‘கற்றை ஈந்தின் முற்றுக் குலை அன்ன
ஆள் இல் அத்தத் தாள் அம் போந்தைக்
கோளுடை நெடுஞ் சினை ஆண் குரல் விளிப்பின்,
புலி எதிர் வழங்கும் வளி வழங்கு ஆர் இடைச்
சென்ற காதலர் வந்து, இனிது முயங்கி, 5
பிரியாது ஒரு வழி உறையினும், பெரிது அழிந்து
உயங்கினை, மடந்தை!’ என்றி- தோழி!-
அற்றும் ஆகும், அஃது அறியாதோர்க்கே;
வீழாக் கொள்கை வீழ்ந்த கொண்டி
மல்லல் மார்பு மடுத்தனன் 10
புல்லு மற்று எவனோ அன்பு இலங்கடையே
ஒரு பெரிய காடு.
ஒரு பெரிய காட்டில் ஆள்நட மாட்டம் இல்லாத ஒதுக்குப்புறமான ஒரு இடம்.
ஒதுக்குப்புறமான அந்தக் காட்டில் ஒரு கூந்தல் பனை இருக்கிறது.
கூந்தல் பனையில் ஒரு பாளை வந்துருக்கு. அந்தப் பாளையில் இருந்து வெளிவந்த குலை வாட்டசாட்டமா செழிப்பா அழகாருக்கு.
ஒரு ஆண் பருந்து அந்தக் கூந்தல் பனையில் நீளமான ஒரு பச்சை மட்டையில் உக்காந்துக்கிட்டுருக்கு. வெளியே போன ஆண் பருந்தின் மனைவி இன்னும் கூட்டுக்கு வல்ல. வருத்தத்தோடு உக்காந்துக்கிட்டுருக்கு அந்த ஆண் பருந்து.
ஆண் பருந்து அதன் மனைவியைக் கூப்பிடுகிறது
ஆண் பருந்து கூப்பிட்ட குரலுக்கு அந்தக் கூந்தல் பனையின் அடியில் இருந்து ஒரு எதிர்க்குரல் கேட்கிறது.
அந்தக் கூந்தல் பனையின் அடியில் ஒரு ஆண் புலி படுத்திருக்கிறது. பருந்து கூப்பிட்ட குரலுக்குப் பதில் குரல் கொடுத்து முழங்கியது அந்த ஆண் புலி.
பாலை பாடிய பெருங்கடுங்கோ
நற்றிணை 174