வேர் பிணி வெதிரத்துக் கால் பொரு நரல் இசை
கந்து பிணி யானை அயர் உயிர்த்தன்ன
என்றூழ் நீடிய வேய் பயில் அழுவத்து,
குன்று ஊர் மதியம் நோக்கி, நின்று, நினைந்து,
உள்ளினென் அல்லெனோ யானே- ‘முள் எயிற்று, 5
திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல்,
எமதும் உண்டு, ஓர் மதிநாட் திங்கள்,
உரறு குரல் வெவ் வளி எடுப்ப, நிழல் தப
உலவை ஆகிய மரத்த
கல் பிறங்கு உயர் மலை உம்பரஃது’ எனவே? 10

ஒரு பெரிய ஆண் யானை.

அந்தப் பெரிய ஆண் யானையின் ஒரு பெரிய காலில் ஒருஇரும்புச் சங்கிலியைக் கெட்டியிருக்கு.

அந்தப் பெரிய ஆண் யானையை அந்த இரும்புச் சங்கிலியால் ஒரு பெரிய தூணில் கெட்டிப் போட்டுருக்கு.

அந்தப் பெரிய ஆண் யானை அது நேற்று வாழ்ந்த வாழ்க்கையையும் இன்று அது வாழ்ந்து கொண்டிருக்கிற வாழ்க்கையையும் நினைத்து நினைத்து அசை போட்டுக் கொண்டிருக்கிறது.

தன்னைப் பெத்த அம்மையோடும் அய்யாவோடும்,தன் சொந்தக்காரவுகளோடும் சேர்ந்து வாழ்ந்த கூட்டு வாழ்க்கையை அந்தப் பெரிய ஆண் யானை நினைத்து நினைத்து அசை போட்டுக் கொண்டிருக்கிறது.

அந்தப் பெரிய ஆண் யானை அதன் இளம் காளை வயதில், தன் இளம் காதலியோடு ஆண்டு அனுபவித்த மகிழ்ச்சியான நாட்களை அது நினைத்துப்பார்க்கிறது.

அருவியில் குளித்தது… சுனை நீனைக் குடித்துத் தாகத்தைத் தீர்த்துக் கொண்டது… காட்டாற்றில் ஓடுகிற பெரிய வெள்ளத்தில் நீந்தி விளையாடியது… காட்டு மரங்களின் இளம் தளிர்களையும் அப்போதுதான் பூத்த புத்தம் புதுப் பூக்களையும் வேண்டிய மட்டும் தின்னு அனுபவித்தது. எல்லாத்தையும் நினைத்துப்பார்க்கிறது அந்தப் பெரிய ஆண் யானை.

ஒரு பெரிய தூணில் இரும்புச் சங்கிலியால் தன்னைக் கெட்டி வைத்திருக்கிற இந்த அநீதியை நின்ற இடத்தை விட்டு நகர முடியாமல் நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருக்கிற இந்தத் துயரத்தை, கிடைப்பதை மட்டும், கிடைக்கிற நேரத்தில் மட்டும் தின்று வாழ வேண்டிய இந்த துன்பத்தை நினைத்து வேதனைப்பட்டு கொண்டிருக்கிறது அந்தப் பெரிய ஆண் யானை.

அந்தப் பெரிய ஆண் யானை தன் துயரத்தையெல்லாம் நினைத்துப் பார்த்து நினைத்துப் பார்த்து பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கிறது.

இளங்கீரனார்
நற்றிணை 62