‘தீமை கண்டோர் திறத்தும்பெரியோர்
தாம் அறிந்து உணர்க’ என்பமாதோ;
வழுவப் பிண்டம் நாப்பண் ஏமுற்று,
இரு வெதிர் ஈன்ற வேல் தலைக் கொழு முளை,
சூல் முதிர் மடப் பிடி, நாள் மேயல் ஆரும் 5
மலை கெழு நாடன் கேண்மை, பலவின்
மாச் சினை துறந்த கோள் முதிர் பெரும் பழம்
விடர் அளை வீழ்ந்து உக்காஅங்கு, தொடர்பு அறச்
சேணும் சென்று உக்கன்றே அறியாது
ஏ கல் அடுக்கத்து இருள் முகை இருந்த 10
குறிஞ்சி நல் ஊர்ப் பெண்டிர்
இன்னும் ஓவார், என் திறத்து அலரே!

ஒரு காடு.

அந்தக் காட்டில் நெறைய மூங்கில் மரங்கள் இருக்கு. அந்த மூங்கில் மரங்கள் உயரமாக வளர்ந்திருக்கின்றன.

ஒரு விடியக் காலம்.

ஒரு இளம் பெண் யானை அந்த மூங்கில்காட்டுக்கு வந்துருக்கு.

அது சினை யானை.

அந்தச் சினை யானை மூங்கில் மரங்களை வளைத்து ஓடிக்கிறது. அந்த மூங்கில் மரங்களின் கட்டிக் குருத்துக்களை ஆவலோடு அது விழுங்குகிறது. அந்தச் சினை யானைக்கு எவ்வளவு தின்னாலும் செழிக்கவே இல்லை. அது மூங்கில் மரங்களை ஒடித்து மூங்கில் குருத்துக்களைத் தின்னுக்கிட்டே இருக்கு.

இரவு.

சினை யானைக்குச் சரியான வயிற்றுவலி.

சினை யானை வயிற்று வலியில் துடிக்கிறது. இதன் கண்களில் இருந்து கண்ணீர் பெருகி வழிந்து கொண்டிருக்கிறது. அந்தச் சினை யானை – வயிற்றுவலி தாங்க முடியாமல் அந்தக் காடே அலறுகிறமாதிரிப் பிளிறுகிறது.

அந்தச் சினை யானைக்கு ரத்தம் ரத்தமாகக் கொட்டுகிறது.

கட்டிகட்டியா அறுத்து அறுத்து ரத்தம் கொட்டிக்கிட்டேருக்கு.

சினை யானையின் கர்ப்பம் கலைந்துவிட்டன.

கந்தரத்தனார்
நற்றிணை 116