சுரும்பு உண விரிந்த கருங் கால் வேங்கைப்
பெருஞ் சினைத் தொடுத்த கொழுங் கண் இறாஅல்,
புள்ளுற்றுக் கசிந்த தீம் தேன் கல் அளைக்
குறக் குறுமாக்கள் உண்ட மிச்சிலைப்
புன் தலை மந்தி வன் பறழ் நக்கும் 5
நன் மலை நாட! பண்பு எனப் படுமோ-
நின் நயந்து உறைவி இன் உயிர் உள்ளாய்,
அணங்குடை அரவின் ஆர் இருள் நடு நாள்,
மை படு சிறு நெறி எஃகு துணை ஆக
ஆரம் கமழும் மார்பினை, 10
சாரற் சிறுகுடி ஈங்கு நீ வரலே?
எங்கள் கிராமம் ஒரு மலைக் கிராமம்.
எங்கள் மலையில் ஒரு வேங்கை மரம் இருக்கிறது.
அந்த வேங்கைமரம் பூத்திருக்கு.
அந்தப் பூக்களில் தேனீக்கள் நுழைந்து நுழைந்து தேன் எடுத்துக் கொண்டிருக்கிறது.
அந்த வேங்கை மரத்தில் ஒரு தேன் கூடு இருக்கு. அந்த தேன் கூட்டில் ஒரு புழுத்தட்டு இருக்கு. அந்த புழுத்தட்டில் கண்ணுகண்ணா, கண்ணுகண்ணா ஏகப்பட்ட அறைகள் இருக்கு. ஏகப்பட்ட புழுக்கள் இருக்கிறது அந்த அறைகளில்.
அந்தத் தேன் கூட்டில் ஒரு குடம் மாதிரிப் பெருசா இருக்கு ஒரு தேன் குடம். தேன் குடத்தைச் சுற்றி தேனீக்கள் நெளுநெளுன்னு மொய்த்துக் கொண்டிருக்கிறது.
அந்தத் தேன் குடத்துக்கு நேர்கீழே ஒரு கல் குழி இருக்கிறது. தேன் குடத்தில் இருந்து தேன் வடிந்து வடிந்து அந்தக் கல் குழியில் தேன் நிரம்பி கொண்டிருக்கிறது.
எங்கள் பையன்கள் அந்தக் கல்குழியைச் சுற்றி உக்காந்திருக்கிறார்கள். அவர்கள் கல்குழியில் நிரம்பி வழிகிற தேனை அள்ளி அள்ளிக் குடிக்கிறார்கள். எங்கள் பையன்கள் அந்தக் கல் குழியில் இருந்த தேனை சுத்தமாத் துடைத்துத் துடைத்துக் குடித்துவிட்டார்கள்.
தேன் இல்லாத அந்தக் கல்குழியைச் சுற்றிக் குட்டிக் குரங்குகள் உக்காந்திருக்கிறது. அந்தக் குட்டிக் குரங்குகள் தேன் இல்லாத அந்தக் கல்குழியை வளித்து வளித்து நக்கிக் கொண்டிருக்கிறது.
மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
நற்றிணை 168