ஓங்கு மலை நாட! ஒழிக, நின் வாய்மை
காம்பு தலைமணந்த கல் அதர்ச் சிறு நெறி,
உறு பகை பேணாது, இரவின் வந்து, இவள்
பொறி கிளர் ஆகம் புல்ல, தோள் சேர்பு
அறுகாற் பறவை அளவு இல மொய்த்தலின், 5
கண் கோள் ஆக நோக்கி, ‘பண்டும்
இனையையோ?’ என வினவினள், யாயே;
அதன் எதிர் சொல்லாளாகி, அல்லாந்து,
என் முகம் நோக்கியோளே: ‘அன்னாய்!-
யாங்கு உணர்ந்து உய்குவள்கொல்? என, மடுத்த 10
சாந்த ஞெகிழி காட்டி-
ஈங்கு ஆயினவால்’ என்றிசின் யானே.

ஒரு தாய்.

அந்தத் தாய் விறகு அடுப்பில் சோறு பொங்கிக் கொண்டிருக்கிறாள்.

அடுப்பில் சந்தன விறகுகள் எரிந்து கொண்டிருக்கிறது.

மகள் தோழியும், மகளும் தாய்க்குப் பக்கத்தில் உட்கார்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

தாய், மகளை உற்று உற்றுக் கூர்ந்து பார்க்கிறாள்.

தேனீக்கள் மகள் மேல் மொய்த்துக் கொண்டிருக்கின்றன.

தாய் மனம் பதறுகிறது. தாய் கண்களில் கொலைவெறி தாண்டவம் ஆடுகிறது.

மகள் கண்களை உற்றுப் பார்த்துக்கொண்டு அந்தத் தாய் கோவத்தோடு கேட்கிறாள்.

‘தேனீக்கள்’ உன்னை மொய்க்கிறது இது எத்தனாவது தடவை?”

மகள், தாய்க்குப் பதில் சொல்லவில்லை.

மகள், தோழியைப் பார்க்கிறாள்.

தோழி அவளுக்கு உதவுகிறாள்.

அடுப்பில் எரிந்து கொண்டிருக்கிற ஒரு சந்தன விறகைத் தோழி அவள் கையில் எடுக்கிறாள். எரிந்து கொண்டிருக்கிற அந்தச் சந்தன விறகைத் தாயிடம் காண்பித்துக் கொண்டு தோழி சொல்கிறாள்.

“அம்மா… அடுப்பில் எரிந்து கொண்டிருந்த இந்தச் சந்தன விறகில் இருந்துதான் இந்த தேனீக்கள் வந்தது.”

கண்களில் கொலை வெறியோடு மகளிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருந்த தாயை அசாதாரணமாகச் சமாளித்த தோழிதான் இந்தக் கோவக்காரத் தாயின் மகளுக்கு ஆலோசனைகள் சொல்லி அவளுக்கு எல்லா உதவிகளும் செய்து கொண்டிருக்கிறாள்.

இந்தக் கோவக்காரத் தாயின் மகள் ஒருத்தனைக் காதலிக்கிறாள். காதலர்கள் இரவில் சந்திக்கிறதுக்கு இந்தத் தோழிதான் காதலர்களுக்கு எல்லா உதவியும் செய்து கொண்டிருக்கிறாள்.

பெருவழுதியார்
நற்றிணை 55