அமுதம் உண்க, நம் அயல் இலாட்டி!-
கிடங்கில் அன்ன இட்டுக் கரைக் கான் யாற்றுக்
கலங்கும் பாசி நீர் அலைக் கலாவ,
ஒளிறு வெள் அருவி ஒண் துறை மடுத்து,
புலியொடு பொருத புண் கூர் யானை 5
நற் கோடு நயந்த அன்பு இல் கானவர்
விற் சுழிப்பட்ட நாமப் பூசல்
உருமிடைக் கடி இடி கரையும்
பெரு மலை நாடனை ‘வரூஉம்’ என்றோளே.
ஒரு காடு.
அது ஒரு மலைக்காடு.
அந்த மலைக்காட்டில் ஒரு அருவி இருக்கிறது.
அந்த அருவிக்குப் பக்கத்தில் ஒரு புதரில் ஒரு பெரிய ஆண் புலி பதுங்கியிருக்கிறது.
அந்த அருவியில் தண்ணீர் குடிக்கிறதுக்கு ஒரு ஆண் யானை வந்து கொண்டிருக்கிறது.
புதரில் பதுங்கியிருந்த ஆண் புலி திடீரென்று பாய்ந்து அந்த ஆண் யானையைத் தாக்குகிறது.
யானை சுதாரித்துக்கொண்டு புலியை எதிர்த்து அது ஆவேசமாகச் சண்டை போடுகிறது.
ஆண் புலிக்கும் ஆண் யானைக்கும் கடுமையான சண்டை.
ஆண் யானை அந்த ஆண் புலியை கொன்றுவிட்டது.
ஆண் யானைக்கு அதன் உடம்பெல்லாம் காயங்கள். பெரிய பெரிய காயங்கள். ரத்தம் வடிந்து கொண்டிருக்கிறது. அந்த ஆண் யானையால் நடக்க முடியவில்லை. அது தள்ளாடித் தள்ளாடி நடக்க முடியாமல் நடந்து போய்க்கொண்டிருக்கிறது.
பெரிய பெரிய காயங்களோடு ரத்தம் வடிய வடிய நடக்க முடியாமல் நடந்து போய்க்கொண்டிருக்கிற அந்த ஆண் யானையை வேடர்கள் தொலைவில் நின்று கொண்டு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
வேடர்களுக்கு அந்த ஆண் யானை மேல் இரக்கம் ஏற்படவில்லை.
வேடர்கள் நினைக்கிறார்கள்…
“இந்த யானையை இப்போது கொல்வது சுலபம்…”
வேடர்களின் வில்லில் இருந்து அம்புகள் சரம்சரமாகச் சீறிக்கொண்டு போகிறது. அந்த அம்புகள் காயம்பட்ட அந்த ஆண் யானையின் உடம்பை மேலும் மேலும் குத்திக் குத்திக் கிழிக்கிறது. அந்தப் பெரிய ஆண் யானையின் பெரிய உடம்பில் அவ்வளவும் அம்புகள்.
அந்தப் பெரிய ஆண் யானை வலி தாங்க முடியாமல் பிளிறுகிறது. மரண வலியில் அது கூப்பாடு போடுகிறது. அந்தப் பெரிய ஆண் யானையின் மரண ஓலம் இடியோசைப் போல் பயங்கரமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறது.
கபிலர்
நற்றிணை 65