விரைப் பரி வருந்திய வீங்கு செலல்இளையர்
அரைச் செறி கச்சை யாப்பு அழித்து அசைஇ,
வேண்டு அமர் நடையர், மென்மெல வருக!
தீண்டா வை முள் தீண்டி நாம் செலற்கு
ஏமதி, வலவ, தேரே! உதுக் காண்- 5
உருக்குறு நறு நெய் பால் விதிர்த்தன்ன
அரிக் குரல் மிடற்ற அம் நுண் பல் பொறிக்
காமரு தகைய கானவாரணம்
பெயல் நீர் போகிய வியல் நெடும் புறவில்
புலரா ஈர் மணல் மலிரக் கெண்டி, 10
நாள் இரை கவர மாட்டி, தன்
பேடை நோக்கிய பெருந்தகு நிலையே!
ஒரு காடு.
அந்தக் காட்டில் இரவு பூராவும் மழை பெய்து கொண்டிருந்தது.
அந்தப் பெரிய மழை இப்போதுதான் வெறித்திருக்கிறது.
பொழுதும் இப்போதுதான் விடிந்திருக்கிறது.
அந்தக் காட்டில் அழகான ஒரு காட்டுச் சேவல்.
அந்தப் பெரிய காட்டில் அந்தக் காட்டுச் சேவல் ஒத்தீல நின்று கொண்டிருக்கிறது.
காட்டுச் சேவல் பார்க்கப் பார்க்க அழகாருக்கு. அந்தக் காட்டுச் சேவலின் நிறங்கள் கண்களைப் பறிக்கின்றன. வண்ண வண்ண நிறங்களில் அழகான பொடிப்பொடிப் புள்ளிகள் சேவலின் றெக்கைகளில் கண் சிமிட்டிக் கொண்டிருக்கிறது.
மழைத் தண்ணீர் வவுந்து ஓடிய பள்ளமான ஒரு ஈர நிலத்தில் காட்டுச் சேவல் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது.
சேவல் ஈர மண்ணைக் கிண்டுகிறது.
சேவல் ஈர மண்ணைக் கிண்டக்கிண்ட, ஈரமண்ணின் அடியில் இருந்து ஒரு மண் புழு மேலே வருகிறது.
தன் காலடியில் நெளிந்து கொண்டிருக்கிற ஒரு மண் புழுவை அழகான அந்தச் சேவல் பார்க்கிறது. சேவலுக்கு மகிழ்ச்சி என்றால் அவ்வளவு மகிழ்ச்சி.
சேவல் மனைவியைத் தேடுகிறது.
அழகான அந்தக் காட்டு சேவலின் கண்களுக்கு, கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் அந்தச் சேவலின் மனைவியைக் காணவில்லை.
சேவல் மனைவியைக் கூப்பிடுகிறது.
கணவன் கூப்பிடுகிற சத்தம் கேட்டதும் அந்தப் பொட்டக் கோழி ஓடோடி வருகிறது.
அந்தப் பொட்டக் கோழி தன் காதல் கணவன் அருகில் ஒட்டி நின்று கொண்டிருக்கிறது.
காட்டுச் சேவல் தன் காலுக்கு அடியில் மிதித்துக் கொண்டிருந்த அந்த மண் புழுவை மனைவியிடம் கொடுக்கிறது.
கணவன் காலடியில் நெளிந்து கொண்டிருக்கிற நீளமான அந்த மண் புழுவை அந்தப் பொட்டக் கோழி கொத்திக் கொத்தி உதறி உதறிக் கொல்லுகிறது.
மனைவி இரை தின்னும் அழகை ரசித்துக் கொண்டு பெருமை பொங்கக் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது அழகான அந்தச் சேவல்.
மருதன் இளநாகனார்
நற்றிணை 21