கடந்த மூன்று தலைமுறைகளாகத் தமிழ் வெகுசனப் பத்திரிகைகளின் தீபாவளி மலர்களுடன் பிரிக்க முடியாத ஒரு பெயர் இருந்திருக்கிறது என்றால் அது சுஜாதாதான். முதல்முறையாக சுஜாதாவின் சிறப்புச் சிறுகதைகளோ கட்டுரைகளோ இல்லாத தீபாவளி மலர்கள் வெளியாகும் தீபாவளி இது. சுஜாதாவின் வெகுசனப் புகழோடு போட்டி போடக்கூடிய சில எழுத்தாளர்கள் அவரோடு கொஞ்ச தூரம் ஓடிவந்து பிறகு எங்கோ நின்றுவிட்டிருந்திருக்கிறார்கள் அல்லது தங்கள் பயணத்தை வேறு திசைக்கு மாற்றிக்கொண்டிருந்திருக்கிறார்கள். ஆனால் சுஜாதா ஒரு தனி நபர் அல்ல, ஒரு இயக்கம். இலட்சக்கணக்கான வாசகர்களின் இதயத்திலிருந்தும் கனவுகளிலிருந்தும் உருவான இயக்கம். அரசியலும் சினிமாவும் புழுதியாக மூடிய ஒரு சமூகத்தில் ஒரு எழுத்தாளனின் இருப்பை சமூகப் பெருவெளியில் பிரகாசமாக நிறுவிய இயக்கம் அது.
சுஜாதாவின் பலம் அவரது பிரபல்யம் அல்ல. அவருடைய எழுத்துக்கள் அதை இலக்காகக் கொண்டதுமல்ல. காலத்தின் வேகத்தோடு தன்னை இணைத்துக்கொண்ட கலைஞன் ஒருவனின் சவால்களே சுஜாதாவின் மேல் விழுந்த புகழின் வெளிச்சத்தை நிரந்தரமாக நிலைத்திருக்கச் செய்கிறது. அதனால்தான் அவரை வெறுக்கவும் மறைக்கவும் ஆசைப்படுகிறவர்கள்கூட தங்களுடைய ஏதேனும் ஒரு பருவத்தில், ஏதேனும் ஒரு அந்தரங்கத்தில் அவர் ஏற்படுத்திய குறுக்கீட்டையும் சேர்த்தே சொல்லவேண்டியவர்களாக இருக்கிறார்கள்.
மரணத்திற்குப் பிறகு அவர் நினைவு கூரப்படும் எழுத்தாளராக அல்ல, நம்மோடு வாழும் கலைஞனாகவே இருக்கிறார். ஒரு வாசகன் சுஜாதாவின் மரணத்தை ஒருபோதும் அறிவதில்லை. அவரது உடனிருப்பு அவரது மரணத்தால் அழிவதுமில்லை. ஆனால் ஒரு நண்பராக, ஆசானாக, வழிகாட்டியாக அவரது வெற்றிடத்தின் இருள் நெஞ்சில் வளர்ந்துகொண்டேதான் இருக்கிறது. அந்த இருள் இல்லை என்பதுபோன்ற ஒரு பாவனையை உருவாக்கிக் கொள்வதன் வழியே அந்த இருள் தரும் பயத்திலிருந்து, நிம்மதியின்மையிலிருந்து விடுபட முயற்சிக்கிறேன். சட்டென ஒரு காலை வெளிச்சம் வந்து கலைக்க முடியாத இருள் அது.
கடந்த ஆண்டுகள் அவரோடு சேர்ந்து நிறைய வேலைகள் செய்து விட்டேன். உற்சாகமும் மனவலிமையும் பெருகிய காலங்கள் அவை. கடைசியாக ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’வின் இலக்கிய மலருக்காக அவருடன் இணைந்து பணியாற்றினேன். தமிழில் இலக்கியம் சார்ந்த இதழ்கள் உருவாவதில் எப்போதும் மிகுந்த ஆசை கொண்டிருந்தார். அத்தகைய ஒரு இதழைத் தொகுத்ததை அவர் கடைசிப் பணியாக ஏற்றது இயற்கையான ஒன்று. ‘கணையாழி’யின் மறைவு அவரை வருந்தத் செய்தது. இந்திரா பார்த்தசாரதி, கஸ்தூரிரங்கன் ஆகியோருடன் இணைந்து ‘கணையாழி’யை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று மிகவும் விரும்பினார். பதிப்பிப்பதில் அவருக்கு எல்லா உதவிகளையும் செய்வதாக வாக்களித்தேன். ஆனால் ‘கணையாழி’யின் கடைசிக் கால குழப்பங்களால் அந்தப் பெயர் பதிவை எங்களால் திரும்பப் பெற முடியவில்லை. ஒரு இதழியலாளராக அவர் செயல் பட்ட காலங்களில் அவர் செய்த புதுமைகளும் சாதனைகளும் பிரமாண்டமானவை. ஒப்பிலாதவை. ஆனால் அவரால் அதில் தொடர்ந்து செயல்படமுடியவில்லை. செயல்பட முடிந்திருந்தால் தமிழ்ப் பத்திரிகை உலகின் ஒரு நிர்ணய சக்தியாக அவர் இருந்திருப்பார் – தமிழ் உரைநடையின் நிர்ணய சக்தியாக இருந்தது போல.
உடல் சோர்வு, நோய்மை, மனக் கோளாறுகளை வேலையின் வழியே, நமது நம்பிக்கைக்குரிய செயல்பாடுகள் வழியே எப்படிக் கடந்து செல்வது என்பதை எனக்கு அவர் தொடர்ந்து ரகசியமாகக் கற்பித்துக்கொண்டே இருந்தார். 50 ஆண்டுகளில் சுஜாதாவின் எழுத்துகளின் அளவும் அதன் குன்றாத புதுமையும் அவர் எழுத்தை எவ்வாறு கையாண்டார் என்பதற்கு ஒரு உதாரணம். அதிர்கிற வீணையில் தூசு குந்தாது என்ற பிரமிளின் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன. சுஜாதா அவர் வாழ்நாளிலும் அதற்குப் பின்னும் இடையறாத அதிர்வுகளை உருவாக்கிக்கொண்டே இருந்தார்; இருக்கிறார். தலைமுறை வித்தியாசங்களை கேலிக்கு உள்ளாக்கும் நீண்ட அதிர்வு அது.
ஆனந்த விகடன் தீபாவளி மலர்
அக்டோபர் 2008