கிணற்றிலோ, ஆற்றிலோ, ஸ்ம்மிங்ஃபூலிலோ, குளத்திலோ அரைமணி நேரம் நீச்சலடித்தால் உடலில் நூறு முதல் ஆறுநூறு கலோரிகளை எரிக்கலாமாம். போக நுரையீரலுக்கு காற்று கிடைப்பதால் அது நன்கு விரிவடையுமெனவும், உடல் எடையானது குறையுமெனவும், ரத்த ஓட்டம் சீராக பாயுமெனவும், கை, கால் மூட்டு, கழுத்துப்பகுதி தசை நார்கள் அனைத்திலும் வலிகள் குறையுமெனவும், இப்படி பல வித நன்மைகள் உண்டெனவும் வைத்தியர்கள் சொல்கிறார்கள்.
கிட்டத்தட்ட முப்பது வருட காலங்களுக்கும் முன்பாக கிணற்று நீச்சல் அடித்துக்கொண்டிருந்த கிராமத்தவர்களுக்கு இப்படியான நன்மைகள் நீச்சலடிப்பதால் உண்டென எதுவும் தெரியாது. அதைப்பற்றியான யோசனைகளும் இராது. என் கவிதை ஒன்று ஞாபகத்தில் வருகிறது. பெண்கள் ஸ்கூட்டி ஓட்டுவதாலேயே லுக்கோமியா டோமியா என்ற நோய் வருகிறது என்று சொல்லிக்கொண்டு செல்லும் கவிதை அது. அது வழக்கமான எனது வேடிக்கை கவிதை தானென்றாலும் வைத்தியர்களைக் கிண்டலடிக்கும் கவிதை அது.
கால மாற்றத்தில் உயிர்வாழ பலவித பயிற்சிகளை வைத்தியர்கள் மேற்கொள்ளச் சொல்கிறார்கள். எட்டு வடிவில் நடக்கச் சொல்கிறார்கள். முதல் வாரத்தில் ரத்த அழுத்தம் குறைகிறதென்கிறார்கள். அடுத்த வாரத்தில் சர்க்கரை குறைகிறது என்கிறார்கள். மக்களும் நம்பி எட்டு வடிவில் தஸ் புஸ்சென மொட்டை மாடியில் நடக்கிறார்கள். இப்படி புதிய புதிய வைத்தியமுறைகள் இறக்குமதியாகின்றன. வைத்தியம் சம்பந்தமாக ஏராளமான புத்தகங்கள் வருகின்றன.
காலையில் எழுந்தால் ஒருலிட்டர் தண்ணி குடிக்கச் சொல்கிறார்கள். அதை தவறென மற்றொருவர் கூறுகிறார். எதை நம்பிச் செய்து வியாதியிலிருந்து விடுபடுவதென சனம் குழப்பத்தில் கிடக்கிறது. பேலியோ டைட் என்று முட்டைகளை மட்டும் காலை நேரத்தில் சாப்பிடுகிறார்கள். குண்டாக இருந்த மனிதர் குச்சி சைசில் மாறி போட்டோ போட்டு முகநூலில் விருப்பக் குறிகள் பெற்றுவாழ்கிறார். திடீரென உடல் இளைத்து சின்னப்பையன் கணக்காக மாறுவதெல்லாம் சரிதான். ஆனால் பின்விளைவுகள் அதற்கும் உண்டென யார் சொல்லித்தருவது? அதற்கும் வைத்தியர்கள் இருக்கிறார்கள்.
கிராமப்புறத்தில் வாழ்வதால் என் வயதையொத்த அனைவருக்கும் நீச்சல் தெரியும். அதன்பின் வந்த சிறுவர்கள் சிலரைத் தவிர்த்து ஏனையோருக்கு இன்றுவரை நீச்சல் தெரியாது. ஆனால் கிரிக்கெட், வாலிபால், கேரம் போர்டு தெரியும். சமீப பத்து வருட காலங்களில் நான் நீச்சலடித்த கிணறுகளில் தண்ணீரே கிடையாது. ஆங்காங்கே தோட்டம் தொறவுகளில் பாசனம் செய்பவர்கள் கிணறுகளில் தண்ணீர் கிடக்கிறது. ஆனால் அதுவும் ரொம்பவும் கீழே. நீச்சலடிக்க ஒவ்வொரு கிணறுகளிலும் தண்ணீர் கிணற்றின் முக்கால்வாசி அளவு மேலே இருக்க வேண்டும்.
நான் நீச்சல் கற்றுக்கொண்ட காலம் எழுபதுகளின் இறுதியாக இருக்கலாம். என் ஊரின் கிழக்கே ஒருகிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கிணறு அது. கிணற்றில் தண்ணீரை பாசனத்திற்குப் பறியில் சேந்திவந்து குட்டிவாய்க்காலில் ஊற்ற, மாடுகள் உழைத்த காலமது. கிணற்றைச் சுற்றிலுமே தென்னை மரங்கள், தாழம்பூ மரம், ஆலமரம் என்று பகுதியே குளிர்ச்சி நிரம்பியிருக்கும். முனுசாமி என்கிற முனியனிடம் அப்பாவின் சிபாரிசில் கற்றுக்கொண்டது.
நீச்சல் கற்றுக்கொள்ள சுரைக்காய் செடியிலிருந்து பறிக்கப்பட்ட காய்ந்துபோன காயில் கயிறுகளை வரிந்திருப்பார்கள். அதை வயிற்றில் கட்டிக்கொள்ள வேண்டும். கிணற்றினுள் நாம் குதித்தாலும் மூழ்க மாட்டோம். தேர்ந்த நீச்சல்க்காரன் சுரைப்புரடைக் கட்டி நீச்சல் பழகும் ஆளை ஒரு அழுத்து நீரினுள் அழுத்தினாலும் உடனே மேலே வந்துவிடலாம். என்ன புதிய ஆள் பயத்தில் தண்ணீரை வயிறுமுட்ட குடித்துவிடுவார்.
ஆசை மிகுதியில் முதல் நாள் வீட்டிலிருந்தே சுரைப்புரடையைக் கட்டிக்கொண்டு கிணறு நோக்கி ஓடினேன். அண்ணன் மதிய நேரத்தில் ஆலாமர நிழலில் அமர்ந்திருந்தார். ‘வாடா குஞ்சு! மூனு நாள்ல புரடைய அவுத்து வீசீட்டு நீச்சலடிக்கிறாப்ல பழக்கி உட்டுடறேன் வா!’ என்றவர் கிணறு நோக்கி நடந்தார். அந்தக் கிணற்றில் இறங்குவது பெரிய சர்க்கஸ் வித்தைக்கு ஒப்பானது. சருக்கினதுபோல அமர்ந்து செல்லமுடியும். கொஞ்சம் விரைவாக சரித்துக்கொண்டு சென்றால் நேரே தண்ணீருக்குத்தான்.
ஆசையாக ஓடி வந்தவன் சருக்கும் படலத்தில் விழி பிதுங்கினேன். அண்ணன் ஓட்டமாய் ஓடி தண்ணீரில் கத்தி போட்டார். (டைவ்) தண்ணீரில் விழுந்தவரை நான்கைந்து நிமிடங்கள் காணவில்லை. அண்ணன் புலுக்கை போட்டுட்டாரோ? என்றே நினைத்தபடி தண்ணீருக்கு அருகாமை வந்து நின்றேன். அது நான்கு ஆட்கள் நிற்குமளவு சொரிபிடித்தப் பாறை. நீரினுள்ளிருந்து மேலே வந்த அண்ணன் வாயினுள் இருந்த தண்ணீரை ‘புரீச்ச்’ சென மேலே பார்த்து சின்னப்பயை உச்சா போவதுபோல் பீச்சினார். ‘வா! தண்ணீல எட்டிக் குதி!’ என்றார்.
தண்ணீர் பயம் வந்துவிட்டது எனக்குள். இருந்தும் குதித்தேன். கையைக் கண்டபடி ‘தடீர் தடீ’ரென நீரின் மேற்பரப்பில் தட்டினேன். பத்து நிமிடம் தட்டியும் குதித்த இடத்திலேயே கிடந்தேன். அண்ணன் தடீர் தடீரென கிணற்றையே நீச்சலடித்தபடி ரவுண்டு போட்டுக் கொண்டிருந்தார். எனக்கு கைகள் வலியெடுக்க ஆரம்பித்துவிட்டது. குதித்த இடத்தின் முக்கில் மேலே ஏறிக் கொள்வதற்கு வழி இருக்கிறதால் அதை நோக்கி கைகளை அடித்தேன். போக மனதில் பயம் பிடித்துக்கொண்டது.
அண்ணன் கையை இப்படி முன்னால் நீட்டி பின்னால் தண்ணீரை இழுத்தால்தான் முன்னால் போக முடியுமென்ற பாடத்தை சொல்லிக்கொடுத்தார். அதன்படி செய்தேன். கொஞ்சமாய் முன் நகர்ந்தேன். என் கால்கள் இரண்டும் கிணற்றினுள் காணாமல் கிடந்தன. அடுத்து கால்களை மேலே பொறவுக்கு தூக்கி… என்னைமாதிரி தண்ணீரை அடி! என்றார். என்ன முக்கியும் என் கால்கள் மேலே வருவேனா என்றது. கெஸ்சு கெஸ்சு என ஒரு வழியாக முக்கு வந்து எழுந்து நின்றுகொண்டேன். அண்ணன் புன்னகைத்தார். ‘மூச்சு வாங்குதா?’ என்றார். ‘கொஞ்சம்’ என்றேன். அது வாங்கீட்டுப் போச்சாது மறுக்காவும் ‘குதி குஞ்சு’ என்றார்.
அண்ணன் கிணற்றினுள் கிடக்கும் தைரியத்தில் மீண்டும் திண்டுக்கு ஏறி கிணற்றினுள் குதி போட்டேன். மூக்கில் தண்ணீர் நேராக ஏறி மண்டைக்குள் போய்விட்டதுபோல. மண்டை தீ மாதிரி எரிந்தது. அடுத்தமுறை குதி போடுகையில் மூக்கை ஒரு கையால் பொத்திக்கொள்ள வேண்டுமென நினைத்துக் கொண்டேன். அண்ணன் இரண்டாம் நாள் என்னைக் கிணற்றின் உச்சியிலிருந்து தூக்கி வீசினார்.
கீழே வந்து விழுகையில் வயிற்றில் சடீரென மோதி வயிறு பூராவும் சிவந்து போய்விட்டது. அண்ணன் அன்று ஆக்ரோசமிக்கவராய் மாறிப்போனார். “சாமி சாமியாய் இருப்பேண்ணா! என்னைத் தொலையில இருந்து தூக்கிப் போடாதீண்ணா!” என்கிற அளவு நடந்தேறி விட்டது. அண்ணன் மினியப்ப அவதாரமெடுத்து அன்று கிணறு பற்றியான என் பீதியை குறைத்துவிடும் நோக்கில் நடந்துகொண்டதால் அடுத்த நாள் அவரே என் வீடுவந்து கிணறு நோக்கி தூக்கிப் போகும் நிலை வந்துவிட்டது!
‘அந்த தாயொலி என்னைத் தொலைக்கல்லுல இருந்து தூக்கித் தூக்கி கெணத்துக்குள்ளாற வீசுறான்பா!’ என் இறைஞ்சுதல்கள் எதுவும் என் அப்பாவிடம் செல்லுபடியாகவில்லை. அவரும் அன்று கிணற்றுக்கு வந்துவிட்டார். இருவரும் சேர்ந்து அன்று புரடை இல்லாமலேயே நீச்சல் அடிக்கும்படி செய்துவிட்டார்கள். கண்கள் சிவந்துபோய், கைகளிலெல்லாம் கிழவியின் கை போல் தோல் சுருங்கிக்கிடந்த சமயம் நான் நீச்சல் கற்றுக்கொண்டாகிவிட்டது.
நீச்சல் பழகியான பின் வீட்டில் மீண்டும் கெடுபிடி கிளம்பிவிட்டது. ஏற்கனவே ஊருக்குள் சென்று உள்ளூர் ஜோட்டாள்களுடன் ஆட்டமாடக் கூடாது என்பது வீட்டில் முதல் விதி. என் வீட்டின் நேர் எதிர்க்கே அரைப்பல்ராங் தூரத்தில் கிணறு ஒன்றிருக்கிறது. என் பள்ளித் தோழனின் தோட்டமது. மதிய நேரத்தில் சிறுவார்களின் கூச்சல்கள் நிரம்பிய கிணறு அது. ஆய் போய்விட்டு அந்தக் கிணற்றில் கழுவினால்கூட சளிப்பிடித்துக்கொள்ளும் என்பார்கள். சப்தம் பெரிதாக இருக்க இங்கே கெடுபிடியில் கிடந்த நான் டிமிக்கி கொடுத்துவிட்டு ஓடினேன். திரும்பி வருகையில் நாலு மிதிதானே! வாங்கிக் கொண்டால் போயிற்று. அதற்காக நண்பர்களோடு நீச்சல் அடிக்காமல் இருப்பதா?
என் நண்பனின் தந்தையார் ‘தாயோலிங்களா! ஓடுங்கடா!” என்று பல்லைக் கடித்துக்கொண்டே கற்களை எடுத்து அவ்வப்போது கிணற்றினுள் வீசி எறிவார். அவருக்கு சாலையில் டீக்கடை இருந்தது. இருந்தும் தோட்டம் பக்கம் வந்தால் இப்படியான காரியம் செய்வார். நண்பன் அவரை ‘அது வந்துங்கய்யா, இல்லீங்கய்யா’ என்று ஐய்யா போட்டே அழைப்பான். அது மற்ற தந்தைமார்களைப்போல அவர் இல்லாமல் கிழ வடிவெடுத்துவிட்டதால் அப்படி அழைக்கிறானோ என்றே நினைத்துக்கொள்வேன்.
கிணற்றினுள் தொட்டு விளையாட்டு நடக்கும். அதில் கலந்துகொள்ளுமளவு சாமார்த்தியசாலி அல்ல நான். தண்ணீருக்குள் அடியாளத்தில் சென்று மண் எடுத்து வருதல் என்பதெல்லாம் என்னால் இயலாத காரியம். தண்ணீரினுள் கொஞ்சம் தூரம் உள்ளே சென்றாலே கப்பென காதுகள் அடைத்தது போன்றிருப்பது எனக்குப் பிடிப்பதில்லை. தம் கட்டும் (நீண்ட நேரம் மூச்சை அடக்கி வைத்திருப்பவர்கள்) சாமார்த்தியம் மிக்கவர்கள் தொட்டு விளையாட்டில் கலந்துகொள்வார்கள்.
பெரியவர் ஏன் கற்களை எடுத்து வீசுகிறார் கிணற்றினுள் குளிப்பவர்கள் மீது? என்ற கேள்விக்கு தோட்டக்கார நண்பனே பதில் சொன்னான். கிணற்றில் அத்தனை பேர் குதித்தாடினால் சேறு குழம்பி புட்பால் சட்டியில் அடைத்துக்கொள்ளுமாம். மோட்டார் போடுகையில் தொந்தரவு வருவதால் அப்படி, என்றான். சேறு கிளம்பும் அளவு தண்ணீர் கீழே கிடந்தால்தானே! தண்ணீர் அரைத்தொலை தாண்டிமேலே கிடக்கிறதே! என் தந்தையாரிடம் அன்று பொது மாத்து கிடைத்தது.
தனியே நான் நீச்சல் பழகிய கிணற்றிலேயே தனியே சென்று குதி என்றார். தனியே சென்று நீச்சலடிப்பதா? பய உணர்வுதான். அமைதியான கிணற்றில் தண்ணீர் பாம்புகள் சுற்றிக்கொண்டேயிருக்கும். போக உள்ளூர் பொம்பளை கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொள்ள பாதாளசோதி போட்டு பிணத்தைமேலே இழுத்தார்கள். பிணம் மேலே வருகையிலிருந்து படிக்கட்டில் நின்றிருந்தவர்கள் இழுத்து படிக்கட்டில் வைத்ததை கிணற்றின் மேலிருந்து பார்த்ததிலிருந்து பயம் அந்த சாலைவழியாக செல்லும் போதெல்லாம். பெண் பிணம் முழுதாக வந்திருந்தால் பயமிருந்திருக்காதோ என்னவோ! கிணற்றிலிருந்த நண்டுகள் உதடுகள், காது, மூக்கென சாப்பிட்டுவிட்ட பிறகு விகாரமான தோற்றம் பிணத்திற்குக் கிட்டியிருந்தது. தனியே குளித்தால் அந்தப் பிணத்தின் ஞாபகம் பயமுறுத்தியது.
கிணற்றில் குளிப்பதற்கு, மட்டுமே வரும் ஆட்கள் இருக்கிறார்கள். மிகவும் பொறுப்புமிக்க மனிதர்கள் அவர்கள். இதில் சில பெரியவர்களும் அடக்கம். ஷாம்பு என்கிற களிம்பை ஊருக்கு முதலாக அறிமுகப்படுத்தியவரில் ஒருவன் துரைச்சாமி. கையில் பிடித்துக்கொள்ளுமளவு அழகான ப்ளாஸ்டிக் டப்பி அது. டவுனிலிருந்து வாங்கி வந்ததாய் சொல்வான். சோப்பை மட்டுமே கண்டிருந்த நண்பர்களுக்கு அந்த ஷாம்பு அதிசயப் பொருளாய்பட்டது.
துரைச்சாமி யார் தலைக்கும் ஷாம்ப்பை துளி அளவு கூடத் தரமாட்டான். மஞ்சள் வர்ணத்தில் உள்ளங்கையில் ஊற்றி அதிபயங்கர நுரையுடன் விசில் போட்டுக் கொண்டு டைவ் போடுவான். காதின் மேல் முடிகள் மறைக்க தலையைத் துவட்டி விட்டு ஸ்டெப் கட்டிங் போட்டிருந்தவன் வெய்யிலில் நின்றான் என்றால் அவன் தலைமுடிகள் பஞ்சு போல இருப்பதை அனைவரும் கண்டிருக்கிறோம். என்ன கொடுமை என்றால் இன்னமும் மற்றவர்களைப் போல தலைமுடி வெட்டுவதில் அவனுக்கு வேறு ஸ்டைல்களே தெரியாமல் ஹிப்பி ஸ்டைலிலேயே நிற்கிறான். அவன் பெற்ற ஒரு பிள்ளையையும் கட்டிக் கொடுத்து அது குழந்தை பெற்று தாத்தாவும் ஆகிவிட்டான் இப்போது.
ஷாம்பு தரமாட்டேன் என்கிறானே என்ற வயிற்றெரிச்சலில் இருந்த நண்பர்கள் கிணற்றுக்கு சொந்தக்காரனிடம் போட்டு வைத்து விட்டார்கள். அவன் துரைச்சாமியிடம் கொந்தளிப்பாய் சொல்லி விட்டான். “தொரெ! இனிமே எங்க கெணத்துல ஷாம்பு போட்டு குளிக்கறதுன்னா வராதே! வேற கெணத்துக்கு போயிரு. தண்ணி கெட்டுப் போயிரும்” ஆனாலும் துரைச்சாமி அவன் சொன்னதை காதில் போட்டுக் கொள்ளவே இல்லை.
டைவ் அடிப்பது தான் சிறப்பு என்றிருக்கையில் குட்டியாக்கரணம் போடுவதும் சாமார்த்தியம் தான் என்பதை சொல்லிக் கொடுக்க வெளியூர் நண்பன் ஒருவன் வந்தான் உள்ளூர் கோவில் திருவிழாவின் போது. தொலையிலிருந்து அவன் குதிக்கையில் ஒரு கரணமடித்து நேராக வந்து தண்ணீருக்குள் நுழைந்தான். அதை முயற்சித்து முதுகு பழுத்தது தான் எனக்கு நடந்தது. என் மற்ற ஜோட்டாள்கள் குறைவான தூரத்தில் பல்டி போட்டுப் பழகிவிட்டார்கள். நான் தொலையிலிருந்தே அதை முதலாக முயற்சித்ததால் முதல் முயற்சியிலேயே சாகசம் தோல்வியில் முடிந்தது.
மாரத்தான் ஓட்டம் என்பது தரையில் மட்டுமே ஓடுவது என்றிருக்க தண்ணீரிலும் மாரத்தான் நீச்சல் இருக்கிறது என்பதெல்லாம் 1994 ல் தான் தெரிந்தது. ஈரோட்டில் பிறந்த குற்றாலீஸ்வரன் தன் பதிமூன்றாம் அகவையில் ஆங்கிலக் கால்வாயை நீச்சலடித்துக் கடந்து சாதனை படைத்தான். இலக்கியம் என்றால் புதுமைப்பித்தனை பேசத்துவங்குவது போல நீச்சல் என்று பேசினால் ஞாபகத்திற்கு வரும் பெயர் குற்றாலீஸ்வரன். 1996-ம் ஆண்டு இந்திய அரசால் குற்றாலீஸ்வரனுக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.
அந்த வருடத்தில் கோபியில் புதிய நண்பர்களுடன் ஆற்றில் நீச்சல் போட தயங்கி ‘சளியால் அவதியுறுகிறேன்’ என்று பொய்க் காரணம் சொல்லி விட்டு ஓரம் ஒதுங்கி நின்று விட்டேன். ஆற்றில் நீச்சல் அடிப்பது சுலபமல்ல! கைகளும் கால்களும் கிணற்று நீச்சலில் செயல்படுவதை விட விரைந்து செயல்பட வேண்டும்.
இப்படியிருக்க என் ஊரின் தெற்கே ஒரு கிராமத்தில் நான்கு வருடம் முன்பாக அந்த கிராமத்தைச் சேர்ந்த நண்பர்களுடன் கிணற்று நீச்சல் அடித்ததே கடைசி. இனி நீச்சல் போடுவதற்கு வாய்ப்பு வருமா என்பது என்பது மழை பெய்வதை பொறுத்து இருக்கிறது. ஊரைச்சுற்றிலுமிருந்த பாறைக்குழிகள், மற்றும் சாலையோரக்குழிகள் எல்லாம் நிரம்பி ஒரம்பெடுத்த காலமெல்லாம் போய் விட்டது. குளம் ஏரி இவைகள் எல்லாம் மரங்களால் நிரைந்திருக்கின்றன. குளம் காடாகி விட்டது. குளத்தினுள் டில்லிமுள் செடிகளும், கருவேல மரங்களும் உயர்ந்து நிற்கின்றன.
வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு என் பையனுக்கு சொரப்புரடை கட்டி அந்த கிராமக் கிணற்றில் விட்டு விட்டேன். இருந்ததோ ஒரு சொரப்புரடை. அந்த கிராமத்து பொடியான்களும் நீச்சல் கற்றுக் கொள்வதில் ஆர்வமாயிருக்க ஆளிற்கு அரை மணிநேரம் விகிதம் பழகத் துவங்கினார்கள். பையன் என்னைப் போன்றெல்லாம் தண்ணீருக்கு பயப்படவில்லை. போக உயரத்திலிருந்து குதிப்பதில் ஆர்வம் காட்டினான். நான்கு நாட்கள் புரடையோடு நீந்தியவன் ஐந்தாம் நாள், போலாமாப்பா? என்று கேட்ட போது, “இனி அந்தக் கிணத்துல குளிக்க நாம் போக முடியாது’ என்றேன். ‘ஏப்பா?’ என்றேன். ‘கெணத்துக்காரர், எவனும் கெணத்துக்குள்ள குளிக்கப்படாதுன்னு சொல்லிட்டாராம்!’ “கெணத்துல நீச்சல் பழகினா என்னப்பா?’ என்றவனுக்கு அதிலுள்ள அரசியல் சிக்கல்களைப் பற்றி நான் எதுவும் சொல்லவில்லை.
என் பையனின் நீச்சல் பழகும் ஆசையில் மண் விழுந்தது. இதை எழுதிக் கொண்டிருக்கையில் எப்படியேனும் அவனுக்கு நீச்சலை கற்றுக் கொடுத்து விட வேண்டுமெனத்தான் நினைக்கிறேன். இந்த வானம் மழையைக் கொட்ட ஏனோ பல வருடங்களாக யோசித்துக் கொண்டேயிருப்பது எதனால் என்பது தெரியவில்லை. இங்கு ஒரு சுனாமி வருவதற்கான வாய்ப்புகள் இல்லையென்பதால் இப்போதைக்கு கொங்கு மண்ணில் யாருக்குமே நீச்சல் அவசியமில்லை.
விவசாய பூமியாக இருந்த மண் நல்ல விலைக்குப் போய்க்கொண்டிருப்பதால் யாருக்குமே நீச்சல் அவசியமில்லை. எனக்குத் தெரிந்து நல்ல குடிநீரைக் கொடுத்துக் கொண்டிருந்த கிணறுகள் ஃபுல்டோசரால் நிரவப்பட்டு பெரியார் நகர், லட்சுமி நகர் என்று நின்று, பின்பாக அதே இடத்தில் மளிகைக் கடையும், சில்க் பேலஸும் என்றாகி நின்றுகொண்டிருக்கின்றன. மளிகைக்கடைக்காரனும் சில்க்பேல்ஸ்க்காரனும் வெளியூர் ஆட்கள். அவனிடம் ஜாமான் வாங்குபவர்களும் நம்மூர் ஆட்கள் அல்ல. ஒரீசாவிலிருந்து பஞ்சம் பிழைக்க வந்த சிவந்த நிற சனங்கள். விவசாய ஆசையை மனதில் தக்க வைத்திருக்கும் கொஞ்சத்திற்கும் கொஞ்சமான சனம் வேண்டுவதெல்லாம் மழையை மட்டுமே!
நீச்சல் உடல் உறுப்புகளை சீர்ப்படுத்த அல்ல! அது மனமகிழ்ச்சிக்கு! கராத்தே மாதிரியான தற்காப்பு கலையுமல்ல அது.