எய்ம் முள் அன்ன பரூஉ மயிர் எருத்தின்
செய்ய்ம்ம் மேவல் சிறு கட் பன்றி
ஓங்கு மலை வியன் புனம் படீஇயர், வீங்கு பொறி
நூழை நுழையும் பொழுதில், தாழாது
பாங்கர்ப் பக்கத்துப் பல்லி பட்டென, 5
மெல்ல மெல்லப் பிறக்கே பெயர்ந்து, தன்
கல் அளைப் பள்ளி வதியும் நாடன்!
எந்தை ஓம்பும் கடியுடை வியல் நகர்த்
துஞ்சாக் காவலர் இகழ் பதம் நோக்கி,
இரவின் வரூஉம் அதனினும் கொடிதே- 10
வைகலும் பொருந்தல் ஒல்லாக்
கண்ணொடு, வாரா என் நார் இல் நெஞ்சே!
ஒரு ஆண் பண்ணி.
அது சரியான ஒரு காட்டுப் பண்ணி.
அந்தக் காட்டுப் பண்ணிக்கு பெதடியில் முடிகள் வாட்டசாட்டமாருக்கு.
அந்தக் காட்டுப் பண்ணிக்கு சின்னச் சின்ன கண்கள்.
அந்தக் காட்டுப் பண்ணி தினைக் கருதுகளத் திங்குறதுக்கு ஒரு பெரிய தினைக்காட்டுக்கு அது நடந்து போய்க் கொண்டிருக்கிறது.
அந்தப் பெரிய தினைக்காட்டில் ‘கண்ணி’ வச்சிருக்காக. இந்தக் காட்டுப் பண்ணியைப் பிடிக்கிறதுக்கு.
அழகான ஒரு கல் குகை மாதிரிப் பனை ஓலைகளால் வேய்ந்த ஒரு ஓலைக்குகை அந்த தினைக்காட்டில் அழகாக வேய்ந்து வைக்கப்பட்டிருக்கிறது. அந்த அழகான ஓலைக்குகையில் இருக்கிறது அந்தக் கண்ணி.
அழகான அந்த ஓலைக் குகையின் வாசல் பெருசாருக்கு. போகப் போக அழகான அந்த ஓலைக் குகை சிறுத்துக் கொண்டே போகிறது. ‘கண்ணி’ அங்கதான் இருக்கு.
அந்தக் காட்டுப் பண்ணி அந்த ஓலைக்குகைக்குள்ள அசாதாரணமாக அது நடந்து போய்க்கொண்டிருக்கிறது. அது கண்ணிக்குப் பக்கத்தில் போய்விட்டது. இன்னும் இரண்டு எட்டுக்கள் எடுத்து வைத்தால் அது கண்ணியில் மாட்டிக் கொள்ளும்.
பண்ணி தன் முன்னத்தின் காலை ஒரு காலை மட்டும் அது முன்னால் எடுத்து வைக்கிறது.
ஒரு பல்லி சடசடன்னு கூப்பிடுகிறது.
பல்லிச் சத்தத்தைக் கேட்டதும் ‘பண்ணி’ திகைத்து அப்படியே நின்றுவிட்டது.
பல்லிச் சத்தத்தை அந்தப் பண்ணி அறக்கடவுளின் வாக்காக அதை அது எடுத்துக்கொள்கிறது.
பண்ணி யோசிக்கிறது.
“அறக்கடவுள், முன்னால் போகாதே என்று எச்சரிக்கிறார் நம்மை…”
அந்தக் காட்டுப் பண்ணி தன் பின்னத்திக் கால்களைப் பின்பக்கமாக எடுத்து வைக்கிறது. அது மெல்ல மெல்லப் பெரத்தால கூடிப்பெரத்தால கூடி நடந்து நடந்து அது அந்த ஓலைக் குகைக்கு வெளியே வந்து விட்டது.
உயரமான அந்தப் பெரிய மலையில் இயற்கையான கல் குகை ஒன்று இருக்கிறது. அந்தக் கல் குகையில் அழகாகப் படுத்து அழகாக உறங்கிக் கொண்டிருக்கிறது அந்த பெரிய காட்டுப் பண்ணி.
உக்கிரப் பெருவழுதியார்
நற்றிணை 98