பைங் காய் நல் இடம் ஒரீஇய செங்காய்க்
கருங் களி ஈந்தின் வெண் புறக் களரி
இடு நீறு ஆடிய கடு நடை ஒருத்தல்
ஆள் பெறல் நசைஇ, நாள் சுரம் விலங்கி,
துனைதரும் வம்பலர்க் காணாது, அச் சினம் 5
பனைக் கான்று ஆறும் பாழ் நாட்டு அத்தம்,
இறந்து செய் பொருளும் இன்பம் தரும் எனின்,
இளமையின் சிறந்த வளமையும் இல்லை;
இளமை கழிந்த பின்றை, வளமை
காமம் தருதலும் இன்றே; அதனால், 10
நில்லாப் பொருட் பிணிச் சேறி;
வல்லே- நெஞ்சம்!- வாய்க்க நின் வினையே!

ஒரு காடு.

அது சரியான புழுதிக் காடு.

அந்தப் புழுதிக் காடு பூராவும் உப்பு பூத்துக் கொண்டிருக்கிறது.

அந்த புழுதிக் காட்டில் பனை மரங்கள் ஏராளமாருக்கு. அந்தப் பனை மரங்கள் உயரமாக வளர்ந்திருக்கின்றன.

அந்தப் புழுதிக் காட்டில் ஈச்ச மரங்களும் இருக்கு. அந்த ஈச்ச மரங்களில் காய்கள் பச்சையாருக்கு. முற்றிய ஓதகாய்கள் செகப்பாருக்கு. கனிஞ்ச பழங்கள் கறுப்பாருக்கு.

பனை மரங்கள் ஓங்கி வளர்ந்திருக்கிற அந்தப் பனங்காட்டி ல் ஒரு பெரிய ஆண் யானை வேகமாகப் போய்க் கொண்டிருக்கிறது. அந்தப் பெரிய ஆண் யானையின் உடம்பெங்கும் புழுதி அப்பிக் கொண்டிருக்கிறது. அந்தப் பெரிய ஆண் யானைக்கு மனிதர்கள் மேல் கோவம். அந்தக் கோவக்கார யானை மனிதர்களைக் கொல்லனும்னுட்டு மனிதர்களைத் தேடிப் போய்க்கொண்டிருக்கிறது.

அது ஒரு விடியக்கால நேரம்.

மனிதர்கள் வெயில் நேரத்தில் இந்தப் புழுதிக்காட்டில் நடந்து வர மாட்டார்கள் என்று தெரிந்து வைத்திருந்தது அந்தக் கோவக்கார ஆண் யானை.

மனிதர்கள் இந்த விஷயக்காலத்தில் இந்தக் குளிர்ந்த நேரத்தில் இந்தப் பனங்காட்டுக்கு நடந்து வருவார்கள் என்றும் அந்தக் கோவக்கார யானை தெரிந்து வைத்திருந்தது.

அந்தக் கோவக்கார ஆண் யானை அந்தப் பனக்காட்டில் ஒரு ஒத்தையடிப் பாதையில் குறுக்கே மனிதர்களை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது.

அந்த விடியக்காலத்தில் அந்தக் குளிர்ந்த நேரத்தில் அந்தப் பனங்காட்டில் அந்த ஒத்தையடிப் பாதையில் ஒரு ஆள் கூட நடந்து வரவில்லை.

மனிதர்கள் வராததால் அந்தக் கோவக்கார ஆண் யானைக்கு தலைக்கு மேலே கோவம் ஏறுகிறது.

அந்த ஆண் யானைக்கு சிரசு முட்டக் கோவம்.

அந்த கோவக்கார ஆண் யானை பனை மரங்களை வளைத்தும் ஒடித்தும் கோவத்தை அது தனித்துக் கொண்டிருக்கிறது.

ஓதலாந்தையார்
நற்றிணை 126