அறிதலும் அறிதியோ- பாக!- பெருங்கடல்
எறி திரை கொழீஇய எக்கர் வெறி கொள,
ஆடு வரி அலவன் ஓடுவயின் ஆற்றாது,
அசைஇ, உள் ஒழிந்த வசை தீர் குறுமகட்கு
உயவினென் சென்று, யான், உள் நோய் உரைப்ப, 5
மறுமொழி பெயர்த்தல் ஆற்றாள், நறு மலர்
ஞாழல் அம் சினைத் தாழ்இணர் கொழுதி,
முறி திமிர்ந்து உதிர்த்த கையள்,
அறிவு அஞர் உறுவி ஆய் மட நிலையே?
நாங்கள் கணவனும் மனைவியும்.
நாங்கள் எங்கள் ஊர் கடல் கரையில் நின்று கொண்டிருக்கிறோம்.
என் மனைவியின் கால் கொலுசை கடல் அலைகள் நனைக்கிறது.
என் மனைவியின் கால்கொலுசை கடல் அலைகள் நனைக்கிறது.
என் மனைவியின் பாதங்களில் விழுந்துபுரண்டு கொண்டிருக்கிற அவள் சேலையையும் கடல் அலைகள் நனைத்துக் கொண்டிருக்கிறது.
எங்களுக்கு முன்னால் ஒரு நண்டு. அது ரொம்பச் சின்ன நண்டு.
அந்தச் சின்ன நண்டு வெளியே வந்து காற்று வாங்கிக் கொண்டிருக்கிறது. எங்களைப் பார்த்ததும் குடுகுடுன்னு அந்த சின்ன நண்டு ஓட்டமா ஓடுது. என் மனைவி அந்த நண்டுக்குப் பின்னாலேயே ஓடுகிறாள்.
அந்த நண்டு குறுக்கும் நெடுக்குமாக மறிச்சி மறிச்சி ஓடிக்கிட்டேருக்கு. என் மனைவி அந்த நண்டைத் தொயந்துக்கிட்டு அந்த நண்டுக்குப் பின்னால் ஓடி ஓடி அந்த நண்டோடு சேர்ந்து மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருக்கிறாள்.
என் மனைவியை ஏச்சங்காட்டிட்டு அந்த சின்ன நண்டு ஓட்டமா ஓடி அது ஒரு நண்டுச் செலவுக்குள்ள ஒளிஞ்சிக்கிட்டுது.
எங்களுக்கு முன்னால் ஒரு ஞாழல் மரம் இருக்கிறது. அந்த ஞாழல்மரத்தின் கிளைகள் வளைந்து கடல்கரைக் குருத்து மண்ணை அது தொட்டுக் கொண்டிருக்கிறது. அந்த ஞாழல்மரம் பூவாப் பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கிறது.
அந்த ஞாழல்மரத்தின் அடியில் என் மனைவியும் நானும் நெருங்கி உக்காந்திருக்கிறோம்.
நான் என் மனைவியிடம் ஒரு ரகசியம் சொன்னேன்.
“என் சேக்காளிகள் வெளிநாட்டுக்குப் போறாங்க… என் சேக்காளிகள் போகும்போது அவுககூட நானும் போறேன்…”
ஒரு பெரிய்ய கடலைப் பார்த்துக்கொண்டு, அந்தப் பெரிய்ய கடலின் குளிர்ந்த கடல்காற்றை வாங்கிக்கொண்டு, அந்தக் கடல் கரைக் குருத்து மண்ணில் நண்டுகூட ஓடி ஓடி மகிழ்ச்சியாக விளையாடிய என் மனைவியின் முகம் வாடிவிட்டது.
என் மனைவி அந்த ஞாழல் மரத்திலிருந்து பூங்கொத்துக்களைப் பறிக்கிறாள். அந்தப் பூக்களைக் கசக்குகிறாள். கசங்கிய அந்தப் பூக்களைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கீழே போட்டுக்கொண்டிருக்கிறாள் என் மனைவி.
தொண்டைமான் இளந்திரையன்
நற்றிணை 106