தட மருப்பு எருமை மட நடைக் குழவி
தூண் தொறும் யாத்த காண்தகு நல் இல்,
கொடுங் குழை பெய்த செழுஞ் செய் பேதை
சிறு தாழ் செறித்த மெல் விரல் சேப்ப,
வாளை ஈர்ந் தடி வல்லிதின் வகைஇ, 5
புகை உண்டு அமர்த்த கண்ணள், தகை பெறப்
பிறை நுதல் பொறித்த சிறு நுண் பல் வியர்
அம் துகில் தலையில் துடையினள், நப் புலந்து,
அட்டிலோளே அம் மா அரிவை-
எமக்கே வருகதில் விருந்தே! சிவப்பாள் அன்று, 10
சிறு முள் எயிறு தோன்ற
முறுவல் கொண்ட முகம் காண்கம்மே.
ஒரு பெரிய வீடு.
அந்த வீட்டோடு சேர்ந்து இருக்கிறது ஒரு பெரிய தொழு.
தொழுவின் ஒரு பக்கத்துத் தூண்களில் எருமைக் கன்றுக்குட்டிகளைக் கெட்டிப் போட்டுருக்கு. தொழுவின் மறுபக்கத்தைத் தூண்களில் கன்று ஈன்ற எருமை மாடுகளைக் கெட்டிப் போட்டுருக்கு.
அந்த வீட்டில் ஒரு பெண் மட்டும் இருக்கிறாள்.
அவள் கணவன் ஒரு பரத்தைப் பெண்ணோடு வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
அந்த வீட்டுக்கு விருந்தாளுக்க வந்துருக்காக. விருந்தாளுக்களோடு சேர்ந்து அவள் கணவனும் விருந்துக்கு வந்திருக்கிறான்.
அந்தப் பெண் மீன் கழுவிக் கொண்டிருக்கிறாள்.
செவளம் உடைக்கிறாள். மீன்களைச் சின்னச்சின்னத் துண்டுகளாக வெட்டுகிறாள். அந்தத் துண்டு மீன்களைக் கொழுக்கக் கொழுக்கக் கழுவுகிறாள்.
மீன்களைக் கழுவி எடுப்பதற்குள் அவள் விரல்களை ரத்தமின்றிச் சிவந்துவிட்டன.
அடுப்பாங்கரையில் சமையல் நடந்து கொண்டிருக்கிறது.
விறகு அடுப்பு.
அவள் கண்களைப் புகை நிரப்புகிறது.
அவள் சின்ன நெற்றியில் வியர்வையாருக்கு. அவள் சேலை முந்தானையால் நெற்றி வேர்வையைத் துடைத்துக்கொள்கிறாள்.
சமையல் வேலைகள் வேகம் வேகமாக முடிந்துவிட்டன.
விருந்தாளுக்க பந்தியில் உக்காந்திருக்கிறார்கள்.
விருந்தாளுக்களுக்கு இலை போட்டு சோறு பரிமாரிக் கொண்டிருக்கிறாள் அந்தப் பெண்.
பந்தியில் அவள் கணவனும் உக்காந்திருக்கிறான்.
அந்தப் பெண் பந்தியில் உக்காந்திருக்கிற அவள் கணவனைப் பார்க்கிறாள். ஒரு சிறு புன்னகை செய்து அவள் கணவனை அவள் வரவேற்கிறாள்.
விருந்தாளுக்களோடு பந்தியில் உக்காந்திருக்கிற அவள் கணவன், அவள் மனைவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருக்கிறான்.
மனைவியின் அழகான மாநிறம். அழகான அவள் காதுகள், அவள் விரல்களுக்கு அழகு சேர்க்கிற கல்பதித்த மோதிரங்கள். அவளுடைய ஒளி வீசும் குறும்புப்பற்கள்.
விருந்தினர்களுக்கு இளம் புன்னகையோடு சோறு பரிமாறிக் கொண்டிருக்கிற அவன் மனைவியை அவன் காதலோடு பார்த்துக் கொண்டிருக்கிறான்.
விருந்து அவர்களை ஒன்று சேர்த்து வைத்தது.
மாங்குடிக்கிழார்
நற்றிணை 120