தட மருப்பு எருமைப் பிணர்ச் சுவல் இரும் போத்து,
மட நடை நாரைப் பல் இனம் இரிய,
நெடு நீர்த் தண் கயம் துடுமெனப் பாய்ந்து,
நாட் தொழில் வருத்தம் வீட, சேண் சினை
இருள் புனை மருதின் இன் நிழல் வதியும் 5
யாணர் ஊர! நின் மாண் இழை மகளிரை
எம் மனைத் தந்து நீ தழீஇயினும், அவர்தம்
புன் மனத்து உண்மையோ அரிதே: அவரும்,
பைந் தொடி மகளிரொடு சிறுவர்ப் பயந்து,
நன்றி சான்ற கற்பொடு       10
எம் பாடு ஆதல் அதனினும் அரிதே.

 

ஒரு களம்.

அந்தப் பெரிய குளத்தில் தண்ணி கெத்துக்கெத்துன்னு கெடக்கு.

அந்தப் பெரிய குளத்தில் நாரைகள் ஏராளமாக நின்றுகொண்டிருக்கின்றன.

ஒரு எருமை அந்தப் பெரிய குளத்துக்கு வந்துகொண்டிருக்கிறது. அந்த எருமை பகல் பூராவும் தொழி உழவு உழுதிருக்கிறது. அந்த எருமை உடம்பில் ஒரே சகதி.

அந்தப் பெரிய குளத்தில், அந்த எருமை அதுவந்த வேகத்தில் குதிக்கிறது. அந்த எருமை தண்ணீரில் குதித்த வேகத்தில் அந்தத் தண்ணீரில் இருந்து ‘பொத்தபீர்’னு ஒரு சத்தம் பெலம்மாக் கேக்கு. அந்தப் பெரிய சத்தம் அந்தப் பெரிய குளத்தில் அலை அலையாகப் பரவுகிறது.

தண்ணீரில் நின்று கொண்டிருந்த நாரைகள் அந்த மொரட்டுச் சத்தத்தைக் கேட்டதும் பயந்து போய் பறந்து போய்விட்டது.

அந்தப் பெரிய குளத்துக்குப் பக்கத்தில் ஒரு பெரிய மருத மரம் இருக்கிறது. அந்தப் பெரிய மருத மரத்தின் அடியில் நிழல் கொட்டிக் கெடக்கு.

அந்தப் பெரிய குளத்தில் ரொம்ப நேரமாகப் படுத்திருந்த அந்த எருமை எழுந்து வெளியே வருகிறது. அது மெல்ல மெல்ல அசைந்து அசைந்து நடந்து போய் அது அந்த மருத மரத்தின் குளிர்ந்த நிழலில் படுத்திருக்கிறது.

பகலெல்லாம் தொழி உழவு உழுது அலுத்த அந்த எருமை மருதமரத்தின் குளிர்ந்த நிழலில் படுத்து உறங்கிக் கொண்டிருக்கிறது.

ஆலங்குடி வங்கனார்
நற்றிணை 330