புலி பொரச் சிவந்த புலால் அம் செங் கோட்டு
ஒலி பல் முத்தம் ஆர்ப்ப, வலி சிறந்து,
வன் சுவல் பராரை முருக்கி, கன்றொடு
மடப் பிடி தழீஇய தடக் கை வேழம்,
தேன் செய் பெருங் கிளை இரிய, வேங்கைப் 5
பொன் புரை கவளம் புறந்தருபு ஊட்டும்
மா மலை விடரகம் கவைஇ, காண்வர,
கண்டிசின்-வாழியோ, குறுமகள்!-நுந்தை,
அறுமீன் பயந்த அறம் செய் திங்கள்
செல் சுடர் நெடுங் கொடி போல, 10
பல் பூங் கோங்கம் அணிந்த காடே.
ஒரு காடு.
அந்தப் பெரிய காட்டில் உயரமான ஒரு மலை. அந்த மலையின் உச்சியில் இருந்து பாதாளம் வரைக்கும் இரண்டாக வெடித்த மலை இரண்டாகப் பிளந்திருக்கிறது. உயரமான அந்த மலை வாயைப் பிளந்துகொண்டு, வாயைப் பிளந்த மேனிக்கு நின்று கொண்டிருக்கிறது.
அந்தப் பெரிய காட்டில் கோங்கு மரங்கள் நெருக்கமாகவும் அடர்ந்தும் இருக்கின்றன. கோங்கு மரங்கள் பூத்துப் பேரழகோடு காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.
அந்தப் பெரிய காட்டில் ஒரு பெரிய ஆண் யானை ஒரு பெரிய ஆண் புலியோடு சண்டை போட்டுக் கொண்டிருக்கிறது.
அந்தப் பெரிய ஆண் யானை. அந்தப் பெரிய ஆண் புலியைக் குத்திக் கொன்றுவிட்டது. அந்தப் பெரிய ஆண் யானையின் கூர்மையான தந்தங்களில் இருந்து ரத்தம் வடிந்து கொண்டிருக்கிறது.
அந்தப் பெரிய ஆண் யானைக்குக் கோவம் இன்னும் அடங்கவில்லை. அது ஒரு பொட்டல் தரையில் நின்றுகொண்டிருந்த ஒரு பெரிய வேங்கை மரத்தை ஒடித்துக் கீழே சாய்க்கிறது. அந்த வேங்கை மரத்தில் பூவாருக்கு. அந்தப் பூக்களில் தேனீக்கள் தேன் குடித்துக் கொண்டிருக்கின்றனர்.
அந்தப் பெரிய ஆண் யானையின் மனைவியும் குட்டியும் அந்தப் பெரிய ஆண் யானையிடம் வந்திருக்கிறது.
அந்தப் பெரிய ஆண் யானை அதன் இளம் மனைவியையும், குட்டியையும் அதன் தும்பிக்கையால் பாசத்தோடு அணைத்துக் கொள்கிறது.
அந்தப் பெரிய ஆண் யானை, கீழே சாய்ந்து கிடக்கிற வேங்கை மரத்தின் பூக்களில் தேன் குடித்துக் கொண்டிருக்கிற தேனீக்களைத் துரத்துகிறது. அந்த வேங்கை மரத்தின் கொளுந்து இலைகளையும், பூக்களையும் பறித்துப் பறித்து குட்டிக்கும் மனைவிக்கும் கொடுத்துக்கொண்டே இருக்கிறது.
ஆண் யானையும் ஆண் புலியும் கொடூரமாகச் சண்டை போடுகிற பயங்கரமான காடு அது. பயம் அறியாத ஒரு இளைஞன் அழகான அவன் காதலியை அழைத்துக்கொண்டு அந்தக் காட்டுப் பாதையில் வருகிறான். அவர்கள் இரவும் பகலும் அந்தக் காட்டுப் பாதையில் மகிழ்ச்சியோடு நடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.
பாலை பாடிய பெருங்கடுங்கோ
நற்றிணை 202