மறத்தற்கு அரிதால்- பாக! பல் நாள்
அறத்தொடு வருந்திய அல்கு தொழில் கொளீஇய
பழ மழை பொழிந்த புது நீர் அவல
நா நவில் பல் கிளை கறங்க, மாண் வினை
மணி ஒலி கேளாள், வாணுதல்; அதனால், 5
‘ஏகுமின்’ என்ற இளையர் வல்லே
இல் புக்கு அறியுநராக, மெல்லென
மண்ணாக் கூந்தல் மாசு அறக் கழீஇ,
சில் போது கொண்டு பல் குரல் அழுத்திய
அந் நிலை புகுதலின், மெய் வருத்துறாஅ 10
அவிழ் பூ முடியினள் கவைஇய
மட மா அரிவை மகிழ்ந்து அயர் நிலையே.
ஒரு வருசத்துக்குப் பிறகு இப்போதுதான் நான் எங்கள் ஊருக்குப் போய்க் கொண்டிருக்கிறேன்.
மழை பெய்து கொண்டிருக்கிறது.
தண்ணீர் தேங்கிய கிடங்குகளில் இருந்து தவளைகள் கத்திக் கொண்டிருக்கின்றன. தவளைகள் கத்திக் கொண்டிருப்பதால் என் தேரில் பூட்டிய என் குதிரைகளின் ‘நல்ல மணி ஓசை’ என் மனைவிக்குக் கேட்கவில்லை.
என் தேர் என் மாளிகை முன் வந்து நின்று கொண்டிருக்கிறது.
இரண்டு குதிரைகள் பூட்டிய என் தேரில் இருந்து இறங்கி நான் என் மாளிகையில் நுழைந்து கொண்டிருக்கிறேன்.
ஓடி வாராள் என் மனைவி.
என் மனைவி என்னை அவள் மார்போடு சேர்த்து அணைத்துக் கட்டிப் பிடித்துக் கொள்கிறாள்.
என் மனைவி அவள் தலைக்கு எண்ணெய் தேய்க்கவில்லை. தலைவாரி சடை பின்னவில்லை. தலையில் பூ வைக்கவில்லை. என் மனைவி குளிக்கவும் இல்லை. என் மனைவி நல்ல சேலை உடுத்தவும் இல்லை.
என் மனைவி என்னை அவள் மார்போடு சேர்த்து அணைத்துக் கட்டிப் பிடித்துக் கொண்டிருக்கிறாள்.
மழை வெறித்திருக்கிறது.
தண்ணீர் தேங்கிய கிடங்குகளில் இருந்து தவளைகள் கத்திக் கொண்டிருக்கின்றன.
குடவாயில் கீரத்தனார்
நற்றிணை 42