பேர் ஊர் துஞ்சும்; யாரும் இல்லை;
திருந்து வாய்ச் சுறவம் நீர் கான்று, ஒய்யெனப்
பெருந் தெரு உதிர்தரு பெயலுறு தண் வளி
போர் அமை கதவப் புரை தொறும் தூவ,
கூர் எயிற்று எகினம் நடுங்கும் நல் நகர்ப் 5
பயில்படை நிவந்த பல் பூஞ் சேக்கை
அயலும் மாண் சிறையதுவே; அதன்தலை,
‘காப்புடை வாயில் போற்று, ஓ’ என்னும்
யாமம் கொள்பவர் நெடு நா ஒண் மணி
ஒன்று எறி பாணியின் இரட்டும்; 10
இன்றுகொல், அளியேன் பொன்றும் நாளே?

ஒரு பெரிய நகரம்.

அந்தப் பெரிய நகரத்தில் அகலமான ஒரு பெரிய தெரு.

அந்தப் பெரிய தெருவில் ஒரு பெரிய மாளிகை.

அந்த மாளிகையில் ஒரு படுக்கை அரை. அந்தப் படுக்கை அறையில் அழகான ஒரு மெத்தைக் கட்டில். அந்த மெத்தை பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. அழகான ஒரு இளம் பெண் அதில் படுத்திருக்கிறாள்.

அழகான அந்த இளம் பெண்ணுக்கு உறக்கம் வரவில்லை.

அவளை வீட்டுக்காவலில் வைத்திருக்கிறார்கள்.

அழகான அவள் படுக்கை அறையில் காவல்காரப் பெண்கள் படுத்திருக்கிறார்கள். காவல்காரப் பெண்களை உறங்கவிடாமல் குளிர் அவர்களை நடுங்க வைத்துக் கொண்டிருக்கிறது.

மழை பெய்து கொண்டிருக்கிறது.

குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருக்கிறது.

உயரமான அந்தப் பெரிய மாளிகையின் மொட்டை மாடியில் இருந்து கீழே தண்ணீர் சத்தமாக விழுந்து கொண்டிருக்கிறது.

அந்தப் பெரிய மாளிகையின் முன் காவல் நாய்கள் படுத்திருக்கின்றன. காவல் நாய்களை உறங்க விடாமல் குளிர் நடுங்க வைத்துக் கொண்டிருக்கிறது.

நடுச்சாமம்.

ஊர் காவல்காரர் மழையில் நனைந்து கொண்டு அந்தப் பெரிய தெருவில் நடந்து வந்து கொண்டிருக்கிறார். அவர் மணி அடித்துக் கொண்டு வருகிறார். மணியின் நாக்கு நீளமாக நீட்டிக்கொண்டிருக்கிறது.

காவல்காரர், உறங்கிக் கொண்டிருக்கிற மக்களை எழுப்பிச் சொல்கிறார்… சான்றோர்களே..

உங்கள் மாளிகையின் தலைவாசல் கதவு பூட்டியிருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் பெரிய மாளிகையின் புறவாசல் கதவையும் பூட்டிக் கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் கதவுகளை நன்றாகப்பூட்டிக்கொண்டு பாதுகாப்புடன் உறங்குங்கள்.

அந்தப் பெரிய மாளிகையின் அழகான இளம்பெண், அவள் காதலனை அவளைச் சந்திக்கிறதுக்கு வரச் சொல்லியிருந்தாள்.

அவளுக்கு வீட்டுக்காவல் கடுமையாக இருக்கிறது. புறச்சூழ்நிலைகளும் அவள் காதலனைச் சந்திப்பதற்கு அவளுக்குச் சாதகமாக இல்லை. காதலனைச் சந்திக்க முடியாததால் அவளுக்குக் கோவம் வருகிறது.

அவள் சொல்கிறாள்…

கெடுபிடியான இந்தக் காவல் வாழ்க்கையைச் சகித்துக்கொண்டு என்னால் வாழ முடியாது. இது என் கடைசி நாள். இன்று நான் செத்து ஒழிவேன்…

பெருங்கண்ணனார்
நற்றிணை 132