பிறை வனப்பு இழந்த நுதலும், யாழ நின்
இறை வரை நில்லா வளையும், மறையாது
ஊர் அலர் தூற்றும் கௌவையும், நாண் விட்டு
உரை அவற்கு உரையாம்ஆயினும், இரை வேட்டு,
கடுஞ் சூல் வயவொடு கானல் எய்தாது, 5
கழனி ஒழிந்த கொடு வாய்ப் பேடைக்கு,
முட முதிர் நாரை கடல் மீன் ஒய்யும்
மெல்லம் புலம்பற் கண்டு, நிலைசெல்லாக்
கரப்பவும் கரப்பவும் கைம்மிக்கு,
உரைத்த- தோழி!- உண்கண் நீரே. 10

ஒரு பெரிய வயல்.

அந்த வயலில் ஒரு நாரை நின்றுகொண்டிருக்கிறது. அது ஒரு பெண் நாரை. அந்தப் பெண் நாரை சினையாருக்கு. அந்தப் பெண் நாரைக்கு இது தலைச்சன் சூல்

இந்தப் பெண் நாரை தினமும் இந்த மருத நிலத்தில் இருந்து நெய்தல் நிலத்துக்கு மீன் வேட்டைக்காகக் கணவனோடு அது கடலுக்குப் பறந்து போகும்.

இன்னக்கி இந்த பெண் நாரை மீன் வேட்டைக்காக அது கடலுக்குப் போகவில்லை. வயிற்றில் கருவைச் சுமந்துகொண்டு அந்தப் பெண் நாரையால் அவ்வளவு தூரம் கடலுக்குப் பறந்து போக முடியவில்லை.

அந்தப் பெண் நாரை அந்தப் பெரிய வயலில் குனிந்த தலை நிமிராமல் கவனமாக அது இரை தேடிக் கொண்டிருக்கிறது. அந்தப் பெண் நாரைக்கு அந்தப் பெரிய வயலில் இரை கெடைக்கல. அது பசியோடு இருக்கிறது.

மீன் வேட்டைக்காகக் கடலுக்குப் போன ஆண் நாரை இப்போதுதான் வந்திருக்கிறது.

அந்த ஆண் நாரை தன் மனைவியின் அழகான வாயில் மீன் இரையை ஊட்டிக் கொண்டிருக்கிறது.

இளவெயினனார்
நற்றிணை 263