சினிமா என்பது ஒரு இயக்குனரின் ஊடகம். அது அவரது கதை மற்றும் அவரது பார்வை. அது சிறப்பான கதையெனில் மக்கள் அதில் தங்களை இணைத்துக் கொள்வர்.
– நடிகர் விக்கி கௌஷல்
காதல் மனிதனின் பண்பாடு. அது கலாச்சாரத்தின் ஒரு பகுதி. எப்படி வாழ்ந்தார்கள் என்பதற்கான சாட்சிய ஆரம்பம். உணர்வுகளின் வழிபாடு. ஒருவருக்கொருவர் காட்ட விழைகிற உச்சபட்ச மரியாதை. பரஸ்பரம் பேரன்பு என்பதன் சுருக்கப் பெயர் காதல். காதலைவிட நுட்பமான சிறப்பான இன்னொன்று காதலுக்கான காத்திருத்தல். இரண்டு மனங்களும் நன்கு அறிந்து கொண்ட பிறகும் பலகாலம் என்ற ஒற்றை சம்மதச்சொல்லை உதிர்த்துவிடாமல் குழம்பித் தவிப்பது பெரும் சுகம். அது குழப்பமல்ல. மாறாக பதம் காணும் வரையிலான கொதியூட்டல். இதற்கு மேல் தாளாது எனும் நிலையில் தானாய்ப் பொங்கிப் பெருகும் காதல் பெருவெள்ளம் முன் விநாடி வரை அலையலையாய்ப் பிரியும்.
காதலை சுவாரசியமாக்குவது அதன் எல்லா தருணங்களும்தான் எங்கே எப்படி சந்தித்துக் கொண்டார்கள் என்பதில் தொடங்கி என்னவெல்லாம் என்ன வரிசையில் எப்படியெல்லாம் நிகழ்ந்தது எனும் வரைக்கும் காதல் தன்னளவில் ஒரு முழுமையான திரைக்கதையாகவே காலம் காலமாய்த் தொடர்ந்து வருவது. காதலின் உட்பொருள் ஒன்றுதான். யார் அந்தப் பாத்திரங்களை ஏற்கிறார்கள் என்பதுவும் என்னவெல்லாம் நிகழ்ந்தன என்பதுவும் மாத்திரமே புதியது. இது காதலின் நியமம். திரைப்படங்களின் முதற்கடவுள் காதல்தான். காதலை விதவிதமாய்க் காட்டுவதற்கான செலுலாய்ட் ஆலயம்தான் திரைப்படம்.
இலக்கியத்துக்கு அருகே திரைப்படம் வருவதற்கான முதற்சாத்தியமாகக் காதலையும் அதனொற்றிய பேரன்புமான கதைகள் உதவுகின்றன. காதல் படங்கள் காதலிக்கக் கற்றுக் கொடுக்கின்றன என்பதில் உண்மை இல்லாமல் இல்லை. திரைப்படம் கற்பிக்கிற மாபெரும் நளினங்களில் முதன்மையானதும் தீமையற்றதுமானது காதல். காலம் காலமாகத் திரைப்படங்களுக்கும் நிசவாழ்க்கைக் காதல் கதைகளுக்கும் இடையிலான அன்புப் பிடிமானம் நெகிழ்வூட்டக்கூடியது. முதன் முதலில் பார்த்த படம் என்பது வெறும் கேள்வியல்ல. இரு மனங்கள் சங்கமிக்கிற சன்னிதியாகவே திரை அரங்கங்கள் திகழ்ந்தன. காதலிக்கும்போது அமர்ந்த அதே சீட்களில் மறுபடியும் அமர்ந்து படம் பார்ப்பதை காதலின் கொண்டாட்டமாக நினைப்பவர்கள் இன்றும் உண்டு.
மனித உணர்வுகளின் மென்மையான பக்கங்களை கிட்டச் சென்று தரிசிப்பதற்கான பெருவாய்ப்பாகத் தன் படங்களை அமைத்துக் கொண்டவர் வஸந்த். கே.பாலச்சந்தரின் பட்டறையிலிருந்து உருக்கொண்டு வந்த வஸந்த் தன் முதல் படத்திலேயே பெரும் அதிர்வை உண்டாக்கியவர்.கேளடி கண்மணி அப்படியான பெருவெற்றிப் படம். அடுத்தடுத்த படங்களின் மூலம் தனக்கென்று தனிப் பாணியை உருவாக்கிக் கொண்டார் வஸந்த். அவரது மனிதர்கள் நாம் எளிதாக சந்திக்கக் கூடியவர்கள். அவர்களுடைய மெல்லிய நூலினாற் பின்னப்பட்ட உலகத்தை அருகே நின்றுபார்ப்பதற்கான கண்களாகவே தன் திரைக்கதைகளை அமைப்பது வஸந்தின் வழக்கம்.
கே.பாலச்சந்தர் விளிம்பு தாண்டி வழியும் திரவமெனத் தன் மாந்தர்களைக் கண்டறிவார் என்றால் வஸந்த் அவர்களுக்கு முந்தைய வரிசையைக் கட்டமைப்பார். கே.பாலச்சந்தர் மற்றும் வஸந்த் இருவரின் கதாமாந்தர்களுக்கு இடையே நிலவக்கூடிய மெல்லிய வித்யாசங்களை உற்று நோக்குபவர்களுக்கு இன்னும் கை நிறையக் கதைகள் கிடைக்கக்கூடும். கே.பியின் பல நுட்பங்கள் வஸந்த் வழி தொடர்ந்தது கூறத்தக்கது. வஸந்தின் திரைக்கதைகள் நில்லாநதிகளாய் நீடூழிப் பாய்பவை. செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட எந்தவொரு திருப்பத்தையும் அவற்றினூடாகக் காண்பதற்கில்லை.
வஸந்த் இயக்கி ப்ரமிட் நடராஜன் தயாரித்த ரிதம் அவரது இயக்கப் படங்களில் முக்கியமான ஒன்று. ஏ.ஆர்.ரஹ்மான், வைரமுத்து, ஸ்ரீகர் ப்ரசாத், பி.எஸ்.வினோத் என தொழில் நுட்பச் செறிவுடனான குழுவின் உதவிகரத்தோடு நடிகர்கள் அர்ஜூன், மீனா, நாகேஷ், மோகன்ராமன், ரமேஷ் அரவிந்த், மணிவண்ணன், வையாபுரி, வத்ஸலா, அஜய்ரத்னம் எனப் பெரிய கூட்டமே படத்தில் நிறைந்தார்கள். ஜோதிகா சின்னதொரு பகுதி தோன்றிச் சென்றார்.
திரைக்கதையின் பின்புலம் அதன் பாதிப் பங்கை வகிக்கிறது. கதாபாத்திரங்களின் குணமும் அவர்களுக்கிடையிலான முரணும் படத்தின் முக்காலே மூணு சதத்தை நிரப்பிவிடுகிறது. அழகான க்ளைமாக்ஸ் நோக்கி விரைந்தோடுகிறது படம் என்பது வஸந்தின் படங்கள் எல்லாவற்றிலும் மெய்படக்கூடிய கூற்று. மும்பை என்பதைக் கதைக்களமாக்கியதன் மூலம் சென்று பார்த்திராத நிலத்தை ரசிகனுக்கு மெல்ல ஒரு சுற்றுலா வழிகாட்டி போலப் படத்தின் ஆரம்பம் காட்சிப்படுத்தி வருகிறது. சம்பவங்கள் வளர்கையில் காண்பவனுக்கு மும்பை பரிச்சயமும் அன்னியமும் கலந்த பரவசமாகத் தோன்றத் தொடங்குகிறது.
இரண்டு பொது மனிதர்களுக்கிடையே அன்னியம் உடைந்து மெல்லப் பூக்கும் சினேகிதம் பெருநகரங்களில் மனிதர்களை இணைப்பதற்கென்றே ஒரே ஊர் ஒரே மொழி ஒரே ரசனை எனத் தொடங்கிப் பல உப நுட்பத் தகவல்கள் தோன்றுகின்றன. இவை யாவும் அவரவர் சொந்த நிலத்தில் சாத்தியப்படாது என்பது சற்றுத் தள்ளி நிற்கும் நிசம். சினிமாவுக்கென்றே வழக்கமாக நிலவக்கூடிய அதீதத்தை புனைவின் வழி நிசம் போலாக்குதல் என்பதெல்லாம் தேவைப்படாமல் இயல்பாகவே மெல்ல நிசமாகும் புனைவுத் தன்மை ரிதம் படத்தின் பெரும்பலம். சொல்ல முடியாத அறிவித்துக் கொள்ளாத காதலற்ற காதல் இப்படத்தின் நாயகன் மற்றும் நாயகி இருவருக்கும் இடையே நிலவுகிறதை நன்கு பார்ப்பவர்களின் மனசுகளில் பதியச் செய்கிறார் வஸந்த், க்ளைமாக்ஸ் வரைக்கும் விலகியும் அடைந்தும் மறுபடி விலகியுமாய்த் தொடர்கிற காதலாட்டம் கடைசியில் ஒன்று சேர்வதோடு பூர்த்தியாகிறது.
சொல்லப்பட்ட விதம் ரிதம் படத்தைப் பேசுபொருளாக்குகிறது. வஸந்த் தனக்கென்று கைக்கொள்ளும் திரைமொழியும் அவரது மனிதர்கள் பேசிக்கொள்ளக்கூடிய சற்றே மிகை எதார்த்தம் கசியும் வசனங்களும் கதையின் ஓட்டத்தினூடே எவ்விதத்திலும் துருத்தாத நகைச்சுவையும் சின்னஞ்சிறிய மனிதர்களின் உபகதைகளும் ரிதம் படத்தின் பலங்கள்.
இரயில் இந்தப் படத்தில் ஒரு கதாபாத்திரம். அர்ஜூனின் அப்பா 35 வருடங்கள் ஸ்டேஷன் மாஸ்டராக இருந்து ஓய்வு பெற்றவர்.ஒரு இரயில் விபத்தில் மீனா தன் கணவர் ரமேஷ் அரவிந்தையும் அதே விபத்தில் அர்ஜூன் தன் ப்ரியத்துக்குரிய ஜோதிகாவையும் பறிகொடுக்கின்றனர். இருவரும் சந்தித்துக் கொள்வது மும்பை பெருநகரத்தின் மெட்ரோ ரயில் நிலையங்களில் அடுத்தடுத்து ரயில் தவிர்க்கமுடியாத பிடிவாத யானையாகவே படமெங்கும் வலம் வருகிறது. இந்தியா எனும் பெரிய தேசத்தின் பாசத்திற்குரிய யானையும் ரயிலென்பதை நினைவில் கொள்ளமுடியும். பல கதைகளின் ரயிலைத் தவிர்த்தால் கதைகள் மாறும் என்பதே மெய்.
எப்படியும் சேர்ந்து விடுவார்கள் என்பது யூகிக்கத் தேவையற்ற நிசம். அப்படி ஓபன் ரிஸ்க் உள்ள படங்களை இயக்குவது உண்மையிலேயே பெரும் சவால்தான். வஸந்த் அப்படியான படங்களைப் பார்த்துப் பார்த்துச் செய்வதில் ஸ்பெஷலிஸ்ட். வஸந்த் இந்தியத் திரை உலகத்தில் மிக அழகாகத் திரைப்பாடல்களைப் படமாக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர். அவரது பாடல்கள் கேட்குமின்பத்தை சவால் செய்தபடி பார்க்கும் அனுபவமாய் விரிபவை. எந்த ஒரு பாடலையும் தனியொரு படமாகவும் அதே நேரத்தில் மெயின் பிக்சரின் ஓடுபாதையிலிருந்து விலகாமலும் ஆக்கித் தருவது அவரது மேதமை. இந்தப் படத்திலும் பஞ்சபூதங்களைப் பாடுபொருளாகக் கொண்டு வைரமுத்து எழுதி ஏ.ஆர்.ரஹ்மான் இசைத்துத் தந்த பாடல்களை வஸந்த் படமாக்கியதன் மூலம் தனதாக்கினார். அதிலும் தீம்தனனா பாடலும் காற்றே என் வாசல் வந்தாய் பாடலும் இன்றும் தொலைக் காட்சி சானல்களைத் திருப்பவிடாமல் கண்களைச் சிறையெடுக்கின்றன.வஸந்தின் பாடல்களில் ஒவ்வொரு வரியும் ஒரு குறும்படம் எனலாம்.தகும்.
காதலை அதற்குரிய மாண்புடன் படமாக்கியவர்களில் வஸந்த் ஒருவர். காதல் என்பது குடும்பத்திற்கு வெளியே நிகழும் அதீதம் அன்று. மாறாக அது ஒரு மேலதிக உறவு என்பதாகக் காதலுக்கான பிரதிவாதத்தை நிகழ்த்திய அழகிய திரைப்படம் ரிதம்.