உடும்பு கொலீஇ, வரி நுணல் அகழ்ந்து,
நெடுங் கோட்டுப் புற்றத்து ஈயல் கெண்டி,
எல்லு முயல் எறிந்த வேட்டுவன் சுவல
பல் வேறு பண்டத் தொடை மறந்து, இல்லத்து,
இரு மடைக் கள்ளின் இன் களி செருக்கும் 5
வன் புலக் காட்டு நாட்டதுவே- அன்பு கலந்து
நம்வயின் புரிந்த கொள்கையொடு, நெஞ்சத்து
உள்ளினள் உறைவோள் ஊரே; முல்லை
நுண் முகை அவிழ்ந்த புறவின்
பொறை தலை மணந்தன்று; உயவுமார் இனியே. 10

ஒரு பெரிய்ய காடு.

ஒரு வேடன் அந்தப் பெரிய காட்டுக்கு வேட்டையாட வந்திருக்கிறான்.

அந்தப் பெரிய காட்டில் ஒரு பெரிய காட்டு மரம். அந்தக் காட்டு மரத்தில் பட்டைகள் எல்லாம் காய்ந்து அந்தப் பட்டைகள் சில்லுச் சில்லாக வெடித்து அந்த மரப்பட்டைகள் சொரிச்சொரியாருக்கு.

அந்த மரத்தில் ஒரு உடும்பு உக்காந்துக்கிட்டுருக்கு. அந்த உடும்பு அச்சு அசலா அந்த மரப்பட்டை மாதிரியே இருக்கு.

வேடன் உடம்பைப் பார்க்கிறான்.

வேடன் மூச்சுக் காட்டாமல் பையாப்பையா நடந்து நடந்து அந்தப் பெரிய மரத்துக்குப் பக்கத்தில் அந்த உடும்புக்குக் கிட்டத்தில் போய்ட்டான். அந்த வேடன் அவன் ரெண்டு கைட்டும் அந்த உடும்பை பெலம்மாப் பிடிச்சிக்கிட்டான்.

உடும்பு திமிறுகிறது. அது எகிறி எகிறிக் குதிக்கிறது. அது தன் பெலத்தையெல்லாம் உபயோகித்து வேடனிமிருந்து தப்பிப்பதற்கு அந்த உடும்பு போராடிக்கொண்டிருக்கிறது.

உடும்பை உடும்புப் பிடியாப் பிடிச்சிக்கிட்டான் வேடன். வேடன் அந்த உடும்பை அப்படியே அலாக்கத் தூக்கிட்டான்.

உடும்பு வேடன் பைக்குள்ள இருக்கு.

வேடன் அந்தப் பெரிய பையின் வாயை இறுக்கிக் கெட்டுகிறான். வேடன் அவன் பையைத் தூக்கி அவன் தலைமேல் வைக்கிறான்.

வேடன் அவன் வீட்டில் உக்காந்துக்கிட்டுருக்கான்.

வேடனுக்கு முன்னால் ஒரு புதிய கள் கலயம் இருக்கிறது. கள்ளுக்கலயத்தில் கள் நுரை பொங்கிக் கொண்டிருக்கிறது. புதிய கலயத்தில் இருக்கிற அந்தப் புளித்த கள் அழகாக மணந்து கொண்டிருக்கிறது.

வேடன் கள் பூராத்தையும் குடிச்சிட்டு கள் கலயத்தைக் கவிழ்த்து வைக்கிறான்.

வேடன் அங்னயே படுக்கிறான்.

வேடன் இரண்டு கால்களையும் நீட்டிக்கொண்டு அவன் இரண்டு கைகளையும் விரித்து வைத்துக் கொண்டு மல்லாக்கப் படுத்திருக்கிறான். உறக்கம் அவனைத் தாலாட்டித் தாலாட்டி உறங்க வைத்துக் கொண்டிருக்கிறது.

கபிலர்
நற்றிணை 59