகாப்பின்மையை உணரும் போது நம்பும் நண்பர்கள் சிலரில் யாருக்காவது கைபேசியில் அழைத்து பேசிக் கொண்டிருப்பேன். எதாவது அசம்பாவிதம் நடந்தால் அடுத்தமுனையில் பேசிக் கொண்டிருப்பவர்களுக்குத் தெரியும் என்பதற்காக. நகரத்தில் தனியாக வசிக்கும், சுற்றும் பெண்களுக்கு இந்த பயமும் எச்சரிக்கை உணர்வும் தேவையான ஒன்றாகவே தோன்றும் எனக்கு.
அப்படி ஒரு நண்பனை அழைத்துப் பேசிக் கொண்டிருந்த போதே பைக் வந்தது. OTP சொல்லி, ஏறிக் கொண்டேன். வண்டி வளைவில் திரும்பும் போது மீண்டும் அவனைப் பார்த்தேன். இப்போது நன்றாகத் தெரியும். அவனும் என்னைப் பார்த்தான்.
“அவன்தான்… அவனேதான். எதார்த்தமாக நடந்ததா? இல்லை என்னைத்தான் தேடிக் கொண்டிருக்கிறானா? எப்படி இவ்ளவு தூரம் தேடிக் கொண்டு வர முடியும். அப்போதிருந்ததற்கு நேரெதிர் திசையில்லல்லவா நான் இப்போது இருக்கிறேன். ஏன் இப்படி இளைத்து களைத்துப் போயிருக்கிறான்.
ஐயோ கடவுளே… ஏனிப்படி கடந்த காலம் துரத்துகிறது? ”
ஹாக்கி, கூடைப்பந்து என விளையாட்டுகளில் நேஷனல் சாம்பியனாக இருந்தாலும், மாவட்ட அளவிலான முதல் மதிப்பெண்களை மாணவர்கள் எடுத்துக் கொண்டிருந்தாலும், பள்ளி பற்றி ஊர் முழுவதும் பரவலாக வேறொரு வதந்தி வலம் வந்து கொண்டிருந்தது.
“அங்கு படித்தால் பிள்ளைகள் கெட்டுப் போவார்களாம். அது காதலுக்கு பேர் போன பள்ளியாம்.”
அப்போது அதையெல்லாம் கேட்டால் கோபம் வந்தது. இப்போது யோசித்தால் உண்மைதான். அங்கு எல்லோரும் யாரையாவது காதலித்துக் கொண்டிருந்தனர். பள்ளி முழுவதும் வெட்கச் சிரிப்புகளாலும், ரகசியப் பார்வைகளாலும் நிறைந்திருந்தது. அந்தப் பூக்களெல்லாம் அவர்களுக்காகவே பூத்தது. மழையெல்லாம் அவர்கள் நனையவே பொழிந்தது.
அத்தனை காதலர்களுக்கு மத்தியில் காதலிக்காமல் ஒருவர் இருப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? பசியே இல்லாத போது கூட நம்மைச் சுற்றி இருப்பவர்கள் எல்லாம் விதவிதமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தால் நமக்கும் நாவூறுமே அப்படி இருக்கும்.
ஆனால் அந்தக் கஷ்டத்தை நம் நண்பர்கள் நமக்குக் கொடுக்கவே மாட்டார்கள். எப்படியும் உசுப்பேற்றி உசுப்பேற்றி யாருடனாவது ஜோடி சேர்த்து வைத்து விடுவார்கள். இப்போது நினைத்துப் பார்த்தால் காதல் கூட அந்தப்பள்ளியின் பாடத்திட்டத்தில் ஒன்றுதானோ என்று தோன்றும்.
அப்படித்தான் என்னையும் செழியனையும் பற்றி எல்லோரும் பேசிக் கொண்டிருந்தனர். அது எனக்கும் பிடித்திருந்தது. சொல்லிக் கொள்ளாமலேயே நானும் செழியனும் நாங்கள் காதலித்துக் கொண்டிருப்பதாக நம்பத் தொடங்கினோம்.
அப்போது காதலர்களின் அத்தியாவசியக் கடமையாக, அவர்கள் காதலின் தீவிரத்தன்மையைப் பறைசாற்றும் பணிகளில் தலையானதாக சில செயல்கள் புகழ் பெற்றிருந்தன. அவற்றில் ஒன்று, தினமும் காலையும் மாலையும் காதலியை காதலன் பின் தொடர வேண்டும். இருவரின் வீடும் எதிரெதிர் திசையில் இருந்தாலும், அவள் நடந்து சென்றாலும், சைக்கிளில் சென்றாலும், பேருந்தில் சென்றாலும் அவன் அவளைப் பின் தொடர வேண்டும். அது அவள் மீதான அவனின் உரிமை. அந்த உரிமையைத் தானாகவே செழியன் எடுத்துக் கொண்டான்.
பின்பொரு நாளில் செழியன் ஹாக்கி மேட்சுக்காக நான்கு நாட்கள் தஞ்சாவூர் சென்றிருந்த போது காதலியாக என் கடமையை நான் செய்தேன்.
அப்போதெல்லாம் யாரிடமும் கைபேசியெல்லாம் இருக்காது. வீட்டிற்கு ஒரு பேசிக் மாடல் ஃபோன் இருக்கும். அதை அப்பா அம்மா இல்லாத நேரம் பார்த்து பயந்து பயந்து உபயோகிப்பதற்குள் தாவு தீரும். ஃபோன் செய்து பேசினால் 90 பைசா, செய்தி அனுப்பினால் 1 ரூபாய் என காசு போகும். வீட்டில் கண்டுபிடித்தால் வெளுத்து விடுவார்கள். சில நேரங்களில் ஆளில்லாத நேரத்தில் நாம் அனுப்பிய செய்தி அப்பாவிடம் ஃபோன் இருக்கும் நேரத்தில் சரியாக சென்று சேரும். அதற்கு அவர்கள் அனுப்பும் பதில் உடனேயே வந்து சேர்ந்து வீட்டில் மிதி வாங்கிய அனுபவங்கள் அநேகம் பேருக்கு உண்டு. விடுமுறை காலங்களில் நினைத்துக் கொண்டே காத்திருக்க மட்டும் தான் முடியும். சிலநேரங்களில் நாம் காதலிக்கிறோம். பிரிந்திருக்கிறோம். அவனையேதான் நினைத்துக் கொண்டிருக்க வேண்டும் என வலுக்கட்டாயமாக அவனையே நினைத்துக் கொண்டிருந்தது உண்டு.
அதனால் பெரும்பாலும் இப்படி காதலன்கள் வெளியூர் சென்றிருக்கும் போது காதலிகள் காயின் ஃபோன்களில் அவர்களை அழைத்துப் பேச வேண்டும். பள்ளி முடிந்து செல்லும் வழியில் இந்தக் கடமையைச் செய்யும் போது கடைக்கார அக்காக்கள் நம்மைக் கேவலமாகப் பார்ப்பார்கள். அதை மீறி பேசலாமென்றால் என்ன பேசுவதென்று தெரியாது. ஒரு காயினுக்கு ஒரு நிமிடம் பேசலாம். நான் பெரும்பாலும் நாற்பது நொடிகளிலேயே முடித்து விடுவேன். அந்தப்பள்ளியில் அப்போது எல்லாருமே இப்படித்தான் காதலித்துக் கொண்டிருந்தார்களா என்று எனக்கு சந்தேகமாக இருக்கும்.
” நான் சீகரெட் குடிக்கவா? உனக்குப் பிடிக்கலைனா வேண்டாம். ” என்றான் செழியன் ஒரு முறை.
அப்போது நித்யாவுக்காக நானும் மழைக்கு ஒதுங்கி அதே ஹாக்கி மைதான மரத்தினடியில் நின்றிருந்தேன். சுற்றிலும் மழைக்கொதுங்கிய மாணவர் கூட்டம். அப்போது அந்த வயதில் எனக்கு அந்த கேள்வி அத்தனை கர்வத்தைக் கொடுத்தது.
“என் ஆளு என்னைக் கேட்காம எதையுமே செய்ய மாட்டான். அதை எத்தனை பேர் முன்னிலையிலும் கௌரவக் குறைவாக நினைக்க மாட்டான்.”
எத்தனை அசட்டுத்தனம். இப்போது நினைத்தால் சிரிப்பு வருகிறது.
இது காதல்தானா என்று தோன்றிய சந்தேகங்களும் குழப்பங்களும் அந்தக் கேள்வியில் கரைந்து போனது.
“ஏய் யசோ … என்ன எங்கண்ணனை கட்டிக்கப் போறயாம்… அப்போ நம்மளாம் ஒரே வீட்ல இருக்கப் போறமா?” என விசயம் தெரிந்து குதூகலித்தான் முகிலன். அவனின் ஒவ்வொரு கேள்வியும், பதிலும், உரையாடலும் எதிர்காலத்தில் அவன் என்னுடன் ஒரே வீட்டில் இருக்கப் போவதைப் பற்றியே இருக்கும்.
அப்போது நாங்கள் பன்னிரண்டாம் வகுப்பு. திடீரென என் வகுப்பிற்கு வந்த முகிலன் சரசரவென உள்ளே வந்து,
“நாம எப்பவும் ஒன்னாத்தான இருப்போம்? என்னைய ஏமாத்திற மாட்டயே?” என்றான்.
“ஏன்டா திடீர்னு சந்தேகம்?”
“எல்லாரும் சொல்றாங்க… நீ மாறிடுவ.”
” அதெல்லாம் நம்பாத. நம்ம எப்பவும் ஒன்னாத்தான் இருப்போம்.”
“ஓக்கே…” என ஓடிப் போய் விட்டான்.
அம்மா இல்லாத பிள்ளை. அதனால்தான் என் மேல் அத்தனை பிரியமோ என்னமோ.
ஆனால், எல்லோரும் சொல்லியது போலவே நானும் செழியனும் பிரிந்து விட்டோம். காரணம் பெரிதாக எதுவுமில்லை. அது காதல் இல்லை என்று எனக்குத் தோன்றத் தொடங்கி விட்டதுதான். ஆனால், வாழ்வின் மகத்தான, மறக்கவே முடியாத முதல் வசந்தத்தைப் பரிசளித்தவன் செழியன்தான். இன்று வரை அந்த குறுகுறுப்பையும் படபடப்பையும் வேறு யாரும் எனக்குக் கொடுக்கவில்லை. அதற்குப் பிறகும் கூட முகிலனிடம் பேசிக் கொண்டுதான் இருந்தேன். பிறகு அதுவும் விட்டுப் போயிற்று.
பிறகு வாழ்க்கை ஏராளமான சுழல்களில் எனைச் சிக்க வைத்து, திடப்படுத்தி, தெளிவு படுத்தி இப்போது இங்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. முற்றிலும் வேறான பாதையில் இப்போது பயணப்பட்டுக் கொண்டிருக்கிறேன். 6 வருடங்களாக யாருடைய தொடர்பும் இல்லாமல், கடந்தகாலத்தின், கடந்த கால மனிதர்களின் எந்தத் தடயங்களுமில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும்போதுதான் இத்தனை வருடங்கள் கழித்து இப்போது இவன் வந்து நிற்கிறான். ஒன்றைத்தொட்டு ஒன்றாக நினைவு வரும் என் வாழ்வின் அந்த அத்தியாயம் குறைந்தபட்சம் ஒரு வாரம் என்னை உறங்கவிடாமல் செய்யும் வல்லமை வாய்ந்தது.
மீண்டும் அடுத்த வாரத்தில், அதே சாலையில் அதே போல என் எதிரில் வந்தான். அதே போல என்னைப் பார்த்து விட்டுக் கடந்தான். அதற்கு மேல் என்னால் முடியவில்லை. அவன் மறந்திருக்கலாம் வெறுத்திருக்கலாம். யாரோ போல கடக்க விரும்பலாம். ஆனால், என் அன்பு உண்மைதானே. முதன்முதலில் இவனைப் பார்த்துத்தானே “நீதான்டா என் முதல் குழந்தை.” என்றேன்.
“டேய்….”
திரும்பாமலேயே, ” என்ன… அதான் எதும் வேண்டாம்னு தான இருக்க. இப்ப என்ன?” என்றான். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. வேண்டுமென்றேதான் கவனிக்காமல் போகிறானா?
“ச்சீ… ஓவரா பண்ணிக்காத. இங்க வா”
திரும்பி வேகமாக என்னை நோக்கிப் பேசிக் கொண்டே வந்தான்.
” எங்கெங்க தேடுறது. யாருக்குமே உன்னப் பத்தி தெரியல. என் ஞாபகமே வரலையா பேசனும்னே தோணலையா உனக்கு” குரல் கம்மி கண் கலங்கியது.
” ஸாரிடா நிறைய பிரச்சனை எனக்கு.”
” யாருக்குத்தான் இல்ல. எனக்கு எவ்ளோ பிரச்சனை தெரியுமா? சாகக் கெடந்தேன். பொழைக்குறதே கஷ்டம்னு சொல்லிட்டாங்க. அப்போ கூட நீ என் கூட இல்ல”
மழை தூறத் தொடங்கியது.
” என்னடா சொல்ற? என்ன பிரச்சனை? இப்போ க்யூர் ஆய்ருச்சா? ஆமா இங்க என்ன செய்ற நீ”
“இங்க ஒரு ஆபிஸ்ல ஆபிஸ் பாயா இருக்கேன். என் நிலைமைக்கு அந்த வேலைதான் செய்ய முடியும். நான் என்ன பண்ணுனா உனக்கென்ன? ரொம்ப அக்கறை இருக்க மாதிரி பேசாத. அப்டியே கண்டுக்கா போ.”
” டேய் சத்தியமா நான் யார் கூடயும் கான்டாக்ட்ல இல்லடா. தெரியாது உனக்கு இவ்ளோ பிரச்சனைனு. தெரிஞ்சுருந்தா வந்திருக்க மாட்டேனா… ஸாரிடா.”
“….”
“டேய் இங்க பாரு. சரி நீ இந்த நெலமைல தனியா இருந்து வேலை செஞ்சு கஷ்டப்படனும்னு என்ன அவசியம்.. வீட்லயே இருக்க வேண்டிதானடா ?”
” வீட்லயே இருந்தா சோறு நீ போடுவியா? என்ன பண்ண எனக்கு வாய்ச்ச அண்ணி உன்னை மாதிரி இல்லயே….”