1.ஒருவரின் தனிப் பாணி என்பது தனித்துவத்துடன் கலந்து கவர்கையில் நிகழ்வதன் தொடர்செயல்
(யாரோ)
2.ஒருவரது அபிமானம் ஏற்படுத்தக் கூடிய கவர்தலின் விளைவாக மக்கள் அவரைத் தொடரவும் அவரோடு சூழ்ந்திருக்கவும் அவர்களது ஆதிக்கத்துக்கு உள்ளாகவும் விரும்புகின்றனர்
(ரோஜர் டாவ்ஸன்)
இந்தியாவின் மாபெரும் படம் எது யாரைக் கேட்டாலும் ஷோலே தொடங்கி பாகுபலி வரை எவ்வளவோ படங்களைச் சொல்வார்கள். தமிழில் கூட சந்திரலேகா தொடங்கிச் சந்திரமுகி வரை எவ்வளவோ உதாரணப்பூக்கள். எல்லாவற்றின் பின்னாலும் திரைக்கதை தொடங்கி படமாக்கல் வரையிலான பிரம்மாண்டம் அதன் செலவுக்கணக்கினை முன்வைத்து கணக்கிடப்பட்டிருக்கும். என்னைப் பொறுத்தவரை டி.ஆர்.ராமண்ணா இயக்கிய கூண்டுக்கிளி அதன் அரிதினும் அரிய நடிகர் பங்கேற்பின் காரணமாக இந்தியாவின் மாபெரும் படமாகிறது. எம்.ஜி.ராமச்சந்திரனும் சிவாஜி கணேசனும் இணைந்து நடித்த ஒரே படம்.
இரயிலின் முன் விழுந்து தன்னை மாய்த்துக் கொள்ளத் துணிந்தான் ஜீவா. அவனைக் காப்பாற்ற அங்கே வருகிறான் தங்கராஜ். அவர்கள் பால்ய சினேகிதர்கள். “பள்ளிப் படிப்பாலும் பழகின தோசத்தாலும் மட்டும் நாம் ஒன்றுபட்டவர்களல்ல பகுத்தறிவின் பலத்தாலும் பணத்திற்கு நம்மை விற்காத பண்பாலும் நாம் ஒன்றுபட்டவர்கள்” என்கிறான் தங்கராஜ். யாரிடம் ஜீவாவிடம். ஜீவா யார். தங்கராஜின் ஆப்த நண்பன். இருவருடைய ஆரம்பகாலங்கள் ஒன்றுதான். என்ன நடந்தது ஏன் இப்படித் தற்கொலையை நாடிச் சென்றாய்? எனக் கேட்கும் தங்கராஜிடம் பதிலாகத் தன் முன் கதையை சொல்கிறான் ஜீவா. பெண் பார்க்கத் தன் குடும்பத்தோடு சென்று அவளைப் பார்த்த மாத்திரத்தில் மனம் மயங்குகிறான். கூடவே வந்திருக்கும் சினேகிதக்காரன் ஜீவாவை கிண்டல் செய்கிறான். “தலைநிமிர்ந்து உட்காரடா வீரத்தமிழனே என்னப்பா வெட்கமா?” தனக்கு நிச்சயமாகப் போகும் நல்மதியைப் பற்றி அங்கேயே வருணிக்கிறான் ஜீவா.” கணக்கான முகவெட்டு கம்பீரமான உடற்கட்டு”
அடுத்த கட்டமாய் நிச்சயதார்த்தமும் கல்யாணமும் என்று பேசிவிட்டுத் தன் இல்லம் திரும்புகிற ஜீவா சதா சர்வகாலமும் கனா காண்கிறான். தானாகப் புலம்புகிறான் தனக்கு வரப்போகிறவளை எண்ணி எண்ணி. நண்பன் வந்ததுகூடத் தெரியாமல் எப்படிப் பிதற்றுகிறான் என்றால் “அதற்குப் பிறகு அவளே என் கண்ணானாள். அதற்குப் பிறகு பார்க்கின்ற பெண்களின் முகத்திலெல்லாம் அவளையே பார்த்தேன். அவளே என் காதானாள் அதனால் கேட்கும் குரல்களிலெல்லாம் அவள் குரலையே கேட்டேன்.” என்று உருகுகிறான் ஜீவானந்தம்.
விதி என்பது வேறுகதையைத் தன் வசம் வைத்துக் கொண்டு எல்லோர் வாழ்க்கையையும் மாற்றுகிற குரூரமான கதாசொல்லி அல்லவா..? நொடித்து குடும்பத்தோடு வேறெங்கோ கிளம்பிப் போய்விடுகின்றனர் பெண்வீட்டார். தன் காதல் ராணியைக் கண்டே தீர்வது என அலைந்து திரிகிறான் ஜீவானந்தம். தங்கராஜிடம் கதறுகிறான் “அடுத்த கிராமத்துக்குப் போனேன் அங்கேயும் அந்தக் கிளி இல்லை எவளுக்காக வீட்டை விட்டு வெளியே வந்தேனோ அவளை அடையாமல் வீடு திரும்புவதில்லை என்ற உறுதியோடு கால் போன வழியெல்லாம் நாளை மறந்து மாதத்தை மறந்து வருடத்தை மறந்து நடந்து கொண்டே இருந்தேன். என்ன நடந்து என்ன பிரயோசனம்? செயற்கை அழகால் கண்ணைக் கவரும் காகித மலர்களைத்தான் என்னால் காண முடிந்தது இயற்கை அழகோடு இனிய மணம் வீசும் அந்த வண்ண மலரை என்னால் காண முடியவில்லை. கடைசியில் வாழ்விலே அவளை மறக்க முடியாவிட்டாலும் சாவிலாவது அவளை மறக்கலாம் என்ற ஒரே நம்பிக்கையோடு இங்கே வந்தேன். அதிலேயும் எங்கேயிருந்தோ வந்து நீ மண்ணைப் போட்டு விட்டாயே.” இதுவரை கேட்டுக் கொண்டிருக்கும் தங்கராஜ்,
” ஹூம் உன் கதையிலே புத்திசாலித்தனம் இல்லையாவிட்டாலும் புதுமை இருக்கிறது. இதுவரை நானும் எத்தனையோ கதைகளைக் கேட்டிருக்கிறேன். அந்தக் கதைகளிலெல்லாம் தனக்குப் பிடித்தமான காதலனைக் கல்யாணம் செய்துகொள்ளவேண்டுமென்பதற்காகப் பெண்தான் கற்பைக் காப்பாற்றிக் கொள்வதற்காகக் கஷ்டப்படுவாள், நீயோ அவள் போனால் இன்னொருத்தி என நினைக்காமல் இத்தனைவருட காலம் உன் கற்பைக் காப்பாற்றிக் கொள்ளக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறாய். ரொம்ப ஆச்சரியம் தாண்டா வா உனக்கந்தக் கனவுக்கிளி தானே வேண்டும், நான் கண்டுபிடித்துத் தருகிறேன்.”
இதை நம்பவில்லை ஜீவானந்தம். “வேண்டாம் தங்கராஜ் வீண் முயற்சி அப்போது அவள் பொந்துக்கிளியாய் இருந்தாள். இப்போது எவனிடம் கூண்டுக்கிளியாய் இருக்கிறாளோ, அதிலும் அன்று நீ பார்த்த தென்றலல்ல நான். எனக்காக உன் வீட்டு சன்னலைத் திறந்துவிட புயல் உள்ளே நுழையவிட்டால் உன் வீட்டின் அமைதியும் குலைந்துவிடலாம்.” என மறுக்கிறவனின் கை பற்றி தங்கராஜ் “புயலடிக்கும் போது வீட்டின் சன்னலை இழுத்து மூட எனக்குத் தெரியும் வாடா.” என்று அழைக்கிறான்
“வந்த பின் மூடுவதை விட வருவதற்கு முன்பே மூடுவது நல்லது.” எனப் பேசிக் கொண்டிருக்கும்போதே அவனைத் துரத்தி வரும் மக்களும் கான்ஸ்டேபிள் ஒருவரும் ஜீவானந்தத்தை மன ஒழுங்கின்றிச் செய்த சிறுசிறு பிழைகளை அடுக்கி ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்கிறார்கள். தன் வீடு திரும்புகிறான் தங்கராஜ்.
சாட்சிகள் இல்லை என்று ஜீவாவை விட்டு விடவே அவனை அழைத்து வந்து, தன் ஃபாக்டரி மேனேஜரிடம் கைகாலைப் பிடித்துக் கெஞ்சி ஜீவாவுக்கும் ஒரு வேலையை வாங்கித் தருகிறான் தங்கராஜ். தன் மனைவி ஊரிலிருந்து திரும்பும் வரை தனக்கு உணவளிக்கும் அம்மாவிடமே ஜீவாவுக்கும் உணவு ஏற்பாட்டை செய்து தருகிறான். தன் வீட்டின் அடுத்த போர்சனையே ஜீவாவின் குடித்தனத்திற்கு ஏற்பாடு செய்கிறான் தங்கராஜ். ஊருக்குச் சென்றிருக்கும் அவனது மனைவியும் மகளும் திரும்புகிறார்கள். தங்கராஜின் மகனைக் கொஞ்சுகிறான் ஜீவா. தங்கராஜ் வெளியே சென்றுவிட ஜீவா வென்னீர் கேட்கிறான் கொண்டு வரும் தங்கராஜின் மனைவி தான் தனது உயிரைவிட மேலாக மதிக்கும் காதல் கிளி என்பதைக் கண்ட மாத்திரத்தில் மயக்கமுறுகிறான். ஊரார் கூடிவிடத் தங்கராஜ் திரும்பி வரும்போது ஜீவா மயக்கம் தெளிகிறான். தங்கராஜின் மனைவி மங்களாவுக்கு முன்னர்த் தன்னைப் பெண் பார்க்க வந்தது ஜீவா என்பதே தெரியாது. வரனின் முகத்தைக்கூடப் பாராமல் தாய் தந்தையரின் ஆணைக்கிணங்கி பொம்மைபோல பெண் பார்க்கும் படலத்தில் இடம்பெற்று நீங்கியவள் அவள். ஆதலினால் அவளுக்கு ஜீவாவைத் தெரியவே தெரியாது ஜீவா ஏற்கனவே நோய்மையின் உச்சத்தில் உழலும் மனதோடு உறைந்திருப்பவன். வெளித்தோற்றத்துக்கு அவன் சாதாரணம் நோக்கித் திரும்பிவிட்டாற் போலத் தோற்றமளித்தாலும் உள்ளே அவன் மனம் இன்னமும் அமைதியுறவில்லை என்பது நிஜம், மங்களா ஒரு பாட்டுப் பாடேன்… உன் சங்கீதத்துலயாவது அவன் சஞ்சலம் தொலையுதான்னு பார்ப்போம் என்கிறான் தங்கராஜ். “ம்ஹூம் நான் மாட்டேன்” என்று மறுக்கிறாள் மங்களா. கற்றதைக் கரைச்சா குடிக்கப் போறே சும்மா பாடுன்னா சொல்ல வல்லாயோ கிளியே எனும் பாரதியார் பாடலைப் பாடுகிறாள். தன் மனம் தன்னைக் கொல்லாதா என்று ஏங்குகிறான் ஜீவா. அவனை அவனால் வெல்ல முடியவில்லை. சந்தர்ப்ப வசத்தால் ஜீவாவுக்குப் பதிலாகத்தான் சிறைக்குச் சென்று விடுகிறான் தங்கராஜ். தன் குடும்பத்தை ஜீவா சிரமேற்கொண்டு காப்பான் என நம்பும் அவனது நம்பிக்கை வீண் போகிறது. நிராசை ஜீவாவின் மதியைக் கெடுக்கிறது. சந்தர்ப்பங்களைத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் போது மனிதன் மதங்கொண்ட களிறாகிறான். அவனது எண்ணம் புரிந்து அவனிடமிருந்து விலகிச் செல்கிறாள் மங்களா. சிரமத்தோடு தன் மகன் கண்ணனைக் காக்கிறாள்.
கண்ணனுக்கு நோய் உண்டாகி அவன் தவிக்கிறான். தன் ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்துகிறான் ஜீவா. கண்ணனை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு உதவி நாடி ஜீவாவை வேண்டி வரும் மங்களாவை வற்புறுத்தும் ஜீவாவுக்கு மின்னல் வெட்டிக் கண்பார்வை போகிறது. தங்கராஜ் சிறையிலிருந்து வெளியே வருவதும் நிகழவே ஜீவா மீது ஆத்திரமாகி அவனைக் கொல்வதற்காக ஓடுகிறான். அங்கே சொக்கி வந்து ஜீவாவை விட்டுவிடுமாறு கெஞ்சுகிறாள். நம்புவதற்கு ஒரு அளவுண்டு. நீ உன் நண்பனை ஏன் அளவுக்கு மீறி நம்பினாய் எனக் கேட்கும்போது தன் தவறு புரிந்து அவர்கள் இருவரையும் விட்டு விலகித் தன் மகன் கண்ணனையும் மங்களாவையும் சென்று சேர்கிறான் தங்கராஜ்.
கூண்டுக்கிளி எம்ஜி.ராமச்சந்திரன் மற்றும் சிவாஜி என்கிற இரண்டு பொருத்தமற்ற நடிப்புக் கரைகளுக்கு நடுவே கலந்து ஓடிய ஒரே கடலாம் நடிப்பாற்றலுக்காகவும் எப்போதைக்குமான ஒற்றை சாட்சியமாக நம் முன் நிகழ்ந்த படம். இதன் இசையில் தன்னால் ஆன மட்டிலும் புதுமைகளைப் புகுத்தி இசைத்திருப்பார் கேவி மகாதேவன். சிவாஜி மயக்கமுறும் காட்சி முழுக்க அந்தக் கால ஃப்யூஷன் இசை பொங்குமாங்கடலாய் வியாபிக்கும். மகாதேவ மந்திரஜால இசை என்றால் தகும்.
இன்னொரு மாமேதமை விந்தனுடையது. ஒரு காட்சியில் அண்ணன் என்ற உணர்வோடு காய்ச்சலில் கனன்றுகொண்டிருக்கும் ஜீவாவின் நெற்றியில் பற்றிட்டபடியே சீக்கிரம் திருமணம் செய்துகொள்ளுமாறு எடுத்துரைப்பாள் மங்களா. அவள் மீதான தன் மனமறை இச்சையை சொல்லாமல் சொல்ல முயலுவான் ஜீவா. அந்த இடத்தில் வசனம் தமிழும் காதலும் இயலாமையும் தெறித்துப் பூக்கும் மின்பூக்களாகவே தோன்றும். கத்தி மேல் நடனம் என்றால் தகும்;
“மங்களா சிரிக்காமல் சிரிக்கும் அவள் செவ்விதழ்கள் சொர்க்கத்தின் வாசற்கதவுகள், பேசாமல் பேசுமவள் பேச்சு சொர்க்கத்தின் ப்ரேமகீதம்,தொட்டவுடன் எங்கேயோ தூக்கிச் செல்லும் அவள் ஸ்பரிசம். ஆஹா… அதுதான் சொர்க்கத்தின் சொல்லித் தெரிந்து கொள்ள முடியாத அர்த்தம். அதை என்னால் மறந்துவிட முடியுமா மங்களா” இதற்குப் பிறகுதான் மனதை மறைக்க முடியாமல் வெடித்துச் சிதறும் ஜீவா எனும் பிம்பம்.
தஞ்சை ராமையாதாஸ் எழுத்தில் “ராத்திரிக்கு புவ்வாவுக்கே லாட்டரி வாழ்க்கை லைட்டெரிய பணம்தானே பேட்டரி ராப்பகலா அலைஞ்சாலென்ன நாய் போலத் திரிஞ்சாலென்ன அந்தக் காலத்தின் சந்தோஷக் குத்தாட்டப் பாடல் கவர்கிறது.
தீபாவளி கொண்டாட்டத்தை முன்வைத்து வாங்க எல்லாருமே சேர்ந்து ஒன்றாகவே என்ற கவி காமு ஷெரீஃப் எழுதிய பாடல் கேட்பதற்குப் புத்திசையும் புதுக்குரலுமாக மிளிர்கிறதென்றால் ஆயிரம் தெறல்களாய் இருளிலிருந்து தொடங்கும் இப்பாடலின் படமாக்கல் அந்தக் காலகட்டத்தின் நவீனம்.
கூண்டுக்கிளி அடுத்த காலங்களில் நினைத்தே பார்க்க முடியாத நடிகசாகசம். எம்ஜி.ஆர்., சிவாஜி எனும் இருபறவைகளின் வாழ்வில் அபூர்வமாய்த் தோன்றிய மந்திரவாதம். இருவரின் ஒரே நிழல்.
முந்தைய தொடர்:http://bit.ly/2M13Qto