ஒரு மறுமலர்ச்சியைத் துவக்குவதற்கு பெரும் செல்வந்தர்கள் மற்றும் செல்வாக்கானவர்களின் இடங்களுக்குச் செல்லக் கூடாது. யாருடைய மகிழ்ச்சியின் கோப்பைகள் காலியாக இருக்கின்றனவோ அந்த வறிய எளிய மனிதர்களைத் தேடிச் செல்ல வேண்டும்.
(லா வாலஸ் – பென் ஹர் திரைப்படத்தில்?)
கலைஞர் மு.கருணாநிதியின் திரை பங்களிப்பு ஒரே ஒரு படத்தின் மூலமாக விளங்கிக் கொள்ள கூடியது அல்ல. இந்தியாவின் மாபெரும் வசனகர்த்தா யார் என்று கேட்டால் தாராளமாக அவரது பெயரைச் சொல்லலாம் அவருக்கும் எம்ஜிஆருக்குமான நட்பு அளப்பரியது பின்நாட்களில் தமிழகத்தை ஆட்சி செய்யும் அரசியல் எதிரியாகவும் எம்.ஜி.ஆர். மாறினார். அவருக்குப் பின்னால் கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் தமிழக அரசியலின் எதிர் எதிர் துருவங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. தன் வாழ்நாளில் பெரும்பகுதி கலைஞர் தன்னை ஒரு திரைப்பட ஆளுமையாகத் தொடர்ந்து முன்னிறுத்திக் கொண்ட ஒருவராகவே இருந்தார். கலைஞருக்கு எழுத்தின் மீதான பிடிமானம் அளவற்றது தன் பதின்ம வயதில் இருந்தே பேனாமுனை மூலமாக தான் நினைத்த எல்லாவற்றையும் ஆகவும் பிசகாமலும் அழகாகவும் எடுத்துரைப்பதில் அவர் வல்லவராகவே இருந்தார்.
தமிழ்த் திரையின் செல்திசையினை 1945 ஆம் ஆண்டு வாக்கில் அண்ணா, இளங்கோவன் போன்றவர்கள் மாற்றி அமைக்க முற்பட்டனர். புராண மாயஜாலப் படங்கள் மக்களைச் சலிக்கச் செய்திருந்த வேளையில் சமூக மற்றும் சரித்திரப் படங்களுக்கென்று பெரும் எதிர்பார்ப்பு கூடியபடி இருந்தது. அப்போதுதான் வசன எழுத்தின் மாபெரும் ஆளுமையாக கருணாநிதி முன்வந்தார். அவர் எழுதிய வசனங்கள் கல் மொழிகள் ஆகவே நிரந்தரித்தன. பிறருக்கு மத்தியில் மென்மேலும் புதியவர் ஆகவே தன்னைத் தக்கவைத்துக் கொண்டார். கருணாநிதி அடுக்கு மொழியும் சிலேடையும்தான் கொண்ட அரசியலைக் கிடைத்த இடத்தில் எல்லாம் புகுத்திவிடக்கூடிய சூசகம் மற்றும் மாறாத மொழிப்பற்றும் கருத்து வன்மையும் உறுதியும் கருணாநிதியின் அடையாளங்களாகத் திகழ்ந்தன.
உதாரணமாக, மனோகரா படத்தில் மனோகரனின் தந்தையான அரசரின் ரெண்டாவது தாரமான வசந்த சேனையின் வஞ்சக எண்ணம் படம் முழுக்க வெளிப்படும். ஒரு கட்டத்தில் அவள் எறியும் கத்தி அவளது மகன் மீதே பட்டு அவன் கீழே சாய்ந்து வீழ்வான். அவனைத் தூக்கித் தலையைத் தன் மடியில் வைத்துக்கொள்ளும் நாயகன் மனோகரனிடம் அண்ணா இனி இந்த நாட்டை நீதான் ஆள வேண்டும் என்று கூறியபடியே கண்ணை மூடுவான். அந்தக் காலத்தில் திமுகழகம் ஆட்சிக்குப் போட்டியிடும் அரசியல் இயக்கமாக மாறி இருக்கவில்லை. காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது அண்ணா ஆட்சிக்கு வந்தால்தான் நாடு நலமாகும் என்பதை ஒரு கதாபாத்திர வசனத்தின் வழியாக புகுத்திவிடும் வல்லமை கருணாநிதியிடம் இருந்தது.
சிவாஜி கணேசன் – கருணாநிதி, அவர் எழுத இவர் பேச ஏற்கனவே பராசக்தி திசை எங்கும் பட்டொளி வீசி பறந்துகொண்டிருந்த புகழ் கொடியை ஏற்றி வைத்திருந்தது. வசந்தசேனையாக வில்லியாக டி.ஆர்.ராஜகுமாரி அவரது மகனாக வசந்தமாக காகா ராதாகிருஷ்ணனும் மனோகரனாக சிவாஜிகணேசனும் மனோகரனின் தாயாராக கண்ணாம்பா மந்திரியாக, ஜாவர் சீதாராமன் அரசராக சதாசிவராவ் ஆகியோர் உயிர்ப்புடனான நடிப்பை நல்கினர்.
சாதாரண பழி சூழ்ச்சி வஞ்சகம் இவற்றுக்கப்பால் உரிமையை மீட்கும் ஒரு ராஜகுமாரனின் கதைதான். ஆனால் அதை சொன்ன விதம் பக்கம் பக்கமாக எழுதி தரப்பட்ட வசனங்களைப் பேசியதன் மூலமாக அற்புதமான திரைமலரென மலர்ந்தது. மனோகரா திரைப்படம் இந்தப் படம் ஏற்கனவே 18 ஆண்டுகளுக்கு முன்னால், பட்டு பி.ஜி. வெங்கடேசன் என்பவர் நாயகனாக நடித்து படுதோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மறுபிறவி கண்ட மனோகரா தமிழ் திரையுலக வசனத்திற்கு மணிமண்டபம் கட்டினாற்போல் மாபெரும் வெற்றி அடைந்தது.
பொறுத்தது போதும் பொங்கி எழு என்று கண்ணாம்பா கூறுகிற காட்சியில் ரசிகர்கள் மெய்சிலிர்த்து மெய்மறந்து மெய் வளர்த்தார்கள். அழகுத் தமிழுக்கு ஏற்கனவே பெயர் போனவராகத்தான் கண்ணாம்பா விளங்கினார். இந்தப்படம் அவருக்கு ஒரு மகுட வைரம் தன் தனித்த குரலால் ஜாவர் சீதாராமன் விலகித் தெரிந்தார். காக்கா ராதாகிருஷ்ணன் என்று அவர் பெயர் சொன்னாலே நெடுங்காலம் அசட்டு வசந்தன் ஆகவே நினைவு கூறப்பட்டார். மனோகரா உண்மையில் ஒரு திரைப்படமல்ல… எழுத்தின் வழி காவியம். இலக்கியச்சாறு என்றும் குன்றாத தமிழ் அற்புதம்.
அரசர்: மனோகரா! உன்னை எதற்காக அழைத்திருக்கிறேன் தெரியுமா?
மனோகரன்: திருத்திக் கொள்ளுங்கள் அரசே! அழைத்து வரவில்லை என்னை. இழுத்துவரச் செய்திருக்கிறீர்கள்.
அரசர்: என் கட்டளையைத் தெரிந்து கொண்டிருப்பாய் நீ.
மனோகரன்: கட்டளையா இது? கரை காண முடியாத ஆசை! பொன்னும் மணியும் மின்னும் வைரமும் பூட்டி மகிழ்ந்து கண்ணே முத்தே என்றெல்லாம் குலவிக் கொஞ்சி, தந்தத்தால் ஆன கட்டிலிலே, சந்தனத் தொட்டிலிலே, `வீரனே! என் விழி நிறைந்தவனே!’ வீர வழி வந்தவனே என்று யாரைச் சீராட்டி பாராட்டினீர்களோ அவனை அந்த மனோகரனை சங்கிலியால் பிணைத்து, சபை நடுவே நிறுத்தி சந்தோஷம் கொண்டாட வேண்டும் என்ற தங்கள் தணியாத ஆசைக்குப் பெயர் கட்டளையா தந்தையே?
அரசர்: நீ நீதியின் முன்னே நிற்கும் குற்றவாளி! தந்தையின் முன் தனயனல்ல இப்போது!
மனோகரன்: குற்றவாளி! நான் யாருக்கு என்ன தீங்கிழைத்தேன்? என்னால் பாதிக்கப்பட்டவர்கள் யார்? அரசே! தந்தையின் முன் தனயனாக அல்ல, பிரஜைகளில் ஒருவனாக கேட்கிறேன். கொலை செய்தேனா? கொள்ளையடித்தேனா? நாட்டைக் கவிழ்க்கும் குள்ளநரி வேலை நான் செய்தேனா? குற்றம் என்ன செய்தேன் கொற்றவனே, குற்றம் என்ன செய்தேன்? கூறமாட்டீர்களா? நீங்கள் கூறவேண்டாம்.
இதோ அறங்கூறும் அமைச்சர்கள் இருக்கிறார்கள். மறவர் குடிப்பிறந்த மாவீரர்கள் இருக்கிறார்கள்! மக்களின் பிரதிநிதிகள் _இந்த நாட்டின் குரல்கள் இருக்கிறார்கள். அவர்கள் கூறட்டும்… என்ன குற்றம் செய்தேன்?
சபையோர்: குற்றத்தை மகாராஜா கூறத்தான் வேண்டும்.
அரசர்: இது உங்களுக்கு சம்பந்தம் இல்லாதது.
மனோகரன்: சம்பந்தம் இல்லாதது சபைக்கு வருவானேன்? குடும்பத்தகராறு கொலு மண்டபத்துக்கு வரும் விசித்திரத்தை சரித்திரம் இன்றுதான் முதன் முதலாகச் சந்திக்கிறது மகாராஜா!
அரசர்: போதும் நிறுத்து… வசந்த விழாவில் நீ செய்த தவறுக்காக வசந்த சேனையிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும்.
மனோகரன்: அதற்குத்தான் காரணம் கேட்கிறேன்!
அரசர்: எதிர்த்துப் பேசுபவர்களுக்கு ராஜசபையில் என்ன தண்டனை தெரியுமா?
மனோகரன்: முறைப்படி மணந்த ராணிக்கு சிறைத்தண்டனை அளித்துவிட்டு, மூலையில் கிடந்ததற்கு முடிசூட்டியவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனையை விடக் குறைவானதுதான்.
அரசர் மனோகரா நீ சாவுக்குத் துணிந்துவிட்டாய்
மனோகரன் ஆமாம் நீங்கள் வீரராக இருக்கும் போது பிறந்தவனல்லவா நான்.சாவு எனக்கு சாதாரணம்
அரசர்: ஆத்திரத்தைக் கிளப்பாதே! நிறைவேற்று. அரசன் உத்திரவு.
மனோகரன்: அரசன் உத்திரவென்ன? ஆண்டவனின் உத்திரவுக்கே காரணம் கேட்க ஆரம்பித்து விட்டார்கள். அரசே! சிறைச்சாலைக்குச் செல்ல வேண்டும் தாய் என்று கேள்விப்பட்ட பிறகும் அடங்கிக் கிடப்பவன் ஆமை!
அரசன்: தாய்க்கும், தந்தைக்கும் வேற்றுமை அறியா மூடனே! தந்தையின் ஆணை கேட்டு தாயாரின் தலையை வெட்டி எறிந்த பரசுராமனைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறாயா நீ?
மனோகரன்: பரசுராமன் அவதாரம். மனோகரன் மனிதன்!”
கடைசிக் கேள்வி என் கட்டளைக்கு வணங்கப் போகிறாயா இல்லையா..?
மனோகரன் மன்னிப்புக் கேட்க வேண்டும் மனோகரன் அதுவும் அரை நொடியில் அரை நொடியென்ன.?அதற்குள்ளாகவே ஆனால் யாரிடம்
கேட்கவேண்டும் தெரியுமா..?
கோமளவல்லி கோமேதகச்சிலை கூவும் குயில் குதிக்கும் மான் என்றெல்லாம் உம்மால் புகழப்படும் இந்தக் கோணல் புத்திக்காரியின் கொள்ளிக் கண்களை கொடிய நாக்கை என் கூர்வாளுக்கு இரையாகத் தந்துவிட்டு அதை எதிர்த்தால் உம்மையும் உமக்குப் பக்கத்துணையாக வந்தால் அந்தப் பட்டாளத்தையும் பிணமாக்கிவிட்டு சூன்யக்காரிக்கு ஆலவட்டம் சுற்றியவர்களை சுடுகாட்டுக்கு அனுப்பிவிட்டேன் என்று சுழலும் வாளுடன் சூழும் புகழுடன் என் அன்னையிடம் ஓடி மன்னிப்புக் கேட்கவேண்டும். நிறைவேற்றட்டுமா அந்த உத்தரவை.. தயார் தானா தயார் தானா..?
இது ஒரு சின்ன உதாரணம். மொழியைக் கொண்டு என்னவெல்லாம் செய்யலாம் என்பதை நன்கு உணர்த்திய படம் மனோகரா.
பாடல்களும் தொழில்நுட்ப இசையும் ஒளிப்பதிவும் எல்லாம் கூடி வந்த ஒரு படமாகவே மனோகரா விளங்கியது. வசூலில் மாபெரும் சாதனை புரிந்தது. உண்மையில் சுதந்திரப் போராட்டத்திற்கு பின்னால் நாடு விடுதலை அடைந்தபிறகு காங்கிரஸ் பேரியக்கத்தை எதிர்த்து அரசியல் செய்வதற்கு தனிப்பெரும் கொள்கையென திராவிடத்தை முன்வைத்து பெருக்கெடுத்தோடும் பெருவெள்ளத்தைத் திசை திருப்பினாற்போல மக்களின் மனமாற்றித் திராவிட இயக்கம் தன்னை நிலைநிறுத்திக் கொண்டதற்கு காட்சி ஊடகமான சினிமா மற்றும் பத்திரிகை ஊடகம் இவ்விரண்டையும் சரிவரப் பயன்படுத்திக் கொண்டது முக்கியக் காரணமாயிற்று.
அயராத பயணங்களும் அசராத பேச்சுக்களும் மனதில் ஐயப்பாட்டையும் வினாக்களையும் ஏற்படுத்தி விடுகிற நேர்த்தியும் அவர்கள் மொழியிலிருந்து தங்களுக்குத் தேவையான கருத்துக்களைப் பதில்கள் ஆக்கி பெற்றுக் கொள்ளுகின்ற லாவகமும் கிடைத்த சந்தர்ப்பங்கள் எதையும் நழுவ விடாமல் அரசியல் செய்கிற அயராத உழைப்பும் கொண்ட கொள்கையில் உறுதியும் திராவிட இயக்கத்தின் வெற்றிக்கு அடிகோலிய இந்த இடத்தில் இயக்கத்தையும் மனிதர்களையும் பிரித்துப் பார்ப்பது கடினம் என்றாலும் கே.ஆர்.ராமசாமி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், எம்.ஆர்.ராதா, ராமச்சந்திரன் போன்றோர் நாடறிந்த முகமலர் நடிகர்களை நேசிக்க பெருங்கூட்டத்தைத் தயாராக்கி அவர்களது புகழைக் குன்றாவொளியென்று வளர்த்தெடுத்ததன் பின்னாலும் தங்கள் எழுதுகோல் இருக்குமாறு வெகுசிலர் பார்த்துக்கொண்டார்கள் அப்படியானவர்களில் அறிஞர் அண்ணாவும் கலைஞர் கருணாநிதியும் முதலிரண்டு பெயர்கள் என்பது மறுப்பதற்கில்லை
பம்மல் சம்மந்த முதலியாரின் கதையான மனோகரா படத்தை கருணாநிதி வசனம் எழுத எல்.வி.ப்ரசாத் இயக்கினார் எஸ்.வி.வெங்கட்ராமன்
மற்றும் டி.ஆர்.ராமநாதன் இருவரும் இசைத்தனர்.,
கருணாநிதி தன் வசனங்களை விதை மணிகளைப் போல் பயன்படுத்தினார். அதற்கான அறுவடையில் அவர் மிகவும் கவனமாக இருந்தார். சினிமா ஊடகத்தின் சக்தி என்ன என்பதை கடைசிவரை புரிந்து வைத்திருந்தவர் அவர் எந்த இடத்தில் யாரை தாண்டி என்ன தன்னால் நிகழ்த்த முடியும் என்பதை முழுவதுமாக அறிந்தவராக அவர் இருந்தார் மனோகரா படத்தில் கண்ணாம்பா வையும் சிவாஜி கணேசனையும் விட மற்ற எல்லோரையும் விட அது ஒரு கலைஞர் படம் கண் மூடித் திறக்கையில் பார்க்கும் திருமுகம் போல் மனோகரா என்றதும் எழக்கூடிய முதல் ஞாபகம் கருணாநிதி எனும் பெயர் தான் நடிகர் திலகம் என்று போற்றப்பட்ட சிவாஜிகணேசனுக்கு ஒரு பரிசை போல இதை நிகழ்த்தி தந்தவர் கலைஞர் ஐந்துக்கும் மேற்பட்ட தலைமுறையைச் சேர்ந்த நடிகர்களுக்கு வசனம் எழுதியவர் சண்டைக்கும் போருக்குமான வித்தியாசத்தை நன்கறிந்தவர் ஒரு முழுமையான போராளி போராளிக்கு போர் என்பது ஒரு ஆட்டமே அன்றி துளியும் அதில் அச்சமிராது. கருணாநிதி மொழின் மீது மழையாய்ப் பொழிந்தவர். இயற்றமிழின் மகாவுரு.