விதையர் கொன்ற முதையல் பூழி,
இடு முறை நிரப்பிய ஈர் இலை வரகின்
கவைக் கதிர் கறித்த காமர் மடப் பிணை,
அரலை அம் காட்டு இரலையொடு, வதியும்
புறவிற்று அம்ம, நீ நயந்தோள் ஊரே: 5
‘எல்லி விட்டன்று, வேந்து’ எனச் சொல்லுபு
பரியல்; வாழ்க, நின் கண்ணி!- காண் வர
விரி உளைப் பொலிந்த வீங்கு செலல் கலி மா
வண் பரி தயங்க எழீஇ, தண் பெயற்
கான் யாற்று இகுமணற் கரை பிறக்கு ஒழிய, 10
எல் விருந்து அயரும் மனைவி
மெல் இறைப் பணைத் தோள் துயில் அமர்வோயே
ஒரு போர் வீரன்.
போர் முனையில் இருந்து அவன் ஊருக்குத் திரும்பி வந்து கொண்டிருக்கிறான்.
அழகான தேர்.
நல்ல குதிரை.
திறமையான தேர்ப்பாகன்.
அழகான அந்தக் குதிரை பிடரிமயிரைச் சிலிர்த்துக்கொண்டு, காற்றைக் கிழித்துக்கொண்டு, புயல்வேகத்தில் வந்து கொண்டிருக்கிறது.
போர் வீரன் அவனுக்கு முன்னால் பார்க்கிறான்.
போர் வீரனுக்கு முன்னால் பெரிய வரகுக்காடு இருக்கிறது. வரகுப் பயிர்களில் கதிர்கள் முற்றி வரகு நன்றாக விளைந்திருக்கிறது.
போர் வீரன் அவனிடமே கேட்கிறான்.
இந்த வெள்ளாமை எப்படி வந்தது?
‘விதை’ தான் காரணம்.
உழவர்கள் முற்றிய வரகுக் கதிர்களில் இருந்து வரகு விதையைத் தேர்ந்தெடுத்து வரகுவிதையைப் பாதுகாத்து சேமித்து வைக்கிறார்கள்.
உழவர்கள் கோடையில் நிலத்தை உழுகிறார்கள். உழவர்கள் நிலத்தை மடக்கி மடக்கி மீண்டும் மீண்டும் உழுகிறார்கள். உழவர்கள் உழுது உழுது தரிசு நிலத்தைப் புழுதியாக்குகிறார்கள்.
புழுதியில் விதைக்கிறார்கள்.
மழை பெய்கிறது.
வரகு முளைக்கிறது.
இரண்டு இலைகளில் முளைத்து வந்த வரகுப் பயிர் நாளும் வளர்ந்து வளர்ந்து வரகுப் பயிர்கள் கதிர் வாங்கிக் கொண்டிருக்கிறது.
போர் வீரன் வரகுக் காட்டுக்கு அப்பால் பார்க்கிறான்.
ஒரு பெரிய காட்டு மரத்தின் குளிர்ந்த நிழலில் இரண்டு மான்கள் நின்று கொண்டிருக்கின்றன. ஒரு இளம் ஆண் மானும் ஒரு இளம் பெண் மானும் ஒன்றுக்கு ஒன்று முத்தம் கொடுக்கிறது. அவைகள் ஒன்றைஒன்று கிச்சங் காட்டுகின்றன. அவைகள் கொஞ்சி விளையாடிக் கொண்டிருக்கிறது.
இளம் மான்களின் காதல் விளையாட்டைப் பார்த்த அந்தப் போர் வீரனுக்கு அவன் மனைவி மேல் என்றுமே இல்லாத ஒரு பிரியம் எற்படுகிறது. போர்வீரன் தனக்குத்தானே சிரித்துக் கொள்கிறான்.
தலைவன் அவன் மனைவியைச் சந்திப்பதற்கு பேரார்வத்தோடு இருப்பதைப் புரிந்து கொண்டு தேர்ப்பாகன் குதிரையை வேகமாக ஓட்டுகிறான்.
ஒரு சிறைப் பெரியனார்
நற்றினை 121