மகிழ்ச்சியான குடும்பங்கள் அனைத்தும் ஒரே மாதிரியானவை; ஒவ்வொரு மகிழ்ச்சியற்ற குடும்பமும் அதன் சொந்த வழியில் மகிழ்ச்சியற்றவை.
-டால்ஸ்டாய் (அன்னா கரீனினா நாவலின் தொடக்க வரியில்)
நல்லவன் வாழ்வான் என்பது பொது நம்பகம். சினிமா எப்போதும் தனித்த நுட்பங்களை வரிசைப்படுத்துவதற்கும் தனி அனுபவங்களை அதன் அலாதித் தன்மையை நெருக்கமாகச் சென்று தரிசிப்பதற்கும் முனைகிறது. அதே சமயம் பொது என்கிற பெருங்கூட்டத்தின் நகர்திசையை மாற்றுவதற்கு முனையாத ஜாக்ரதை உணர்வுடனேயே அது தன்னைத் தயாரித்துக்கொள்ள விரும்புகிறது. கடந்தவற்றின் சாட்சியத்தில் சினிமா காட்டுகிற தன்முனைப்பை நிகழ்ந்து கொண்டிருப்பவற்றின் மீதான வினவுதலைத் திறந்த தன்மையோடு முன்வைப்பதில் அது காட்டுவதில்லை. கலைகளின் தொகுப்பாக சினிமா அமைவதன் வசதிகளில் ஒன்றென அது வினவுதலைப் பிற உபகலைகளின் மூலமாக நிகழ்த்தவே விரும்புகிறது. சினிமா என்பது பெரும்பாலும் முடிவுற்ற கலையாகவே திகழ்கிறது.
கிருஷ்ணசாமி அதிகம் படிக்காதவன். செல்வந்தன். நகரமாகிவிடாத செழித்த பெருங்கிராமமொன்றின் விவசாயி. மறு திருமணம் குறித்து யோசிக்காமல் காலமான மனைவியின் நினைவில் வாழ்பவன். தன் குழந்தைகள்மீது தன் உயிரைப் பதியனிட்டவன். மாமியார் மெச்சும் மகாமகன். இப்படியானவன் தன்னை அணுகிய புதிய மனிதன் ஒருவன் பின்னால் செல்வதன் மூலம் வாழ்க்கை நொறுங்கிப் போவதும் அதிலிருந்து மீள்வதுமான பெருங்காலக் கதை மகாநதியென்றோடுவது.
இந்திய சினிமாவில் தென்பட்ட ஆகச்சிறந்த தகப்பன் பாத்திரங்களில் ஒன்றை இப்படத்தின் மூலம் காணச்செய்தார் கமல்ஹாஸன். அடுத்த காலத்தின் சினிமா மீதான நிரந்தரக் காதல் மனிதனாகவே தன் சினிமாவினுட்புகுந்த முதல் தினம் தொட்டுத் தன்னைப் பிரகடனம் செய்து கொண்டவர் கமல்ஹாஸன்.வெற்றி, தோல்வி, வணிகஸ்தானம், சம்பளம் இவற்றின் மீதெல்லாம் கவனம் குவியாமல் தன்னால் ஆன அளவுதான் விரும்புகிற சினிமாக்களைச் செய்தவண்ணமே தன் தொழில் சார் வரைபடத்தின் கோடுகளை உயர்த்திச் சென்றவர். அவற்றின் பலன்களைத் தாண்டி இந்தியாவின் வெகுசில நடிக முகங்களில் ஒருவர் என்று கமலைச் சொல்லியாக வேண்டும். தானொரு இயக்குனர் நடிகராகவும்தானே பின் நாட்களில் இயக்குனராகவும் தன் பரிணமித்தலை அதிகரித்துக் கொண்ட கமல் தொண்ணூறுகளில் சிலபல படங்களின் கதையைத் திரைக்கதையை எழுதினார். அவற்றில் மகாநதி ரா.கி.ரங்கராஜனோடு இணைந்து வசனத்தை கமல் எழுதிய படம். இந்தியத் திரைப்படங்களில் வசனத்தின் கூர்மைக்கான சிலாக்கியப் பட்டியல் ஒன்றைத் தயாரித்தால் முதல் பத்துப் பெயர்களில் ஒன்றென மகாநதியைச் சேர்க்கலாம். தகும். உதாரணத்துக்கு கீழே தோன்றும் வசனம்:
கிருஷ்: ஏன்?
முத்துசாமி: ஏன்னா?
கிருஷ்: நான் இப்பிடி இருக்கேன். அவன் அப்பிடி இருக்கானே அதான் ஏன்னேன்?
பஞ்சாபகேசன் ஐயர்: அதெல்லாம் பகவானா பார்த்து தண்டிப்பாண்டா…
கிருஷ் கோபத்தோடு அட சும்மா இருங்க ஐயரே… நின்னு கொல்ற தெய்வமும் சும்மா இருக்கு. அன்று கொல்ற சட்டமும் சும்மா இருக்கு. ஆனா எனக்கு மட்டும் தண்டனை. ஏன் நான் நேர்மையா இருந்ததுக்காகவா?
முத்து: எனக்கே இந்தக் கேள்வி பல தடவை மனசுல வந்திருக்கு. நம்மளை மாதிரி நேர்மையா இருக்குறவங்களுக்கு மரியாதையே இல்லை. ஆனா கொஞ்சம் யோசிச்சு பார்த்தா நேர்மையானவன்னு ஒருத்தன்கூட கிடையவே கிடையாது. என்னை விட அயோக்கியன்னு வேணா சொல்லலாம். ஆனா இந்தக் காலத்துல நான்தான் நேரமையானவன்னு யாருமே சொல்ல முடியாது.
கிருஷ் நான்..
அவனை இடைமறித்து, முத்துச்சாமி இருப்பா இரு சினிமா பார்க்கணுங்கிற ஆசையில நீ ப்ளாக்ல டிக்கட் வாங்கிருப்ப ட்ரெய்ன்ல டீடி. ஆருக்கு லஞ்சம் குடுத்து டிக்கட் வாங்கிருப்ப. ஆகக்கூடி எல்லாருமே திருடனுக்கு துணை போகிறவந்தான். ஆனாலும் அரசியல்வாதியையும் போலீஸ் காரனையும் மட்டும் இந்தியா பூராவும் திட்டுறானுங்க. வேட்டியும் சேலையும் வாங்கிட்டு ஓட்டு போடுற உனக்கு ஏதுரா இந்த வக்குன்னு அவன் திருப்பி கேட்டா எப்டி இருக்கும் தனுஷ் மாதிரி ஆளுங்களை பழிவாங்குறது கதையிலதான் முடியும். வாழ்க்கையில முடியாது. சாக்கடை தண்ணி நம்ப சட்டைலபட்டு அழுக்காகாம ஒதுங்கிப் போகணுமே தவிர சாக்கடையில எறங்கி அதை சுத்தம் பண்ண நினைக்கக்கூடாது.
கிருஷ்:என் சட்டை ஏற்கனவே அழுக்காயிருச்சு.
விதி கடவுள் வேறுவழியற்ற நிர்க்கதி என்பனவற்றை எல்லாம் மறுதலித்து இந்தப் படத்தில் கமல் முன்வைத்த அன்பு எனும் பெருஞ்சொல்லின் பிற சொற்கள்தான் இப்படத்தின் முழுக்கதையுமாகவே விரிந்தது. ஒரு மலரின் பல பிரதிகள்தான் அன்பெனும் மகாவனத்தின் அத்தனை உதிர்தலும் என்பதை விழிவழி சாத்தியம் செய்தார் கமல். மகாநதியை இயக்கிய சந்தானபாரதிக்கும் கமல்ஹாஸனுக்கும் இடையிலான பலவருட கால நட்பும் தொழில்முறைத் தொடரபும் இணைந்த நற்புள்ளியிலிருந்து இப்படியான ஒரு படத்தின் சாத்தியம் தொடங்கிற்று. அந்த வருடத்தின் சிறந்த தமிழ்ப்படத்துக்கான தேசிய விருதினைப் பெற்ற மகாநதியின் பரவலினூடே வணிகப் படத்துக்கான சின்னஞ்சிறிய சமரசத்தைக்கூட நம்மால் காண முடியாது.
எளிய மனிதனின் வாழ்வினுட் புகுகிற மனமிலி மிருகங்களின் செய்கைகள் ஏற்படுத்தக்கூடிய கெடுமதிவிளைவுகளைக் கோர்த்துக் கதை செய்தார் கமல். குடும்பம் சிதறி செய்யாத குற்றத்துக்காக சிறைவாசம் அடைந்து மகளைத் தேடி நாட்டின் அடுத்த முனைக்குச் சென்றலைந்து ஒரு வழியாய் அவளைக் கண்டடைகிற வரைக்கும் பலவீனமான சாமான்யன் ஒருவனின் கையறுநிலையை யதார்த்தத்தின் அளவீடுகள் எதுவும் மீறிவிடாமல் சாத்தியப்படுத்திய கமல்ஹாஸன் பிற்பாடு தன் வாழ்வை நிர்க்கதியாக்கிய ஒவ்வொருவரையும் தேடிச் சென்று வதம் செய்கையிலும் தன் நாயகத் தொடர்ச்சியின் பிம்பநிழல் கொஞ்சமும் பாத்திரம்மீது படிந்துவிடாமல் அதன் நியாயமான இருளுடனேயே நடிப்பை நல்கினார். கொஞ்சம் பிசகி இருந்தாலும் இன்னொரு பழிவாங்கும் திரைப்படமாகக் கண்ணுறப் பட்டிருக்கக் கூடிய அபாயக் கயிற்றின்மீது அனாயாசமாக நடந்து நிறைந்தார்.
முதல் காட்சியிலிருந்து பார்ப்பவர்களின் மனோநிலையைத் தேவையின் சட்டகத்துக்குள் அறைந்து பொருத்துவதைத் தன் இசைவழி நிறைவேற்றினார் இளையராஜா. இந்தப் படத்தின் இசையும் பாடல்களும் கதையின் ஓட்டத்துக்கு எவ்வகையிலும் உறுத்தவோ அல்லது ஊடாடவோ இல்லாமல் பார்த்துக்கொண்டது பலமாயிற்று. வாலி தன் வரிகளைக் கண்ணீரில் மை கலந்து எழுதித் தந்தார். கமல் ஒரு பாடகராகவும் மின்னியது கூடுதல் தகவல்.
என்னை விட்டுரு உனக்கு எவ்வளவு பணம் வேணாலும் தரேன் என்று கடைசியின் பேரம் பேசும் மோகன் நடராஜனைக் கமல் ஒரு கணம் உற்றுப் பார்ப்பார். போற்றுதலுக்குரிய அபூர்வம் அந்த ஸீன். முகமொழியால் நடிப்பதற்கான இலக்கணமாகவே மாறினார் கமல்.
‘ஸ்ரீ ரங்கரங்கநாதனின் பாதம் வந்தனம் செய்யடி’ என்ற பாடல் பிற்காலத்தில் கமல் படங்களில் தொடர்ந்து ஒலித்த முகுந்தா முகுந்தா (தசாவதாரம்) உன்னைக் காணாது நானிங்கு (விஸ்வரூபம்) என மறக்கமுடியாத வரிசையின் முதற்பாடலாயிற்று. இவற்றில் மூன்றாவது பாட்டைக் கமல்ஹாஸனே எழுதினார். மற்றவை இரண்டும் வாலியின் ஆரங்கள்.
பூர்ணம் விஸ்வநாதன், சுகன்யா, மகாநதி, சங்கர், ராஜேஷ், மகாநதி சோபனா, மோகன், நடராஜன், கொச்சின் ஹனீஃபா என்று இப்படத்தில் நடித்த எல்லாருமே அவரவர் பாத்திரங்களுக்குள் நிறைந்தார்கள். பிசகின்றித் தெரிந்தார்கள். சதீஷின் எடிடிங் எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவு இரண்டும் அவற்றின் துல்லியங்களுக்கென்று நினைவில் நின்றன. அம்மன் க்ரியேஷன்ஸ் நிறுவனத்திற்காக எஸ்.ஏ.ராஜ்கண்ணு தயாரித்தார்.
மகாநதி படவுருவில் பாடம்.
முந்தைய தொடர்: https://bit.ly/2JGOwyf