எம் ஊர் வாயில் உண்துறைத் தடைஇய
கடவுள் முது மரத்து, உடன் உறை பழகிய,
தேயா வளை வாய், தெண் கண், கூர் உகிர்,
வாய்ப் பறை அசாஅம், வலி முந்து கூகை!
மை ஊன் தெரிந்த நெய் வெண் புழுக்கல், 5
எலி வான் சூட்டொடு, மலியப் பேணுதும்;
எஞ்சாக் கொள்கை எம் காதலர் வரல் நசைஇத்
துஞ்சாது அலமரு பொழுதின்,
அஞ்சு வரக் கடுங் குரல் பயிற்றாதீமே.
ஒரு குளம்.
இந்தக் குளத்தில் பெண்கள் நல்ல தண்ணி எடுக்கிறதுக்கு ஒரு படித்துறை இருக்கிறது.
இந்தப் படித்துறைக்குப் பக்கத்தில் ஒரு ஆலமரம் இருக்கிறது.
இந்த ஆலமரம் கடவுள் வாழும் மரம்.
இந்த ஆலமரத்தில் ஒரு கூகை குடியிருக்கிறது.
இந்தக் கூகைக்கு அம்மாசி இருட்டிலும் கூட கண் தெரிகிறது. இந்தக் கூகைக்கு நகங்கள் கூர்மையாக இருக்கின்றன. இந்தக் கூகைக்கு
வாய் வளைந்து கொண்டிருக்கிறது. வளைந்த வாயை வைத்துக்கொண்டு இந்தக் கூகை சும்மா இருக்க மாண்டங்கு.
இந்தக் கூகை கூவிக் கூவி உறங்கிக் கொண்டிருக்கிற ஊர்க்காரர்களை எழுப்பிக் கொண்டிருக்கிறது. இந்தக் கூகை ஓயாமல் சத்தம் போட்டுக் கூவிக் கூவி என் காதலனை என்னிடம் வர விடாமல் அது என் காதலனைப் பயங்காட்டிக் கொண்டிருக்கிறது.
இந்தக் கூகை குடியிருக்கிற இந்த ஆலமரத்தில் ஒரு பெரிய விழுதில் இந்த அம்மாவாசை இருட்டில் நான் ஒளிஞ்சிக்கிட்டு உக்காந்திருக்கிறேன். நான் என் காதலனை எதிர்பார்த்துக் கொண்டு என் காதலனுக்காக நான் இங்கே உக்காந்திருக்கிறேன்.
“கூகையே”
“கூகையே”
“எங்கள் காதல் வாழ்க்கைக்கு இடைஞ்சல் பண்ணாமல் நீ உன் வாயைப் பொத்திக்கொண்டு சும்மா இரு.
“கூகையே”
“கூகையே”
உனக்குப் பிடிச்ச வெள்ளை எலியை நான் உனக்கு சுட்டுத் தாரேன். வெள்ளை அரிசியில் சோறு பொங்கி, வெள்ளாட்டுக் கறியாக்கி, நெய் கலந்து நான் உனக்குத் தாரேன்.
“கூகையே”
“கூகையே”
எங்கள் காதல் வாழ்க்கைக்கு இடைஞ்சல் பண்ணாமல் நீ உன் வாயைப் பொத்திக் கொண்டு சும்மா இரு.
பெருந்தேவனார்
நற்றிணை 83