1.
இசை நின்றவுடன்
நாற்காலியில் அமர இடமின்றி
வெளியேறும் கொத்துக்குள்
எப்போதும் நானிருக்கிறேன்.
உங்கள் கவனத்தை ஈர்க்கும்
எண்களுக்குள்
ஒருபோதும் இருப்பதில்லை.
தோளழுத்தும்
உங்கள் எளிமை
ஆழப்படுத்திய
உங்கள் காலடித் தடங்களில்
தேங்கும் அலைநீரில்
முகம் பார்த்துக்கொள்ளும்
கனக்காத எளிமை எனது.
கடல் எனில் கடல்தான்.
நீங்கள்
சிறிதென்பதும் பெரிதென்பதும்
உங்கள் கரைகளை மட்டுமே.

2.
காத்திருப்பின் வரிசையில்
இணைந்தபின் கண்ணில்படும்
முழங்கையில்,
உலர்ந்து பற்றியிருக்கும்
இட்லி மாவின்
வெண் சித்திரத்தை
மழுங்கிய நகங்களால்
சுரண்ட முயன்று தோற்றபின்,
ஒரு திடீர் உறுதியுடன்
புறங்கையை மறைக்காது
தலைநிமிர்பவளைப்
பார்த்திருக்கிறாயா?
அவள் மிக லேசாகப்
புன்னகைப்பதை உணர்ந்திருக்கிறாயா?
எனில்,
உன் பரிதாபத்தை மறைத்துக்கொள்.
வேறெங்கேனும் பயன்படக்கூடும்.
மேலும்,
ஒரு நேரம் போலிராது.

3.
இவ்வளவு துக்கம் சுமக்கிறேன் என்றால்
உங்களுக்குக் கைமாற்றிவிட்டு
நான் மறந்துபோன சுமைகளை
அரைப் புன்னகையாக்குகிறீர்கள்;
நீங்கள் வெளியேறுகையில்
நான் காத்திருப்பதைக் கண்டால்
உங்கள் வரிசைக்குள்
நான் வெட்டி நுழைந்ததைக்
கையசைப்பில் சொல்லுகிறீர்கள்;
என் பசியைச் சொல்லுந்தோறும்
உங்கள் உணவை நானெடுத்துக்கொண்ட
கதைகளை நினைக்கிறீர்கள்;
என் வலி ஒவ்வொன்றுக்கும்
நான் பரிசளித்த வலிகளைக்
குறுக்குக் கோடிட்டுக்
கூச்சமின்றிக் கணக்குப் பார்க்கிறீர்கள்;
ஏன் இப்படி இருக்கிறீர்கள்?

4.
உங்கள் சொற்களை எழுதும்படி
சதா என்னிடம் கேட்கிறீர்கள்,
நான் ஒருபோதும் உங்களிடம்
என் மௌனத்தைப் பேசும்படிக் கேட்பதில்லை.
உங்கள் நியாயங்களை ஏற்கும்படி

என்னை நிர்ப்பந்திக்கிறீர்கள்,
நிர்ப்பந்தம் என்பது அநியாயம் என்றுகூட
நான் உங்களிடம் சொல்வதில்லை.
உங்கள் கணக்குகள் சமன் குலைய
என்னை ஒருபுறம் இருத்துகிறீர்கள்,
என் எண்கள் மதிப்பிழப்பதை
இதுவரை நான் சுட்டியதில்லை.
இல்லை இல்லை இல்லை என்றபின்
ஆமென்றும் ஒன்று வேண்டுமல்லவா?
நீங்கள் காத்திருக்கும் காரணத்தை
நான் யாருக்கும் தெரிவிக்கவில்லை.
ஆம்.

5.
உங்கள்
புன்னகை அளப்பானுக்கு
என்னைப் பிடிப்பதே இல்லை,
எப்போதும் ஒரிரு அங்குலம்
அதிகரித்தே தெரிவிக்கிறது.
உடனடி அளப்பானுக்கும் அப்படித்தான்,
எப்போதும் தாமதமென்றே அறிவிக்கிறது.
சொற்கூட்டத்தின் புகைப்பட வரம்புகளை
நீங்கள் நிர்மாணிக்கும் லாவகம்
என்னை ஆச்சரியப்படுத்தி விடுகிறது.
மேலும்,
எனக்கும்
அளப்பான்களைப் பிடிப்பதில்லை.
உண்மையில்,
புன்னகைக்கவும்
தாமதிக்கவுமே பிடிக்கிறது.